2011-02-04

  இலங்கையின் சுதந்திரத்திற்கு லேக்ஹவுஸ் ஊடகங்களின் பங்களிப்பு

இலங்கையின் சுதந்திரத்திற்கு லேக்ஹவுஸ் ஊடகங்களின் பங்களிப்பு

லங்கையில் நீண்டகாலமாக வெளிவரும் தேசியப் பத்திரிகைகளில் தினகரன் நாளிதழும் ஒன்றாகும். இது சுமார் எட்டு தசாப்தங்களாகத் தொடராக வெளிவந்து கொண்டிருக்கின்றது.

இலங்கையின் சமூக, கலை, கலாசார, சமய, கல்வி, பொருளாதார, அரசியல் மேம்பாட்டுக்காகப் பாரிய பங்களிப்பு செய்து வரும் இப்பத்திரிகை இந்நாட்டின் சுதந்திரத்திற்கும் அளப்பரிய சேவை செய்து இருக்கின்றது.

தினகரன் தேசியப் பத்திரிகை வெளிவர ஆரம்பமான காலப்பகுதியில் இலங்கை பிரித்தானியரின் ஆளுகைக்கு உட்பட்டிருந்தது. அதேபோல் இந்திய உபகண்டமும் பிரித்தானிய ஆக்கிரமிப்பின் கீழிலிருந்தது. என்றாலும் பிரித்தானியரின் பிடியிலிருந்து விடுதலை பெற்றுக்கொள்ளுவதற்கான முயற்சிகளும் இக்கால கட்டத்தில் இலங்கையிலும், இந்திய உபகண்டத்திலும் இடம்பெற்றுக்கொண்டு தான் இருந்தன. அதிலும் குறிப்பாக இந்திய உபகண்டத்தில் இம்முயற்சி போராட்ட வடிவம் பெற்றிருந்தது. அது நாளுக்கு நாள் வளர்ச்சி அடையவும் செய்தது.

இவ்வாறான நிலையில் இந்திய சுதந்திரப் போராட்டத்தின் தாக்கம் இலங்கையிலும் செல்வாக்குச் செலுத்திக் கொண்டிருந்தது. இச்சந்தர்ப்பத்தில் இலங்கையைச் சேர்ந்த முன்னாள் இடதுசாரித் தலைவர்களான டாக்டர் எஸ். ஏ. விக்கிரமசிங்க, பிலிப் குணவர்தன, என். எம். பெரேரா, கொல்வின் ஆர்.டி. சில்வா போன்றோர் இந்தியாவுக்குச் சென்று அந்நாட்டு சுதந்திரப் போராட்டத்திற்குப் பங்களிப்புச் செய்தனர். அதிலும் டாக்டர் எஸ். ஏ. விக்கிரமசிங்க பிரித்தானியாவில் கல்வி கற்றுக்கொண்டிருக்கும் போது அங்கு இயங்கிக் கொண்டிருந்த இந்தியாவின் சதந்திரத்திற்கான மாணவர் அமைப்புடன் இணைந்து செயற்பட்டார்.

இதேநேரம் டி.எம். ராஜபக்ஷ, டி.ஏ. ராஜபக்ஷ, எஸ். டப்ளியு. ஆர். டி. பண்டாரநாயக்கா, டி. எஸ். சேனநாயக்கா, பொன்னம்பலம் இராமநாதன், பொன்னம்பலம் அருணாசலம், ரி.பி. ஜாயா போன்ற இந்நாட்டு அரசியல் தலைவர்கள் இலங்கையின் சுதந்திரம் குறித்து சிந்திக்கவும், செயற்படவும் ஆரம்பித்திருந்தனர்.

இதேகாலப்பகுதியில் பிரித்தானியாவின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பயின்று கொண்டிருந்த டி.ஆர். விஜேவர்தனவுக்கும் இந்திய சுதந்திரப் போராட்ட வீரர்களின் அறிமுகம் கிடைத்தது. அவர்களது கருத்துக்களால் இவரும் கவரப்பட்டார். அதனால் இந்தியாவுக்கு வருகைதருமாறு இந்திய சுதந்திரப் போராட்ட வீரர்கள் டி.ஆர். விஜேவர்தனவுக்கு அழைப்பு விடுத்தனர். இருப்பினும் அவர் அந்த அழைப்பை ஏற்று இந்தியாவுக்குச் செல்லாது இலங்கையிலிருந்தபடி இந்திய சுதந்திரப் போராட்டத்திற்கு உதவி ஒத்துழைப்புக்களை நல்கினார். இதற்காக அவர் பத்திரிகைகளைப் பயன்படுத்தினார்.

1900 களுக்குப் பிறகு இந்திய உபகண்டத்திலும் இலங்கையிலும் சுதந்திரத்தின் முக்கியத்துவம் தேவை குறித்து சிந்திப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருந்தது. இது இந்தியாவில், “வெள்ளையனே வெளியேறு” என்ற கோஷத்துடனான போராட்டமாக வளர்ச்சி பெற்றிருந்தது.

இக்காலப்பகுதியில் டி.ஆர். விஜேவர்தன சுதந்திரத்தின் தேவையையும் முக்கியத்துவத்தையும் பத்திரிகைகள் ஊடாக மக்கள் மயப்படுத்தும் நடவடிக்கையை ஆரம்பித்தார்.

இதற்காக ‘தினமின’ என்ற சிங்கள மொழி தேசியப் பத்திரிகையையும், ‘டெய்லி நிவ்ஸ்’ என்ற ஆங்கில பத்திரிகையையும் லேக்ஹவுஸ் நிறுவனத்தின் ஊடாக அவர் வெளியிட்டார். இந்திய சுதந்திரப் போராட்டம் தொடர்பான கட்டுரைகளும், செய்திகளும் இப்பத்திரிகைகளில் வெளியாகின. அத்தோடு இலங்கையின் சுதந்திரத்தின் அவசியத்தையும் அவர் இப்பத்திரிகைகள் ஊடாக மக்கள் மத்தியில் கொண்டு சென்றார்.

இந்தக் காலப்பகுதியில் அதாவது 1930 ஆம் ஆண்டளவில் இந்நாட்டில் வாழும் தமிழ் பேசும் மக்களுக்கென ஒரே ஒரு தினசரியாக ‘வீரகேசரி’ வெளியானது. என்றாலும் அது அன்றைய காலகட்டத்தில் இந்திய சுதந்திரப் போராட்டத்திற்குத் தான் முக்கியத்துவம் அளித்தது. மாறாக இலங்கையின் சுதந்திரம் குறித்து வீரகேசரி அதிக அக்கறை காட்டவில்லை என டி. ஆர். விஜேவர்தன உணர்ந்தார். இது தொடர்பாக அவர் சில சந்தர்ப்பங்களில் சுட்டிக்காட்டியும் இருக்கின்றார்.

இவ்வாறான நிலையில் தான் இலங்கையின் சுதந்திரத்தின் முக்கியத்துவத்தை தமிழ் பேசும் மக்கள் மத்தியில் கொண்டு செல்லவேண்டும், தமிழ் பேசும் மக்களைத் தேசிய அரசியல் நீரோட்டத்தில் பிரவேசிக்கச் செய்ய வேண்டும்.

இங்கு இன ரீதியான சிந்தனை வளர இடமளிக்கக் கூடாது போன்ற நோக்கங்களுடன் அவர் தினகரன் பத்திரிகையை 1932 ஆம் ஆண்டு மார்ச் 15 ஆம் திகதி ஆரம்பித்தார்.

இப்பத்திரிகையின் நோக்கத்தை அதன் முதல் இதழே நன்கு தெளிவுபடுத்தியது.

எல்லா விவகாரங்களையும் தேசிய கண்கொண்டு நோக்கப்படுவதன் அவசியத்தை தினகரன் வெளிப்படுத்தியது. தேசியமும், தேசிய ஒற்றுமையுமே தினகரனின் அடிநாதமாக விளங்கியது. தினகரனில் வெளியான செய்திகள், கட்டுரைகள், கதைகள், கவிதைகளில் இவை பிரதிபலித்தன.

அன்றைய காலகட்டத்தில் தினகரனின் வருகை தமிழ் பேசும் மக்களின் தேவையை நிறைவேற்றக் கூடியதாக இருந்தது. அதனால் யாழ். குடா நாட்டிலும் கூட தினகரனுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இது மறைக்க முடியாத உண்மையாகும்.

தினகரன் ஆரம்பிக்கப்பட்டது முதல் நாட்டின் சமூக, பொருளாதார, கலை, கலாசார, அரசியல் துறைகளுக்கு பங்களிப்பு செய்தது போல் நாட்டின் சுதந்திரத்தின் தேவையையும், முக்கியத்துவத்தையும் மக்கள் மயப்படுத்தவும் அது தவறவில்லை. அன்றைய காலகட்டத்தில் அரசியல் தலைவர்கள் இலங்கையின் சுதந்திரத்திற்காக முன்னெடுத்த நடவடிக்கைகளைத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் கொண்டு செல்லுவதற்கு தினகரன் பாரிய பங்களிப்பு செய்தது.

இதன் பயனாக இன, மத, மொழி பேதம் பாராது தமிழ் பேசும் தலைவர்கள் பெரும்பான்மை இனத் தலைவர்களுடன் ஒன்றுபட்டு நாட்டின் சுதந்திரத்திற்காக உழைத்தனர். அது இந்நாட்டில் வாழும் எல்லா இன மக்களும் ஒன்றுபட்ட விடுதலைப் போராட்டமாக வெடிப்பதற்குள் பிரித்தானியர் 1948 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 4 ஆம் திகதி இலங்கைக்கு சுதந்திரம் வழங்கினர்.

தினகரன் ஆரம்பிக்கப்பட்டது முதல் இந்நாடு 1948 ஆம் ஆண்டில் சுதந்திரமடையும் வரையும் ஐவர் இப்பத்திரிகையின் பிரதம ஆசிரியர்களாக கடமையாற்றியுள்ளனர். தினகரனின் முதலாவது ஆசிரியராக கே. மயில் வாகனம் (1932 - 1934) இரண்டாவது ஆசிரியராக ப. ராமநாதன் (1934 - 1936), மூன்றாவது ஆசிரியராக ஈஸ்வர ஐய்யர் (1936 - 1938) நான்காவது ஆசிரியராக கிருஷ்ண ஐய்யர் (1938 - 1942), ஐந்தாவது ஆசிரியராக ரி. எஸ். தங்கய்யா (1942 - 1948) ஆகியோர் பதவி வகித்தனர். இவர்கள் தினகரனின் நோக்கத்தை செவ்வனே நிறைவேற்றினர். இதற்கு அவர்ககளது எழுத்துக்களே நல்ல சாட்சி.

ஆகவே தினகரன் தேசியப் பத்திரிகை இன்னும் பல தசாப்தங்கள் நீடித்து நிலைத்து இந்நாட்டின் சமூக, சமய, பொருளாதார, கலை கலாசார, அரசியல் துறைகளின் மேம்பாட்டுக்கு மேலும் மேலும் பங்களிப்பு செய்யும் என்பதில் ஐயமில்லை.