2011-02-04

  தேசிய கொடிக்கு சிரம் தாழ்த்தி கௌரவிப்போம்!

தேசிய கொடிக்கு சிரம் தாழ்த்தி கௌரவிப்போம்!

சுதந்திர தினமான இன்று எமது தேசிய கொடிக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. ஒரு நாட்டில் பெருமையை பறைசாற்றும் சின்னமாக தேசியக் கொடி மதித்து கெளரவிக்கப்படுகிறது. தேசியக் கொடியை ஏற்றும் போதும் அதனை கம்பத்திலிருந்து இறக்கும் போதும் ஒரு நாட்டில் தலைவருக்கு கொடுக்கப்படும் அதே அளவு மரியாதை தேசிய கொடிக்கு கொடுக்கப்படுகிறது. நாட்டின் முக்கிய உத்தியோகபூர்வ நிகழ்வுகளின் போது தேசியக் கொடி சகல அரசாங்க கட்டடங்களிலும் கம்பீரமாக பறக்கவிடப்படுகிறது.

பலவகையான கொடிகளை ஒரு இடத்தில் பறக்கவிடும் போது அவற்றை விட சற்று உயரத்தில் தேசியக் கொடி பறக்கவிடப்பட வேண்டும். 1972ம் ஆண்டில் இலங்கை ஒரு ஜனநாயக குடியரசாக மாற்றமடைந்த போதும் 1978ம் ஆண்டில் இலங்கையில் நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி ஆட்சி முறை அறிமுகம் செய்யப்பட்ட போதும் எமது நாட்டின் தேசியக் கொடியில் எவ்வித குறிப்பிடத்தக்க மாற்றமும் செய்யப்படவில்லை.

ஸ்ரீலங்கா மாதா என்ற இலங்கையின் தேசிய கீதத்தை 1940ம் ஆண்டு பிரபல கவிஞரான ஆனந்தசமரக்கோன் சிங்கள மொழியில் எழுதினார். இது 1951ம் ஆண்டு நவம்பர் மாதம் 22ம் திகதி நாட்டின் தேசிய கீதமாக அங்கீகரிக்கப்பட்டது.

நாலு நூற்றாண்டுகளாக இலங்கை வெளிநாட்டவர்களின் ஆக்கிரமிப்பை அடுத்து தனது சுய ஆட்சி உரிமையை இழந்து இருந்தது. 1948ம் ஆண்டு பெப்ரவரி 4ம் திகதியன்று பிரிட்டிஷ் அரசாங்கத்திடமிருந்து இலங்கைக்கு சுதந்திரம் கிடைக்கப்பெற்றது. அன்று இலங்கையின் கடைசி மன்னன் ஸ்ரீ விக்கிரம இராஜசிங்கவின் கொடி ஏற்றப்பட்டு பிரிட்டிஷ் கொடி இறக்கப்பட்டமை எமது நாட்டின் வரலாற்றில் ஒரு முக்கிய நிகழ்வாக அமைந்துள்ளது.

ஒரு தேசியத் தலைவரின் மரணம் அல்லது இயற்கை அனர்த்தத்தினால் நாட்டில் ஏற்படும் மனித அழிவின் போது தேசத்தின் சோகத்தை காண்பிக்கும் முகமாக தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும்.

தேசியக் கொடியை பறக்கவிடும் போது அதன் நிறம் மங்கியிருந்தாலோ அதன் சில பகுதிகள் கிழிந்திருந்தாலோ அவற்றை பறக்கவிடுவது நாட்டின் சுயாதிபத்தியத்திற்கு செய்யும் ஒரு அவமதிப்பாக கருதப்படுகிறது. எனவே, தேசியக் கொடியை நாட்டு மக்கள் அனைவரும் மரியாதையுடனும் பக்தியுடனும் பயன்படுத்த வேண்டும்.

முக்கிய நிகழ்வுகளின் போது தேசியக் கொடியை பயன்படுத்திய பின்னர் அவற்றை மிகவும் பாதுகாப்பாக இறக்கி நெறியாக மடித்து வைக்க வேண்டும். அடுத்த தேசிய நிகழ்வுகள் நடைபெறும் தினத்தில் மாத்திரம் கம்பங்களில் பறக்க விட வேண்டும்.

தேசியக் கொடியில் உரைநிகழ்த்தும் மேடையில் கட்டுவதும் அதற்கு செய்யும் பெரும் அவமதிப்பாகும். தேசிய கொடியை தலைகீழாக கவனக்குறைவின் நிமித்தம் கட்டுவது மன்னிக்க முடியாத குற்றம் மட்டுமல்ல, இலங்கை சட்டப்படி ஒரு தண்டனைக்குரிய சட்டமாக கருதப்படுகிறது.

தேசியக் கொடியை பறக்கவிடும் போது அதன் ஒரு பகுதி தரையில் படுவதையோ வேறு ஏதாவது ஒரு பொருளின் மீது விழுவதையோ தடுக்க வேண்டும். இவ்விதம் தேசியக் கொடியை கட்டுவதும் ஒரு தண்டனைக்குரிய குற்றமாகும். அது போல் தேசியக் கொடிகளை அச்சிடும் போது அச்சகங்கள் அதன் இயற்கையான வர்ணங்களை மாற்றிவிடாமலும் அவதானமாக இருக்க வேண்டும். தேசியக் கொடியை பாதைகளின் வீதியின் குறுக்கே கட்டுவதும் அதனை அவமதிக்கும் செயலாக கருதப்படும்.

1951ம் ஆண்டிலும் 1972ம் ஆண்டிலும் ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கத்தின் கொடியில் சில திருத்தங்களை மேற்கொண்டு அதில் சிறுபான்மை சமூகங்களுக்கும் பிரதிநிதித்துவம் அளிக்கக்கூடிய வகையில் சில வர்ணங்கள் எங்கள் தேசியக் கொடியில் சேர்க்கப்பட்டுள்ளன. சிலர் தேசியக் கொடியை பொலிதீனில் அச்சிட்டு தேசிய வைபவங்களின் போது தெருத்தெருவாக கட்டிவிடுவதுண்டு. அந்த வைபவம் முடிவடைந்த பின்னர் ஒருவருமே அவற்றை அகற்றி விடவேண்டும் என்பதில் அக்கறை காட்டுவதில்லை. இறுதியில் கொடிகள் வீதியில் அநாதரவாக விழுந்துவிடும் போது அவற்றை பலரும் பொருட்படுத்தாமல் மிதித்து செல்கின்ற வேதனைக்குரிய சம்பவங்களும் இடம்பெறுகின்றன.

ஆகவே, பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு தேசிய கொடியை அவமதிக்கக்கூடிய வகையில் அவற்றை பயன்படுத்துவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று பொலிஸாருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

சர்வதேச ஒரு நாள் கிரிக்கட் போட்டிகளின் போது இலங்கையின் தேசியக் கொடி மாத்திரமின்றி இந்தியா, பாகிஸ்தான் போன்ற நாடுகளின் தேசியக் கொடிகள் தரக்குறைவான முறையில் பயன்படுத்துவதுண்டு. சில பெண்கள் தேசியக் கொடியை பயன்படுத்தி ஆடைகளை தைத்து விடுவதுண்டு. வேறு சிலர் ஒரு நாள் கிரிக்கட் போட்டியில் ஆரவாரம் செய்யும் போது தேசியக் கொடியை மடியில் கட்டிக்கொண்டு ஆடுவதும் அப்பொழுது அந்தக் கொடி இடுப்பு நழுவி கீழே விழும் சம்பவங்கள் நடைபெறுவதும் இப்போது அதிகரித்த வண்ணம் இருக்கின்றது.

இனிமேல் நாட்டின் சுதந்திரத்தின் சின்னமாக விளங்கும் தேசியக் கொடியை கெளரவிக்கக்கூடிய நற்பண்புகளை இப்போது பாடசாலைகளில் அறிவுறுத்துவதற்கான திட்டங்களை கல்வி அமைச்சு மேற்கொண்டு வருகின்றது.

தனிப்பட்ட நிகழ்வுகளின் போது தேசியக் கொடியை பயன்படுத்துவது தவறில்லை. என்றாலும் அதற்கு அகவுருவத்தையோ அவமதிப்பையோ ஏற்படுத்தக்கூடிய வகையில் பயன்படுத்த கூடாது.

வாகனங்களில் தேசியக் கொடியை பறக்கவிடும் போதும் அது பெரிய கொடிகளாக இல்லாமல் சிறிய கொடியாக இருத்தல் அவசியமாகும்.

இன்று சுதந்திரத்தினத்தன்று நாட்டிலுள்ள எல்லா வீடுகளிலும் தேசியக் கொடியை பறக்கவிடுதல் அவசியமாகும். இதன்முலமே இந் நாட்டு மக்கள் தற்போது அவர்களுக்கு கிடைத்திருக்கும் சுதந்திரக் காற்றை மகிழ்ச்சியோடு அனுபவித்து வருகிறார்கள் என்பதையும் எங்கள் நாட்டில் வலுவடைந்து வரும் தேசிய ஐக்கியத்தையும் பிரதிபலிக்கக்கூடியதாக இருக்கும்.

தேசிய கீதம் இசைக்கப்படும் போது நாம்அனைவரும் எங்களை அறியாமலேயே எழுந்து நின்று சிரம் தாழ்த்தி அதற்கு மாரியாதை செலுத்துவதைப் போன்று தேசிய கொடி கட்டடங்களில் ஆடம்பரமாக பறந்து கொண்டிருக்கும் போது அதனை அண்ணார்ந்து பார்த்து சிரம் தாழ்த்தி கெளரவித்தல் அவசியமாகும்.