2011-02-04

  இலங்கையின் சுதந்திரத்திற்காக தமது உயிரையே துச்சமென மதித்து தியாகம் செய்த பெருமக்கள்

இலங்கையின் சுதந்திரத்திற்காக தமது உயிரையே துச்சமென மதித்து தியாகம் செய்த பெருமக்கள்

உலக வரலாற்றை நாம் உற்று நோக்கவோமேயானால் ஒவ்வொரு நூற்றாண்டிலும், ஒவ்வொரு தலைமுறையிலும், நாடுகளிலே வெற்றிகளும், பாரதூரமான அழிவுகளும் ஏற்பட்டுக்கொண்டுவந்துள்ளது. இப்படியான காலகட்டத்தில் பல தியாகிகளும், தேசாபிமானிகளும் நம்முன்னே தோன்றி நாடுகளை முன்னேற்றப் பாதையிலே கொண்டு சென்றுள்ளனர்.

இந்த வகையிலே 18ம், 19ம் நூற்றாண்டில் தலை சிறந்த சிந்தனையாளர்களும், விவேகிகளும், அரசியல் தலைவர்களும், சமூக சீர்திருத்த வாதிகளும் இலங்கையிலே தோன்றி 300 ஆண்டுகளுக்கு மேலாக அந்நியரின் ஆட்சியின் கீழ் அடிமைகளாக, அடக்கி ஆளப்பட்டவர்களாக சொல்லொணாத் துயரங்களுக்கும், துன்பங்களுக்கும் மத்தியில் வாழ்ந்துகொண்டிருந்தபொழுது இலங்கை சுதந்திரம் பெறுவதாக தமது உடல், பொருள், ஆவி அனைத்தையும் தியாகம் செய்து நாட்டை அந்நியரின் அடக்குமுறை, கொடுமை, யாவற்றிலிருந்து காப்பாற்றினார்கள்.

டி. ஏ. ராஜபக்ஷ

மேலும் அந்நியரின் ஆட்சியிலே அரசியல், பொருளாதாரம், சமயம், பண்பாடு யாவும், சீரழிந்து காணப்பட்டன. போர்த்துக்கேயர், ஒல்லாந்தர், பிரித்தானியர்கள் வணக்கத் தலங்களை, சின்னா பின்னமாக்கியதுடன் மக்களையும் அடிமைகளாக அடக்கி ஆண்டுகொண்டிருந்தனர். எவரும் இவர்களை எதிர்த்துப் பேசவோ, போரிடவோ முன்வரமுடியாத நிலையில் வாழ்ந்துகொண்டிருந்தனர். அந்தக் காலகட்டத்தில்தான் தம் உயிரை துச்சமாக மதித்து இலங்கை சுதந்திரம் பெறுவதற்காக விடுதலை பெறுவதற்காக பல இன்னல்களுக்குமிடையில் தியாகமனத்தோடு முன்வந்தனர்.

இந்த வகையில் டி. எஸ். சேனநாயக்க, எப். ஆர். சேனநாயக்கா, எஸ். டபிள்யூ. பண்டாரநாயக்கா, சேர். பாரன் ஜயதிலகா, ஈ. டபிள்யூ. பெரரா, டி.ஆர் விஜேவர்த்தனா, ஜேம்ஸ் பீரிஸ், ஆதர் வி. டையஸ், டாக்டர் ரி.பி. ஜாயா, சேர். வசீக் பரீத், சேர். பொன்னம்பலம் இராமநாதன், சேர் பொன்னம்பலம் அருணாசலம், சேர். முத்துக்குமாரசுவாமி, சேர். வைத்தியலிங்கம் துரைசுவாமி டாக்டர் ஆனந்தகுமாரசுவாமி, வணக்கத்திற்குரிய அநகாரிக தர்மபால, ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர், சி.வை. தாமோதரம்பிள்ளை ஆகிய பெரும் தலைவர்கள் ஒன்றிணைந்து இன, மத, பேதங்களுக்கு அப்பாற்பட்டு தியாக உணர்வோடு செயற்பட்டனர்.

எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்கா

டி. எஸ். சேனநாயக்க மது விலக்கல் இயக்கத்தின் மூலம் பொது வாழ்க்கையில் தம்மை ஈடுபடுத்திக்கொண்டார். இவர் தன்னுடைய கல்வியை சென். தோமஸ் கல்லூரியில் பெற்றதோடு ஏழாம் வகுப்போடு கல்வியை நிறுத்திக்கொண்டார். இவர் கல்வியிலும் பார்க்க விளையாட்டில் தான் மிகுந்த ஆர்வம் உடையவராகத் திகழ்ந்தார்.

மேலும் இவரின் மது விலக்கல் இயக்கத்தை பிரித்தானியர்கள் இரண்டு காரணங்களுக்காக சந்தேகத்தோடு நோக்கினார்கள். முதலாவதாக இத்தகைய செயற்பாடு மக்களுக்கு விழிப்புணர்ச்சியை உண்டாக்கி அவர்களை அந்நியரின் அடக்குமுறை ஆட்சியிலிருந்து விடுபடச் செய்வதாகவும், அவர்களின் வருமானத்தை வீழ்ச்சி அடைவதற்காகவும், ஏற்படுத்தப்பட்டது என அவர்கள் நினைத்தார்கள். இந்த நிலையில் கட்டுக்கடங்காத கலவரம் ஏற்பட்டது. இராணுவச் சட்டம் ஏற்படுத்தப்பட்டு மது விலக்கல் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் துன்புறுத்தப்பட்டனர்.

ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க

எவ். ஆர். சேனநாயக்கா தமது உயர் கல்வியை கேம்பிரிட்ச் பல்கலைக்கழகத்தில் முடித்துக்கொண்டு இலங்கை திரும்பி அரசியலில் மிகுந்த ஈடுபாடு கொண்டார். இவரின் அரசியல் வாழ்க்கை 20 ஆண்டுகள் மட்டுமே நடைபெற்றது. ஆயினும் மக்களிடையே மிகவும் செல்வாக்குப் பெற்றவராக வாழ்ந்து 1926ம் ஆண்டு தமது 43 வது வயதில் காலமானார்.

எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்கா ஜனவரி மாதம் 8ம் திகதி 1899ம் ஆண்டு மகா முதலியார் சேர். சொலமன் டயஸ் பண்டாரநாயக்கவுக்கு ஒரே மகனாகப் பிறந்தார். இவர் ஓர் தலைசிறந்த பேச்சாளராகவும், அரசியல்வாதியாகவும் திகழ்ந்தார். இவர் தமது கல்லூரிப் படிப்பை சென். தோமஸ் கல்லூரியில் முடித்துக்கொண்டு 1919ம் ஆண்டு ஒக்ஸ்போட் பல்கலைக்கழகத்தில் சேர்ந்த ஓர் வழக்கறிஞராக வெளிவந்தார். இத்துடன் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் ஓர் தலை சிறந்த பேச்சாளராகக் கணிக்கப்பட்டதுடன், 1923ம் ஆண்டு ஒக்ஸ்போர்ட் யூனியனின் செயலாளராகவும் தெரிவு செய்யப்பட்டார்.

சேர். பொன்னம்பலம் இராமநாதன்

எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்க 1925ம் ஆண்டு இலங்கைக்குத் திரும்பி வந்து 1927ம் ஆண்டு கொழும்பு மாநகர சபைக்கு அங்கத்தவராகத் தெரிவு செய்யப்பட்டார். 1931ம் ஆண்டு STATE COUNCIL க்கு ஓர் அங்கத்தவராகத் தெரிவு செய்யப்பட்டு, அதன் பின்னர் வியாங்கொடையில் ஓர் அங்கத்தவராக செயல்பட்டார். 1947ம் ஆண்டு அத்தனகல்லேயன் அங்கத்தவராகத் தெரிவு செய்யப்பட்டார்.

டி. எஸ். சேனநாயக்காவுக்கும், இவருக்கும் ஏற்பட்ட கருத்து முரண்பாட்டு காரணமாக 1951ம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து விலகி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை உருவாக்கி 1952ம் ஆண்டு ஓர் பாராளுமன்ற அங்கத்தவராக திரும்பவும் தெரிவு செய்யப்பட்டார். மேலும் 1956 ஆண்டுப் பொதுத் தேர்தலில் அமோக வெற்றியீட்டி பிரதம மந்திரியாக தெரிவு செய்யப்பட்டார்.

சேர். பொன்னம்பலம் அருணாசலம்

டி. ஆர். விஜேவர்த்தனா இந்நாட்டிலே ஓர் தலைசிறந்த தேசாபிமானியாகவும், தியாகியாகவும், பத்திரிகையாளராகவும், மகத்தான பணியாற்றி நாட்டின் சுதந்திரத்திற்கான தம்மால் இயன்ற முயற்சிகளைக் கையாண்டார். இவர் ஓர் ஆளுமைமிக்கவராக இருந்த பொழுதும் பேச்சுத் திறமை மிக்கவராகக் காணப்படவில்லை. ஆயினும் தனது பத்திரிகையின் மூலம் மக்களிடையே விழிப்புணர்ச்சியை உண்டாக்கி இலங்கை சுதந்திரம் அடைவதற்காக பல வழிகளைக் கடைப்பிடித்தார்.

