ஹிஜ்ரி வருடம் 1435 ரபீஉனில் ஆகிர் மாதம் பிறை 14
விஜய வருடம் மாசி மாதம் 03ம் நாள் சனிக்கிழமை
SATURDAY, FEBRUARY , 15, 2014
வரு. 82  இல. 40
 

சகல இன மக்களும் ஜனாதிபதியின் கரங்களைப் பலப்படுத்துவது அவசியம்

சகல இன மக்களும் ஜனாதிபதியின் கரங்களைப் பலப்படுத்துவது அவசியம்

லிபியாவுக்கும், எகிப்திற்கும் ஏற்பட்ட அழிவு எங்களுக்கு ஏற்படாமல் இருக்க இதுவே சிறந்த வழி

எந்தவொரு அரசாங்கத் தலைவரும் அவர் அதிகாரத்தில் இருக்கும் போது செய்த உதவிகளை பொதுவாக பொதுமக்கள் அவர் வாழ்ந்து கொண்டி ருக்கும் போது அந்தளவுக்கு பொருட் படுத்துவதில்லை.

அந்த தலைவர் பெற்றுக்கொடுத்த சலுகைகளும் சேவைகளும் என்றாவது ஒருநாள் இல்லாமல் போகும் போது மக்கள் அவரது நற்பணிகளை நினைத்து கண்ணீர் வடிப்பார்கள் என்று தேசிய சுதந்திர முன்னணியின் பேச்சாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் கொழும்பு மாநகரசபை உறுப்பினருமான மொஹமட் புவாட் முஸம்மில் தினகரனுக்கு அளித்த பிரத்தியேக பேட்டியில் தெரிவித்தார்.

லிபியாவின் தலைவராக கடாபி அதிகாரத்தில் இருந்த போது அந்நாட்டு மக்களுக்கு அவர் இலவசமாக வீடுகளையும் வாகனங்களையும் தேவையான பெற்றோலையும் இலவசமாக வழங்கினார். இவ்விதம் ஒரு தலைவர் நாட்டு மக்களின் குறைகளை உணர்ந்து பணி செய்யும் போது அவரைப் பார்த்து மேற்கத்திய ஏகாதிபத்திய நாடுகள் பொறாமை கொண்டு அவரை எவ்விதமாவது பதவியிறக்க வேண்டுமென்ற நோக்கத்துடன் சதித் திட்டங்களை உள்நாட்டில் உள்ள தேசத்துரோக சக்திகளின் உதவியுடன் நிறைவேறியதுண்டு.

அத்தகைய சூழ்ச்சியின் காரணமாகவே கடாபி லிபியாவின் தலைமைப் பதவியில் இருந்து அகற்றப்பட்டு இறுதியில் பரிதாபமாக சுட்டுக் கொல்லப்பட்டார் என்று மொஹமட் முஸம்மில் தெரிவித்தார்.

செல்வச் செருக்கோடு மக்கள் சகல வசதிகளுடனும் வாழ்ந்து வந்த லிபியா இன்று பொருளாதார கஷ்டங்களினால் சீர்குலைந்து போயுள்ளது. அந்நாட்டு மக்கள் உண்பதற்கு கூட உணவின்றி கஷ்டப்படுகிறார்கள். கடாபி பதவியில் இருந்த காலத்தில் சுத்தமாக இருந்த லிபியா இன்று திரும்பிய இடமெல்லாம் குப்பைகூளங்களை கொண்டு சீர்குலைந்து போயிருக்கிறதென்று சுட்டிக்காட்டிய மொஹமட் முஸம்மில், தாம் லிபியாவுக்கும் எகிப்திற்கும் முன்பு சென்றிருந்த அனுபவங்களை விளக்கிக்கூறினார்.

அதே அடிப்படையிலேயே அன்வர் சதாத் போன்ற தலைவர்களின் சீரான ஆட்சியின் கீழ் மத்திய கிழக்கில் உள்ள அரபுநாடுகளுக்கு தலைமை தாங்கிக் கொண்டிருந்த அறிவாளிகளை கொண்டிருந்த எகிப்தும் இன்று அமெரிக்க ஏகாதிபத்திய சதி முயற்சிகளினால் உள்நாட்டு சண்டைகளினாலும் அதிகார போராட்டத்தினாலும் சீர்குலைந்து போயுள்ளது இவ்விரு நாடுகளின் அழிவை நாம் ஒரு பாடமாக எடுத்துக்கொள்ள வேண்டுமென்று தெரிவித்தார்.

எங்கள் நாட்டின் பிரச்சினைகளை நாமே பொறுப்புணர்வுடன் சிந்தித்து மற்றவர்களுடன் விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையுடன் கலந்துரையாடி தீர்த்துக் கொள்ள வேண்டும். நாம் அவ்விதம் செய்யத் தவறினால், நிச்சயம் எங்கள் நாடு பாரதூரமான விளைவுகளை எதிர்நோக்க வேண்டியிருக்கும் என்று தெரிவித்தார்.

மதவாத, இனவாத அரசியலை தவிர்த்துக் கொண்டு நம்நாட்டு மக்கள் அனைவரும் எங்கள் பிரச்சினைகளை உள்ளூரிலேயே தீர்த்துக்கொள்வது அவசியமாகும். அதைவிடுத்து எமது பிரச்சினைகளை சர்வதேசமயமாக்கினால் எங்கள் நாட்டில் இன்று ஏற்பட்டுள்ள அமைதியான சூழ்நிலை மறைந்து மீண்டும் துன்பமும் இன்னல்களும் அச்சுறுத்தல்களும் தலைதூக்குவதை எந்தவொரு சக்தியாலும் தவிர்க்க முடியாதென்று முஸம்மில் தெரிவித்தார்.

பயங்கரவாதத்தினால் சீர்குலைந்து போயிருந்த எங்கள் நாட்டை காப்பாற்றி பயங்கரவாதத்தை ஒழித்துக்கட்டி இன்று அபிவிருத்தித் துறையில் வேகமாக முன்னேறுவதற்கு அடித்தளம் அமைத்த எங்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் மீது நாம் அசையாத நம்பிக்கை வைத்து அவரது கரங்களை பலப்படுத்துவது அவசியம்.

நாம் ஜனாதிபதியின் கரங்களைப் பலப்படுத்தினால் எந்தவொரு வல்லரசினாலும் எங்கள் நாட்டில் நிலவி வரும் அமைதியை சீர்குலைக்க முடியாதென்றும் மொஹமட் முஸம்மில் மேலும் தெரிவித்தார்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி