ஹிஜ்ரி வருடம் 1432 ரஜப் பிறை 18
கர வருடம் ஆனி மாதம் 06ம் திகதி செவ்வாய்க்கிழமை
TUESDAY, JUNE 21, 2011
வரு. 79 இல. 145
 

ஊவா பாடசாலைகளில் 354 ஊழியர்கள ;ஆறு வருடங்களாக நிரந்தரமின்றி கடமை

ஊவா பாடசாலைகளில் 354 ஊழியர்கள ;ஆறு வருடங்களாக நிரந்தரமின்றி கடமை

முறையற்ற நியமனங்களே காரணம்

ஊவா மாகாணப் பாடசாலைகளில் கடந்த ஆறு வருட காலமாக ஊழியர்களாக சேவையாற்றி வரும் 354 பேரின் நியமனங்கள் நிரந்தரமாக்கப்படாதது குறித்து புகார்கள் தெரிவிக்கப்படுகின்றன.

இது தொடர்பாக ஊவா மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் அனில் விஜயசிரியை தொடர்பு கொண்டு வினவியபோது, ஊவா மாகாணத்தின் பெருமளவிலான பாடசாலைகளினது ஊழியர்களை, அப்பாடசாலைகளின் அதிபர்களே நியமித்துக்கொண்டனர்.

அத்துடன் அதுபோன்ற நியமனங்களை வலயக் கல்விப் பணிப்பாளர்களும் வழங்கியுள்ளனர். அதுபோன்ற நியமனங்களை வழங்குவதற்கு அதிபர்களுக்கோ, வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கோ எத்தகைய அதிகாரங்களும் இல்லை. மேலும், அந்நியமனங்கள் அனைத்தும் சட்ட விரோதமானதாகும்.

இந் நியமனங்கள் தொடர்பாக மேற்கொள்ளக்கூடிய செயல்பாடுகள் குறித்து ஆராய குழுவொன்றினை நியமித்துள்ளேன். இக்குழுவின் அறிக்கையை மாகாண ஆளுநரிடம் சமர்ப்பித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என்றார்.

ஊவா மாகாணப் பாடசாலைகளில் கடமையாற்றும் 21 ஊழியர்கள் மட்டும் நிரந்தரமாக்கப்பட்டிருப்பது குறித்து, மாகாண கல்வி அமைச்சின் செயலாளரிடம் வினவியபோது, அவர் குறிப்பிட்ட 21 பேரை முகாமைத்துவ சேவை திணைக்களமே நியமித்தது அதன் பிரகாரம் அவர்களுக்கு நிரந்தர நியமனங்கள் வழங்கப்பட்டமையானது சட்டபூர்வமானதாகும்.

இதனை எவரும் பிழையெனக் கூற முடியாது. முகாமைத்துவ சேவை திணைக்களத்தினால் வழங்கப்படும் நியமனங்களுக்கு மாகாண ஆளுநரும் அனுமதியளித்துள்ளார். அதுபோன்று மாகாணப் பாடசாலைகளில் ஊழியர்களாக கடமையாற்றி வரும் 354 பேர் தொடர்பாக நியமிக்கப்பட்ட குழு ஆராய்வதுடன் அக்குழுவினால் தயாரிக்கப்படும் அறிக்கை, ஆளுநரிடம் சமர்ப்பிக்கப்பட்டு, இறுதி முடிவினை ஆளுநரே மேற்கொள்வார் என்றார்.

ஊவா மாகாணத்தில் மொனராகலை மாவட்டத்தின் பாடசாலைகளில் 156 ஊழியர்களும், பதுளை மாவட்டத்தின் பாடசாலைகளில் 198 ஊழியர்களுமாக 354 பேர் கடமையாற்றிக் கொண்டிருக்கின்றரென்பது குறிப்பிடத்தக்கது.

(ஐ-ஞ)

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி