ஹிஜ்ரி வருடம் 1432 துல்கஃதா பிறை 02
கர வருடம் புரட்டாதி மாதம் 13ம் திகதி வெள்ளிக்கிழமை
FRIDAY, SEPTEMBER 30, 2011
வரு. 79 இல. 231
 

உலக கிண்ண றக்பி தொடரிலிருந்து விலக நேரிடும் என நியு+ஸிலாந்து அணி எச்சரிக்கை

உலக கிண்ண றக்பி தொடரிலிருந்து விலக நேரிடும் என நியு+ஸிலாந்து அணி எச்சரிக்கை

அணிகள் மீதான வர்த்தக கட்டுப்பாடுகள் நீக்கப்படாவிட்டால் 2015 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உலகக் கிண்ண றக்பி சுற்றுப் போட்டியிலிருந்து விலகுவது குறித்து நியூசிலாந்து அணி ஆராயும் என நியூசிலாந்து றக்பி சங்கத் தலைவர் ஸ்டீவ் டேவ் கூறியுள்ளார்.

இவ்வாறு போட்டிகளிலிருந்து விலகும் முன்னெப்போதும் இடம் பெறாத நடவடிக்கை இறுதியான நடவடிக்கையாகவே இருக்கும் எனவும் ஆனால், அதை நிராகரிக்க முடியாது எனவும் ஸ்டீவ் டேவ் தெரிவித்துள்ளார்.

றக்பி விளையாட்டில் மிகப் பலம் வாய்ந்த அணிகளில் ஒன்றான நியூசிலாந்து முன்னாள் உலக சம்பியனாகும். தற்போது 7 வது உலகக் கிண்ண றக்பி சுற்றுப் போட்டி நியூசிலாந்தில் நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

உலகக் கிண்ணப் போட்டிகள் நடைபெறும் வருடங்களில் முக்கிய அணிகளை சர்வதேச றக்பி சபையின் விதிகள் தண்டிக்கின்றன. ஏனெனில், அவ்வணிகளின் வழக்கமான டெஸ்ட் தொடர்கள் தண்டிக்கப்படுகின்றன. அத்துடன் அணியினர் போட்டிகளின் போது அவர்களின் விளம்பர அனுசரணைகளை முன்னெடுப்பதற்கும் அனுமதிக்கப்படுவதில்லை என அவர் கூறினார்.

இதனால் இவ்வருட உலகக் கிண் ணப் போட்டிகளில் பங்குபற்றுவது நியூசிலாந்து அணிக்கு 10.3 மில்லியன் அமெரிக்க டொலர் இழப்பை ஏற்படுத்தியுள்ளது எனவும் ஸ்டீவ் டேவ் தெரிவித்தார்.

எனினும் இப்பிரச்சினைக்குத் தீர்வுகாண்பதற்கு அனைத்து தரப்பினருடன் கலந்துரையாடி கூட்டாக தீர்வுகாண்பதே எமது பாணியாகும் எனவும் அவர் கூறினார்.

உலகக் கிண்ணப் போட்டிகள் நடைபெறும் வேளையில் சுற்றுப் போட்டியின் அனுசரணையாளர்களின் போட்டி நிறுவனங்களுடன் விளம்பர ஒப்பந்தம் செய்வதற்கு வீரர்களுக்கு சர்வதேச றக்பி சபை தடைவிதிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

அடுத்த உலகக் கிண்ண றக்பி சுற்றுப் போட்டி 2015 ம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெறவுள்ளது.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி