ஹிஜ்ரி வருடம் 1435 ரபீஉனில் ஆகிர் மாதம் பிறை 14
விஜய வருடம் மாசி மாதம் 03ம் நாள் சனிக்கிழமை
SATURDAY, FEBRUARY , 15, 2014
வரு. 82  இல. 40
 

யாழ் நகரில் சாட்சியங்கள் பதிவு; இன்று சாவகச்சேரி; நாளை யாழ் கச்சேரியில்

காணாமற் போனவர்கள் தொடர்பான ஆணைக்குழு விசாரணைகள்

யாழ் நகரில் சாட்சியங்கள் பதிவு; இன்று சாவகச்சேரி; நாளை யாழ் கச்சேரியில்

காணாமல் போனவர்கள் தொடர்பாக ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழு நேற்று கோப்பாய் பிரதேச செயலகத்தில் சாட்சியங்களைப் பதிவுசெய்தது.

ஆணைக்குழுவின் தலைவர் மக்ஸ்வெல் பராக்கிரம பரணகம, ஆணைக்குழு உறுப்பினர்களான மனோ இராமநாதன் மற்றும் சுரஞ்சனா வித்தியாரத்ன ஆகியோர் முன்னிலையில் சாட்சியங்கள் பதிவுசெய்யப்பட்டன.

காணாமல் போனவர்கள் தொடர்பாக ஏற்கனவே முறைப்பாடுகளைப் பதிவு செய்தவர்களே இவ்வாறு சாட்சியங்களைப் பதிவு செய்தனர். கோப்பாய் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பத்து கிராம உத்தியோகத்தர் பிரிவுகளைச் சேர்ந்த 77 பேர் ஏற்கனவே முறைப்பாடுகளைப் பதிவு செய்திருந்தனர். இவர்கள் நேற்றையதினம் ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியங்களை வழங்கியிருந்தனர்.

காணாமல் போன தமது உறவுகள் தொடர்பாக பெருந்தொகையானோர் சாட்சியங்களைப் பதிவுசெய்திருந்தனர்.

இன்று 15ஆம் திகதி சாவகச்சேரி பிரதேச செயலகத்தில் சாட்சியங்கள் பதிவு செய்யப்படவிருப்பதுடன் நாளை 16ஆம் திகதியும், நாளை மறுதினமும் யாழ் மாவட்ட செயலகத்திலும் சாட்சியங்கள் பதிவுசெய்யப்படவுள்ளன.

காணாமல் போனவர்கள் தொடர்பாக ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழு கடந்த மாதம் 18ஆம் திகதி முதல் 21ஆம் திகதி வரை கிளிநொச்சியில் சாட்சியங்களைப் பதிவுசெய்திருந்தது.

இங்கு சுமார் 440 பேரிடம் சாட்சியங்கள் பதிவுசெய்யப்பட்டிருந்தது. இதில் 162 முறைப்பாடுகள் குறித்த மேலதிக விசாரணைகளுக்காக சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு அனுப்பியுள்ளது.

நாடு முழுவதிலுமிருந்து ஆணைக் குழுவுக்கு 13,700 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றிருப்பதுடன் இவற்றில் பொதுமக்கள் காணாமல் போனது தொடர்பில் 9,300 முறைப்பாடுகளும், பாதுகாப்புப் படையைச் சேர்ந்தவர்கள் காணாமல் போனது தொடர்பில் 4,300 முறைப்பாடுகளும் பதிவுசெய்யப் பட்டுள்ளன.

இந்த ஆணைக்குழுவின் இடைக்கால அறிக்கை அடுத்த மாத இறுதிப் பகுதியில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களிடம் கையளிக்கப்படும் என ஆணைக்குழு வட்டாரங்கள் தெரிவித்தன. ஆணைக்குழு தொடர்பான இணையத்தளமொன்று விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி