ஹிஜ்ரி வருடம் 1432 துல்கஃதா பிறை 02
கர வருடம் புரட்டாதி மாதம் 13ம் திகதி வெள்ளிக்கிழமை
FRIDAY, SEPTEMBER 30, 2011
வரு. 79 இல. 231
 
காரிய வெற்றிகளையும் அஷ்ட ஐஸ்வர்யங்களையும் ஒருங்கே வாரி வழங்கக் கூடிய நவராத்திரி

காரிய வெற்றிகளையும் அஷ்ட ஐஸ்வர்யங்களையும் ஒருங்கே வாரி வழங்கக் கூடிய நவராத்திரி

நவம் என்றால் 9. இது சக்தியும் ஆதிக்கமும் கொண்ட எண். நவக் கிரகங்கள், நவரத்தினங்கள், நவதானியங்கள் என ஒன்பதின் முக்கியத்துவத்தை நாம் அறிவோம்.

சக்தி வடிவமாகிய அம்பாளுக்கு பல உற் சவங்கள் உண்டென்றாலும் வீட்டிலும் 10 நாட்கள் கொண்டாடப்படும் ஒரே பண்டிகை நவராத்திரிதான்.

புரட்டாதி மாதம் சூரியன் கன்னி ராசியில் இருக் கும்போது அமாவாசையில் இருந்து வளர்பிறையில் 9 இரவுகளுடன் கூடுதலாக ஒருநாள் தசமி திதியையும் சேர்த்து நவராத்திரி என்றும் தசரா என்றும் பல் லாண்டுகளாகக் கொண்டாடப்படுகிறது.

அஷ்டமி, நவமி ஆகிய இரண்டு திதிகளை ஜோதிட சாஸ்திரப்படி முக்கிய சுபகாரியங்களுக்கு விலக்கி வைக்கிறோம். அந்த இரண்டு திதிகளை சிறப் பிப்பதற்காகவும், எல்லா திதிகளிலும் இறைவனின் அம்சம் உள்ளது என்பதை புரிய வைப்பதற்காகவுமே நவராத்திரியில் அஷ்டமி, நவமி திதிக்கு முக்கியத்துவம் அளித்து, கடைசி நாளான தசமி திதியில் 'விஜயதசமி' கொண்டாடி நிறைவு செய்கிறோம்.

நவராத்திரி வழிபாட்டில் முதல் மூன்று நாட்கள் இச்சா சக்தியாகிய துர்க்கையையும், அடுத்த மூன்று நாட்கள் கிரியா சக்தியாகிய லட்சமியையும், கடைசி மூன்ற நாட்கள் ஞான சக்தியாகிய சரஸ்வதியையும் வழிபடுகிறோம்.

அஷ்டமி அன்று தீய சக்திகளை அழிப்பதற்காக காளி, நீலி, சூரி என்று பயங்கர தோற்றத்துடன் அருள்பாலிக்கும் சக்தி அம்சத்தை வணங்கும் நாள் துர்க்கை அம்மன், பிரத்யங்கரா தேவி, இந்திராணி, சாமுண்டி போன்ற தெய்வங்களை வழிபடுவதன் மூலம் நம் இல்லத்தில் உள்ள தீய சக்திகள், ஏவல், பில்லி, சூனியம், வாஸ்து குறைபாடுகள் போன்றவை நீங்கி சுபிட்சம் பெருகும்.

நவமி நாள்தான் மகாநவமி. அன்றைய தினம் சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை கொண்டாடப் படுகிறது. கல்வி, கலைகளில் சிறந்து விளங்க பிரார்த்தித்து நூல்கள், பேனா, பென்சில், இசைக் கருவிகள் போன்றவற்றை சரஸ்வதி முன் வைத்து பூஜிக்க வேண்டும். நலங்கள், வளங்கள் பெருகுவதற்காக அலு வலகங்கள், தொழிற் சாலைகள், வியாபார நிறுவனங்களில் இருக்கும் அனைத்து தளவாடங்கள், கருவிகள், வாகனங்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் உட்பட பயன்தரும் அனைத்துக்கும் சந்தனம், குங்குமம், பூ வைத்து, பூஜைகள் செய்து வழிபடுவது மகா நவ மியின் சிறப்பு.

மற்ற மாதங்களில் வரும் தசமி திதி சிறப் புமிக்கதாக இருந்தாலும், நவராத்திரிக்கு அடுத்த நாள் வரும் தசமி, விஜய தசமி என்று போற்றப்படுகிறது. சகல காரிய வெற்றிகளையும் அஷ்ட ஐஸ்வர்யங்களை யும் ஒருங்கே வாரி வழங்கக்கூடிய நாள். இந்த நாள் சரஸ்வதி தேவிக்கு மிகவும் உகந்த நாளாகும். கல்வி, இசை மற்றும் கலைகள் கற்கவும், புதுக் கணக்கு ஆரம்பிக்கவும், முக்கிய பேச்சு வார்த்தைகள், ஒப்பந்தங்களுக்கும் சிறப்பானதானது.

விஜயதசமியில் தொடங்கப்படும் கல்வி, கலைகள், புதிய தொழில்கள் எல்லாம் விருத்தியடையும் என்பது ஐதீகம்.

நவராத்திரி ஒன்பது நாளும் பெண்களுக்கு உண்டான முக்கிய பண்டிகையாகும். அவரவர் வசதிக்கேற்ப, குடும்ப வழக்கப்படி 1, 3, 5, 7, 9, 11 என்ற அளவில் கொலு படிகள் அமைத்து, பொம்மைகளை அடுக்கி சுற்றம் சூழ மகிழ்ச்சியையும் வாழ்த் துக்களையும் பரிமாறிக் கொள்வது சிறப்பு. வந்தவர்களுக்கு சுண்டல், சர்க்கரை பொங்கல், இனிப்பு வகைகள், பழங்கள், பூ, மஞ்சள், தேங்காய் என மங்கள பொருட்களை கொடுத்து உபசரித்து அவர்களின் அன்பையும், ஆசியையும் பெறுவதே இந்த வழிபாட்டின் தத்துவம்.

ஜோதிட சாஸ்திரப்படி கொலு வைத்து நவராத்திரி விரத பூஜையை செய்வது சுபகாரியத் தடைகள், குழந்தை பாக்கியத் தடை, இனம்புரியாத கவலைகள், பயம் போன்ற தீய சக்திகள் அனைத் தையும் நீக்கி வீட்டில் மகிழ்ச்சியை யும் சகல வளங்களையும் அள்ளித் தரும்.


விஞ்ஞான ரீதியிலான நவராத்திரி கொலு!

சக்தி வழிபாட்டின் மறுபெயர் நவராத்திரி. சக்தி என்றால் பெண் என்ற பொருள் உண்டு. நவராத்திரி தினங்களில் வீடுகளில் கொலு வைத்து கொண்டாடப்படும் வழக்கம் பண்டைக்காலம் தொட்டு இருந்து வந்துள்ளது.

கொலு வைத்து கொண்டாடும் இந்த 9 நாட்களிலும் (நவ- ஒன்பது) சிறுமிகள் முதல் வயது முதிர்ந்த பாட்டி வரை பாட்டு, கோலாட்டம் உள்ளிட்ட தாங்கள் அறிந்து வைத்துள்ள பாரம்பரிய கலைத்திறமைகளை புதுப்பித்துக் கொள்வதுடன் மற்றவர்களுக்கும் கற்றுக் கொடுக்கிறார்கள். கலைகளும் வளர்க்கப்படுகிறது.

கலைகளில் பிரதானமாக வாய்ப்பாட்டு, நடனம், புராணக் கதைகள், சொற்பொழிவு போன்றவை இடம்பெறும். தவிர கொலு வைப்பதால் சிறுவர்- சிறுமிகள் உள்ளிட்ட இளைய சமுதாயத்தினர் மத்தியில் இயற்கையில் அமைந்துள்ள அழகுணர்ச்சியும் வெளிக் கொணர ஏதுவாகிறது.

பெண்களிடம் கொலு பொம்மைகள் அழகுபடுத்தும் திறன் காரணமாக தன்னம்பிக்கை ஏற்படுவதுடன் வயதானவர்களை மதிக்கும் பண்பும் வளர்க்கப்படுகிறது.

கொலு வைக்கும் வழக்கம் உள்ள வீடுகளில் ஆண்டு தோறும் காலத்திற்கேற்றாற் போல நவீன- புதிய பொம்மைகள் இடம்பெறும். மண்ணாலான பொம்மைகளை செய்து பிழைப்பு நடத்தும் கைவினைக் கலைஞர்களுக்கு வாழ்வளிப்பதாக இது அமைகிறது என்பதால் சிறு தொழிலை ஊக்குவித்த திருப்தியும் கொலுவால் ஏற்படுகிறது என்றால் மிகையில்லை.

ஒன்பது நாட்களிலும் 9 வகையான பயறு வகைகள், பழங்களை அம்மனுக்கு பிரசாதங்களாக படைத்து, அவற்றை மற்றவர்களுக்கும் வழங்குவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர் பெண்கள்.

புரட்டாதி மாதத்தில் உடல் சோர்வைத் தரக்கூடிய நோய்க் காரணிகள் அதிகம் என்பதால் புரதச் சத்து நிறைந்த பயறுகளை உண்பதற்கான ஒரு பண்டிகையாகவும் நவராத்திரி பண்டிகை திகழ்கிறது. கொலு வைத்து கொண்டாடும் இந்த பண்டிகை விஞ்ஞான ரீதியாகவும் நன்மையைத் தருகிறது எனலாம்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி