ஹிஜ்ரி வருடம் 1432 துல்கஃதா பிறை 02
கர வருடம் புரட்டாதி மாதம் 13ம் திகதி வெள்ளிக்கிழமை
FRIDAY, SEPTEMBER 30, 2011
வரு. 79 இல. 231
 

தயாநிதி மீது ஓரிருநாளில் குற்றப் பத்திரிகை: உச்சிநீதிமன்றத்தில் சி.பி.ஐ. திட்டவட்டம்

தயாநிதி மீது ஓரிருநாளில் குற்றப் பத்திரிகை: உச்சிநீதிமன்றத்தில் சி.பி.ஐ. திட்டவட்டம்

‘2ஜி’ ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடந்த ஊழல் விவகாரம் விஸ்வரூபம் எடுத்ததை அடுத்து, 2001 முதல் 2007 வரை நடந்த ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடுகள் தொடர்பாகவும் விசாரணை நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கான பணிகளை சி. பி. ஐ. தொடங்கிய போது ஏர்செல் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் சிவசங்கரன் சி. பி. ஐ. யிடம் தெரிவித்த புகாரால் திருப்பம் ஏற்பட்டது.

அவரது புகாரில், ‘என் நிறுவனத்துக்கு உரிமம் பெறுவதற்காக விண்ணப்பித்த போது, உரிமம் வழங்காமல் காலதாமதம் செய்தனர். ஏர்செல் நிறுவனத்தின் பங்குகளை, மலேசியாவின் மேக்சிஸ் நிறுவனத்துக்கு விற்கும்படி நெருக்கடி கொடுத்தனர். இதைத் தொடர்ந்து, ஏர்செல் நிறுவனத்தின் பங்குகள், மேக்சிஸ் நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட ஆறு மாதத்துக்குள், அந்த நிறுவனத்துக்கு உரிமம் வழங்கப்பட்டது’ என தெரிவித்திருந்தார்.

இந்த புகார் குறித்தும் சி. பி. ஐ. விசார ணை நடத்தியது. ஏர்செல் மேக்சிஸ் விவ காரம் தொடர்பாக, மேக்சிஸ் நிறுவனத்தின் உயர் மட்ட குழு உறுப்பினரும், ஆஸ்ட்ரோ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியுமான ரால்ப் மார்ஷல், கடந்த சில வாரங்களுக்கு முன், சி. பி. ஐ. அதிகாரிகள் முன் ஆஜராகி, தன் மீதான புகார்கள் குறித்து விளக்கம் அளித்தார்.

தயாநிதி அமைச்சராக இருந்த போது மேக்சிஸ் நிறுவனத்துக்கு சலுகை காட்டப்பட்டதாகவும் அதற்கு பதிலாக மாறன் குடும்பத்துக்கு சொந்தமான சன் தொலைக்காட்சியில் மேக்சிஸ் நிறுவனம் சார்பில் முதலீடு செய்யப்பட்ட தாகவும் கூறப்படும் புகார் குறித்து, சி. பி. ஐ. அதிகாரிகள், ரால்ப் மார்ஷலிடம் விசாரித்தனர். இதைத் தொடர்ந்து இந்த புகார்கள் குறித்து தயாநிதியிடமும் சி.பி.ஐ. முதற்கட்ட விசாரணை நடத்தியது.

இந்நிலையில் ‘2 ஜி’ வழக்கில் தற் போதைய நிலை குறித்து உச்ச நீதி மன்றத்தில் சி. பி. ஐ. தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. சி. பி. ஐ. தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கே. கே. வேணுகோபால், இதுவரை விசாரணையில் நடந்த முன்னேற்றங்கள் தொடர்பான அறிக்கையை, மூடிய அட்டையில் வைத்து நீதிபதிகள் ஜி. எஸ். சிங்வி, ஏ. கே. கங்குலி ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன் வழங்கினார். இந்த அறிக் கையில், தயாநிதி பற்றி குறிப்பிட்டுள்ள பகுதிகளை மட்டும் வேணுகோபால், நீதிபதிகள் முன் வாசித்தார்.

அப்போது அவர் கூறியதாவது :-

‘2ஜி’ வழக்கு தொடர்பாக தயாநிதியிடம் முதற்கட்ட விசாரணை நடந்து முடிந்துள்ளது. ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டு ஊழலில் தயாநிதிக்கு தொடர்பு இருப்பதற்கான போதுமான ஆதாரம் கிடைத்துள்ளது. தயாநிதி மற்றும் அவரது சகோதரர் கலாநிதி உட்பட ஐந்து பேர் மீது, இன்னும் ஓரிரு நாளில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்படும்.

ஏர்செல் நிறுவனத்திற்கு உரிமம் வழங்குவதில் வேண்டுமென்றே கால தாமதப்படுத்தியுள்ளது தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக சிவசங்கரனிடமும் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

ஏர்செல் - மேக்சிஸ் ஒப்பந்தம் தொடர்பான விவகாரத்தில் தயாநிதியின் பங்கு இருப்பது தெரிய வந்துள்ளது. இதில் ரூ. 549 கோடி சம்பந்தப்பட்டுள்ளது. குறிப்பிடத்தக்கது. இந்த ஒப்பந்தம் தொடர்பாக அப்பலோ மருத்துவமனை நிர்வாக இயக்குனர் சுனிதா ரெட்டியிடமும் சி. பி. ஐ. விசாரணை நடத்தியுள்ளது. மேக்சிஸ் நிறுவனத்தின் உயர் மட்ட குழு உறுப்பினர் ரால்ப் மார்ஷலிடமும் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. எஸ்ஸார் லூப் தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கும், கலாநிதி மற்றும் தயாநிதி இடையேயான ஊழல் விவகாரம் தொடர்பான விசாரணை இன்னும் நிலுவையில் உள்ளது.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி