புத் 66 இல. 07

விஜய வருடம் மாசி மாதம் 04ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1435 ர. ஆகிர் பிறை 15

SUNDAY FEBRUARY 16 2014

 

கவிக்கோவும், கம்பவாரிதியும் நடத்தும் இலக்கிய விழாக்கள்

கவிக்கோவும், கம்பவாரிதியும் நடத்தும் இலக்கிய விழாக்கள்

கவிக்கோ என்றால் அப்துல் ரகுமான் எனவும், கம்பவாரிதி என்றால் ஜெயராஜ் எனவும் அறியாதவர்கள் தமிழ் உலகில் இருக்க முடியாது எனுமளவிற்கு ஒருவர் தமிழகத்திலும், அடுத்தவர் ஈழத்திலும் இலங்கையிலும் தடம் பதித்து அனைத்துலக தமிழ்ச் சமூகத்தினாலும் மதிக்கப்பட்டு வருகிறார்கள். இவ்விரு இலக்கிய மாமலைகள் தலைமையேற்று நடத்தும் இருவேறு மாபெரும் இலக்கிய விழாக்கள் நேற்று முன்தினம் முதல் தமிழகத்திலும், இலங்கையிலும் மிக மிக விமரிசையாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

தமிழகம் கும்பகோணத்தில் ஆறாவது அனைத்துலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மாநாடு சிறப்பாக நடைபெறுகிறது. அதேபோன்று இலங்கையின் கொழும்பு மாநகரில் கம்பன் விழா மிகவும் கோலாகலமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அங்கு நடைபெறும் இஸ்லாமிய மாநாட்டில் இலங்கையைச் சேர்ந்த பலரும் கலந்து கொள்ள, இங்கு இடம்பெறும் கம்பன் விழாவில் தமிழகத்திலிருந்து பல கலை இலக்கியவாதிகள் கலந்து கொள்கிறார்கள். இது வரவேற்கத்தக்கதொரு வரலாற்று நிகழ்வாகும்.

முன்னொரு காலத்தில் கலை, இலக்கியத்துறையில் இரு நாடுகளுக்குமிடையே ஒரு வழிப் பாதையே காணப்பட்டது. தமிழகக் கலைஞர்களும், இலக்கியவாதிகளும், எழுத்தாளர்களும் மட்டுமே இங்கு வந்து தமது திறமையையும், புலமையையும் வெளிக்காட்டிச் சென்றனர். ஒரு கால கட்டத்தில் குறிப்பாக திரைப்பட நடிக நடிகைகளின் பட்டாளம் இங்கு வந்து எம்மக்கள் மற்றும் உள்ளூர் கலைஞர்கள் மத்தியில் ஆக்கிரமைப்பை நடத்தி வந்தன. மாறாக எமது நாட்டினருக்கு அங்கு சிறிதளவு இடமும் அளிக்கப்படவில்லை. இதனை அங்குள்ள சிலர் மறுதலித்தாலும் உண்மை அதுவே.

ஆனால் இன்று நிலைமை முற்றாக மாறுபட்டுள்ளது. அங்கிருந்து எத்தனைபேர் வருகிறார்களோ அதனைவிடவும் இங்கிருந்து கலைஞர்கள், இலக்கியவாதிகள், எழுத்தாளர்கள் அங்கு சென்று தமது புலமையை வெளிக்காட்டி வருகின்றனர்.

அதற்கு அங்குள்ளவர்கள் களமமைத்துத் தருகிறார்கள். அதற்காக அவர்களை நாம் நன்றியுடன் பாராட்ட வேண்டும். சிங்களத் தீவினிற்கோர் பாலம் அமைப்போம் என்ற பாரதியாரின் பாடலுடன் கலைந்துபோன பாலக் கனவு இப்போது இருநாடுகளுக்கு மிடையில் இலக்கிய ரீதியான பலம்மிக்கதோர் பாலத்தை அமைத்துவிட்டது எனக் கூறுமளவிற்கு பரஸ்பரம் இருநாட்டு கலை, இலக்கியத் தொடர்புகளும் வலுவடைந் துள்ளது.

தமிழகத்தில் எமது நாட்டு எழுத்தாளர்களின் நூல்களை வெளியிடுவது மட்டுமல்லாது, அங்கு அந்நாட்டு மூத்த இலக்கியவாதிகள் பங்குபற்றும் இலக்கிய மேடைகளில் எமது நாட்டுப் புலமையாளர்கள் தலைமை தாங்கும் நிகழ்வுகளும் இடம்பெற்று வருவதை அவதானிக்க முடிகிறது. உங்கள் செந்தமிழுக்கு முன்னால் எங்கள் சென்னைத் தமிழ் நிற்க முடியாது சார் என்று அங்குள்ள இலக்கியவாதிகள், கவிஞர்கள் கூறிப் பெருமைப்படுமளவிற்கு அவர்கள் எம்மைப் பெருமைப்படுத்தி வருகிறார்கள்.

அத்துடன் அங்கு நடைபெறும் அந்நாட்டு எழுத்தாளர்களின் நூல்களின் முதற் பிரதியை இங்கிருந்து புரவலர் ஹாசிம் உமர் அவர்களை அழைத்துப் பெற்றுக் கொள்வதை அவர்கள் கெளரவமாக நினைத்துக் கெளரவமளிப்பதையும் காணமுடிகிறது. அதேபோன்று தமிழகத்தில் நடைபெறும் புத்தகக் கண்காட்சியில் இலங்கை நூல்களுக்கும் முக்கிய இடம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த அரிய வாய்ப்பை நாம் பல வருடங்களாக நாமாகவே இழந்திருந்தோம் என நினைக்கையில் கவலைதான் வருகிறது.

தற்போது கும்பகோணத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மாநாட்டில் எமது நாட்டு மூத்த இலக்கியவாதிகள், கல்விமான்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள், பாடகர்கள் எனப் பலரும் கலந்து சிறப்பித்துக் கொண்டிருக்கிறார்கள். இவர்களை கவிக்கோ அப்துல் ரகுமான் தலைமையிலான ஏற்பாட்டுக் குழுவினர் அங்கு அழைத்துள்ளமை உண்மையிலேயே பாராட்டுக்குரிய விடயம்.

இந்த அனைத்துலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மாநாடு தொடர்பான முன்னறிவித்தல் இலங்கையில் சரியான முறையில் பொதுவான அறிவித்தல் மூலம் அறிவிக்கப்படவில்லை எனவும், அவ்வாறு அறிவித்தல் கொடுக்கப்பட்டிருந்தால் இன்னும் பலர் இம்மாநாட்டில் பங்கு பற்றியிருக்கக் கூடிய வாய்ப்பினைப் பெற்றிருக்கலாம் எனும் ஒரு சிறிய மனத்தாங்கல் உள்ளூர் இலக்கியவாதிகள் சிலரிடம் காணப்படுகிறது.

குறிப்பாக மூத்த எழுத்தாளர், பன்னூல்களின் ஆசிரியர் தமிழ்மணி மானா மக்கீன், கவிஞர் ஜின்னா ஷெரிபுதீன், இலக்கிவாதி அஷ்ரப் சிகாப்தீன் உட்படச் சிலருக்கு மாநாடு தொடர்பான முறையான அறிவித்தல், பங்குபற்றுதலுக்கான அழைப்பிதழ்கள் கிடைக்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் முன்னைய மாநாடுகளில் பங்குபற்றியது மட்டுமல்லாது அவற்றின் இலங்கை ஏற்பாட்டாளர்களாகவும் இருந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இது ஒரு குறையல்ல. எனினும் ஏற்பாட்டாளர்கள் தமது வேலைப்பளுவிற்கு மத்தியில் இத்தகைய சில தவறுகளை தவறுதலாக விட்டிருக்கலாம். அவை எதிர்காலத்தில் திருத்திக் கொள்ளப்பட வேண்டும் என்பது எமது கருத்தாகும். அடுத்ததாக கொழும்பில் வருடாவருடம் நடைபெற்றுவரும் கம்பன் விழாவின் சிறப்புக் குறித்துக் கூறியே ஆக வேண்டும். ஒவ்வொரு வருடமும் ஏதோவொரு புதுமையான உட்புகுத்தலுடன் மிகவும் செம்மையாக இவ்விழா நடத்தப்பட்டு வருகிறது. இதில் உள்ளூர்க் கலைஞர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் அதேவேளை தமிழகம் மற்றும் மலேசிய நாட்டவருக்கும் உரிய கெளரவம் அளிக்கப்படுகிறது.

அதேபோன்று தமிழகத்தில் நடைபெறும் கம்பன் விழாக்களில் கம்பவாரிதி, ஜெயராஜ் அவர்களைச் சிறப்பதிதியாக அழைத்து அவரது பேச்சை அவர்கள் மணிக்கணக்கில் அசையாதிருந்து செவிமடுத்து மகிழ்வதைக் காண முடியும். இவ்வாறு அண்மைக் காலமாக இரு நாடுகளுக்குமிடையில் இலக்கிய உறவுப் பாலம் மிகவும் பாராட்டத்தக்க வகையில் இருந்து வருகிறது. இதனை மேலும் வலுவாக்குவது இரு நாட்டு இலக்கியவாதிகள், எழுத்தாளர்கள், கலைஞர்கள் ஆகியோரின் கடமையாகும். இலங்கைக் கம்பன் விழாவில் கவிக்கோ அப்துல் ரகுமான் கம்பன் உயர் விருது வழங்கிக் கெளரவிக்கப்பட்டது போலவும், தமிழகக் கம்பன் விழாவில் கம்பவாரிதி ஜெயராஜ் உயர் கெளரவம் பெற்றது போலவும் இரு நாட்டு இலக்கியத் தொடர்புகளும் மேலும் வலுப்பெற பாடுபடுவோமாக.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2014 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.