வரு. 78 இல. 232
ஹிஜ்ரி வருடம் 1431 ஷவ்வால் பிறை 25
விகிர்தி வருடம் புரட்டாதி மாதம் 18ம் திகதி திங்கட்கிழமை

MONDAY, OCTOBER, 04, 2010


உலகுக்கு உன்னத பணி செய்யும் ஓசோன்

உலகுக்கு உன்னத பணி செய்யும் ஓசோன்

சூரிய ஒளிக் கதிர்களில் நம் கண்ணுக்குத் தெரியாத அகச்சிவப்பு கதிர்கள், புற ஊதாக் கதிர்கள் உள்ளன. அகச் சிவப்புக் கதிர்கள் வெப்பத்தை சுமந்து வந்து பூமியை வெப்பமடையச் செய்யும். புற ஊதாக் கதிர்கள் பூமியில் உள்ள மனிதர்களுக்கு மட்டுமல்லாது விலங்குகளுக்கும், தாவரங்களுக்கும் மிகுந்த பாதிப்புக்களை ஏற்படுத்தும்.

இத்தகைய தீமை விளைவிக்கும் சூரிய ஒளிக் கதிர்கள் பூமியை வந்தடையா வண்ணம் பாதுபாப்பதுதான் ஓசோன் படலத்தின் பணி ஆகும்.

பூமியின் கடல் மட்டத்திலிருந்து 15 – 30 கிலோ மீற்றர் உயரத்தில் ஓசோன் வாயுப் படை ஒன்று உள்ளது. சூரியனிலிருந்து பூமியை நோக்கி வரும் ஊதாக் கடந்த கதிர்கள் வளி மண்டலத்திலான ஒட்சிசனைத் தாக்கி ஓசோனை உருவாக்குகின்றன.

இரண்டு அணுக்களைக் கொண்ட ஒட்சிசன் மூலக் கூறுகள் ஊதாக் கடந்த கதிர் வீசலால் தனித்தனி ஒட்சிசன் அணுக்களாக்கப்படுகின்றன.

அந்த அணுக்கள் பின்பு மூன்று அணுக்களைக் கொண்ட ஓசோன்லி3 மூலக் கூறுகளாகப் பிணைகின்றன. ஊதாக் கடந்த கதிர்களால் உருவாக்கப்படும் ஓசோன் படை ஊதாக் கடந்த கதிர்களின் பெரும் பகுதி பூமி மீது விழாது தடுக்கும் திரையாகத் தொழிற்படுகின்றது.

இத்தகைய உன்னத பணி செய்து கொண்டிருக்கும் ஓசோன் திரையில் ஓட்டை விழத் தொடங்கி விட்டது. இது 1980 ஆம் ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் மூலம் தெரியவந்தது. ஓசோன் படை குறைவதற்கு விஞ்ஞானிகள் தயாரித்த சில இரசாயனப் பதார்த்தங்கள் தான் காரணம் என்பது இப்பொழுது நிரூபிக்கப்பட்டு விட்டது.

இந்த இரசாயனப் பதார்த்தங்கள் குளோரோ புளோரோ காபன்கள் (விபிவி) எனப்படுகின்றன. குளிர்சாதனப் பெட்டிகள், காற்றை குளிராக்கும் கருவிகள், விசிறிகள் ஆகியவற்றில் உபயோகிக்கப்படும் குளோரோ புளோரோ காபன்கள் சடத்துவத் தன்மை வாய்ந்தவை. அதாவது வேறு எந்தப் பதார்த்தங்களுடனும் தாக்கத்தில் ஈடுபடாதவை ஆகும்.

பரக்க உபயோகிக்கப்படும் குளோரோ புளோரோ காபன்கள் வளிக்குள் தப்பிச் சென்று கொண்டிருக்கின்றன. உதாரணமாக, போத்தலில் அடைக்கப்பட்ட வாசனை திரவியத்தினை அடைப்பானை அழுத்தித் தனது உடலிலோ, உடையிலோ அடிக்கும் போது போத்தலிற்குள் அடைக்கப்பட்டிருந்த குளோரோ புளோரோ காபன்கள் வளிக்குட் செல்கிறது.

பூமியின் மேற்பரப்பிaற்கு அருகாமையில் இருக்கும் வரை விபிவி க்களால் எவ்வித பிரச்சினையுமில்லை. காற்றுச் சுற்றோட்டத்தின் விளைவாக அவை படிப்படியாக வளிமண்டலத்தின் மேற்பகுதிக்கு மிதந்து செல்ல ஆரம்பித்தன.

விபிவி கள் ஓசோன் படையை அடைந்ததும் பிரச்சினை எழுகின்றது.விபிவி களிலுள்ள குளோரீன் மூலக்கூறுகளுக்கு ஓசோன் மூலக்கூறுகளிற் பெரும் நாட்டமுண்டு.விபிவி மூலக் கூறுகளில் உள்ள குளோரீன், ஓசோன் மூலக் கூறுகளுடன் சேர்ந்து குளோரீன் ஓட்சைட்டுகளை உருவாக்கின்றது.

