2011-02-04

  சுதந்திரத்தை யதார்த்தமாக்கும் யுகமொன்றின் ஆரம்பம்

இலங்கையின் 63வது சுதந்திர தினம்:

சுதந்திரத்தை யதார்த்தமாக்கும் யுகமொன்றின் ஆரம்பம்

அமைதி, சமாதானம், அபிவிருத்தி இவைகளே வளர்ச்சியடைந்து வரும் ஒரு நாட்டின் சிறந்த அடையாளங்கள்.

அமைதியையும் சமாதானத்தையும் இழந்திருந்த இருண்ட யுகங்களைக் கடந்து இலங்கைத் திருநாட்டில் இப்போது அமைதி தவழ்கிறது.

சுதந்திர இலங்கை 63வது வருடத்தில் பாதம் பதிக்கும் போது நாளைக்கான நம்பிக்கைகளும் மனங்களில் துளிர்விடுகின்றன. இச்சூழலானது சுபிட்சமும் செளபாக்கியமும் நிறைந்த எதிர்கால இலங்கைக்குக் கட்டியம் கூறி நிற்கின்றது.

சுதந்திர நாட்டின் 63 வது வருடத்தில் நின்று கடந்த காலங்களை நாம் பின்னோக்கிப் பார்க்கையில், இன்றைய மாற்றங்களின் வித்தியாசங்களைக் காண முடியும்.

முப்பது வருடகால யுத்தம் முழு நாட்டிலும் ஏற்படுத்திய பாதிப்புக்கள் அதனால் இன, மத, பிரதேச பேதமின்றி சகல மக்களும் அனுபவித்த வேதனைகள் குறிப்பிடத்தக்கதும் மிகவும் கசப்பான அனுபவங்களுமாகும்.

நாட்டை அபிவிருத்தியில் கட்டியெழுப்புவதற்கு அமைதிச் சூழல் மிக முக்கியமாகிறது. இதற்காக மாறிமாறி நாட்டை ஆண்ட தலைவர்கள் எத்தகைய பிரயத்தனங்களை மேற்கொண்ட போதும் தற்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களினாலேயே அமைதியையும் அபிவிருத்தியையும் ஒரே சமயத்தில் கட்டியெழுப்ப முடிந்துள்ளது.

சில மாவட்டங்களுக்கும் நகரங்களுக்கும் மட்டுப்படுத்தப்பட்டிருந்த அபிவிருத்தி தற்போது நாட்டின் மூலை முடுக்குகளிலுள்ள சகல கிராமங்களுக்கும் எடுத்துச் செல்லப்படுகின்றன. இந்நிலையானது கிராமிய பொருளாதாரத்தில் தாக்கம் செலுத்துவதுடன் கிராமிய மக்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்துவதற்கும் வழிவகுத்துள்ளன.

முப்பது வருட கால யுத்தம் முடிவுற்ற நிலையில் அபிவிருத்தியில் நாட்டைக் கட்டியெழுப்பும் யுகம் ஆரம்பமாகியுள்ளது. காலத்துக்குக் காலம் நாட்டில் பல மாற்றங்கள் ஏற்பட்ட போதும் அந்த மாற்றங்கள் நாட்டினதும் நாட்டு மக்களினதும் மேம்பாட்டிற்கு வழங்கியுள்ள பங்களிப்புகள் மிகக் குறைவானதே.

மன்னாரில் துரிதகதியில் வீதி அபிவிருத்தி

அந்த வகையில் சுதந்திரமடைந்த 63 வருடங்களில் 2005 - 2010 என்ற இறுதி ஐந்து வருடங்கள் நாட்டினதும் மக்களினதும் மேம்பாட்டுக்கான மாற்றங்கள் பலவற்றைக் கொண்டு வந்துள்ளன.

வடக்கு, கிழக்கு உட்பட நாட்டின் சகல பகுதிகளிலும் சகல இன, மத மக்களும் சுதந்திரமாக சென்று வரக்கூடிய சூழல் இதில் மிக முக்கியமானதாகும். யுத்தத்தினால் இரு தரப்பிலும் நாளுக்கு நாள் இல்லாதொழிந்த எண்ணிலடங்காத மனித உயிர்கள் அதிலும் குறிப்பாகக் குறிப்பிட வேண்டியவை. இன்று அந்நிலை முற்றாக சரி செய்யப்பட்டுள்ளது.

வாழ்க்கைக்கான முதல் ஆதாரம் உயிருடன் வாழ்வதே. எங்கு சென்றாலும் எதைச் செய்தாலும் எந்த சமயம் குண்டு வெடிக்குமோ உயிர் போகுமோ என்ற சந்தேகத்துடன் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு வாழ்ந்த யுகமொன்று முடிவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளமை இம்மாற்றங்களில் முக்கியமானது.

நாட்டில் சதந்திரமும் அமைதியும் இனங்களுக்கிடையிலான புரிந்துணர்வும் ஐக்கியமும் ஏற்பட்டுள்ளமை நாட்டை முன்னேற்றுவதற்கான சிறந்த சூழலாகிறது. இதனை வாய்ப்பாக்கிக் கொண்டு அரசாங்கம் நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் பாரிய அபிவிருத்திகளை முன்னெடுக்கின்றன. எத்தகைய விமர்சனங்கள் எழுந்த போதும் நாட்டில் அபிவிருத்திகள் நடை பெறுவதை எவரும் மறுக்க முடியாது.

மக்கள் கனவை நனவாக்கிய கேரதீவு - சங்குப்பிட்டி பாலம்

வடக்கின் வசந்தம், கிழக்கின் வசந்தம் என வடக்கு, கிழக்கு மாகாணங்கள் அபிவிருத்தி கண்டு வருகின்றன. கிழக்கில் கிண்ணியா பாலம் வடக்கில் சங்குப்பிட்டி பாலம் போன்றவை எல்லா ஆட்சிக் காலங்களிலும் பேசப்பட்ட விடயங்கள்.

தேர்தல் காலங்களில் தேர்தல் வாக்குறுதிகளாக மக்களை வசப்படுத்த அரசியல்வாதிகளின் ஏமாற்றுத்துரும்பாக இப்பாலங்களுக்கான வாக்குறுதிகள் பயன்படுத்தப்பட்டன. எனினும் எந்த ஒரு அரசியல் தலைவராலும் நிறைவேற்றப்படாததை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மிகக் குறுகிய காலமொன்றில் நிறைவேற்றினார். சங்குப்பிட்டி பாலத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் திறந்து வைத்தபின் மக்கள் முகங்களில் தெரிந்த மகிழ்ச்சியில் மாற்றத்தின் யதார்த்தம் தெரிந்தது.

பிரதி வருடமும் மின் துண்டிப்பு ஏற்படுத்தப்பட்ட யுகமொன்றை நாம் கடந்து வந்துள்ளோம். நாட்டின் மின்சாரத் தேவை பற்றி ஒவ்வொரு காலகட்டங்களிலும் அரசியல் தலைவர்கள் பேசினார்களே ஒழிய ஆக்கபூர்வமான திட்டங்களை முன்வைக்கத் தவறிவிட்டனர்.

மேல்கொத்மலை நீர்மின் உற்பத்தித் திட்டம்

நுரைச்சோலை, மேல் கொத்மலை, கெரவலப்பிட்டிய என பல மின்சார உற்பத்தித்திட்டங்கள் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. இன்னும் இரண்டொரு வருடங்களில் இவற்றிலிருந்து மின்சாரத்தைப் பெற்றுக்கொள்ளும் போது இலங்கையில் மின் துண்டிப்பு என்ற பேச்சுக்கே இடமில்லாமல் போகும்.

இந்த மின்சாரத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் எழுந்த எதிர்ப்புகளுக்கு கடந்த கால அரசியல் தலைவர்கள் முகங்கொடுக்கத் தயங்கிய போதும் சகல எதிர்ப்புகளையும் சமாளித்து துணிவுடன் ஆரம்பித்து அத்திட்டங்கள் நிறைவுரும் நிலைக்கு கொண்டுவரப்பட காரணமானவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களே.

கெரவலப்பிட்டி மின் உற்பத்தி நிலையம் 34,267 மில்லியன் ரூபா செலவிலும் மேல் கொத்மலை நீர் மின் உற்பத்தித்திட்டம் 38,219 மில்லியனிலும், நுரைச்சோலை அனல் மின் நிலையம் 1600 மில்லியன் ரூபாவிலும் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன.

மின்சார நெருக்கடிக்கு
முகம் கொடுப்பதை
தவிர்க்கும் பொருட்டு நுரைச்சோலை அனல்மின் உற்பத்தி நிலையம்

முதற்கட்டம் முடிவடைந்ததும் 2011 - 2012 ஆம் வருடங்களில் இடம்பெறவுள்ள இரண்டாம் கட்ட நடவடிக்கைகளுக்காக மேலும் பல பில்லியன் ரூபாய்களை அரசாங்கம் செலவிடவுள்ளது. இந்த நிதியானது நாட்டின் எதிர்காலத்திற்கான சிறந்த முதலீடாகவே அமைகிறது.

நாட்டில் எங்கு பார்த்தாலும் வீதிகள் புனரமைக்கப்பட்டும் புதிய வீதிகள் நிர்மாணிக்கப்படும் போக்குவரத்துக்கள் இலகுபடுத்தப்பட்டுள்ளன.

குறிப்பாக யுத்த காலத்தில் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டிருந்த கிழக்கு பிரதான வீதிகள் பெரும்பாலும் புனரமைக்கப்பட்டு விட்டன. பொலனறுவையிலிருந்து மட்டக்களப்புக்குச் செல்லும் பிரதான வீதி ‘காபர்ட்’ போடப்பட்டு 75 வீத தூரம் புனரமைக்கப்பட்டு விட்டன.

அதேபோன்று வடக்கிற்கு செல்லும் பிரதான வீதிகள் வடக்கின் உள் பிரதேச வீதிகள் அனைத்தும் தற்போது படிப்படியாக புனரமைக்கப்பட்டு வருகின்றன. அதேபோன்று கொழும்பு - கட்டுநாயக்க நெடுஞ்சாலை, கொழும்பு - கண்டி நெடுஞ்சாலை, தெற்கிற்கான அதிவேக நெடுஞ்சாலை என்பனவும் சமகாலத்தில் புனரமைக்கப்பட்டு வருகின்றன.

இத்தகைய அபிவிருத்திகள் நாட்டின் பல பகுதிகளிலும் இடம்பெறுவதானது மக்கள் எதிர்பார்க்கும் யதார்த்தமான மாற்றங்களை நனவாக்க வழிவகுக்கும் என்பது திண்ணம்.