ஹிஜ்ரி வருடம் 1435 ரபீஉனில் ஆகிர் மாதம் பிறை 14
விஜய வருடம் மாசி மாதம் 03ம் நாள் சனிக்கிழமை
SATURDAY, FEBRUARY , 15, 2014
வரு. 82  இல. 40
 

ஆணவம் வேண்டாமே!

ஆணவம் வேண்டாமே!

குருஷேத்திரப் போர் முடிந்தது. தன் வில்லாற்றலாலேயே வெற்றி கிடைத்தது என்று ஆணவன் கொண்டான் அர்ச்சுனன்.

இறைவன் கண்ணனே தனக்குத் தேரோட்டியாக அமர்ந்ததும் தன் கட்டளைகளை நிறைவேற்றியதையும் நினைத்துப் பார்த்தான். இதனால் அவன் ஆணவம் மேலும் மிகுந்தது.

ஒவ்வோரு முறையும் அர்ச்சுனன் முதலில் தேரை விட்டு இறங்குவான். பிறகுதான் கண்ணன் தேரை விட்டு இறங்குவார் .

இதுவே வழக்கமாக இருந்தது.

இந்த முறையை மாற்ற வேண்டும் என்று நினைத்தான் அர்ச்சுனன். 'கண்ணா போரில் வெற்றி அடைந்து விட்டோம். இன்று நீ முதல் தேரை விட்டு இறங்கு பிறகு நான் இறங்குகிறேன்' என்றான்.

'அர்ச்சுனா! நீதான் முதலில் இறங்க வேண்டும்' என்றார் கண்ணன்.

அர்ச்சுனன் பலமுறை வற்புறுத்தியும் கண்ணன் கேட்கவில்லை.

வேறு வழி இல்லாத அர்ச்சுனன் வேண்டா வெறுப்பாகத் தேரைவிட்டு இறங்கினான். சிறிது நேரத்தில் கண்னனும் தேரை விட்டுக் குதித்தார்.

அடுத்த நொடியே அந்தத் தேர் தீப்பிடித்து எரிந்து வெடித்துச் சாம்பல் ஆனது

வியப்பு அடைந்த அர்ச்சுனன். 'கண்ணா! தேர் ஏன் வெடித்துச் சிதறியது?' என்று கேட்டான்.

'போரில் பலவித ஆற்றல் வாய்ந்த அம்புகள் இந்தத் தேரைத் தாக்கி உள்ளன. நான் இதில் அமர்ந்து இருந்த வரை அவை வலிமை இழந்து கிடந்தன. போர் முடிந்து விட்டது. இனி நான் இதில் அமர மாட்டேன் என்பதை அவை அறிந்தன. இந்தத் தேரைச் சின்னா பின்னமாக்கிவிட்டன' என்றார்.

தன் ஆணவன் அழியப் பெற்ற அர்ச்சுனன் 'கண்ணா! என்னை மன்னித்துவிடு' என்றான்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி