ஹிஜ்ரி வருடம் 1432 துல்கஃதா பிறை 02
கர வருடம் புரட்டாதி மாதம் 13ம் திகதி வெள்ளிக்கிழமை
FRIDAY, SEPTEMBER 30, 2011
வரு. 79 இல. 231
 

சிர்த் நகரின் விமான நிலையத்தை கைப்பற்றியதாக இடைக்கால அரசு அறிவிப்பு

கடாபி ஆதரவாளர் வசமுள்ள

சிர்த் நகரின் விமான நிலையத்தை கைப்பற்றியதாக இடைக்கால அரசு அறிவிப்பு

முஅம்மர் கடாபி ஆதரவுப்படை வசமுள்ள சிர்த் நகரின் விமான நிலையம் அமைந்துள்ள பகுதியை கைப்பற்றியதாக லிபிய இடைக்கால அரசு தெரிவித்துள்ளது.

எனினும் லிபியாவின் சிர்த் மற்றும் பானி வலீத் நகரங்களை கடாபி ஆதரவுப் படையினர் தொடர்ந்தும் தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் அதிரடி தாக்குதல்கள் மூலம் சிர்த் நகரின் விமான நிலையத்தை கைப்பற்றியதாக கிளர்ச்சியாளர்கள் நேற்று குறிப்பிட்டனர். சிர்த், பானி, வலித் நகரங்கள் மீது கிளர்ச்சியாளர்கள் பீரங்கி மற்றும் எறிகணைகள் மூலம் தாக்குதல் நடத்தி வருகின்றனர். அதேபோன்று கடாபி இலக்குகள் மீது நேட்டோ படையும் வான் தாக்குதல் நடத்தி வருகிறது.

எனினும் கடாபி ஆதரவுப்படை இந்த பகுதிகளில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இவர்கள் கிளர்ச்சியாளர்கள் மீது ஸ்னைப்பர் மற்றும் பீரங்கிகள் மூலம் தாக்குதல் நடத்துகின்றனர்.

இந்நிலையில் கிளர்ச்சியாளர்களால் இந்த பகுதிக்குள் முன்னேற முடியாமல் தடுமாறி வருகின்றனர். அத்துடன் சிர்த், பானி, வலீத் நகரங்களில் லட்சக் கணக்கான மக்கள் சிக்குண்டுள்ளதாக இடைக்கால அரசு குறிப்பிட்டுள்ளது. இதனால் இந்த பகுதிக்கு தாக்குதல் நடத்துவதில் சிக்கல் நீடிப்பதாக அது கூறியுள்ளது.

மேற்படி பகுதிகளில் வசிக்கும் மக்கள் உணவு, நீர், மின் மற்றும் மருத்துவ வசதிகள் இல்லாமல் தவித்து வருவதாக குறிப்பிட்டுள்ள இடைக்கால அரசு கடாபி ஆதரவுப் படையினர் இந்த மக்களை மனிதக் கேடயங்களாக பயன்படுத்தி வருவதாகவும் கூறியுள்ளது.

இதில் சிர்த் நகரின் கடாபி ஆதரவுப் படையை முஅம்மர் கடாபியின் மகன் முதஸ்ஸம் வழி நடத்தி வருவதாகவும் பானி வலீத் நகரின் படையை மற்றுமொரு மகனான சைப் அல் இஸ்லாம் வழிநடத்தி வருவதாகவும் தெரியவந்துள்ளது

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி