புத் 66 இல. 07

விஜய வருடம் மாசி மாதம் 04ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1435 ர. ஆகிர் பிறை 15

SUNDAY FEBRUARY 16 2014

 

 
கும்பகோண இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு

கும்பகோண இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு

குண்டுச் சட்டிக்குள் குதிரைகள் ஓடும் கும்பகோண மாநாடு

இம்மாநாடு பற்றிய எனது முகநூல் குறிப்பைக் கடந்த வார தினகரன் வார மஞ்சரி பிரசுரித்திருந்ததையடுத்துச் சில நண்பர்கள் இதுபற்றிய உங்கள் கருத்தை எழுத வேண்டும் என்று வைத்த வேண்டுகோளுக்கமைய இதனை எழுதுகிறேன்.

இஸ்லாமிய இலக்கியக் கழகமே உலக இஸ்லாமிய இலக்கிய மாநாடுகளை நடத்தி வந்தது. 1999 வரை செய்யிது முகம்மது ஹஸன் போன்ற பெருந்தகைகள் உயிருடன் இருந்தவரை எல்லாம் சுயமா கவே இருந்தது. அம் மாநாடுகளில் ஓர் ஆலோசகர் வட் டத்தில்தான் கவி க்கோ வைக்கப்பட்டி ருந்தார்.

2007 மாநாடு முழுக்க முழுக்க அர சியல் நோக்கத்தி லேயே நடத்தப்பட்டது. சரியாக இயங்கி வந்த இஸ்லாமிய இலக்கியக் கழகத்தின் அதிகாரத்தைக் கவிக்கோவும் இதாயத்துல்லா என்கிற காங்கிரஸ் அரசியல்வாதியும் தனிப்பட்ட கனவுகளோடு நுழைந்து கைப்பற்றினர். தி.மு.க.வும் காங்கிரஸ¤ம் கூட்டணியில் இருந்த காலம் அது இதாயத்துல்லாவுக்கு ஒரு நாடாளுமன்றக் கதிரைக் கனவு இருந்தது. கவிக்கோவுக்கு ஒரு சட்டசபை அங்கத்தவர் கனவு. இப்படித்தான் தமிழகத்தில் சந்தித்த நண்பர்களது கருத்தையும் மாநாடு சென்ற போக்கையும் அவதானித்து என்னால் முடிவுக்கு வர முடிந்தது.

இதாயத்துல்லாவின் கனவில் மண் விழுந்தது. கவிக்கோவின் பாதிக் கனவு நிறைவேறிற்று. அம்மாநாட்டின் பின் வக்ஃப் சபைக்குத் தலைவராக அவர் நியமிக்கப்பட்டார். உள்ளே கச்சேரி குழம்பியது. இனிமேல் மாநில மாநாடுதான், உலக மாநாடு இல்லை என்று அறிவிப்பு வந்தது. ஒன்றோ இரண்டு மாநில மாநாடுகள் நடைபெற்றன. மீண்டும் இஸ்லாமிய இலக்கியக் கழகம் கூடியது. இதாயத்துல்லா வெளியேற்றப்பட்டார். கும்பகோண மாநில மாநாடு அறிவிக்கப்பட்டது.

என்னுடைய அறிவுக்கும் கணிப்புக்கும் எட்டியவரை இஸ்லாமிய இலக்கியம் சார் குழுக்களுடன் நெருங்கிய தொடர்புடையவர்களான இலங்கையராக டாக்டர் ஜின்னாஹ் ஷரிபுதீன், மானா மக்கீன், எஸ்.முத்துமீரான் ஆகிய மூவரைத்தான் குறிப்பிட முடியும்.

இஸ்லாமிய இலக்கியக் கழகத்தின் அதிகாரத்தைக் கையில் எடுத்துக் கொண்டதும் கடந்த காலங்களில் தமது சொந்தப் பணம், நேரம் என்று பாராது செலவழித்து அர்ப்பணிப்புடன் இஸ்லாமிய இலக்கிய மாநாடுகளை நடத்தத் துணை நின்ற தமிழகத்தவர்களையே கூடக் கவிக்கோ கழட்டித்தான் விட்டிருந்தார். 2007இல் கழகத்தின் முன்னாள் பொருளாளர் ஹாஜி. ஏ.வி.எம்.ஜாபர்தீன் அவர்களைத் தூரப்படுத்தி வெற்றுக் காசோலையில் கையெழுத்துக் கேட்ட கதைகள் எல்லாம் உள்ளன.

எனவே, அனுபவசாலிகளைத் தூரப்படுத்தி விட்டுத் தம்முன்னால் நான்காக, ஐந்தாக மடிந்து, பணிந்து நிற்பவர்களை கவிக்கோ இணைத்துக் கொள்ள நினைத்திருக்கலாம்.

2007இல் வெளிநாட்டுப் பேராளர்களுக்கு ஏற்பட்ட அவமரியாதை காரணமாகத் தனக்கு வழங்கப்படவிருந்த கெளரவத்தையும் விருதையும் பெற்றுக் கொள்ளாமல் வெளியேறியவர் ஜின்னாஹ் ஷரிபுத்தீன் இதைக் கவிக்கோ மனதில் கொண்டு அவரை அழைக்காமலும் இணைப்பாளராக்காமலும் தவிர்த்திருக்கலாம் என்றே கருதுகிறேன்.

அதற்கு இன்னொரு காரணமும் உண்டு என்று உணர்கிறேன். இலக்கிய உலகில் காப்பியங்களுக்கென்று எப்போதும் ஒரு தனி மரியாதை உண்டு. இன்றைய தலைமுறைக்கு அது ஒவ்வாது போனாலும் கூட காப்பியங்களே மொழியில் செல்வங்களாக மொழி அறிஞர்கள் மத்தியில் கருதப்படுகின்றன. இன்றைய நிலையில் தமிழில் பத்துக் காப்பியங்களை எழுதிய உயிர்வாழும் ஒரேயொரு ஜீவன் ஜின்னாஹ் ஷரிபுத்தீன் மட்டுமே. கவிக்கோ பாலை நிலா என்று ஒரு காப்பியத்தைத் துவங்கி 15 வருடங்களாக இன்னும்தான் எழுதுகிறார். 2002ஆம் ஆண்டு எமது மாநாட்டு மலரில் அக்காப்பியத்தின் முகவுரைப் பகுதி இடம்பெற்றிருக்கிறது. இரண்டு வருடங்களுக்கு முன் நடந்த ஒரு புத்தகச் சந்தை விழாவில் அதன் ஓர் அத்தியாயம் வெளியானது. இந்த மாநாட்டிலும் அதே ட்ரெயிலர் ஓட்டப்பட இருப்பதாகத்தான் அறிய வருகிறேன். எனவே ஜின்னாஹ்வின் காப்பியத் தகுதி அவருக்கு உள்ளார்ந்த ஓர் உறுத்தலாக இருக்கலாம் என்றும் எண்ண இடமுண்டு.

கவிக்கோவையே குறை சொல்வதா என்று சிலருக்கு வியப்பு வரக்கூடும். சிலர் என்னையே ஒரு கிண்டல் பார்வை பார்க்கக் கூடும். வெள்ளையாக இருப்பவன் பொய் சொல்ல மாட்டான், கண்ணியமான பதவியில் இருப்பவன் சுயநலவாதியாக இருக்கமாட்டான், ஓர் ஆலிம் அல்லது வசதிபடைத்தவன் எதைச் சொன்னாலும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று பழக்கப்பட்டுப் போன சமூகத்திலிருந்து இந்தச் சிந்தனைகள் எழுவது வெகு சாதாரண விடயமே.

விமர்சிப்பது என்றால் பேசக் கூசும் வார்த்தையில் அரசியல்வாதிகளை மட்டுமே திட்டிப் பழகிப்போனவர்கள் நாம். அரசியல்வாதிகளைத் தவிர ஏனைய முக்கியத்துவம் பெற்றவர்கள் அனைவரும் புனிதர்கள் என்று நம்பிக் கொண்டிருக்கிறோம். அவர்களும் தம்மை சமூகத்தின் மத்தியில் அவ் வாறுதான் கட்டமைத்து வைத்திருக்கிறார்கள்.

தமிழகத்தில் பிராந்தியங்களில் நடக்கும் மாநாடுகள் இரண்டு நிர்வாகங்களின் கீழ் இயங்குகின்றன. ஒன்று இலக்கியக் கழகங்கள். மற்றது, மாநாடு நடத்தும் பிரதேச முக்கியஸ்தர்களும் பிரதேசத்தவரும். பிரதேசத்தவரே பணத்தை வழங்குகிறார்கள்.

(அடுத்த வாரம் தொடரும்)

அஷ்ரஃப் சிஹாப்தீன்


மாநில மாநாடா? உலக மாநாடா? யார் மீது விரல் நீட்டுவது?

கடந்தவார தினகரன் வார மஞ்சரியில் மானில மாநாடா? உலக மாநாடா? என்ற தலைப் பில் மூத்த எழுத்தாளர் மானா மக்கீன் அவர்களின் கட்டுரையை வெளியிட்டு ஏதுமறியாத என்னையும் சந்திக்கு இழுத்திருந்ததால் இந்த விளக்கக் குறிப்புக்களைச் சொல்ல வேண்டிய கட்டாயத்துக்குள்ளாக்கப்பெற்றுள்ளேன்.

விபரம் இதுதான். சென்னை புதுக்கல்லூரியில் நடைபெற்ற இஸ்லாமிய இலக்கியக் கழகத்தின் ஆறாவது மாநாடு பற்றிய முதலாவது செயலமர்வில் பங்குகொள்ள நானும் அழைக்கப் பெற்றிருந்தேன். அந்நிகழ்வில் ஐந்தாம் மாநாடுவரை இலங்கையின் செயற் பாட்டாளராக இருந்து திறம்படச் செயலாற்றிய பேராசிரியர் அல்லாமா எம். எம். உவைஸ் அவர்களின் வபாத்தின் பின் அந்தப் பொறுப்பினை ஏற்று நடத்த என்னைத் தேர்ந்து பிரகடனமும் செய்தனர்.

சென்னையில் நடைபெற்ற அந்த மாநாட்டில் இலங்கையைச் சேர்ந்த கல்விமான்கள் அடங்கிய சுமார் முப்பது பேர் பங்குகொண்டு நாட்டுக்குப் பெருமை தேடித்தந்தனர். அவ்விழாவில் எனது சிபார்சு பேரில் மருதமுனையில் இஸ்லாமிய இலக்கிய ஆய்வின் தோற்றுவாயாக அமைந்த முதலாவது இஸ்லாமிய இலக்கியப் பெருவிழா நடத்திய அதன் பிதாமகன் என்று போற்றப்படும் செய்யது ஹசன் மெளலானா அவர்கள் அன்றைய தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதியால் பொன்னாடை போர்த்தப்பெற்று ரூபா பத்தாயிரம் பொன்முடிப்பும் பெற்றுக் கெளரவம் செய்யப்பெற்றார். அத்தோடு இலங்கையில் நடைபெற்ற நான்காவது மாநாட்டில் அல்லாமா எம். எம். உவைஸ் அவர்களுக்குப் பக்கபலமாக இருந்து நடாத்திய அறிஞர் ஏ. எம். சமீம் அவர்கள் கலைஞரால் பொன்னாடை போர்த்தப்பெற்றுக் கெளரவிக்கப்பட்டனர்.

எந்தவித விமர்சனங்களுமற்று என்னால் இயன்றளவில் சிறப்பாக எனது பொறுப்பினை நான் செய்ததன் காரணமாக ஏழாவது மாநாட்டிலும் பொறுப்பினை என்னையே தொடரச் செய்தனர். இம்மாநாட்டுச் செயற்பாடுகளில் முன்னைய மாநாட்டில் என்னுடன் முழுமையாய் செயற்பட்ட என் மனைவியுடன் கவிஞர் அஷ்ரஃப் சிஹாப்தீனும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டார். விமான இருக்கை சம்பந்தமான பொறுப்பை கவிஞர் தாஸிம் அவர்கள் ஏற்று பல இடர்பாடுகளையும் தாங்கிச் செய்துதவினார் இம்மாநாட்டில் இலங்கையைச் சேர்ந்த எழுபதுக்கும் அதிகமான பேராளப் புத்திஜீவிகள் (வியாபாரிகளற்று) பங்குபெற்றனர். துரதிஷ்ட வசமாக ஆறு மாநாடுகளைச் சிறப்பாக நடாத்திய இஸ்லாமிய இலக்கியக் கழகத்துள் அரசியல் புல்லுருவியொன்று நுழைந்ததால் பல குளறுபடிகள் தோன்றி நம் நாட்டுப் பேராளர்களும் பெரும் சிரமத்துக்குள்ளாயினர்.

இம்மாநாட்டில் சான்றோர் விருதுக்காக மலேசியாவில் ஹாஜிடத்தோ முஹம்மது இக்பால் இந்தியாவில் இலக்கியப் புரவலர் ஹாஜி. ஏவி. எம். ஜாபர்தீன், எழுத்தாளர் தமிழன்பன், என்பவர்களோடு எனது பெயரும் பிரஸ்த்தாபிக்கப் பெற்றிருந்தது. இலங்கையில் நடந்த ஒன்று கூடலில் இது பேசப்பெற்ற போது நானதனை மறுக்க முயன்றபோது கவிக்கோ தாங்கள் முன்னரே முடிவு செய்துவிட்டதாக என்னைக் கைய மர்த்திவிட்டார்.

கெளரவிப்பை எதிர்பார்த்து வந்த சிலருக்கு அது சங்கடத்தை ஏற்படுத் தியதை அவர்கள் முகபாவத்திலிருந்து அறிய முடிந்தது. மூன்றாம் நாள், மாநாட்டு சான்றோர் விருதுக்கான நிகழ்வில் என்னையும் மேடைக்கு அழைத்தனர்.

நானும் சென்றேன். அவையில் சோற்றுக்காய்த் தட்டேந்தவைக்கப்பெற்ற என் தலைமையில் சென்றிருந்த எனது நாட்டுப் பேராளர்கள் என் கண்ணில் பட்டதும் விருதைப்பெற மனமொப்பாத எனக்கு இருப்புக்கொள்ளவில்லை. மேடையின் பின்புற வழி மூலம் அழைக்குமுன் வேகமாக வெளியேறி விட்டேன். இந்த நிகழ்வு பற்றி தினக்குரல் பத்திரிகையில் ஊடகவியலாளர் நிலாம் மாநாடுபற்றிய விமர்சனக் கட்டுரையில் தனக்குக் கிடைக்கவிருந்த கெளரவத்தையும் பெற்றுக்கொள்ளாது மேடையை விட்டு வெளியேறி ஜின்னாஹ் இலங்கையரின் கெளரவத்தைக் காப்பாற்றினார் எனக் குறிப்பிட்டிருந்தார்.

இதன் பின்னர் நடைபெற்ற மலேசிய மாநாட்டிற்கும் அதன் ஏற்பாட்டுக் குழுவினர் எங்களையே இலங்கை இஸ்லாமிய ஆய்வகம் இலங்கையின் பொறுப்பாளர்களாக நியமித்து அதன் தலைவர் ஹாஜி டத்தோ இக்பால் அவர்கள் மூலம் எழுத்து மூலம் தெரிவித்தனர். அவர் பலமுறை இந்தியாவிலும் இலங்கையிலும் என்னோடு தொலைபேசியில் தொடர்புகொண்டார். அவர்களின் தூதுக்குழு இலங்கை வருவதற்கு முதல்நாள்வரை எங்களது முகவராக நீங்களே இருப்பீர்கள் என்றவர் மறுநாள் அமைச்சில் நடைபெற்ற கூட்டத்தில் மணவறையில் மாப்பிள்ளையை மாற்றியது போல எங்களைத் தூக்கவீசிப் பொறுப்பை மாற்றினார். நாங்கள் அதிர்ச்சியுற்றோம் இதற்குள் சிலர் குறுக்குவழியில் உள்நுழைந்திருப்பது, அவர்கள் முன்னின்று தடுமாறியதில் இருந்து நாம் புரிந்து கொள்ளாமலில்லை. கருத்துச் சொல்ல அழைக்கப்பெற்ற போது நானும் அஷ்ரஃப் சிஹாப்தீனும் நடந்தவற்றை விலாவாரியாய் விளக்கினோம். நிலைமையில் தெளிவுகொண்ட கெளரவ அமைச்சர் மிக்க பெருந்தன்மையோடு ஜின்னாஹ் உங்கள் தலைமையில் நாங்களும் வருகின்றோம் என்றார். புறந்தள்ளப்பெற்றபின் அமைச்சர் அவர்களின் கெளரவமான வேண்டுகோளை எம்மால் ஏற்றுக் கொள்ள இயலாத நிலையில் நாங்கள் வெளிநடப்புச் செய்ய வேண்டியானது.

(அடுத்த வாரம் தொடரும்)


 

வாருங்கள் இலக்கியத்தால் இதயங்களை இணைப்போமா, பிரிப்போமா?

புற்றுக்குள்ளிருந்து கருநாகம் திடீரென வெளியாகி அனைவரையும் அதிர்ச்சிப்படுத்தியது போன்ற கும்பகோண இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு பற்றிய அதிர்ச்சித் தகவலை 09.02.2014 வாரமஞ்சரியில் முன்பக்கம் நடுப்பக்கங்களில் கண்டு பெரு வியப்பாகியுள்ளது. இவ்வளவு பெரிய விடயம் எப்படி இத்தனை காலம் இருட்டடிப்புக்குள்ளாகி இருந்தது?

நானும் 2002இல் கொழும்பு உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டில் பேராளராகவும், 2007 சென்னை உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டில் பார்வையாளராகவும் கலந்து கொண்டேன். காயல்பட்டின மாநாட்டுக்குப் பெயர் பதிவாகியும் சுகவீனம் தடையாக்கிவிட்டது. இவையும் மற்றும் மலேஷிய மாநாடுகளுக்கு இலங்கை ஊடகங்கள் ஒரு மாத முன்பிருந்தே பிரச்சாரங்களைச் செய்திருக்க கும்பகோண மாநாட்டுக்கான ஏற்பாடுகள் மாத்திரம் குசுகுசுப்புக்குள் சிக்கி கூனிக்குறுகிவிட்டதேன்? குறிப்பிட்ட ஒரு சிலர் மாத்திரம் ஏன் கண்டுகொள்ளப்பட்டனர்?

மானா மக்கீன், அஷ்ரப் சிஹாப்தீன் ஆகியோரின் விளக்கங்கள் சிறப்பானவை, உண்மையானவை. கொழும்பு மாநாட்டு நிகழ்ச்சிகளும் விருந்தோம்பிய பண்பும், வந்தோரை வரவேற்ற பண்பும் பாராட்டத்தக்க தாக இருந்தன. ஆனால்.... சென்னை மாநாட் டில் இலங்கைப் பேராளர்கள் அவமதிக்கப் பட்டனர் என நண்பர் அஷ்ரப் சிகாப்தீன் ஒற்றை வரியில் குறிப்பிட்டாலும் விடயம் பெரியது. இலங்கை பேராளர்களை அவர்கள் கணக்கில் எடுக்காமை, முதல்வர் மு. கருணாநிதி வருகிறார் என்றதும் முன்னணி யில் இருந்த இலங்கையர் பின்னுக்கு அனுப்பப்பட்டமை, டாக்டர் ஜின்னாஹ் ஷரிப்தீன் விருதை நிராகரித்தமை, பகற்போச னத்தின் போது சகிக்க முடியாத நடவடிக்கை கள் என்பன ஏன் வந்தோம் என்ற எண்ணத் தையே இலங்கையருக்கு அங்கு ஏற்படுத்தி யது. சிலரின் நூல் வெளியீடும் இடம்பெறும் செய்தியும் கண்டேன். 2007இல் நூற்றுக்கணக் கான இந்திய எழுத்தாளர்களின் நூல் வெளியீடுகளில் இலங்கையர் சிலரின் பெயர் மற்றும் நூல் பெயர்களும் மளமளவென மொத்தமாக வாசிக்கப்பட்டு ‘இந் நூல்கள் வெளியிடப்படுகின்றன’ என்று கூறி சப்பி விட்ட நூல் வெளியீடே அங்கு நடைபெற் றது. எனவே இலங்கை எழுத்தாளர்கள் வெளியீடு பற்றி அதிகக் கற்பனை பண்ண வேண்டாம்.

மாநாட்டில் கலந்துகொள்ள உள்ளோரில் என் நெருக்கத்துக்குரிய அல்ஹாஜ் எஸ்.எச்.எம்.ஜெமீல் சேர், எனது ஊரவரான பேராசிரியர் எம்.எஸ்.எம்.அனஸ், டாக்டர் தாசிம் அஹ்மத், அருள் சத்தியநாதன் முதலானோரை வாழ்த்துவதுடன் அவர்களும் ஏன் மெளனம் சாதித்தனர் என்பதும் புரியவில்லை. இது தமிழகத்தில் வெளியாகிய ‘வாருங்கள் இலக்கியத்தால் இதயங்களை இணைப்போம்’ என்ற கூற்கைப் பொய்ப்பித்து மாறாகப் ‘பிரிப்போம்’ என்ற கூற்றே பொருத்தமாகின்றது. வருத்தத்துடன்.....

எம்.ஐ.எம். அப்துல் லத்தீப்,

19, 14ஆம் ஒழுங்கை,


கும்பகோணம் இந்த ஆண்டின் முதல் சித்து விளையாட்டு

இலங்கையின் இலக்கிய வகைமை அடையாளப்படுத்தல் அன்று முதல் இன்று வரை ஒரு குறிப்பிட்ட சுழற்சியினரை விட்டு மாறிவிடுவதற்கான முயற்சிகள் தொடர் தோல்வியிலேயே முடிந்துள்ளது.

பல்கலைக்கழக நிலையினர் சிலரும் இலக்கிய ஜாம்பவான்கள் என்கின்ற சில அடையாளப்படுத்தலாளர்களும் மாறி மாறிச் சொறிகின்றவர்களாக அல்லது ஒரே வாய்ப்பாட்டை மீட்டுகின்றவர்களாக இருக்கின்றார்களே அல்லாமல் புதிய தேடல்களும் வகைப்பாடுகளும் அவர்களிடம் வருவதாகவோ வருவதற்கு வழி விடுவதாகவோ தெரியவில்லை.

சிறிய வயதில் பள்ளிக்கூடத்திற்குச் செல்லும் போது கொண்டு செல்லும் உணவுப் பண்டங்களை மற்றவர் காண்பதற்கு முன் வாய்க்குள் வைத்து விட்டுப் பாசாங்கு செய்வதுபோல் யாருக்கும் தெரியாமல் ஓரிருவரின் பெயர்களை உள்ளடக்கி விட்டு தங்களது கடைக்கான சாமான்கள் இவைகள்தான் என அடையாளப்படுத்தும் வியாபாரத்தனமாக இலக்கியம் மாறிவிட்டது என்பதற்கு கும்பகோண மாநாட்டு அடையாளப்படுத்தல் சிறப்புச் சான்றாகும்.

அன்று பத்திரிகைகளில் யாரையாவது கைகால் பிடித்து, தலைநகரத் தொடர்புடன் தங்களை அடையாளப்படுத்திய இவர்கள் கும்பகோணத்திலும் ஒளித்து விளையாடுவது புதிய கதையல்ல.

தென்கிழக்குப் பல்கலைக்கழக மற்றும் கொழும்பு தமிழ்ச் சங்க அண்மைக்கால மாநாடுகளில் ஆய்வுகளும் பேராளர் பங்குபற்றுதல் சந்தர்ப்பமும் திறந்துவிடப்பட்டது போல் தென் இந்திய மாநாடுகள் ஜனரஞ்சகப்படுத்தப்படாமல் தொடர்ந்தும் இருந்து வருவது குறைபாடே. இது கும்பகோணத்தையும் விடாமை கேலியே.

இன்று இதனைப் பிழையெனக் கூறும் சிலரும் இதற்குமுன் கீழ்க்கரை, மதுரை மற்றும் சென்னை மாநாடுகளில் தலைமையேற்று வெளிநாட்டு இலக்கியச் சவாரியால் இன்னுமொரு சாராரைப் புறந்தள்ளியவர்களே. இப்போதாவது, பிந்திய புத்தியில் கும்பகோணத் தில்லுமுல்லை வெளிக்காட்ட இணைந்ததில் திருப்தி என்கிறார் விபரம் தெரிந்த மூத்தவர்.

ஒரு நூலை எழுதி அதன் பிரிவுகளைத் தனித்தனி நூலாக்கி ஒவ்வொரு மாநாடுகளிலும் வெளியிடத் துடிக்கும் சிலர் எப்போது திருப்தி கொள்வதும் வழி விடுவதும் எல்லாவற்றிலும் பொன்னாடை. எல்லாவற்றிலும் பட்டம். இலங்கையில் மூவாயிரம் முதல் பத்துவரை கொடுத்தால் தொகைக்கேற்ப நீண்டு செல்லும் பட்டப்பொன்னாடை வியாபாரிகளுடன் இணைந்தால் ஒவ்வொரு வருடமும் கிடைக்குமே, பழைய வாகன இலக்கத் தகடுகளின் எடுத்துக் கொண்ட பட்டம்.

ஏதோ ஒரு மூலையில் எந்தப் பெயர் தாங்கியோ இலக்கிய முயற்சிகள் நடந்தால் சந்தோசப்படும் கூட்டம் நாம். ஆனால் ஊடக வளர்ச்சியின் உச்சக் காலத்தில் ஒளித்து விளையாடாமல் பரவலாக்க வேண்டுமென்பதே எம் கோரிக்கை. அப்பரவல் மூலமே நல்லவைகள் கிட்டும். ஆட்கள் கூடினால் தனக்கில்லாமல் போய்விடும் என்ற நினையாமல் எத்தனை பெரிகினும் தானும் வருவேன் என்ற தன்னம்பிக்கையுடன் நகர்வோம். தினகரன் வாரமஞ்சரி இல்லாவிட்டால் இது கூடத் தெரிந்திருக்காதோ...?

அரச ஊடக நிலைக்கப்பால் மக்கள் மனமறிந்து பணியாற்ற வீறு கொண்டுள்ள ஆசிரிய பீடத்திற்கு எமது நன்றிகள். களம் அமைப்பதும் மாற்றுக் களம் கொடுப்பதும் விரிவாக்க உந்துகையின் வெளிப்பாடே. கும்பகோணம் இந்த ஆண்டில் முதல் சித்து விளையாட்டு.


வெளிப்படைத்தன்மை ஏன் வெளிக்காட்டப்படவில்லை?

இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மாநாடுகளுக்கு நீண்ட கால வரலாறும், பாரம்பரியமும் பின்பற்றப்பட்டு வருகின்ற சூழ்நிலையில் கும்பகோணத்தில் நடைபெறுகின்ற மாநாடு மேற்படி பாரம்பரியத்தை மீறி வெளியரங்கத்தில் உலக மாநாடாகவும் உள்ளரங்கத்தில் மாநில மாநாடாகவும் இரட்டை வேடம் பூண்டு நடைபெறுகின்றதா? என என்னைப் போன்ற இலக்கிய ஆர்வலர்களுக்கு புரியாத புதிரை ஏற்படுத்தியுள்ளது.

பல தடவை சிறப்புச் செய்யப்பட்டு கெளரவம் பெறுவதையே தமது தொழிலாகவும், வருமானமாகவும் கொண்டு வாழும் சில சுயநல இலக்கியவாதிகளின் கைவரிசை “இஸ்லாமிய இலக்கியம்” என்ற பெயரில் மீண்டுமொரு தடவை அரங்கேறியிருப்பதையே கும்பகோண மாநாடு எமக்கு உணர்த்துகின்றது.

பொதுவாக ஒரு மாநாடு நடாத்தப்பட முன்னர் குறைந்தது 3 மாதங்களுக்கு முன்பாவது ஊடகங்களில் பகிரங்கப்படுத்தப்படுவது வழமை? அவ்வாறான வழமையை இலங்கை ஏற்பாட்டாளர்கள் ஏன் கடைப்பிடிக்கவில்லை? தமக்குக் கிடைக்கும் இலவச விமான டிக்கட்டுகளும், அதிதிகளுக்கான செளகரியங்களுக்கும் தகுதி படைத்த ஏனையவர்களுக்கு ஏன் கிடைக்கக் கூடாது? என்ற இலக்கியச் சுயநலத்தால் உந்தப்பட்டவர்கள் இந்த மாநாடு பற்றிய வெளிப்படைத்தன்மையை வெளிக்காட்ட தவறியமை சென்ற தினகரன் ஞாயிறு வாரமஞ்சரியில் நன்கு பகிரங்கப்படுத்தப்பட்டமைக்காக தினகரன் ஆசிரிய பீடத்திற்கு மிக்க நன்றியைத் தெரிவிக்கின்றோம்.

சென்ற 2013இன் ஆரம்பத்தில் கொழும்பு தாருஸ் ஸலாமில் முஸ்லிம் காங்கிரஸின் தேசிய தலைவர் அல்ஹாஜ் றவூப் ஹக்கீம் கூட்டிய இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டின் ஆரம்ப கூட்டத்தில் 2013 செப்டம்பரில் உலக இஸ்லாமிய இலக்கிய மாநாடு இலங்கையில் நடைபெறும் என்ற தீர்மானம் பகிரங்கமாக அறிவிக்கப்பட்டது. அதில் கலந்து சிறப்பித்த முக்கியஸ்தர்கள் அனைவரும் தற்போது கும்பகோணத்திற்குச் சென்ற மர்மம் என்ன?

அஷ்ஷெய்க் அன்ஸார் பbல் மெளலானா (நbமி) எம்.ஏ.

விரிவுரையாளர் அட்டாளைச்சேனை


அமைச்சர் ரவு+ப் ஹக்கீம் அவர்களது கவனத்திற்கு

குறித்த இம்மாநாடு தொடர்பாக இலங்கையில் வதியும் இஸ்லாமிய தமிழ் இலக்கியத்தில் ஆர்வமுள்ள எழுத்தாளர்கள், கலைஞர்கள் மற்றும் தேசியப் பத்திரிகைகளின் பிரதம ஆசிரியர்களுக்கோ அல்லது பத்திரிகையாளர்களுக்கோ முறையாக மாநாடு தொடர்பாக அறிவிக்கப்படவில்லை எனும் குற்றச்சாட்டு பொதுவாகப் பரவலாக எழுந்துள்ளது. முக்கியமான பிரமுகர்கள் பலரும் புறக்கணிக்கப்பட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அது குறித்துத் தாங்கள் கவனத்திலெடுத்து ஆவன செய்யுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2014 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.