ஹிஜ்ரி வருடம் 1435 ரபீஉனில் ஆகிர் மாதம் பிறை 14
விஜய வருடம் மாசி மாதம் 03ம் நாள் சனிக்கிழமை
SATURDAY, FEBRUARY , 15, 2014
வரு. 82  இல. 40
 

ஓய்வு பெற்ற ரயில் சாரதிகளை கடமைக்கு வருமாறு அழைப்பு

ஓய்வு பெற்ற ரயில் சாரதிகளை கடமைக்கு வருமாறு அழைப்பு

வேலைநிறுத்தத்தால் அதிகமான சேவைகள் இடைநிறுத்தம்

ரயில் சாரதிகளின் வேலைநிறுத்த த்தினால் நேற்றும் அநேகமான ரயில் சேவைகள் இடைநிறுத்தப் பட்டிருந்ததோடு, இதனால் பயணிகள் பல்வேறு அசெளக ரியங்களுக்கு முகம்கொடுத்தனர். வேலைநிறுத்தத்தில் ஈடுபடாத ரயில் சாரதிகளின் உதவியுடன் தூர சேவை ரயில்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டதாக ரயில்வே திணைக்களம் கூறியது. இது தவிர ஓய்வுபெற்ற ரயில் சாரதிகளும் கடமைக்கு அழைக்கப்பட்டிருப்பதாக அறிவிக்கப்படுகிறது.

போக்குவரத்து அமைச்சின் கண்காணிப்பு பதவி வகித்த ரயில் சாரதிகள் சங்க தலைவர் 26 ரயில்வே தொழிற் சங்கங்களின் எதிர்ப்பின் காரணமாக மேற்படி பதவியில் இருந்து நேற்று முன்தினம் நீக்கப்பட்டார். அமைச்சரின் இந்த முடிவை ஆட்சேபித்து நேற்று முன்தினம் பிற்பகல் முதல் ரயில் சாரதிகள் வேலைநிறுத்தத்தில் குதித்தனர்.

ரயில் சாரதிகளின் திடீர் வேலை நிறுத்தத்தினால் பயணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். ரயில் சாரதிகளின் கோரிக்கை தொடர்பில் ரயில்வே அதிகாரிகளுக்கிடையில் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்த நிலையில் ரயில் சாரதிகளின் வேலைநிறுத்தம் நேற்றும் நீடித்தது.

நேற்றும் ரயில் நிலையங்களில் பெருமளவு மக்கள் ரயில் இல்லாது திரண்டிருந்தனர். சில ரயில் நிலையங்களில் பயணிகளுக்கும் ரயில் நிலைய அதிகாரிகளுக்குமிடையில் மோதல் ஏற்பட்டதாகவும் அறியவருகிறது.

வேலைநிறுத்தத்தினால் நீண்ட வார இறுதி விடுமுறை என்பதால் சொந்த இடங்களுக்கு செல்லும் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

இதனால் பஸ் நிலையங்களிலும் அநேகமான மக்கள் குழுமியிருந்ததாக அறிய வருகிறது.

இதே வேளை ரயில் சாரதிகள் சங்க தலைவரை கண்காணிப்பாளர் பதவியில் மீண்டும் நியமிக்கும் வரை வேலைநிறுத் தத்தை கைவிடப் போவதில்லை என சாரதிகள் சங்கங்கள் தெரிவித்தன.

இதேவேளை ஒப்பந்த அடிப்படையில் ஓய்வுபெற்ற ரயில் சாரதிகள் நேற்று முதல் கடமைக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி