2011-02-04

  நூற்றாண்டு காலமாகப் போராடி வென்றெடுத்த சுதந்திரம்

நூற்றாண்டு காலமாகப் போராடி வென்றெடுத்த சுதந்திரம்

உலகம் முழுவதும் உள்ள மக்கள் தாங்கள் வாழும் சமூகத்தின் ஒரு கூறாக உள்ளனர். அம்மக்கள் ஐக்கியமாக இயங்கினாலன்றி எந்த ஒரு சமூகமும் தனித்து முன்னேற்றமடைய முடியாது என்பது ஏற்றுக்கொள்ளப்பட்ட உண்மை. இந்தக் கொள்கையை எமது தேசிய சுதந்திரப் போராட்ட வீரர்கள் அன்றைய காலத்தில் உணர்ந்து செயல்பட்டிருப்பதை எமது வரலாற்றினூடாக காணக்கூடியதாகவுள்ளது.

சுதந்திரப் போராட்ட காலத்தில் சேர் பொன் இராமநாதன், சேர் பொன் அருணாசலம், ரி. பி. ஜாயா, ராசிக் பரீட், டீ. எஸ். சேனநாயக்கா, எஸ். டபிள்யூ. ஆர். டீ. பண்டாரநாயக்க ஆகியோர் ஒன்றாக இணைந்தே செயற்பட்டுள்ளனர். இதனையே இன்றைய அரசியல், பொருளாதார கலாசார நிலைகள் உணர்த்தி நிற்கின்றன.

எமது இன ஒற்றுமை சுதந்திரப் போராட்டத்தின் முக்கிய விழுமியங்களுள் ஒன்றாகும். இந்த விழுமியங்கள் வளர்ந்து செல்ல வேண்டிய ஒரு கூறாகும். ஆனால் சுதந்திரத்திற்குப் பின்னர் தலைமுறை தலைமுறையாக நாம் காத்து வந்த ஒற்றுமையைப் பேணிப் பாதுகாக்க முடியாமல் போய்விட்டது.

நாம் அந்நியரிடமிருந்து சுதந்திரம் பெற்று 62 ஆண்டுகளாகியுள்ளன. சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்ற தேசிய வீரர்களை எமது இன்றைய இளம் சமுதாயம் நினைவுபடுத்துவது அவசியமாகும். எமது நாட்டின் பெருமைக்குரிய வரலாறு பற்றி நாம் சுதந்திர தினத்திலாவது சற்று நினைத்துப் பார்க்க வேண்டும்.

எமது நாடு பல்வேறு வரலாற்றுப் பெருமைகளைக் கொண்டதாகும். ஆசிய ஜோதியான புத்தபெருமானின் காலடி பட்ட பாக்கியமும் இங்கைக்கு உண்டு. அதேசமயம் பல்வேறு மதங்களையும் எமது நாடு போற்றிப் பாதுகாத்து வந்துள்ளது.

இந்து மதத்தை எடுத்து நோக்கினால் கண்ணகி வழிபாடு பரவிய நாடு இலங்கை ஆகும்.

கண்டி வரலாற்றுப் புகழ்மிக்க எசல பெரகரா இலங்கையில் ஆரம்பிக்கப்பட்ட வரலாற்றையும் கொண்ட பெருமைக்குரியதாகும்.

சோழ மன்னர்கள் இலங்கையை ஆண்ட போது அவர்களுக்கு எதிராகப் போராடி நாட்டை மீட்ட பெருமையும் இந்த நாட்டுக்கு உண்டு.

இலங்கை வளம் மிகுந்த நாடென்பதில் சந்தேகமில்லை. அதனாலேயே வெளிநாட்டார் இங்கு வந்து நமது நாட்டைக் கைப்பற்றினர்.

இலங்கையை அவர்கள் ஆட்சி செய்தது மட்டுமன்றி தேயிலை, இறப்பர், கோப்பி போன்ற பயிர்களையும் பயிரிட்டனர்.

நீண்ட காலமாக விவசாய நாடாக திகழ்ந்த எமது நாட்டில் பெருந்தோட்டத் துறை அறிமுகப்படுத்தப்பட்டது.

இதன்காரணமாக அக்காலத்தில் வேறு நாடுகளிலிருந்து உணவுத் தேவைக்கான பொருட்களை இறக்குமதி செய்யும் நிலைமை ஏற்பட்டது.

இலங்கையில் மட்டுமன்றி ஐரோப்பியர் ஆட்சி செய்த நாடுகளில் எல்லாம் இந்நிலையே ஏற்பட்டது.

1505ம் ஆண்டு கரையோரப் பகுதியை கைப்பற்றிய ஐரோப்பியர்களான போர்த்துக்கேய கத்தோலிக்கர் மதத்தினைப் பரப்பும் பணியிலும் ஈடுபட்டனர். போர்த்துக்கேயரை விரட்டிய ஒல்லாந்தர் புரட்டஸ்தாந்து மதத்தினை பரப்பினர். 1815ல் பிரித்தானியர் மத்திய மலைநாடு முதல் சகல பிரதேசங்களையும் கைப்பற்றி முழு இலங்கையையும் தமதாக்கினர். இவர்கள் 152 வருடங்கள் இல்கையை ஆட்சி செய்தனர். 1948ம் ஆண்டு பெப்ரவரி 4ம் திகதி சுதந்திரம் பெற்ற காலம் வரை 152 வருடங்கள் பிரித்தானியர் ஆட்சி செய்துள்ளனர்.

நான்கு நூற்றாண்டு காலப் பகுதிக்கு மேலாக எமது நாடு அந்நியர் ஆட்சிக்கு உட்பட்டிருந்தது.

இந்த நான்கு நூற்றாண்டுகள் எமது மூதாதையர் சுதந்திரத்துக்காகப் போராடியுள்ளனர். இந்தப் போராட்டத்தில் எமது மூதாதையரது வீரப் பண்புகள் வீரச் செயல்கள் வரலாற்றில் புகழ் வாய்ந்தவையாகும். இந்த வீரர்களை நினைவுகூருவது இன்றியமையாததாகும். அவர்கள் தம்மை அர்ப்பணித்தமையால் நாம் இன்று சுதந்திரமாக வாழ்கின்றோம்.

ஆங்கிலேயரிடமிருந்து நாட்டை மீட்பதற்காக இலங்கையர் அனைவரும் இன, மத, மொழி பேதமின்றி போராடியுள்ளனர். இந்து மதத்தினையும், பெளத்த மதத்தினையும் காக்க இவர்கள் அரும்பாடுபட்டுள்ளனர். ஒன்றாக கைகோர்த்து செயற்பட்டுள்ளனர். இவர்களை நினைவுகூருவதும் எம் அனைவரது கடமையாகும்.

இன்றைய சுதந்திர தினத்தில் தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்கள் அனைவரும் பேதமின்றி இதனை கருத்தில் கொள்வது முக்கியம்.

எமது தாய் நாட்டின் பெருமையை உலகறிய திடசங்கற்பம் பூண வேண்டும்.

கடந்த கால யுத்தத்தினால் ஐக்கியம் பாதிக்கப்பட்டிருந்த போதிலும் தற்போது மக்கள் மத்தியில் நல்லுறவு வலுப்பெற்று வருகின்றது.

யுத்தம் ஓய்ந்த பின்னர் மீண்டும் புரிந்துணர்வு ஏற்பட்டுள்ளது. இந்த ஒற்றுமையினை தொடர்ந்தும் பாதுகாப்பது தமிழ், சிங்கள மொழிகளை பேசும் சகலரதும் கடமையாகும். அப்போதே நாம் உண்மையான சுதந்திரத்தினை அனுபவிக்க முடியும்.