டி. ஆர். விஜேவர்த்தனா அவர்கள் முகாந்திரம் டி.பி. விஜேவர்த்தனாவுக்கு மூன்றாவது மகனாகச் சேதுவத்த என்ற கிராமத்தில் பிறந்தார். இவர் தமது படிப்பை சென் தோமஸ் கல்லூரியில் முடித்துக்கொண்டு கேம்பிரிஜ் பல்கலைக்கழழகழக ழகத்தில் படித்து சட்டத்துறையில் பட்டம் பெற்றார். கேம்பிரிஜ் பல்கலைக்கழகத்தில் கல்விகற்ற சமயம் இந்திய போராட்டத்தில் முன்னின்று உழைத்த பெரும் தியாகிகளோடு தொடர்புகொண்டிருந்தார். முக்கியமாக கோல்பேஸ் போனால் பெரும் தியாகிகளோடு தொடர்பு கொண்டு இலங்கையின் அரசியல் பற்றி மிகவும் அவதானமாக அலசி ஆராய்ந்தார். இத்துடன் சேர். பொன்னம்பலம் இராமநாதன், சேர். பொன்னம்பலம் அருணாசலம் போன்றவர்களோடு சேர்ந்து இந்நாடு சுதந்திரம் அடைவதற்காக பல திட்டங்களை வகுத்தார்.

சேர். பொன்னம்பலம் இராமநாதன் இலங்கையில் தலைசிறந்த அரசியல்வாதியும், கல்விமானும், சட்ட வல்லுனரும், சமூக, சமய சேவையாளருமாவார். 1915ம் ஆண்டு இலண்டன் மாநகரம் சென்று உரையாடி, வெற்றிவாகை சூடி இலங்கைக்குத் திரும்பி வந்தபோது சிங்கள அரசியல்வாதிகள் இவரைப் பல்லக்கில் வைத்து இழுத்துச் சென்றமை பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்படவேண்டிய தொன்றாகும்.

சேர். பொன்னம்பலம் அருணாசலம் அவர்கள் பொன்னம்பலம் முதலியார் அவர்களுக்கு மகனாக செப்டெம்பர் 14ம் திகதி 1853ம் ஆண்டு பிறந்தார். இவர் தன்னுடைய சகோதரர்களான இராமநாதன் மற்றும் மூத்த தமயனாரான குமார சுவாமியாவரைப் போன்றும் இவருடைய மாமனார். சேர் முத்துக்குமாரசுவாமிகளின் மேற்பார்வையில் வளர்ந்து வந்தார். இத்துடன் இவர் ஓர் தலைசிறந்த கணித மேதையாக விளக்கியதுடன் இலங்கையின் முதலாவது சிவில் சேவையில் சித்தியடைந்த பெருமகனுமானார். 1919ம் ஆண்டு இலங்கை தேசிய காங்கிரஸ் உண்டாக்கப்பட்டபோது அதன் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டார். இவர் இலங்கை சுதந்திரம் அடைவதற்காக மற்றைய அரசியல் தலைவர்களோடு இணைந்து செயற்பட்டார். இத்துடன் நீதி அதிகாரியாகவும், சட்ட கவுன்சில் ஆகியவற்றில் அங்கத்தவராகவும், ஆசிய சபையின் தலைவராகவும், இலங்கைப் பல்கலைக்கழக சபையின் தலைவராகவும் பணிபுரிந்தார்.

சேர். வைத்திலிங்கம் துரைசுவாமி அவர்கள் சட்ட சபையின் முதல் சபாநாயகராகவும், கல்விமானாகவும் விளங்கியதுடன் சேர். பொன்னம்பலம் இராமநாதன் மற்றும் அநேக அரசியல்வாதிகளோடு இணைந்து கல்வி மேம்பாட்டிக்காக பல இந்துக் கல்லூரிகளை ஸ்தாபித்தார்.

சேர் ரி.பி. ஜாயா முஸ்லிம் சமூகத்தின் தலை சிறந்த தலைவராக விளங்கினார். இவர் முஸ்லிம் மாணவ, மாணவிகளின் கல்வி மேம்பாட்டிற்காக முன்னின்று உழைத்தார்.

சேர். ராசீக் பரீத் 1944ம் ஆண்டு “STATE COUNCIL” அங்கத்தவராக அரசியலில் பிரவேசித்தார். இத்துடன் 1937ம் ஆண்டிலிருந்து 1940ம் ஆண்டுவரை கொழும்பு மாநகர சபை அங்கத்தவராகவும் தெரிவு செய்யப்பட்டு மகத்தான சேவையாற்றினார். இவர் முஸ்லிம் மாணவ, மாணவிகளின் கல்வி மேம்பாட்டிற்காக அநேக பாடசாலைகளை தன் சொந்தச் செலவில் ஸ்தாபித்தார்.

அன்றைய காலகட்டத்தில் வாழ்ந்த பெருமக்கள் தமது தியாக உணர்வினாலும் நாட்டுப்பற்றினாலும் பல இன்னல்களுக்குமிடையில் இலங்கையின் சுதந்திரத்திற்காக உடல், பொருள், ஆவி அனைத்தையும் ஈர்ந்து நாட்டை அந்நியரின் பிடியிலிருந்து காப்பாற்றினார்கள்.