ஹிஜ்ரி வருடம் 1434 ரபியுல் ஆகிர் மாதம் பிறை 01
நந்தன வருடம் தை மாதம் 30ம் திகதி செவ்வாய்க்கிழமை
TUESDAY ,FEBRUARY, 12, 2013
வரு. 81 இல. 37
 

காஷ்மீரில் தொடர்ந்து பதற்றம் 144 தடை உத்தரவு நீடிப்பு

இந்திய நாடாளுமன்றம் மீதான தாக்குதல் குற்றவாளி அப்சல் தூக்கிலிடப்பட்டதன் எதிரொலி

காஷ்மீரில் தொடர்ந்து பதற்றம் 144 தடை உத்தரவு நீடிப்பு

இந்திய நாடாளுமன்றம் மீதான தாக்குதல் சம்பவம் தொடர்பாக தீவிரவாதி அப்சல் குரு தூக்கிலிடப்பட்டதை கண்டித்து காஷ்மீரில் தொடர்ந்து ஊரடங்கு உத்தரவு அமுலில் இருந்தது. பொலிஸ் துப்பாக்கி சூட்டில் 2 இளைஞர்கள் பலத்த காயம் அடைந்தனர். நாடாளுமன்ற தாக்குதல் தீவிரவாதி அப்சல் குரு கடந்த 9ம் திகதி தூக்கிலிடப்பட்டார்.

இவர் காஷ்மீரைச் சேர்ந்தவர் என்பதால் அங்கு பதற்றம் நிலவியது. இதையடுத்து காஷ்மீரில் நேற்று முன்தினம் இரண்டாவது நாளாக ஊரடங்கு உத்தரவு அமுலில் இருந்தது. சட்டம் ஒழுங்கை பாதுகாக்க பொலிஸார் மற்றும் துணை இராணுவப் படையினர் அதிக அளவில் கடமையில் ஈடுபடுத்தப்பட்டனர்.

பாராமுல்லா மாவட்டத்தில் நேற்று முன்தினம் போராட்டம் நடத்திய கும்பலை கலைக்க பொலிஸார் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் 4 பேர் காயம் அடைந்தனர்.

இதில் 2 பேர் ஸ்ரீநகரில் உள்ள ஆஸ்பத்திரியில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அரசு கேட்டுக் கொண்டபடி செய்தி சேனல்களை கேபிள் டிவி ஆபரேட்டர்கள் ஒளிபரப்பவில்லை. ஊடரங்கு உத்தரவால் செய்தித்தாள்களும் மக்களை சென்றடையவில்லை.

இதனைத் தொடர்ந்து காஷ்மீரில் பிறப்பிக்கப்பட்ட 144 தடை உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது.

எனினும் அப்சல் குரு வாழ்ந்த பாரமுல்லா மாவட்டம் சோபம் ரயில் போராட்டங்கள் நடந்தன. இப்போராட் டத்தில் கலந்து கொண்டவர்கள் மீது பொலிஸார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். இதில் பாதுகாப்பு அதிகாரிகள் உள்ளிட்ட 30 பேர் காயமடைந்தனர்.

இந்நிலையில் நேற்று ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணியின் தலைவர் மக்பூல் பட்டின் நினைவு தினம் என்பதால் தடை உத்தரவு நேற்றும் நீடிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை அப்சல் குருவை தூக்கில் போட்டதற்கு காஷ்மீர் முதல் மந்திரி உமர் அப்துல்லா எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். இது குறித்து தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:

காஷ்மீரில் ஒரு தலைமுறைக்கும் மேற்பட்ட இளைஞர்கள் தாங்கள் மிகவும் பாதிக்கப்பட்டு இருப்பதாக உணருகிறார்கள். தங்களுக்கு நீதி கிடைக் காது என்ற மனநிலையில் அவர்கள் இருப்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.

அப்சல் குரு தூக்கிலிடப்பட்ட சம்பவம் காஷ்மீர் மாநில இளைய தலைமுறையின ரிடையே கவலையை ஏற்படுத்தி உள்ளது.

இவ்வாறு உமர் அப்துல்லா கூறினார்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி