ஹிஜ்ரி வருடம் 1436 ரமழான் பிறை 11
மன்மத வருடம் ஆனி மாதம் 14ம் நாள் திங்கட்கிழமை

MONDAY, JUNE 29 ,2015
வரு. 83 இல.151

மஹிந்த தேசப்பிரிய

மஹிந்த தேசப்பிரிய

இலங்கையை நோக்கி ஒரு காலப் பகுதியில் சர்வதேச சமூகத் தையே திரும்பிப் பார்க்க வைத்தவர் மஹிந்த தேசப்பிரிய என்று கூறிக் கொள்வதில் தவறேதும் இருக்க முடியாது.

உலகெங்கும் பல்வேறு துறை சார்ந்த முக்கியஸ்தர்கள் தங்களது பதவிக் காலத்தின் போது தமக்குரிய பாத்திரத்தை அலங்கரித்து விட்டுச் சென்று விடுவார்கள்.

ஆனால் எக்காலத்திலும் நினைவு படுத்திப் பார்க்கும்படியாக சொற்ப எண்ணிக்கையினரே தமது பெயர்களை வரலாற்றில் பதித்து விட்டுச் செல்கின்றனர். அவ் வாறானோரின் பெயர்கள் மக்களின் உள்ளங்களிலிருந்து இலகு வில் அழிந்து விடுவதுமில்லை. அத்தகைய பிரபல்யங்கள் மக்கள் மத்தியில் என்றுமே மானசீக ஹீரோக்களாகவே விளங்குகின்றனர்.

இலங்கையின் தேர்தல் ஆணையாளராகப் பதவி வகித்து இளைப் பாறியுள்ள மஹிந்த தேசப்பிரியவும் மக்களின் உள்ளங்களில் மறக்க முடியாத நினைவுகளை பதித்து விட்டுச் செல்கின்ற ஒரு வராகவே விளங்குகிறார். நாட்டில் ஜனநாயகம் மீட்சி பெறுவதற்கு வழியேற்படுத்திக் கொடுத்த ஒருவராகவே மஹிந்த தேசப் பிரியவை மக்கள் நோக்குகின்றனர். அவர் மீது சர்வதேசம் கொண்டுள்ள கணிப்பும் இது தான்.

ஜனநாயக முறைமை தொடர்பாக இலங்கை மீது சர்வதேச சமூகம் நெடும் காலமாக பூரண நம்பிக்கை கொண்டிருக்கவில்லை யென்பதை நாம் இவ்விடத்தில் கூறித்தான் ஆக வேண்டியுள் ளது. எமது நாட்டில் ஆட்சியிலிருந்த அரசாங்கங்கள் கடைப்பிடி த்து வந்த ஜனநாயக முறைமை குறித்து நேர்மையுடன சிந்திக் கின்ற இலங்கையர்களும் திருப்தியடைந்து கொண்டதில்லை.

நாட்டில் முன்னர் நடைபெற்ற தேர்தல்கள் ஒருவித அவ நம்பிக்கையையும் சலிப்பையும் ஏற்படுத்தி வந்ததே மக்களின் அதிருப்திக்குக் காரணமாகும்.

குறுகிய காலப் பகுதியில் அதிகளவு தேர்தல்களைச் சந்தித்த விசித்திரமான நாடாக இலங்கை விளங்குகிறது. அதிகாரத்தில் வீற்றிருக்கின்ற அரசாங்கங்கள் தமக்கு வாய்ப்பான வேளைகளில் தேர்தலை முன்கூட்டியே நடத்திய அனுபவங்களை நாம் தாரா ளமாகவே சந்தித்து வந்திருக்கிறோம். பெருமளவான சந்தர்ப் பங்களில் வெற்றிவாய்ப்பை முன்கூட்டியே தீர்மானிக்கும் நோக் கில் தேர்தல்கள் நடத்தப்பட்டதன் காரணமாக இலங்கை மக்கள் மத்தியில் தேர்தல் என்பது அவநம்பிக்கைக்குரியதாக மாறியிருந்த தென்பதே உண்மை.

கடந்த 2005ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின்போது இடம்பெற்ற பாரதூரமான நிகழ்வை மக்கள் இலகுவில் மறந்துவிட முடியாது. அன்றைய தேர்தலின்போது வட பகுதி மக்கள் பூரணமாக வாக்க ளிக்க முடியாத நிலைமை ஏற்பட்டது. மக்கள் வாக்களிக்க முடி யாதபடி புலிகளால் தடுக்கப்பட்டனர். வட பகுதி மக்கள் வாக்க ளிப்பு நிலையங்களை நோக்கிச் செல்ல முடியாதபடி அச்சமான சூழலை புலிகள் வேண்டுமென்றே ஏற்படுத்தினர்.

அன்றைய வேளையில் ஐ. தே. க வேட்பாளராக ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட ரணில் விக்கிரமசிங்க வடக்கு மக்கள் மத்தியில் மிகுந்த செல்வாக்கைப் பெற்றிருந்தார். எனினும் வட பகுதி மக்களின் வாக்குகள் தடுக்கப்பட்டதன் காரணமாக 2005ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க தோல்வியடைய நேர்ந்தது. அத்தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ வெற்றியீட்டுவதற்கு வட பகுதி வாக்குகள் தடுக்கப்பட்டமையே காரணமாக அமைந்ததென்பது வெளிப்படையானதொரு உண்மை.

இதன் பின்னர் 2010 ம் ஆண்டில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலும் பெரும் சர்ச்சைகள் நிறைந்ததாகவே அமைந்தது. மஹிந்த ராஜ பக்ஷவை எதிர்த்துப் போட்டியிட்ட சரத் பொன்சேகா தேர்தல் முறைகேடுகள் தொடர்பாக பகிரங்கமாகத் தெரிவித்த குற்றச் சாட்டுகளை அன்றைய ஆட்சியாளர்கள் காதில் வாங்கிக் கொள்ள வேயில்லை. தேர்தல் முடிவு வெளியான பின்னர் சரத் பொன் சேகா கைது செய்யப்பட்டதும் சிறைவாசத்துக்கு உள்ளானதும் அனைவரும் அறிந்த சங்கதிகள்....

இதுபோன்ற அசாதாரண நிகழ்வுகள் தேர்தல்களுடன் இணைந் தபடியே தொடர்ந்து வந்ததால் மக்கள் சலிப்புற்று இருந்த வேளை யிலேயே கடந்த ஜனவரியில் மற்றொரு ஜனாதிபதித் தேர்தலைச் சந்திக்க நேர்ந்தது. தேர்தல் ஆணையாளரான மஹிந்த தேசப் பிரிய எதிர்கொண்ட முதலாவது ஜனாதிபதித் தேர்தல் அதுவாகும்.

இலங்கையின் கடந்த கால தேர்தல்கள் தொடர்பாக சந்தேகங்கள் கொண்டிருந்த சர்வதேச சமூகம் மஹிந்த தேசப்பிரியவை நம்பிக்கையுடன் உற்றுநோக்கியது. இலங்கை மக்களையும் அவர் வசீகரிப்பவராகவே இருந்தார். நீதியான தேர்தல் மூலம் ஜனநாயகத்தை நிலைபெறச் செய்வதற்கான நம்பிக்கையை மக்கள் மத்தியில் அவர் வெளிப்படுத்திய விதம் முதன்முதலில் நம்பிக்கை யொன்றை ஏற்படுத்தியது.

முறைகேடுகளுக்கு இடமளிக்காத விதத்தில் நீதியான தேர்தலொன்றை நடத்துவதற்கான உத்தரவாதமொன்றை அளித்தது மாத்திரமன்றி, தேர்தலில் வாக்களிப்பது மக்களின் தார்மிகக் கடமையென்ப தையும் மஹிந்த தேசப்பிரிய வலியுறுத்தினார். வாக்குப் பெட்டிகள் மாற்றப்படுதல், கள்ள வாக்கு இடுதல், ஆள்மாறாட்டம் போன்ற பலவிதமான சந்தேகங்களுக்கெல்லாம் தனது கண்டிப்பான உத்தரவாதம் மூலம் முற்றுப்புள்ளி வைத்தவர் அவர்.

வாக்குச்சீட்டுகளை அபகரிக்க முற்படுகின்ற நபர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்படுமென அவர் விடுத்த எச்சரிக்கையானது அத் தேர்தல் மீது உண்மையான நம்பிக்கையை ஏற்படுத்தியதாலேயே வாக்களிப்பு வீதம் பெருமளவில் அதிகரித்திருந்தது.

மஹிந்த தேசப்பிரிய வாக்குறுதியை வழங்கியதுடன் நின்று விடாமல் முழுமையான நீதியான தேர்தலொன்றையும் நடத்திக் காண் பித்தார். தலைமை அதிகாரிக்குரிய அத்தனை இலட்சணங்களும் நிறைந்த ஒருவராக உலகமே அவரைப் பாராட்டியது.

தலைமைப் பதவிக்குரிய ஒருவர் இவ்வாறு தான் இருக்க வேண்டுமென்பதற்குரிய உதாரண புருஷரான மஹிந்த தேசப்பிய கடந்த ஆறாம் திகதியுடன் சேவையிலிருந்து ஓய்வுபெற்று விட்ட போதிலும், தொடர்ந்தும் அப்பதவியில் நீடித்து வருகிறார். அரசியலமைப்புக்கான 19 ஆவது திருத்தத்தன் கீழ் சுயாதீன தேர்தல் ஆணைக்குழு ஏற்படுத்தப்பட்டு புதிய ஆணையாளர் நியமிக்கப்படும் வரை மஹிந்த தேசப்பிரியவின் பணி தொடருமெனத் தெரிவிக்கப்படுகிறது.

இனம். மதம், பிரதேசம், அரசியல் பேதங்கள் அனைத்துக்கும் அப்பாற்பட்டவரான தென்பகுதி கிராமமொன்றைச் சேர்ந்த மஹிந்த தேசப்பிரியவின் ஆளுமையை நோக்குகின்றபோது அவர் மீதான மதிப்பும் மரியாதையும் மேலோங்கவே செய் கின்றன.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி