புத் 66 இல. 07

விஜய வருடம் மாசி மாதம் 04ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1435 ர. ஆகிர் பிறை 15

SUNDAY FEBRUARY 16 2014

 

 

தொழிற்சங்க முன்னோடி அமரர் பெரி.சுந்தரம்

தொழிற்சங்க முன்னோடி அமரர் பெரி.சுந்தரம்

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் உரிமைகளுக்காக குரல்கொடுத்த நம் முன்னோடிகளை, நினைவுகூருவதென்பது அரிதாகிச் செல்கின்றது. எமது எதிர்கால சந்ததியினருக்கு கடந்தகால வரலாறுகளை எடுத்துச் சொல்வதற்கென்று எதுவும் எச்சசொச்சங்களாக இல்லாது போய்விடுமோ என எண்ணத் தோன்றுகிறது. தோட்டத் தொழிலாளர்களுக்காக தமது வாழ்க்கையே அர்ப்பணித்த பல தலைவர்களை அவர்கள் சார்ந்த தொழிற்சங்கங்களே மறந்துவிட்டதொரு நிலையே தற்போது காணப்படுகிறது.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரும் சிறந்த சட்ட மேதையும், செனட் சபை உறுப்பினருமான அமரர் பெரி. சுந்தரம் மறைந்து கிட்டதட்டட 57 வருடங்கள் கடந்து விட்டன. அமரர் செளமியமூர்த்தி தொண்டமானுடன் இணைந்து தோட்டத்தொழிலாளர்களுக்காக குரல்கொடுத்த தலைவர்களில் ஒருவரான அமரர் பெரி சுந்தரம் 1947ஆம் ஆண்டில் முதலாவது பாராளுமன்றத்தில் உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டதுடன் தொழில்துறை அமைச்சராகவும் பதவி வகித்தார். புசல்லாவை சரஸ்வதி மகா வித்தியாலயத்தை உருவாக்குவதற்கு அமரர் கே. ராஜலிங்கத்திற்கு பக்கபலமாக இருந்தவர்.

தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகள் கல்வியில் சிறந்து விளங்க வேண்டும் என்ற நோக்கில் சிரத்தை எடுத்து கற்பிப்பதுடன் அவர்கள் மூட நம்பிக்கையில் இருந்து விடுபட வேண்டும் என்பார். செனட் சபை உறுப்பினராக இருந்தபோது தொழிலாளர்கள் வெறும் பந்தயக் குதிரைகள் அல்ல. அவர்களையும் சாதாரண மனிதர்களைப் போல நடத்தப்பட வேண்டும் என்றார்.

1960களில் இலங்கையில் அரசியல் யாப்பை திருத்துவதற்கு கவர்னர் சிபார்சு செய்திருந்த விடயங்களில் இந்திய தோட்டத் தொழிலாளர்களின் நிலைமைகளையும் விளக்கி அறிக்கையொன்றை சமர்ப்பித்தார். கவர்னரிடம் சாட்சியமளித்த தொழிற்சங்கங்களின் பெயர்களும், சமர்ப்பிக்கப்பட்ட மகஜர்களின் விபரங்களும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தன.

எனினும் அரசியல் சீர்திருத்த விடயங்களில் அனைத்து தரப்பினருடனும் கலந்து பேசிய கவர்னரிடம் இந்திய சமூகம் தோட்டத் தொழிலாளர்களின் நலன்கள் குறித்த ஏன் அக்கறை செலுத்தவில்லை என விவாதித்ததாத சான்றுகள் தெரிவிக்கின்றன.

மலையகத்தில் பெண்கள் பிரசவ காலத்தில் படும் கஷ்டங்களை உணர்ந்த ஒவ்வொரு தோட்டத்திலும் மருத்துவ நிலையம் தாதிகளின் அவசியத்தை வலியுறுத்தி அதற்கான வழிவகைகளை அரசாங்கம் செய்து கொடுக்க வேண்டுமென அரச சபையில் வாதாடி அதனை நடைமுறைப்படுத்திய அரும்பெரும் தலைவர் பெரி. சுந்தரம். இவரது துணைவியார் இ. தொ.காவின் மாதர் சங்கத் தலைவியாக இருந்த காலப்பகுதியில்தான் தோட்டங்களில் மருத்துவமனைகள் அமைக்கப்பட்டன.

இப்படிப்பட்டதொரு தலைவனை மலையக மக்களும், அவர் சார்ந்திருந்த ஸ்தாபனமும் நினைவுகூருவதோடு இவ்வாறான நல் இதயம் கொண்ட நம் முன்னோர்களை எமது எதிர்கால சமூகத்திற்கு அவர்களின் சேவைகளை அறியத்தர வேண்டும்.

அப்போதுதான் எமது சமூகத்திலும் பெரி. சுந்தரம் போன்ற பல கல்விமான்களும், தன்னலமற்ற சேவை உள்ளம் கொண்டவர்களும் தோன்றுவார்கள்.

சி. இராஜலிங்கம்... -

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2014 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.