ஹிஜ்ரி வருடம் 1432 துல்கஃதா பிறை 02
கர வருடம் புரட்டாதி மாதம் 13ம் திகதி வெள்ளிக்கிழமை
FRIDAY, SEPTEMBER 30, 2011
வரு. 79 இல. 231
 
வெற்றிக் கனிக்கு வித்தாகும் நவராத்திரி விரதம்

வெற்றிக் கனிக்கு வித்தாகும் நவராத்திரி விரதம்

ஒரு மனிதனுக்கு உடல் வலிமை, பராக்கிரம், மனோதிடம், புத்திபலம், தீர்க்காயுள், ஞானம், தேவைகளிற்கு பணம் போன்ற அனைத்து அம்சமும் நிறைந்திருந்தால் தான் அவன் சிறந்த வெற்றியாளனாக திகழ முடியும். அதாவது வீரம், செல்வம், கல்வி ஆகியவை அனைத்தும் நிறைந்திருக்க வேண்டும். இவற்றை பெறுவதற்காகவே நவராத்திரி விரதம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. வாழ்க்கையின் எல்லா தேவைகளையும் அடைய பணம் வேண்டும்.

இதற்காக மகாலட்சுமி தேவியை வணங்குகிறோம். பெற்ற பணத்தை பாதுகாக்க வீரம் வேண்டும். அதற்காக துர்க்கா தேவியை வழிபடுகிறோம். பெற்று பாதுகாக்கப்பட்ட பணத்தை நல்வழியில் பயனுள்ள காரியங்களிற்கு பயன்படுத்த அறிவு அதாவது கல்வியறிவு வேண்டும். அதற்கு சரஸ்வதித் தாயை வணங்குகிறோம்.

இப்படியாக காரண காரியங்களுடன் இந்த விரத முறை அமைந்துள்ளது. நவ என்ற சொல்லிற்கு, ஒன்பது, புதியது என்ற இரண்டு அர்த்தங்கள் உள்ளன. இங்கு ஒன்பது ராத்திரிகள் என்பதே நவராத்திரி எனப்படுகிறது. ஒன்பது ராத்திரிகள் சக்தியை நோன்பு நோற்று வழிபட்டு 10ம் நாள் நோன்பை நிறைவு செய்ய வேண்டும்.

உத்தராயண காலமான தை முதல் ஆனி வரையிலான காலத்தின் நடுவில் வருவது வசந்த ருது சித்திரை, தட்சிணாயன காலமான ஆடி முதல் மார்கழி வரையிலான காலத்தின் நடுப்பகுதியான சரத் ருது- புரட்டாசி, இவ்விரு பருவ காலங்களும் எமனின் கோரைப்பற்களைக் குறிக்கின்றன. இந்த ஒன்பது நாட்களும் முப்பெரும் தேவியரான மலைமகள் (துர்க்கை), அலைமகள் (மகாலட்சுமி) கலைமகள் (சரஸ்வதி) ஆகியோரிற்கு மும்மூன்று நாட்களாக வழிபடும் ஒரு முறையும் உள்ளது. மற்றும் ஒன்பது சக்தியிரை ஒன்பது நாட்கள் வழிபட்டும் முறையும் உள்ளது.

படைவீரர்கள் ஒன்பது நாட்களும் தங்கள் ஆயுதங்களை (போர்க் கருவிகளை) பூசையில் வைத்து பத்தாம் நாள் விஜய தசமியன்று விழா எடுத்து தமது வெற்றிக்கு தமது ஆயுதங்களிற்கு சிறப்பு சக்தி கிடைக்க வேண்டும் என வழிபட்டு வந்தனர். இதற்கு சான்று கிருஷ்ண அவதாரத்தில் கம்சனின் படலத்தில் காணப்படுகிறது.

நவராத்திரி கொலு வைக்கும் முறை யையும், நவராத்திரி என்பது பெண் தெய்வங்களிற்கு மட்டுமே உரிய ஒரு வழிபாட்டு முறைபோலவும், அது பெண்கள் மட்டுமே கடைப் பிடிக்கும் ஒரு விரத வழிபாட்டுமுறை போலவும் ஒரு தவறான தோற்றம் உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த நவராத்திரி விரதம் குறிப்பாக வெற்றிக்கனியை பறிக்க விரும்பும் ஆண், பெண், குழந்தைகள் அனைவரும் கடைப்பிடிக்க வேண்டிய விரதமாகும்.

ஆண்கள் இந்த விரதத்தினை அனுஷ்டிப்பதற்கு சான்றாக ஏற்கனவே கூறியது போல கம்சன் சிறப்பாக ஆயுத பூசை செய்ததையும் தற்காலத்தில் தொழிலாளர்கள் தங்கள் ஆயுதங்களிற்கு ஆயுத பூசை அன்று சிறப்பு வழிபாடு செய்வதையும் காணலாம். மற்றும் விஜயதசமி அன்று பிள்ளைகளிற்கு ஏடு தொடங்கல் என்ற கல்வியின் ஆரம்ப நாளாக கடைப்பிடிப்பதையும் நாம் காணலாம்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி