வரு. 78 இல. 232
ஹிஜ்ரி வருடம் 1431 ஷவ்வால் பிறை 25
விகிர்தி வருடம் புரட்டாதி மாதம் 18ம் திகதி திங்கட்கிழமை

MONDAY, OCTOBER, 04, 2010


வீட்டுப் பணிப் பெண்கள் மீது தொடரும் கொடுஞ் செயல்!

வீட்டுப் பணிப் பெண்கள் மீது தொடரும் கொடுஞ் செயல்!

த்திய கிழக்கில் தொழில் புரிந்த இலங்கையைச் சேர்ந்த மற்றொரு பணிப்பெண் உடலில் அடிகாயங்களுடன் இங்கு வந்து சேர்ந்திருக்கிறார். ஓமானில் உள்ள தனவந்தர் வீடொன்றில் பணிபுரிந்த மாத்தறை மாவட்ட கிராமமொன்றைச் சேர்ந்த இப் பெண்ணுக்கு வயது முப்பத்தெட்டு.

திருமணமாகி மூன்று பிள்ளைகளுக்குத் தாயான இப்பெண் குடும்ப வறுமையைப் போக்கிக் கொள்வதற்காகவும் வீடொன் றைக் கட்டிக் கொள்ளும் நோக்குடனும் ஓமானுக்கு பணிப்பெண்ணாகச் சென்றிருந்தார்.

வெளிநாட்டு வேலைவாய்ப்பைப் பெற்றுக் கொள்வதற்காக இப்பெண் பலரிடமும் கடன்பட்டிருந்தார். மாதாந்தம் இருபத்தையாயிரம் ரூபா சம்பளம் வழங்கப்படுமென வேலைவாய்ப்பு முகவரால் இப்பெண்ணுக்கு உறுதியளிக் கப்பட்டிருந்தது. மனதில் எதிர்காலக் கனவுகளைச் சுமந்தபடி ஓமானுக்குச் சென்றிருந்த பெண்ணுக்கு அங்கு ஏமாற்றமே காத்திருந்தது.

மாதாந்தம் இருபதாயிரம் ரூபா சம்பளமே இப்பெண்ணுக்கு வீட்டு எஜமானரால் வழங்கப்பட்டுள்ளது. சம்பள ஒப்பந்தத்தின் பிரகாரம் மீதி ஐயாயிரம் ரூபாவை வழங்குமாறு இப்பெண் கேட்டதுமே பிரச்சினையும் ஆரம்பமாகியது.

வீட்டு எஜமான் மாத்திரமன்றி எஜமானியும் சேர்ந்து இப்பணிப் பெண்ணைத் துன்புறுத்தியுள்ளனர். தினமும் அடி உதைகளே இப்பெண்ணுக்குக் கிடைத்துள்ளன. அவ்வீட்டில் தாக்குப் பிடிக்க முடியாத நிலையில் இப்பெண் நாடு திரும்பியிருக்கிறார். இவர் தனக்கு நேர்ந்த அநியாயங்களை இங்கு விபரமாக எடுத்துக் கூறியுள்ளார்.

வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்ற இப்பெண் ணின் கையில் பெரும் காயமொன்று காணப்படுகிறது. இந்தக் காயம் குணமடைவதற்கு சில நாட்கள் செல்லு மென வைத்தியர் கூறியிருக்கிறார்.

மத்திய கிழக்கு நாடுகளில் தொழில் புரிகின்ற பணிப்பெண்களில் பலர் எதிர்நோக்குகின்ற துன்பங்களில் இப்பெண்ணின் பரிதாபமும் ஒன்றாகியுள்ளது. இத்தகைய துன்பம் முடிவின்றித் தொடருகின்றது.

இலங்கையைச் சேர்ந்த பணிப்பெண் ஒருவருக்கு உடலெங்கும் ஆணிகள் ஏற்றப்பட்ட கொடுஞ்செயலை ஊடகங்கள் வாயிலாக அண்மையில் நாம் அறிந்தோம். அச்சம்பவத்தின் பரபரப்பு தணிவதற்கிடையில் மற்றொரு பணிப்பெண் உடலில் காயங்களுடன் இலங்கை வந்து சேர்ந்தார். மற்றைய கொடுமை மாத்தறை மாவட்டப் பெண்ணுக்கு நடந்திருக்கிறது.

எமது நாட்டு அப்பாவிப் பெண்களுக்கு மத்திய கிழக்கு நாடுகளில் நடந்து கொண்டிருக்கும் இவ்விதமான கொடுமைகளை நாம் தொடர்ந்தும் அனுமதித்துக் கொண்டிருக்கலாகாது.

இவ்விடயத்தைப் பொறுத்த வரை வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் தொடர்ச்சியாக அறிவுறுத்தல்களை வழங்கி வருகிறது. வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர்கள் விடயத்தில் அவதானமாக இருக்குமாறு பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனினும் போலி முகவர்களின் வலையில் விழுகின்ற பணிப்பெண்களின் எண்ணிக்கையும் குறைந்தபாடாக இல்லை.

இதேவேளை வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையங்களை சோதனையிடும் நடவடிக்கையும் இப்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது. போலி முகவர்களைக் கண்டுபிடிப்பதே இந்நடவடிக்கையின் நோக்கமாகும்.

வெளிநாடுகளுக்கு பணிப்பெண் வேலை வாய்ப்புப் பெற்றுச் செல்வதில் தவறு கிடையாது. ஆனால் தவறான நபர்களின் வலையில் அகப்படாமல் தப்பித்துக் கொள்வதே இங்கு பிரதானம். வசதி குறைந்த குடும்பங் களைச் சேர்ந்த பெண்களே பணிப்பெண் வேலைக்காக வெளிநாடுகளுக்குச் செல்கின்றனர். பொருளாதார நெருக்கடியினால் ஏற்கனவே நொந்து போயிருக்கும் இவர்கள் மற்றொரு துன்பத்தில் வீழ்ந்து விடாமல் அவதானமாக இருப்பது அவசியம்.


ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி


.