குளோரீன் ஒட்சைட்டுகளில் உள்ள குளோரீன் தான்பெற்ற ஒட்சிசன் மூலக் கூறுகளை கைவிட்டுவிட்டு வேறு ஓசோன் மூலக் கூறுகளுடன் தாக்கத்தில் ஈடுபட்டு மேலும் குளோரீன் ஓட்சைட்டுகளை உருவாக்கும். எனவே, விபிவி கள் சங்கிலித் தொடர் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. இதைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்காவிடின் ஓசோன் படை முழுவதுமே ஒரு காலத்தில் முற்றாக அழிக்கப்பட்டுவிடும்.

ஓசோன் படை அழிவை நாம் அனுமதித்தால் மனிதனுக்கும், மற்ற உயிரினங்களுக்கும் பெரும் பாதிப்பு ஏற்படும். ஓசோன் படை அழிவதால் பூமியின் மீது விழும் ஊதாக் கடந்த கதிர் வீசலின் அளவு அதிகரிக்கும். ஊதாக் கடந்த கதிர் வீசல் மனிதனைப் பல வகைகளிற் பாதிக்கும். தோல் புற்று நோய், கண் பார்வை பாதிப்பு, தோல் சுருக்கம், உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி குறைவு ஆகியவை அவற்றில் முக்கியமானவை.

ஓசோன் படலம் பாதிக்கப்படுவதனால் உலகம் முழுவதும் வெப்பம் கூடும். இதனால் வளி மண்டலத்தில் மிகுதியான வெப்பம் கூடும். இதன் காரணமாக உலகில் பல்வேறு சுற்றுச் சூழல் பாதிப்புக்கள் ஏற்படுகின்றன.

தாவரங்களின் ஒளித் தொகுப்பு பாதிக்கப்படுவதனால் அவற்றின் உற்பத்தி திறன் குறையும், புற ஊதா எதிர்கள் கடலில் பல மைல்கள் தூரம் ஊடுருவிச் சென்று கடல் வாழ் உயிரினங்களில் ஒரு கல உயிர்களை அழிவடையச் செய்கின்றது.

ஓசோன் படலம் பாதிக்கப்படுவதனால் மண்ணில் நுண்ணுயிர்கள், விலங்கினங்கள் அதிகளவு பாதிக்கப்படுகின்றன.

ஓசோன் படை குறைவதால் ஏற்படக் கூடிய பாரதூரமான விளைவுகள் இன்று உலகுக்கு அச்சுறுத்தலாக உள்ளது. உலகத்தின் இரும்புக்கு ஆதாரமாக விளங்குகின்ற ஓசோன் படலத்தை பாதுகாக்க வேண்டியதன் அவசியம் தொடர்பான விழிப்புணர்வை உலகளாவிய ரீதியில் ஏற்படுத்தி, அப்பாதுகாப்பு தொடர்பான செயல் நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் முகமாக ஐக்கிய நாடுகள் சபையானது ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 16ம்திகதியை சர்வதேச ஓசோன் தினமாக அனுஷ்டிப்பதற்கு பிரகடனம் செய்தது.

ஓசோன் படையைப் பாதுகாப்பதற்கான சமவாயம் ஒன்று தயாரிக்கப்பட்டு 1982ம் ஆண்டிலேயே வியன்னாவில் உலக நாடுகளுக்கு முன்பாகச் சமர்ப்பிக்கப்பட்டது. இது வியன்னா சமவாயம் என்றழைக்கப்படுகின்றது. இதைத் தொடர்ந்து ஓசோன் படையை வெளிதாக்கிய பதார்த்தங்கள் பற்றிய மொன்றியல் தாயேடு 1987 ஆம் ஆண்டு கனடாவின் மொன்றியல் நகரில் கூடிய உலக நாடுகளின் பிரதிநிதிகள், சர்வதேச சமுதாயத்திடம் முன்வைத்தனர்.

1994 ஆம் ஆண்டு டிசெம்பர், 19ம்திகதி நடைபெற்ற ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் சர்வதேச ‘ஓசோன் பாதுகாப்பு’ தொடர்பான தினம் பிரகடனம் செய்யப்பட்டது.

ஓசோன் படையை பாதுகாக்கும் முகமாக 1995 ஆம் ஆண்டு மொன்றியல் உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்ட ஞாபகார்த்த நாளிலேயே இந்த சர்வதேச ஓசோன் பாதுகாப்பு தினம் முதன் முதலாக அனுஷ்டிக்கப்பட்டு வருடா வருடம் செப்டெம்பர் 16ம் திகதி சர்வதேச ‘ஓசோன் பாதுகாப்பு’ தினமாக அனுஷ்டிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

வளியிலுள்ள வாயுக்களை பாதிக்காத விபிவி யின் மாற்றுப் பதார்த்தங்களினை உருவாக்குவதில் தற்சமயம் உலக நாடுகள் முனைப்புக் காட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும். சில மாற்றுப் பதார்த்தங்கள் கண்டுபிடிக்கப்பட்டு தற்சமயம் சில பொருட்களில் பயன்படுத்தப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

நாம் வாழுகின்ற இந்தப் பூமியில் உன்னத பணி செய்யும் ஓசோன் படலத்தினை அழிவிலிருந்து பாதுகாக்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது எம் அனைவரினதும் கடப்பாடாகும்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி


.
 
» »
» »
» »