ஹிஜ்ரி வருடம் 1434 துல்ஹிஜ்ஜஹ் மாதம் பிறை 02
விஜய வருடம் புரட்டாசி மாதம் 22ம் திகதி செவ்வாய்க்கிழமை
TUESDAY, OCTOMBER , 08, 2013
வரு. 81 இல. 238
 

செல்களின் இயக்கம் குறித்த ஆய்வுக்கு நோபல் விருது

செல்களின் இயக்கம் குறித்த ஆய்வுக்கு நோபல் விருது

செல்களின் இயக்கம் குறித்த ஆய்வுக்காக மூன்று விஞ்ஞானிகளுக்கு இந்த ஆண்டுக்கான மருத்துவம் அல்லது உடற் கூறியல் பிரிவில் நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று அறிவிக்கப்பட்ட மருத்துவத்திற்கான நோபல் பரிசு அமெரிக்காவின் ஜேம்ஸ் ரொத்மன், ரென்டி ஸ்கெக்மன் மற்றும் ஜெர்மனி நாட்டின் தோமஸ் சுதொப் ஆகியோரிடம் பகிரப்பட்டுள்ளது.

குறித்த ஒரு இலக்கை நோக்கி கப்பல்கள் பொருட்களை கொண்டு செல்வது போன்று செல்கள் இயக்கம் இருப்பதாக இந்த விஞ்ஞானிகள் கண்டறிந்ததற்காகவே இவர்கள் நோபல் பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

மனித உடலில் உள்ள குறிப்பிட்ட செல்கள், மனித உடலுக்கு தேவையான திரவங்களை உற்பத்தி செய்கின்றன. இந்த திரவம் உடலின் எந்த பாகத்திற்கு தேவைப்படும் என்ற தகவல் அந்த செல்லுக்கு கிடைக்கும். தகவல் கிடைத்ததும் அந்த பகுதிக்கு சரியான இடத்திற்கு, சரியான நேரத்திற்கு அந்த திரவம் அனுப்பப்படுகிறது.

இந்த துல்லியமான போக்குவரத்து கட்டுப்பாடு அமைப்பினை பேராசிரியர்கள் ஜேம்ஸ் ரொத்மன், ரென்டி ஸ்கெக்மன் மற்றும் தோமஸ் சுதொப் ஆகியோர் தங்கள் ஆராய்ச்சியின் மூலம் கண்டறிந்து வெளியிட்டனர்.

நோபல் பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டிருக்கும் ஜேம்ஸ் ரொத்மன் யாலே பல்கலைக்கழகத்திலும், ஸ்கெக்மன் கலிபோர்னியா பல்கலைக்கழகத்திலும் சுதொப் ஸ்டான்ட்போர்ட் பல்கலைக்கழகத்திலும் பணியாற்றி வருகின்றனர்.

இந்த விஞ்ஞானிகளின் ஆய்வு மூலம் செல்களின் இயக்கம் குறித்த பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியது என நோபல் விருதுக் குழு அறிவித்துள்ளது. ஸ்வீடன் தலைநகர் ஸ்டொக்ஹோமில் இருந்தே நோபல் விருதுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. தொடர்ந்து இரசாயனவியல், பெளதீகவியல், இலக்கியம், அமைதி மற்றும் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசுகள் இந்த வாரத்திலும் அடுத்த வாரத்திலும் அறிவிக்கப்படுகின்றன. ஒவ்வொரு பரிசும் 8 மில்லியன் ஸ்வீடன் கரோனா மதிப்புடையதாகும்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி