புத் 66 இல. 07

விஜய வருடம் மாசி மாதம் 04ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1435 ர. ஆகிர் பிறை 15

SUNDAY FEBRUARY 16 2014

 

‘KAVITHAIMANJAREY’

எத்தனை மெய்!

“பிள்ளைமனம் கல்” என்றும்
“பெற்றமனம் பித்தெ”ன்றும்,
பள்ளியிலே சிறு வயதில்
படித்தமொழி “எத்தனை மெய்!”

“தவமிருந்து பெற்றெ டுத்துத்
தாலாட்டி வளர்த்த மகள்”
அவமானப் படுத்தி விட்ட
அந்தநிலை; பெரும் சோகம்!

“அப்பா” என அழைத்து
அனுதினமும் தோள்ஏறி
எப்போதும் பிரிய முடன்
இருந்தவளும் ‘பகை யானாள்!’

பள்ளிக்கு அனுப்பி வைத்து
பகலிரவாய் கண் விழித்து
“கல்விதனைக் கற்பித்த
கண்ணியத்தை மறந்தனளே!”

தன் காலில் நின்று கொள்ளும்
தைரியமும் வந்ததனால்,
“என்காலின் தூசி நீ!”
என்றா எடுத்தெ றிந்தாள்?

துன்பிலே எனை ஆழ்த்தி
துயர்க் கடலில் மூழ்கவைத்து,
இன்பங்கள் காணு(ம்) மகள்
“இசைத்த உரை வாள்வீச்சு!”


செத்துப் போனவனின் புலம்பல்

நான்
செத்துவிட்ட ஓர் உயிர்

என் காதலி...
உன் திருமண நாளும்
என் இறந்த நாளும்
ஒரே நாளென்பது
உனக்குத் தெரியுமா?

அந்த நாளின் பின்தான்
எனக்கு
கிறுக்கன் என்ற
மாபெரும் கிரீடம் கிடைத்தது
மூடன் என்று
முன்னுரை எழுதினர்
வாழத் தெரியாதவனென்றும்,
வாழ்த்துப் பாடினர்
நானோ என்னை
இறந்தவனென்று,
எண்ணிக் கொண்டிருந்தேன்

உன் நினைவுகளை உண்டு,
உன் பற்றிய
கனவுகளைப் பருகி
உன் புன்னகையில் படுத்துறங்கி
என் காலங்கள் நகர்கின்றன

என் உறவுகள்
என்னை ஒதுக்கி வைத்தன
பெண்ணே
உன் நினைவுகள் என்னை
எப்போதும் ஒதுக்கியதில்லையடி

மறக்க முடியாதவளே,
இதயத்தில்,
வலிகளை உணரும்போதுதான்
நான் உயிரோடிருப்பதாக,
சந்தேகம் வலுக்கிறது

உன்னிடம்
ஒரேயொரு வேண்டுகோள்
நான் உயிரோடிருப்பது,
உண்மை என்றால்,
என் இரண்டாவது இறப்பின்போது
நீதான்
முதலில் அஞ்சலி செலுத்த வேண்டும்.


வேலி பாயும் போலிகள்

களங்காத ஓடையில்
விளங்காமல் குளிக்கும்
நிலவை அத்தாங்கு வைத்து
அள்ள நினைப்பாய்

ஓலைக் குடிசைக்குள்
கும்மிருட்டில்
குப்பி விளக்கொளியில்
ஊசியின் காதினுள்
உலகை செலுத்துவாய்

மானமுள்ள பெண்ணிற்கு
மருதாணி போல் சாணி பூசி
அசிங்கம் செய்வாய் - அவள்
தாலியை அறுத்து
இரும்புச் சங்கிலி இட்டு
ஊரின் வாய்க்கு
ஆமைப் பூட்டும் போடுவாய்

காதினுள் யாரோ கதைப்பதாய்
கண்ணெதிரே யாரோ நிற்பதாய்
மூக்கில் ஏதோ மணப்பதாய்
கதை கதையாய் கூறுவாய்

வருகின்ற பேருந்தில்
ஓடிச் சென்று ஏறிச் செல்வாய்
அடுத்த தரிப்பிடம் இறங்கி
மீண்டும் மலத்தை மிதிப்பாய்!


ஏமாற்று வேலை

மனிதனின் சித்தாந்தம்
அவனது சுயத்திலிருந்து
ஆரம்பித்து உயிர் ஓவியத்தின்
முதுகின் மீது நின்றபடி
கர்ஜிக்கும் விலங்கு என்று சொல்லலாம்
ஆசையின் சதுரங்க ஆட்டம்
எல்லை வேலிகள் தாண்டி
கனவின் ஞாபகங்களில்
அவன் பறக்கின்றான்
மண் வெட்டி கொண்டு
புழுதி மணம் விளையாடியவன்
கடல் இறங்கி மீன்பிடித்தவன்
கற்றறிந்து கல்விக் கூடம் போகிறவன்
இப்படி பலரும் காசு சேமிக்க
அதிஸ்ட லாபச் சீட்டு வாங்கி
கசிந்த கண்ணீருடன்
சுடுகாடு போனவர் அதிகம்
வாழ்வின் புன்னகை விரியுமென
அதிஷ்ட லாபச் சீட்டு வாங்குதல்
இருக்கும் நாணயத்தையும்
நரிகளின் சுயத்திற்கு தின்னக் கொடுத்து
துயர் நிமிஷங்களின் வாசல் திறந்தவர்கள்
இப்போதெல்லாம் மிகவும் அதிகம்
ஒரு நாள் முதல் தடவையாக
நானும் காசு சேமிக்க
ஆசையின் சதுரங்க
ஆட்டத்தை ஆரம்பித்தேன்
மறுநாள் தோல்வியுற்ற
பெரும் வலியை உணர்கிறேன்


உன்னைத் தேடும் கண்கள்

அழுகைகள் போதுமென்னை அழைத்துவிடு
அனுபவங்கள் போதும்கதை முடித்துவிடு
விழுதுகளும் இல்லைஉடன் வீழ்த்திவிடு
வேர்களும் காய்ந்தன எரித்துவிடு

நாளைய வாழ்க்கையும் பாலைகள்தான்
நல்லதும் கெட்டதும் உன் லீலைகள்தான்
வேளை வரும்வரை பார்த்திருந்தால்
வேதனைகள் நீளுகின்ற சாலைகள்தான்

வந்தபின்தான் உலகிலே சொந்தம் வந்தது
வந்துதிக்குமுன் சொந்தம் எங்கிருந்தது
சிந்தித்தால் மிஞ்சுவது சிரிப்புகள்தான் - ஆனால்
அந்தமும் ஆதியும் உன்னிடம்தான்

கொண்டுவந்து போட்டவரையும் கொண்டுபோய்விட்டாய்
கூடநின்ற குலவிளக்கை ஊதியணைத்திட்டாய்
கன்றுகளாய் வந்தவரும் கடந்துபோய்விட்டார்
கண்ணீரால் கவிதைஎழுத என்னை விட்டுவிட்டாய்

இனிப்பென்று ருசித்ததெல்லாம் எட்டியாகின
இன்பமென்று ரசித்ததெல்லாம் துன்பமாகின
கனிகளென்று சுவைத்ததெல்லாம் கசந்து போயின
கண்கள் மட்டும் முடிவினிலே உன்னை தேடின


ஒரு வீதியின் விதி!

அடர்ந்த மரஞ்செடி
புதருக்குள் அமைதியாக
கிடந்த என்னை
மனிதர்கள் நடமாடி வர
சிறுவழிப் பாதையானேன்,

தன் தேவைகள் சகலதும்
தலையிலும், தோளிலுமாய்
தூக்கிச் சுமக்க
மாடாடு கால்நடைகள்
நாளாந்த வரவால்
நான் மணல் வீதியானேன்
ஆயிரத்து தொள்ளாயிரத்து
என்பத்தொன்றில் அரசின்
அதிகெளரவ பிரதம மந்திரியும்
என் மேல் பயணித்த
பெருமை எனக்குண்டு

இன்றுவரை மாற்றமில்லை
அணில் கடித்த மாங்கனியானேன்
என்னில் இடறி உயிர்
விட்டோரும், ஊனமாகி
கம்பூன்றி நடப்போரும் உண்டு,
தாயாக நானுள்ளேன் சகோதரர்கள்
பலருண்டு என் சேய்களாய்
இருபதுக்கு மேல் சிறு வீதிகள்
எனக்கெப்போது
விடிவு காலம்!


என் கவிதைகள்....!

நீ வந்து பேசுகையில்
பூக்களுக்கு வருத்தம்தான்
காற்றிலேயே தேன் குடித்து
திரும்பி விடுகின்றனவாம்
தேனீக்கள்!

இனி மொட்டைமாடியில் தூங்காதே
போகவே மாட்டேனென அடம்பிடிக்கிறது,
நிலா!

குறைகளோடு பிறக்கும்
எனது கவிதைகள் யாவும்
உன் முத்தம் வாங்கி
முழுமையடைகின்றன!
உன் வீட்டு ரோஜா மொட்டு
மலரவே இல்லையென குழம்பாதே
மலர்தான் உன்னை முத்தமிட
எப்பொழுதும் இதழ் குவித்து ஏங்குகிறது!

எழுத எழுத வெறுமையாகவே இருக்கிறது தாள்
எழுதியதுமே தாளிடமிருந்து தப்பித்து
உன்னைச் சேரும்... கவிதைகள்...!
 


 



 

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2014 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.