ஹிஜ்ரி வருடம் 1436 ரமழான் பிறை 11
மன்மத வருடம் ஆனி மாதம் 14ம் நாள் திங்கட்கிழமை

MONDAY, JUNE 29 ,2015
வரு. 83 இல.151
 

வம்மியடிப் பிள்ளையாரின் ஆனிப்பௌர்ணமி அலங்கார உற்சவம்

வம்மியடிப் பிள்ளையாரின் ஆனிப்பௌர்ணமி அலங்கார உற்சவம்

ஞி வபூமி என அழைக்கப்படும் இலங்கைத் திருநாட்டின் தென்கிழக்கில் அம்பாறை மாவட்டத்தில் வரலாற்றுச் சிறப்புடன் நீர் வளமும் நிலவளமும் நிறைந்த இயற்கை எழில் கொஞ்சும் அழகிய கிராமம் கருங்கொடியூர் என அழைக்கப்படும் அக்கரைப்பற்று.

ஆரம்ப காலத்தில் இப்பகுதியினை கருங்கொட்டி எனும் பற்றைக்காடுகள் சூழ்ந்திருந்ததாகவும் அவற்றை அகற்றி மக்கள் குடியேறியமையால் கருங்கொடியூர் எனவும் கிழக்கே வங்கக்கடலும் ஏனைய மூன்று பக்கங்களில் தில்லையாறும் வளைந்தோடுவதால் தீவு எனவும் முழுதாக இப்பிரதேசம் கருங்கொடி த்தீவு என பெயர் பெற காரணமானது என வரலாறு கூறுகின்றது.

காலப்போக்கில் கருங்கொடித்தீவு எனும் பெயர் மாற்றம் பெற்று ஒலுவில் கழியோடைப் பாலத்திற்கு தெற்கே அக்கரையில் இருந்தமையால் அக்கரை எனவும் அக்காலத்தில் அப்பகுதியில் இருந்த பத்து கிராமங்களையும் ஒன்றிணைத்து பெரும் பகுதியாக கணிக்கப்பட்ட பகுதி அக்கரைப்பத்து எனவும் இச்சொல் மருவி அக்கரைப்பற்றாக மாற்றம் பெற்றது எனவும் சொல்லப்படுகின்றது.

இவ்வாறு சிறப்புற்று விளங்கும் பதிதனில் கொயில் கொண்டுள்ள ஸ்ரீ வம்மியடிப்பிள்ளையாரின் ஆனிப்பெளர்ணமி அலங்கார உற்சவத்திருவிழா கடந்த 23 ஆம் திகதி வாஸ்து சாந்தியுடன் ஆரம்பமாகி ஜுலை 01 ஆம் திகதி வங்கக் கடலில் இடம்பெறும் தீர்த்தோற் சவத்துடன் மறுதினம் இடம்பெறும் வைரவர் பூசையுடனும் நிறைவுறு கின்றது.

ஆலய வரலாற்றை நொக்குகையில் இப்பிரதேசத்தில் இராமகிருஷ்ண மிஷன் தோற்றம் பெற்ற 1930 ஆம் ஆண்டிற்கு முற்பட்ட காலப்பகுதியில் விநாயகனின் அருளால் ஸ்ரீமான் கணபதிப்பிள்ளை கந்தக்குட்டி அவர்களின் அன்பால் கேணிக்கரை யில் வந்தமர்ந்தவரே ஸ்ரீ வம்மிய டிப்பிள்ளையார்.

கரையில் அமர்ந்தவருக்கு நிழல்தருவதற்காக நடப்பட்ட ஆலமரமும் ஆலயத்தின் தலவிருட்சங்களாக இன்றும் போற்றப்படுகின்றது. இங்குள்ள மூலமூர்த்தியின் கீர்த்தி சிறப்பாக அமைந்ததால் ம ழை இல்லாத காலப்பகுதியில் அருகில் உள்ள கேணிக்குள் வாசம் செய்யவிட்டு மழையைப் பெற்ற காலங்களுமுண்டு.

இவ்வாறு மழை வேண்டி கேணிக்குள் மூலமூர்த்தியை வாசம் செய்ய விட்டமையால் 1957 இல் இப் பகுதி பெரு வெள்ளத்தை சந்தித்ததாகவும் அவரை தேடி கரை சேர்த்த பின் அழிபாடுகளிலிருந்து பலர் தப்பித்ததாகவும் அறிய முடிகின்றது. ஆரம்ப காலத்தில் எவருடைய துண்டுதலுமின்றி விநாயகனின் அனுக்கிரகத்தாலும் சித்திகளாலும் துயரிலிருந்துவிடுபட்ட மக்கள் அவர்களாகவே பொங்கி படைத்து தோத்திரங்கள் பாடி வழிபட்டனர்.

வள்ளலாய் எங்கள் வழித்துணையாய் வம்மியடிப்
பிள்ளையாராய் அமர்ந்த பெம்மானே - உள்ளுருகிக்
கண்ணீர் சொரிகின்றோம் கற்பகமே! நின்கருணைக்
தன்னருளை எங்களுக்குத் தா.
என பேற்றிப் பாடினர்.

1990 களின் பின் விநாயகனை வழிபடுகின்ற அடியவர்கள் கூட்டம் அதிகமானதால் வழிநடத்த சில சபைகள் உருவாகின. அவர்கள்சில முன்னேற்ற காரியங்களை முன்னெடுத்தாலும்.

1996 ஆம் ஆண்டு பொறுப்பேற்ற தற்போதைய தலைவர் நா. அழகரெத்தினம் அம்பாறை மாவட்ட இந்து இளைஞர் பேரவைத் தலைவர் த. கயிலாய பிள்ளையின் ஆலோசனையுடன் ஸ்ரீமத் சுவாமி தந்திரதேவாவை அழைத்து அவரது ஆசியுடன் தற்போது தோற்றமளிக்கின்ற ஆலயத்திற்கான அடிக்கல்லை நாட்டுகின்ற நாளைக் குறித்தனர்.

அதன்படி 1997 இல் நடைபெற்ற அடிக்கல் நாட்டு விழாவில் இராமகிருஷ்ணமிஷன் சுவாமி ஸ்ரீமத் ஜுவனானந்த ஜூ மகராஜ் உள்ளிட்ட கிராமத்தின் பெருமளவி லான மக்கள் கலந்து கொண்டனர்.

அதேவேளை இவ்வாலயத்தின் மூல விக்கிரத்திற்கானகல் தாண்டியடி எனும் பிரதேசத்தில் ஓர் ஆலமரத்தின் அடியில் உள்ளதாக தலைவருக்கும் சிறப்பாசாரிக்கும் தோன்றிய தெய்வீக கனவின் பயனாக கல் தோண்டி எடுக்கப்பட்டு நலந்தரு நாயகனாக செதுக்கப்பட்டு வீற்றிருப்பது இன்னுமோர்அதிசயம், இவ்வாறு அதிசயம் மிக்க ஆலயம் 18 வருடங்களாக தொடர்ந்து தலைமை பொறுப்பேற்ற தலைவர் நிருவாகத்தினர் கும்பாபிசேக குழுவினர் மற்றும் பொதுமக்களின் ஒத்துழைப்போடு 2013 இல் கும்பாபிஷேகத்தினையும் கண்டது.

இப்பெருமை மிகு வம்மியடிப் பிள்ளையாரின் ஆனிப்பெளர்ணமி அலங்கார உற்சம் கடந்த 23 ஆம் திகதி வாஸ்து சாந்தியுடன் ஆரம்பமாகியது. இன்று 29 ஆம் திகதி விசேட வழிபாடுகளும் திருவிழாவும் நாளை 30 ஆம் திகதி பாற்குட பவனியும் 108 அஷ்டோத்திர சங்காபிஷேக கிரியைகளும் நடைபெறும். 01 ஆம் திகதி வங்கக் கடலில் இடம்பெறும் தீர்த்தோற் சவத்துடனும் 02 ஆம் திகதி நடைபெறும் வைரவர் பூசையுடனும் திருவிழா நிறைவுறும்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி