ஹிஜ்ரி வருடம் 1435 ரபீஉனில் ஆகிர் மாதம் பிறை 03
விஜய வருடம் தை மாதம் 22ம் நாள் செவ்வாய்க்கிழமை
TUESDAY, FEBRUARY , 03, 2014
வரு. 82  இல. 29
 

செவ்வாய் மர்மப் பொருள் குறித்து ஆய்வு நடத்த தவறியதாக நாஸா மீது வழக்கு

செவ்வாய் மர்மப் பொருள் குறித்து ஆய்வு நடத்த தவறியதாக நாஸா மீது வழக்கு

செவ்வாய் கிரகத்தில் படம்பிடிக்கப்பட்ட புதிரான கற்பாறை குறித்து அலட்சியப் போக்குடன் ஆய்வு நடத்துவதாக அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாஸா மீது ஒருவர் வழக்கு தொடுத் துள்ளார்.

நாஸாவின் ஒப்பச்சுனிட்டி ஆய்வு இயந்திரம் பிடித்து அனுப்பிய கற்பாறை தொடர்பிலேயே அந்த நபர் இந்த வழக்கை தொடுத்துள்ளார். அது கற்பாறையே அல்ல என்று அவர் வாதிடுகிறார்.

அமெரிக்காவின் நரம்பியல் உளநூல் நிபுணரும் எழுத்தாளருமான ரவுன் ஜோசப் என்பவர் கலிபோர்னியா நீதிமன்றத்தில் கடந்த வாரம் நாஸாவுக்கு எதிராக இந்த வழக்கை தொடுத்தார். இந்த புதிரான பொருள் செவ்வாய் நிலத்தில் திடீரென தோன்றியிருப்பது குறித்து நாஸா விஞ்ஞான ரீதியில் முழுமையான ஆய்வை முன்னெடுக்க வேண்டும் என்றும் இவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஒப்பச்சுனிட்டி ஆய்வு இயந்திரத்தின் முன்னணி விஞ்ஞானி ஸ்டிவ் ஸ்குரஸ் இந்த கற்பாறை வெள்ளை நிறத்திலும் மையப்பகுதி சிகப்பு நிறத்திலும் காணப்படுவதாக விளங்கி இருந்தார். செவ்வாயில் முன்னர் இது போன்று எதனையும் பார்க்கவில்லை என்று நாளை விஞ்ஞானிகள் குறிப்பிட்டிருந்தனர். எனினும் அது ஒரு கற்பாறை என்றே நாஸா தீர்மானத்திற்கு வந்தது.

கடந்த ஜனவரி 8ஆம் திகதி உப்பச்சனிட்டி இயந்திரம் பிடித்த படத்திலேயே இந்த புதிரான பொருள் காணப்பட்டது. ஆனால் இதே இடத்தில் 12 தினங்களுக்கு முன் பிடிக்கப்பட்ட புகைப்படத்தில் இந்தப் பொருள் இருக்கவில்லை. இதுவே பலரது ஆர்வத்தைத் தூண்டக் காரணமாகும். எனினும் இது பற்றி நாஸா சாதாரணமான மற்றும் மந்தமான விளக்கத்தையே அளித்தது.

ந்த கற்பாறை ஒப்பச்சனிட்டி இயந்திரத்தின் சக்கரங்கள் தள்ளிவந்திருக்க சாத்தியமிருப்பதாகவும் நாஸா விளக்கியிருந்தது.

ஆனால் நாஸாவின் கோட்பாடுகளை மறுத்து நீதிமன்றத்தில் மனு கொடுத்திருக்கும் ஜோசப், இந்த மர்மப்பொருள் ஓர் உயிரினமாகவும் இருக்க வாய்ப்பு உள்ளதாக சந்தேகம் வெளியிட்டுள்ளார்.

இது காலான் போன்ற ஒரு பூஞ்சையாக இருக்கலாம்., பூமியில் இருப்பது போன்று மரப்பாசி மற்றும் நில நுண்ணுயிர் கொண்ட ஒரு கலப்பு உயிரினமாகக் கூட இது இருக்கலாம். என்று அந்த நீதிமன்ற மனுவில் ஜோசப் விபரித்துள்ளார்.

எனினும் குறித்த பகுதிக்கு அந்த மர்மப்பொருள் நகர்ந்து வந்திருக்க வாய்ப்பு இல்லை என்றும் அங்கேயே அது வளர்ந்திருக்கலாம் என்றும் ஜோசப் கருதுகிறார்.

எவ்வாறாயினும் நாஸா அலட்சியமான முறையில் இந்த புதிரான பொருளை தெளிவான கோணங்களில் படங்களை பிடித்து ஆராயாமல் இருப்பது வினோதமாக இருப்பதாகவும் குற்றம்சாட்டியிருக்கிறார்.

இதனால் இந்த பொருளின் 100 வீதம் துள்ளியம் கொண்ட படங்களை நாஸா தமக்கு தர வேண்டும் என்றும் ஜோசப் நீதிமன்றத்தை கோரியுள்ளார்.

இந்த விடயம் நீதிமன்ற விசாரணையில் இருப்பதால் இது பற்றி எந்த விளக்கமும் கூற முடியாது என நாஸா மறுத்துள்ளது. எனினும் இந்த கற்பாறை குறித்து தொடர்ந்து ஆய்வு நடத்தி வருவதாக அது உறுதி அளித்துள்ளது.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி