புத் 66 இல. 04

விஜய வருடம் தை மாதம் 13ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1435 ர. அவ்வல் பிறை 24

SUNDAY JANUARY 26 2014

 

 
வடக்கு முதலமைச்சர் பணியாற்றுவதற்கு கூட்டமைப்பு தடையாக இருக்கக்கூடாது

வடக்கு முதலமைச்சர் பணியாற்றுவதற்கு கூட்டமைப்பு தடையாக இருக்கக்கூடாது

-கலாநிதி கே. விக்னேஸ்வரன்

வடக்கு - கிழக்கு மாகாணத்தின் முதலாவது முதலமைச்சர் வரத ராஜப் பெருமாளின் நிர்வாகத்தில் மாகாண சபையின் பிரதம செயலாளராகவும் கிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தனின் (பிள்ளையான்) ஆலோசகராகவும் பணி புரிந்தவர் கலாநிதி கே. விக்னேஸ்வரன். மாகாணசபை நிர்வாக நடவடிக்கையில் நன்கு பரிச்சயப்பட்ட கலாநிதி விக்னேஸ்வரன், தற்போதைய அரசியல் நிலவரம், வடக்கு மாகாண சபையின் செயற்பாடுகள் தொடர்பில் வழங்கிய செவ்வியை இங்கே தொகுத்து தருகின்றோம்.

வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தனது அதிகாரங்களைப் பிரயோகித்து மக்களுக்கு சேவையாற்ற தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு வழிவிட வேண்டுமெனவும் தங்களது குறுகிய அரசியல் இலாபங்களுக்காக அவரை தமது பொம்மையாக வைத்து ஆட்டுவிக்கக் கூடாதெனவும் அவர் தெரிவித்தார்.

இதை ஒரு தனிப்பட்ட விவகாரமாகக் கருத முடியாது. தேங்கிக்கிடக்கும் அத்தனை விடயங்களையும் செயற்படுத்துவது மாகாண சபையின் பொறுப்பாகும். முன்னாள் இரா ணுவ அதிகாரியொருவரை வடக்கு ஆளுநராக நியமித்தமையை எதிர்க்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏன் முன்னாள் கடற்படைத் தளபதி ஒருவர் கிழக்கில் ஆளுநராக இருப்பதை பொருட்படுத்தாதது ஏன்? சி.வி.விக்னேஸ்வரன் தேர்தலில் வெற்றி பெற்று முதலமைச்சராவதை நான் விரும்பியவன். ஏனென்றால் அவர் மூலமாவது ஏதாவது மாற்றம் ஒன்று ஏற்படும் என நினைத்தேன். அத்துடன் வடபுலத்துக்கு அவர் நிறையவே செய்வாரென நம்பினேன். ஆனால் வட மாகாண சபை அமைக்கப்பட்ட பின் என் எதிர்பார்ப்புகள் தவிடு பொடியாகின.

வடக்கும் கிழக்கும் யுத்தத்தினால் பெருமள வில் பாதிக்கப்பட்ட மாகாணங்கள். ஏனைய மாகாணங்களிலுள்ள மக்களின் பிரச்சினைகளை விட இந்த மாகாணங்களில் வாழும் மக்க ளின் பிரச்சினைகள் சற்று வேறுபட்டவை. ஒரே மாதிரியானவையல்ல. இந்தப் பிரச் சினைகளைக் கையாள முதலமைச்சர் நிறைய கருமமாற்ற வேண்டியிருக்கின்றது.

குறிப்பாக இந்த மாகாணங்களிலே நான் நான்கு பிரச்சினைகளை அடையாளம் கண்டுள்ளேன். யுத்த விதவைகள் விவகாரம், இளைஞர் வேலைவாய்ப்பின்மை, வீட்டு வசதி, கல்வி ஆகியனவே அவை. வடக்கு மாகா ணத்தில் யுத்தச் சூழலால் விதவைகளாக்கப் பட்டவர்கள் அநேகர். எனினும் அவர்களின் சரியான எண்ணிக்கை எனக்கு தெரியாது.

க.பொ.த சாதாரண தரம், உயர்தரம் சித்தி பெற்ற ஆயிரக்கணக்கானோர் தற்போது தொழி லின்றி அவதியுறுகின்றனர். தொழில் உரு வாக்கம், வேலைவாய்ப்பு வசதிகள் மாகாண சபையின் கடமைகளில் ஒன்றாகும். இந்தப் பிரச்சினை ஏனைய மாகாணங்களில் இருந்த போதும் ஒப்பீட்டளவில் குறைவே. அவுஸ் திரேலியா மற்றும் ஏனைய நாடுகளுக்கு இளைஞர்கள் சட்டவிரோதமாகச் செல்வதாக நாம் கேள்விப்படுகின்றோம். மிகச் சிலரே பாதுகாப்புக் கருதி இந்நாடுகளுக்கு செல்கின்றனர். அநேகமானோர் தமது குடும்பத்தைக் காப்பாற்ற முடியாது, குடும்ப வறுமையைப் போக்கவே தொழில் தேடிச் செல்கின்றனர்.

குடியிருப்பதற்கான வீட்டுப்பிரச்சினை மற்றையது,

பயங்கரவாத யுத்தம் காரணமாக அநேகமான வீடுகள் சேதமாக்கப்பட்டன. அழிக்கப்பட்டன. இந்திய அரசாங்கம் 50 ஆயிரம் வீடுகள் அமைப்பதற்கு உத விகள் நல்கிய போதும் பாதிக்கப் பட்டவர்கள் குடியிருக்க இன்னும் ஏராளமான வீடுகள் தேவைப்படுகின்றன. அடுத்து, பயங்கரவாதத்தின் அடுத்த விளை வாக தமிழர்களின் கல்வி மிக மோசமாக வீழ்ச்சியடைந்துள்ளது. ஆசிரியர் பற்றாக்குறை கட்டடங்கள் அழிக்கப்பட்டதனால் மாணவர்களின் கல்வி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் பாரிய கடப்பாடு மாகாண சபைக்கும் அவற்றின் முதலமைச்சருக்கும் உரித்தானது.

இப்போது ஆளுநரை மாற்றும் விவகாரம் பெரிய விவகாரமாக உருவெடுத்துள்ளது. இந்த விடயத்தை இன்னொரு விதமாகவே மாகாணசபை கையாள வேண்டும். ஊடகங்களின் வாயிலாக இல்லாமல் கலந்துரையாடல் மூலம் இந்தப் பிரச்சினையை நிவர்த்தி செய்ய முடியும். வெறுமனே ஆர்ப்பரித்துக் கொண்டிராமல் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் பேச்சு நடத்தி இவ்வாறான மூலோபாயம் எவரையும் புண்படுத்தாது நல்ல தீர்வு காணமுடியும் பலன்களைத் தருமென்றே நான் நம்புகின்றேன்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சர் இவ்வாறான விடயங்களை நுட்பமாகக் கையாளுவதே சிறந்தது. முதலமைச்சருக்கும் ஆளுநருக்குமிடையிலான புரிந்துணர்வும் இணங்கிப் போகும் தன்மையும் மாகாணசபையை சீராக வழிநடத்த உதவும்.

குடியிருப்பு வசதிகள் போன்ற விவகாரத்தை கையாளுவதற்கான சட்டத்தை இயற்றுவது தொடர்பில் மாகாணசபைகள் சட்டம் மற்றும் 13வது திருத்தத்தில் கூறப்பட்டுள்ளது. எனவே மாகாணசபைகள் இவைகள் தொடர்பில் சட்டமியற்ற முடியும். இதற்கு ஆளுநர் ஒத்துழைப்பு நல்காவிடின் குற்றஞ்சாட்ட முடியும். முயற்சிகள் எதையும் எடுக்காது ஆளுநர் ஒத்துழைப்பு நல்க மறுக்கின்றார் என கூறுவது எந்த வகையில் நியாயம் என்று நான் கேட்கின்றேன். இது அபத்தமானதும் கூட.

சுஐப் எம். காசிம்

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2014 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.