ஹிஜ்ரி வருடம் 1435 ரபீஉனில் ஆகிர் மாதம் பிறை 14
விஜய வருடம் மாசி மாதம் 03ம் நாள் சனிக்கிழமை
SATURDAY, FEBRUARY , 15, 2014
வரு. 82  இல. 40
 

சமூக வலைத்தள கலாசார சீரழிவிலிருந்து பிள்ளைகளை பாதுகாப்பது மிக முக்கியம்

சமூக வலைத்தள கலாசார சீரழிவிலிருந்து பிள்ளைகளை பாதுகாப்பது மிக முக்கியம்

கல்வியின் மூலமே நாம் உலகை வெற்றி கொள்ள வேண்டும்

- ஜனாதிபதி

கல்வி மூலம் நாம் உலகை வெற்றி கொள்ள வேண்டிய அதேவேளை; சமூக வலைத்தள கலாசார சீரழிவிலிருந்து பிள்ளைகளைப் பாதுகாப்பது மிக முக்கியமானதென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார்.

அண்மைக் கால சம்பவங்களை எச்சரிக்கையாகக் கொண்டு பிள்ளைகளை இவற்றிலிருந்து பாதுகாப்பதில் பெற்றோரும் ஆசிரியரும் மிகுந்த கவனம் செலுத்த வேண்டுமெனவும் ஜனாதிபதி கேட்டுக்கொண்டார்.

கொழும்பில் பாடசாலை நிகழ்வொன்றில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு பெருந்திரளான மாணவர்கள், கல்விமான்கள் மத்தியில் உரையாற்றிய ஜனாதிபதி, தமிழ், சிங்களம், முஸ்லிம் என்ற பாகுபாடின்றி அனைத்து மாணவர்களும் கல்வியில் முன்னேறுவதற்கான சகல நடவடிக்கை களையும் அரசாங்கம் முன்னெடுத்து வருவதாகவும் அனைத்து இன, மத மக்களும் ஐக்கியமாக வாழ வேண்டும் என்பதே அரசாங்கத்தின் நோக்கமாகும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

கொழும்பு பாத்திமா மகா வித்தியாலயத்திற்கு தொழிலதிபர் சேம் ரிபாய் ஹாஜியாரினால் நன்கொடையாக நிர்மாணித்து வழங்கப்பட்ட நான்கு மாடிக் கட்டடத்தின் திறப்பு விழா நிகழ்வு ஜனாதிபதியின் தலைமையில் நடைபெற்றது.

அமைச்சர்கள் பந்துல குணவர்தன, ஏ. எச். எம். பெளஸி, பாராளுமன்ற உறுப்பினர் ஏ. எச். எம். அஸ்வர், மேல் மாகாண ஆளுநர் அலவி மெளலானா உட்பட முக்கியஸ்தர்கள், கல்விமா ன்கள் பலரும் கலந்துகொண்ட இந்நிகழ்வில் தொடர்ந்து உரையா ற்றிய ஜனாதிபதி: கொழும்பு பாத்திமா முஸ்லிம் மகா வித்தியாலய மாணவர்களுக்கு இன்றைய தினம் விசேட தினமாகும். பாரிய நிதி செலவில் ஷாம் ரிபாய் ஹாஜியார் புதிய பாடசாலைக் கட்டடத்தை நிர்மாணித்து வழங்கியுள்ளார். அவரை நான் வாழ்த்துவதுடன் அரசாங்கத்தின் சார்பில் பாராட்டுகிறேன்.

கொழும்பு பாத்திமா முஸ்லிம் மகா வித்தியாலயத்துக்கு ஒரு நீண்ட வரலாறு உள்ளது. இன்னும் நான்கு வருடங்களில் இந்த வித்தியாலயம் நூறு வருட நிறைவைக் கொண்டாடவுள்ளது.

பாடசாலைக் கட்டட பற்றாக்குறையினால் காலை, பிற்பகல் என இரண்டு கட்டங்களாக இதுவரை கற்பிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்ட இந்த பாடசாலையில் புதிய கட்டடத் திறப்புடன் ஏனைய பாடசாலைகளைப் போன்று இனி காலையில் மட்டுமே கற்பிப்பு நடவடிக்கைகள் நடைபெறும் என்பது மகிழ்ச்சிக்குரிய விடயமாகும்.

இங்கு கல்வி பயிலும் மாணவர்கள் மிகவும் திறமையானவர்கள். புத்திசாதுர் யமிக்கவர்களும் கூட என்பதை அவர்களின் செயற்பாடுகளில் நான் உணர்ந்து கொண்டேன். இவர்கள் எதிர்காலத்தில் தலைமைத்துவப் பொறுப்புக்களை ஏற்றுச் செயற்படக்கூடியவர்கள் என்பது வெளிப்படை.

முஸ்லிம் பெண்களுக்குக் கல்வி என்பது மிக முக்கியமானதாகும். நவீன தகவல் தொழில்நுட்பம் தற்போது நமது நாட்டில் முன்னேற்றமடைந்து வரும் காலகட்டமிது. 20.5 ல் நாம் பதவியேற்ற போது கணனி தொழில்நுட்ப அறிவு பெற்றோர் 3 வீதமாகவே நாட்டில் காணப்பட்டனர். தற்போது இத்தொகை 45 வீதமாக அதிகரித்துள்ளது.

தற்போது எமது நாட்டை நோக்கினால் கிராமப்புறங்களிலும் தகவல் தொழில்நுட்பத்தின் முன்னேற்றத்தைக் காண முடிகின்றது. இது தொடர்பில் கிராமிய மக்களுக்கும் தற்போது தெளிவு ஏற்பட்டுள்ளது.

தகவல் தொழில்நுட்பத்தோடு பெரும்பாலான விடயங்கள் விரைவாக வந்து சேர்கின்றன. இவற்றில் நல்லதைப் போன்றே கெட்டவைகளும் உள்ளன.

எம் நாட்டு பிள்ளைகளில் பெருமளவிலா னோர் தற்போது ‘பேஸ் புக்’கில் மிகுந்த நம்பிக்கை வைத்துச் செயற்படுகின்றனர். தமது பெற்றோர்களைவிட ‘பேஸ் புக்’ மூலமான நண்பர்கள் மீது நம்பிக்கை வைக்கின்றனர். அவர்கள்தான் இவர்களின் மீட்பர்கள் என எண்ணிக் கொண்டுள்ளனர். இதனால் மோசமாக பலர் பாதிக்கப்பட்டுள்ள சம்பவங்களை அண்மைக் காலங்களில் எம்மால் காண முடிந்தது.

ஆசிரியை ஒருவரின் எச்சரிக்கை காரணமாக சிறுமியொருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தையும் இதில் குறிப்பிட முடியும்.

சமூகத்தோடு உலகத்தோடு நாம் முன்னேறிச்செல்ல வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்துக்களில்லை.

எனினும் எமது பிள்ளைகள் இத்தகைய விவகாரங் களிலிருந்து பாதுகாக்கப்பட வேண்டும். இதில் பெற்றோர்கள் முக்கிய கவனம் செலுத்த வேண்டும் என்பதுடன் பிள்ளைகளும் பெற்றோரின் அறிவு றுத்தல்களுக்கமைய செயற்படுவது முக்கியம் என்பதையும் குறிப்பிட விரும்புகின்றேன்.

தமது தாய் அல்லது தந்தையைவிட சிறந்த நண்பர்கள் இல்லை என்பதை பிள்ளைகள் உணர வேண்டும். உங்களை எச்சரிப்பதற்கும் பெற்றோரை விட சிறந்தவர்கள் வேறு எவரும் இருக்க முடியாது என்பதையும் பிள்ளைகள் உணர வேண்டும்.

மாணவர்களின் முன்மாதிரி மிக முக்கியமானது. இந்தப் பாடசாலையில் என்னால் அதனைக் காண முடிந்தது. எனினும் நாட்டுக்கும் உலகிற்கும் முன்மாதிரியாக மாணவர்கள் திகழ வேண்டும் என்பதே எமது விருப்பமாகும்.

நாட்டில் தொட்டில் பருவம் முதல் இறங்கும் வரை நாம் கற்கின்றோம். கல்விக்கு கால எல்லை வயது வரம்புகள் இல்லை. கல்வியின் மூலம் உலகை வெல்ல முடியும். கல்வியை எவராலும் அபகரிக்கவோ திருடவோ முடியாது. திருடனுக்கு மட்டுமின்றி அரசனாலும் அதனை எவரிடமிருந்தும் அபகரித்துக்கொள்ள முடியாது என்பதே உண்மை.

நபி பெருமானாரின் அருள் மொழிகளில் கல்வி சகல முஸ்லிம்களுக்கும் முக்கியமானது எனவும் அதனை அனைவரும் பெற்றுக்கொள்வது அவரவர் பொறுப்பாகும் என கூறியுள்ளார்.

இது முஸ்லிம்கள் மட்டுமன்றி சகல இன மதத்தவரும் நினைவிற்கொள்ள வேண்டிய ஒன்றாகும்.

அனைவரும் அனைத்து மொழிகளையும் கற்க வேண்டும். தமிழ், சிங்களம், முஸ்லிம் என்ற பேதங்களின்றி கல்வியில் அனைவரும் முன்னேற அரசாங்கமும் கல்வி அமைச்சரும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றமையை குறிப்பிட வேண்டும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

இங்கு தமிழில் உரையாற்றிய ஜனாதிபதி: சாந்தி சகோதரத்துவம், சகாவாழ்வை அடிப்படையாகக் கொண்டே இஸ்லாமிய சமயம், இதற்கிணங்க இனவாதம், மதபேதம் ஒரு போதும் இருக்கக் கூடாது.

நாம் அனைவரும் ஐக்கியமாகவும் ஒற்றுமையாகவும் வாழவேண்டும். பிள்ளைகளே நீங்கள் தான் இந்த நாட்டின் எதிர்காலம் எனவும் தெரிவித்தார். நிகழ்வின் இறுதியில் ஜனாதிபதி மற்றும் கல்வி அமைச்சர் ஆகியோர்க்கு வித்தியாலய அதிபர் திருமதி எச். எம். யூசுப் நினைவுச் சின்னங்களை வழங்கி கெளரவித்தார்.

நிகழ்வுக்கு வருகை தந்த ஜனாதிபதிக்கு இஸ்லாமிய கலாசார முறைப்படி மகத்தான வரவேற்பளிக்கப்பட்டது.

இந்த வித்தியாலயத்துக்கு நாட்டின் ஜனாதிபதி ஒருவர் விஜயம் செய்தமை இதுவே முதல் தடவை என அமைச்சர் பெளஸி ஜனாதிபதியைப் பாராட்டியமையும் குறிப்பிடத்தக்கது. (ஸ)

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி