ஹிஜ்ரி வருடம் 1436 ரமழான் பிறை 11
மன்மத வருடம் ஆனி மாதம் 14ம் நாள் திங்கட்கிழமை

MONDAY, JUNE 29 ,2015
வரு. 83 இல.151
 
கணபதிப்பிள்ளை ஐயாவுக்கு தினகரன் வழங்கி கௌரவித்த ~பண்டிதமணி' பட்டம்

கணபதிப்பிள்ளை ஐயாவுக்கு தினகரன் வழங்கி கௌரவித்த ~பண்டிதமணி' பட்டம்

பண்டிதமணியின் நினைவு தினம் கடந்த 27.06.2015 அன்று அனுஷ்டிப்பு

பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளையின் நினைவு தினம் ஜூன் 27ஆம் திகதி ஆகும். திருநெல்வேலி ஆசிரிய கலாசாலையில் நான் ஆசிரிய மாணவனாகப் பயிற்சி பெற்ற காலத்தில் (1955, 1956) எனது வயது இரு பத்திரண்டு. அன்று எனது மனதைக் கவர்ந்தவர்களுள் ஒருவர் பண்டிதர் ஐயா அவர்கள் மற்றவர் உப அதிபர் கைலாசபதி ஐயா அவர்கள்.

“நீதிதான் கடவுள். கடவுளின் படிவம் நீதி. அறம் என்றால் மனத்துக்கண்மா சிலனாதல் அனைத்தறன்”

இவற்றின் உண்மைப் பொருள்களை இவர்களிடமிருந்தே நான் தெளிவாகவும், விரிவாகவும் கற்றுக்கொண்டேன். இவர்கள் வாழ்க்கையில் நீதி நெறி நின்று வாழ்ந்து காட்டியவர்கள்.

பண்டிதர் ஐயா தமிழ், இலக்கிய, சமய வகுப்புக்களில் எமது மனதில் பதிய வேண்டிய நல்ல கருத்துக்கள் பல கூறினார். இன்றைய மாணவர்கள், இளைஞர்கள் யார் இந்தப் பண்டிதமணி என்பதை அறிவதற்காக முதலில் சில விபரங்களைத் தருகின்றேன்.

சி.க. பிறந்த கிராமம் மட்டுவில். தந்தை சின்னத்தம்பி, தாய் வள்ளியம்மை. 1899.06.12 இல் இவர் பிறந்தார். முதலில் இவருக்குச் சூட்டிய பெயர் சட்ட நாதர். 1902 இல் அன்புத்தாயார் பிரிவு.

சட்டநாதருக்குத் தந்தையும் தாயும் சின்னத் தம்பி அவர்களே. இவர் அவ்வூர் அமெரிக்கமிஷன் பாடசாலையில் கல்வி கற்றார். ஆங்கிலம் கற்பதைத் தந்தை விரும்பவில்லை. வீட்டிலே கல்வி நடைபெற்றது. நல்லாசிரியர்கள் வீட்டில் போய்க் கற்பித்தனர்.

1917 இல் வண்ணார் பண்ணை நாவலர் பாடசாலையில் (காவிய பாடசாலை) கல்வி கற்றார். மட்டக்களப்பு பெரிய தம்பிப்பிள்ளை இவரது சக மாணவன் சுன்னாகம் குமார சுவாமிப்புலவர், ந. சுப்பையாபிள்ளை ஆகியோரிடம் கற்கும் வாய்ப்பு இவருக்குக் கிடைத்தது. மதுரைத் தமிழ்ச் சங்கம் நடத்திய பண்டிதர்பரீட்சையில் இவர் திறமைச் சித்தியுடன் பண்டிதரானார். பின்பு கோப்பாய் ஆசிரிய பயிற்சிக் கல்லூரியில் இரண்டு வருடப் பயிற்சி முடித்துப் பயிற்றப்பட்ட தமிழாசிரியர் பதவி பெற்றார்.

1929 இல் திருநெல்வேலி சைவாசிரிய கலாசாலையில் இவருக்கு தமிழ்ப் பேராசிரியர் நியமனம் கிடைத்தது. அங்கே முப்பது ஆண்டுகள் பணிபுரிந்து ஆயிரத்திற்கு மேற்பட்ட ஆசிரியர்கள் உருவாகுவதற்கு ஆசானாக இருந்தார். தமிழ், சமயம், இலக்கியம் கற்பிப்பதற்கு இவருக்கு இணையானவர் அன்று இல்லை.

தெல்லிப்பழை துர்க்கா தேவஸ்தான பணியாளர் கா. சிவபாலன் இவரைப் ‘பண்டிதர் அப்பா’ என்று அழைப்பார். திருநெல்வேலி சைவாசிரிய கலாசாலை அதிபர் சுவாமிநாதன் ‘பண்டிதர் ஐயா’ என்றே அழைப்பார். சிவத்தமிழ்ச் செல்வி பண்டிகை அப்பாக்குட்டி கூறிய பொன்னான கருத்துக்கள் இவை.

இலக்கிய கலாநிதி பண்டிதர் ஐயா தமிழ் மண்ணனின் தனிப்பெருஞ் சொத்து. யாழ்ப்பாணத் தமிழர்களுக்குப் பெருமை தேடித்தந்த பெருந்தகை. ஆசானாக இருந்து அறிவொளி காட்டியும் குருவாக நின்று ஞான ஒளி ஏற்றியும் பணிபல செய்து பல்லோரின் உள்ளத்தில் இடம்பெற்றவர்.

பண்டிதர் சி.க. ஐயாவுக்கு ‘பண்டிதமணி’ என்ற பட்டத்தை வழங்கியது தினகரன் பத்திரிகை. அவரது பலநூறு கட்டுரைகளைப் பிரசுரித்த பெருமையும் தினகரனுக்கு உரியது. தபால் திணைக்களம் இவருக்கு முத்திரை வெளியிட்டுக் கெளரவித்தது. இலங்கை பல்கலைக்கழகம் இலக்கிய கலாநிதிப் பட்டம் வழங்கியது.

பண்டிதர் ஐயா மனதில் இடம்பெற்ற மனத்துக்கண்மாசிலனாதல் அனைத்தறன் பற்றிச் சிந்திப்போம்.

பரிசுத்தமான ஆண்டவனை வழிபடும் மனிதனது உள்ளத்தில் உருவம் இல்லாத ஆமை ஒன்று உண்டு. இது பொறாமை. அழுக்காறு, ஒளவியம் எரிச்சல் எனப் பல பெயர்கள் உள்ளது. பிறர் சீருடன் வாழும் வாழ்க்கையைக் கண்டு மனம் பொறுக்காமல் புழுங்குவதே பொறாமையாகும். பிறரது சிறப்பைக் கண்டு மகிழ்ச்சியை வேண்டிய மனிதன் அதற்கு மாறாக மனம் கொதிக்கிறான். ஒளவியம் பேசுதல் ஆக்கத்திற்கு அழிவு. என்றார் ஒளவையார்.

மனதில் இந்த அழுக்காறு ஓடுமானால் மனம் மாசுபடும். மனம் என்ற கண்ணாடி தூசு பட்டுவிடும். பெறுவதற்கரிய மானிடப் பிறவி எடுத்த பலனையும் பாழாக்கி விடும். புற்று நோயிலும் பொறாமை பொல்லாதது.

புற்று நோய் தன்னை வருத்தி அழித்துவிடும். அழுக்காறு மற்றவர்களுக்குக் கேடு உண்டாக்குவது மட்டுமல்ல சில நிறுவனங்களையும் அழித்து விடும். சீர்குலையச் செய்து விடும். பாண்டவர்களின் உயர்ச்சி கண்டு துரியயோதன் பொறாமைப் பட்டான். பாரதப் போர் மூண்டு யாவரும் அழிந்தனர்.

பொறாமையுள்ளவர்களைக் கயவர் என்று திருக்குறள் கூறுகின்றது. அழுக்காறு அகற்றிய மனிதன் சிறந்த பேறு பெற்றவன். பிறரது நல்வாழ்வைக் கண்டு எரிச்சல்படுபவன் தர்மபலத்தை இழந்து விடுவான். இவனிடம் சீதேவி குடிகொள்ளமாட்டாள். பொறாமையால் உயர்ந்தவர் இல்லை. பொறாமை அகற்றி வாழ்ந்து தாழ்ந்தவர் இல்லை. இவை வள்ளுவர் கூற்று. எனவே மனப் பரிசுத்தம் பெற வேண்டுமானால் பொறாமையை அகற்ற வேண்டும்.

நான்கு குற்றங்களுள் இரண்டாவது அவா. அவா பிறவிக்கு வித்து என்று கூறப்பட்டுள்ளது. தூய்மையை கெடுப்பது அவா. பிறவியை அறுப்பவர் அவா அற்றவர். நாம் பேராசையை அகற்றினால் நல்ல வண்ணம் வாழலாம். அவா பெரிய துன்பம். இதனை ஒழித்தால் இன்பம் உண்டாகும். மனிதனது அழிவுக்குக் காரணம் ஆசை என்று புத்தபெருமான் கூறியுள்ளார்.

அவாபற்றிச் சிறிது விரிவாக நோக்கு வோம்.

மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசை என்ற மூன்று ஆசைகளும் மனிதனை அழிப்பதற்கு இடம் பிடித்துள்ளன. இவற்றோடு பதவி ஆசையும் சேரும்.

பேராசை மனித உள்ளத்துள் புகுந்து உலகை ஆட்டிக் படைக்கின்றது. வரலாற்றையும், அரசியலையும் நோக்கினால் பலம் உள்ள நாடுகள் பலம் குறைந்த நாடுகளை ஆள ஆசைப்படுகின்றன. இதனால் மக்கள் ஆட்சி, சுதந்திரம் பாதிக்கப்படுகிறது. உலக யுத்தம் ஏற்பட்டு மனித இனம் அழிவதற்கும் ஆசைதான் காரணமாகும். இலக்கியத்துறையை நோக்கினால் இராவணண் சீதை மேல் ஆசைப்பட்டான். மிகப் பெரிய போர் நடைபெற்றது.

கடன்பட்டார் நெஞ்சம் போல் கலங்கினான் இராவணன் என்று கம்பன் பாடியுள்ளான். கோவலன் மாதவி மேல் ஆசைப்பட்டான். கண்ணகி துன்பம் அடைந்தாள். ஆனால் சிலப்பதிகாரம் என்ற நூல் பிறந்தது. கண்ணகி தெய்வமானாள். பொற்கொல்லன் பொன்னுக்கு ஆசைப்பட்டதும் மன்னன் மதிமாறு-ட்டதையும் யாம் சிந்திக்க வேண்டும். சீதை அழகியமானுக்கு ஆசைப்பட்டு இராமன் இலக்குவனுக்கு வேதனை ஏற்பட்டது. தயமந்தி பொன்போன்ற பறவைக்கு ஆசைப்பட்டு நளமகாராசன் பட்டபாட்டையும் சிந்தியுங்கள்.

அடுத்து வெகுளியிடம் செல்வோம். சினம் என்பது மனிதனது உள்ளத்திலிருந்து உதிக்கின்ற ஒரு உணர்வு என்று சொல்வர். வெகுளி, கோபம், ஆத்திரம், முனிவு இவை எல்லாம் ஒரு பொருட் சொற்கள். மனிதனது மிகச் சிறந்த பகைவன் சினம். எமது உள்ளத்தில் சிறிது நேரம் கூட இருக்க விடாமல் துரத்த வேண்டிய அசுரன் சினம். ஆகையி னாலேதான் “உள்ளம் கவர்ந்தெழுந்து ஓங்கு சினம் காத்துக் கொள்ளும் குணமே குணமென்க” என்று கூறப் பட்டது.

நற்குணம், சற்குணம், சீலன் என்ற பெயரை மனிதன் பெறாமல் தடுக்கும் ஆற்றல் இந்த வெகுளிக்கு உண்டு. இதனைத் தணிக்கும் படி ஒளவையார் ‘ஆறுவது சினம்’ என்ற அருமையான பொன் மொழி தந்தார். “சினம் என்னும் சேர்ந்தாரைச் சொல்லி இனமென்னும் ஏமாமாப்புணையைச் சுடும்” என்றார் வள்ளுவர்.

மன்னர்கள் கூடியிருந்த சபையிலே திரளபதியின் துகில் உரியப்படுகின்றது. பாண்டவர்கள் ஐவரில் நால்வர் பொங்கி எழுகின்றனர். தருமர் தம்பிமாரைப் பார்த்து பொறுங்கள் என்றார். பொறுத்தார் அரசாள்வார் பொங்கினால் காடுறைவார் என்பர். ஆனால் கூடாத செயல் செய்தவர்கள் அழிந்தனர்.

மக்கள் சினம் கொள்வதால் பெரிய துன்பங்களை அனுபவிக்கின்றார்கள் என்பதை நாம் காண்கின்றோம். குடும்பம் சீர்கெடுகிறது. கொலை சண்டை, அடி காயங்கள் எல்லாம் ஏற்படுவதை நாம் காண்கின்றோம். வழக்குகள், பொலிஸ், நிலையம், நீதிமன்றம், சிறைச்சாலை எல்லாம் பார்க்கின்றோம். எனவே சினம் காத்தல் அவசியம் என்பதை நாம் உணர வேண்டும்.

நான்காவதாக இன்னாச் சொல்லிடம் செல்வோம். இன்னாச்சொல் என்றால் தீயசொல், கடும் சொல், பிறர் மனதைப் புண்படுத்தும் சொல் எனப் பொருள் கூறுவர் பெரியோர். மனிதன் மனிதத் தன்மையுடன் வாழத்தடை செய்யும் குற்றங்களுள் இதுவும் ஒன்று. தீய சொல்லை விடத்தீ (நெருப்பு) மேலானது என்று வள்ளுவர் கூறியுள்ளார்.

தீயால் சுட்ட புண்புறத்தில் வடு காணப்பட்டாலும் உடம்பில் ஆறிவிடும். ஆனால் நாவினால் சுட்டவடு (குற்றம்) உள்ளத்தில் வடு ஏற்படுத்தும். இந்த வடு ஆறாது. ஆகையால் பிறர் மனம் நோகும் சொற்களை நாம் ஏன் கூறவேண்டும். நாகாக்காவிட்டால் சொற் குற்றத்திற்குள் அகப்பட்டுக் கவலைப்படவே செய்யும்.

நமது சமயம் சைவ சமயம். சிவம் முதற் கடவுள். அன்பேசிவம் நமது மொழி இனிய தமிழ் மொழி, இப்படியான நிலையின் இன்சொல் பேசி மகிழ்ச்சியுடன் வாழ வேண்டியவர் ஏன் இன்னாச்சொல் பேச வேண்டும். பணிவு, இன்சொல், இவை இரண்டும் பணச் செலவு இல்லாமல் மனிதன் அணியும் சிறந்த ஆபரணங்கள் என்று வள்ளுவர் பெருந்தகை கூறியுள்ளார்.

சினம் வரும் போதுதான் வன் சொல்வரும். முதலில் சினம் காத்தல் அவசியம். அன்பாகப் பேசி அன்பினால் ஆக்கம் வரும் என்று காண்போர் இன்சொல் பேசுவர். இன்னாச் சொற்களை நீக்க முயல்வது சிறந்த விரதமாகும். அழுக்காறு அவா, வெகுளி, இன்னாச் சொல் ஆகிய நான்கு குற்றங்களும் மனிதன் பிறக்கும் போது கூடப் பிறந்தனவா? அல்லது இடையில் வந்து மனிதனது உள்ளத்தில் புகுந்தனவா என்பதை அறிஞர்கள், விஞ்ஞானிகள் சிந்திக்க வேண்டும்.

பிறப்பிலே உள்ளதானால் இயற்கையான உணர்வானால் எப்பவோ முடிந்த கரியம், எல்லாம் அவன் செயல் என்று ஏற்றுக்கொள்வதோ என்றும் சிந்திக்க வேண்டும். “குலம் சுரக்கும் ஒழுக்கம் குடிக்கெல்லாம்” என்று கம்பன் கூறியுள்ளபடிதான் இவை செயலாற்று கின்றனவா என்றும் சிந்திக்கலாம்.

“மனத்துக்கண்மாசிலனாதல் அனைத்தறன்” என்ற குறளைப் பண்டிதர் ஐயா அவர்கள் சமய வகுப்பில் பலமுறை கூறுவார். ஆசிரிய மாணவர்களின் உள்ளத்தில் இவை பதிய வேண்டும். பின்பு மாணவர்களின் உள்ளத்தில் இந்த நல்ல குறள்கள் பதிய வேண்டும். ஆசிரியர் இவற்றைப் பதிய வைப்பார்கள். நல்ல மனிதர்கள் உள்ள நாடாக நமது நாடு திகழ வேண்டும் என்ற எண்ணம் சி.க. ஐயா அவர்களிடம் இருந்தது.

மனிதர் மாசில்லா மணிகளாகப் பிரகாசிக்க, புனித உள்ளம் உள்ளவர்களாகத் திகழ வெள்ளை உள்ளம் படைத்தவர்களாக வாழ வழி என்ன என்பதைச் சிறிது சிந்திப்போம். பாரதியார் மனம் வெளுக்க வழியில்லையே என்று கவலைப்பட்டார். ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும். இந்த நிலையை மனிதன் அடைவதற்கு ஆகாத குணங்கள் எல்லாம் அடியோடு நீங்க வேண்டும்.

நீக்க வேண்டும். எல்லாம் வல்ல இறைவனின் அருள் வேண்டும். மூத்தோர் சொல் வார்த்தை கேட்க வேண்டும். மாதா, பிதா, குரு தெய்வம் என்பதை மனதில் பதிக்க வேண்டும். ஒளவையார் சொன்ன நீதி வாக்கியங்கள் மனதில் பதிய வேண்டும். மேன்மை கொள் சைவ நீதி நெறி நின்று வாழ வேண்டும். ஒவ்வொருவரும் தங்கள் மதங்கள் காட்டிய வழியைப் பின்பற்றி வாழ வேண்டும்.

அன்பினால் ஆக்கம் உண்டு. அன்பாகவும் பண்பாகவும் வாழ விரும்ப வேண்டும். கற்பவை கற்ற பின் நிற்க அதற்குத்தக என்பதை மனதில் பதிக்க வேண்டும்.

பண்டிதர் ஐயாவின் நினைவு நாளில் மட்டும் அல்ல வாழ்நாள் முழுவதும் நல்லவற்றைச் சிந்திப்போம்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி