2011-02-04

  அ. இ. ஜம்இய்யத்துல் உலமா சபை வாழ்துகிறது

அ. இ. ஜம்இய்யத்துல் உலமா சபை வாழ்துகிறது

சகல இன மக்களும் மனித நேயமிக்க சமூகங்களாகவும், மனிதத்தையும் மனித உணர்வுகளையும் மதிப்பவர்களாகவும் இந்த 63வது சுதந்திர தினத்தை அடைய வேண்டுமென அகில இலங்கை - ஜம்இய்யத்துல் உலமாவின் தலைவர் அஷ்-ஸைக் எம். ஐ. எம். றிஸ்வி முஃப்தி தமது சுதந்திர தின செய்தியில் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தமதறிக்கையில், தெரிவித்ததாவது, சுமார் 30 ஆண்டு கால தொடரான யுத்தத்தின் பின் நாம் அமைதி பெற்றிருக்கின்றோம். இந்த நிலையைத் தொடர்ந்தும் பாதுகாப்பது இந்நாட்டு மக்களின் பொறுப்பாகும். பல்லின மக்கள் மத்தியிலும்ஐக்கியம் பேணப்பட வேண்டும். மனித உணர்வுகள் மதிக்கப்பட வேண்டும். குறிப்பாக இந்நாட்டு முன்னேற்றத்திற்காகவும், சுதந்திரத்திற்காகவும் உழைத்தவர்கள் இந்துக்கள், பெளத்தர்கள், கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் என வேற்றுமை காட்டவில்லை.

நாம் ஒரே நாட்டைச் சேர்ந்த இலங்கையர் என்றே நோக்கினர். இன மத மொழியால் நாம் உயர்ந்தவர் மற்றவர் தாழ்ந்தவர் என்ற குறுகிய மனப்பான்மையைக் களைந்து எல்லோரும் இந்நாட்டு பிரஜைகள் என்பதை மனதில் நிறுத்துவோம். அவரவர் தாம் சார்ந்த சமூகத்தின் தனித்துவத்துடன் ஒற்றுமையாக வாழ்வதற்கு உறுதி பூண வேண்டும் என இச்சுதந்திர தினத்தில் வேண்டுகோள் விடுக்கின்றேன். எல்லாம் வல்ல அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருள் புரிவானாக எனப் பிரார்த்திக்கின்றேன்.


சர்வதேச இந்து மத பீடம் வாழ்த்து

இலங்கை குடியரசின் 63வது சுதந்திர தினத்துக்கு சர்வதேச இந்து மத பீடத்தின் செயலாளரும் ஸ்ரீவித்யா குருகுல வேதசிவாகம சமஸ்கிருத பாடசாலை ஸ்தாபகரும் ஜனாதிபதியின் இந்துமத அலுவல்கள் விவகார இணைப்பாளருமான பிரம்மஸ்ரீ ராமச்சந்திர குருக்கள் பாபுசர்மா தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

தமிழ், சிங்களம, முஸ்லிம் வேறுபாடின்றி அப்போதைய தலைவர்கள் ஆங்கிலேயர்களுக்கு எதிராக சாத்வீகமாக போராடி பெற்ற சுதந்திரம் என்பதை யாரும் மறுக்க முடியாது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையின் கீழ் 30 வருட கால யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது மிகப் பெரிய வரவேற்புக்குரிய அம்சமாகும்.

மேலும் பெரும்பான்மை, சிறுபான்மை என்ற வேறுபாடு இல்லாமல் ஒரு தாய் மக்கள் என்ற மேல் உணர்வை ஜனாதிபதி அவர்கள் முன் வைத்தது. இலங்கை வாழ் அனைத்து மக்களும் தத்தமது அனைத்து உரிமைகளையும் சுதந்திரமாக அனுபவிக்க வேண்டும் என்பதே அவரது உயரிய எண்ணம் ஆகும்.

ஆசியாவில் ஆச்சரியம் மிக்க நாடாக இலங்கை திருநாடு வளம்பெற வேண்டும் என்ற அவரது உயரிய மஹிந்த சிந்தனைக்கு அமைய அனைவரும் ஒன்றுபட்டு ஜனாதிபதிக்கு பலம் சேர்ப்பதன் மூலம் அவரது சிந்தனை ஈடேற இச்சுதந்திர தினத்தில் நாம் அனைவரும் எமக்கிடையே உள்ள பகைமையை மறந்து ஒன்றுபடுவோமாக என பாபு சர்மா சுதந்திர தின வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளார்.