வரு. 78 இல. 23

ஹிஜ்ரி வருடம் 1431 ஸபர் பிறை 11
விரோதி வருடம் தை மாதம் 14ம் திகதி புதன்கிழமை

WEDNESDAY, JANUARY 27, 2010

சிறுவர் உரிமை மற்றும் கல்வியின் முக்கியத்துவம் தொடர்பான செயலமர்வு அக்கரைப்பற்று கல்வி வலயத்தில் முன்னெடுப்பு

சிறுவர் உரிமை மற்றும் கல்வியின் முக்கியத்துவம் தொடர்பான செயலமர்வு அக்கரைப்பற்று கல்வி வலயத்தில் முன்னெடுப்பு

இன்று நாட்டில் சிறப்பான கல்வியை மாணவர்களுக்கு வழங்குவதில் ஆசிரியர்களும் அதிபர்களும் அயராது பாடுபட்டுழைக்கின்ற அதேவேளை கல்வியில் சட்டங்களும் உரிமைகளும் எவ்வித தாக்கத்தினை ஏற்படுத்துகிறது என்பதை மாணவர்களுக்கு அறிவுறுத்தும் நோக்குடன் ‘சிறுவர் உரிமைகள் மற்றும் கல்வியின் முக்கியத்துவம்’ பற்றிய செயலமர்வொன்று அண்மையில் அக்கரைப்பற்று கல்வி வலயத்தினால் நடாத்தப்பட்டது.

இருநாட்கள் நடைபெற்ற இச்செயலமர்வானது வலயக் கல்விப் பணிப்பாளர் தலைமையில் வலயப் பாடசாலைகளிலிருந்து தெரிவு செய்யப்பட்ட சுமார் 300க்கும் மேற்பட்ட சாரண மாணவ, மாணவிகள் கலந்துகொண்ட இந்நிகழ்வு அக்கரைப்பற்று தேசிய கல்லூரியில் நடைபெற்றது.

யுனிசெப் நிறுவனத்தின் ஆதரவுடன் நடைபெற்ற இந்நிகழ்வுகளில் மட்டக்களப்பு பிராந்திய யுனிசெப் அதிகாரியான வங்காளதேச நாட்டைச் சேர்ந்த வைசுர் ரகுமானும் சட்டத்தரணி பயாஸ் றசாக்கும் கலந்து சிறப்பித்தனர்.

அங்கு கலந்துகொண்ட சாரண மாணவர்கள் மத்தியில் சிறப்புரையாற்றிய சட்டத்தரணி பயாஸ் றசாக்:-

“சிறுவர்களது உரிமைகள் பற்றியும் பாடசாலை மாணவர்களது கற்றல் நடவடிக்கையில் இவ்வுரிமைகள் எவ்வாறான தாக்கத்தை செலுத்துகிறது” என்பது பற்றிய விளக்கங்களை எடுத்துக் கூறினார்.

 மாணவர்கள் பாடசாலையில் கற்கின்றபோது அவன் ஒரு மாணவனாகவே பார்க்கப்படுகின்றான். நல்ல விடயங்களை சிறப்பாக கற்பதற்கு பாடசாலை ஒரு சிறந்த தளம் என்பதை பல்வேறு உதாரணங்கள் மூலமாக தெளிவுபடுத்தினார்.

சாரணியத்தின் ஊடாக கல்வி

அக்கரைப்பற்று கல்வி வலயமானது கல்விச் செயற்பாடுகளுக்கும் அப்பால் பல்வேறு விதமான கற்றலுடன் தொடர்புபட்ட பலவிடயங்களில் மாணவர்களை தயார்படுத்தி வருகிறது.

அந்த வகையில் சாரணியத்தில் அங்கத்தவர்களாக உள்ள மாணவர்களுக்க சாரணியப் பயிற்சிகளுக்கும் அப்பால் சிறுவர் உரிமைகள் மற்றும் கல்வியின் முக்கியத்துவம் தொடர்பான விடயங்களை முன்னிறுத்தி ஒரு புதிய அனுபவத்தை மாணவர்களுக்கு ஏற்படுத்துவதில் கூட பின்னிற்கவில்லை என்பதை அண்மையில் நடைபெற்ற இருநாள் பாசறை உணர்த்தி நிற்கின்றது.

சாரணியத்தின் மூலம் ஒருவன் நல்ல பலவிடயங்களை கற்றுக்கொள்கிறான். மதம், கலாசாரத்திற்கும் அப்பால் ஒரு புதிய சமூகத்தினை வெளிக்கொணர வைப்பதற்கு தன்னலமற்ற தியாக உணர்வும், மனித கெளரவத்தினை மதிக்கின்ற பண்பினையும் இன்று இச் சாரணிய செயற்பாடுகள் போதித்து நிற்கின்றன. சாரணியத்தின் தந்தை எனப்போற்றப்படும் பேடன் பவலினது மனிதனை மனிதனாக மதிக்கின்ற சாரணியத் தோற்றுவாய் மிகவும் நேசப்பண்புகளை உள்வாங்கியுள்ளது.

கல்வியின் நோக்கங்களில் மிகவும் பிரதானமானவை நாட்டுக்குகந்த சிறந்த நற்பிரஜையை தோற்றுவிப்பதேயாகும். ஆதலால்தான் சாரணியத்தின் அடிப்படைத் தத்துவங்களில் இவை காணப்படுவதும் ஒரு சிறப்பம்சமாக கொள்ளலாம். சமயத்தில் பற்று, நாட்டுப்பற்று உலக சகோதரத்துவம், பிறருக்கு சேவையாற்றல், சாரண விதிகளை மதித்து நடத்தல், சமூக மேம்பாட்டுக்கு உழைத்தல் நாட்டிற்குகந்த நற்பிரஜையாக தன்னை உருவாக்கிக்கொள்ளல் போன்றன சாரண அமைப்பின் அடிப்படை தத்துவங்களாக கொள்ளப்படுகிறது.

மேலும் சிறுவர்களது உரிமைகள்பற்றிய விளக்கங்களும் இங்கு விபரிக்கப்பட்டிருந்தது. அதாவது, சிறுவர் உரிமைகள் பற்றிய ஐக்கிய நாடுகளின் சமவாயம் சர்வதேச ரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்றாகும். எல்லாப் பிள்ளைகளுக்கும் உள்ள உரிமைகளை அது வரையறுத்துள்ளது.

உலகின் அநேகமாக எல்லா நாடுகளும் இதன் அடிப்படையிலேயே ‘பிள்ளைகள் நடாத்தப்படுவர்’ என்பதாக ஏற்றும் கொண்டுள்ளன. இப்படிப்பட்ட உரிமைகள் சமவாயத்தில் உலகிலுள்ள அரசுகள் கைச்சாத்திட்டும் உள்ளன. அவ்வாறான உரிமைகளை மாணவர்கள் அறிந்திருப்பது அவசியமாகும்.

இச் சிறுவர் உரிமைகளாவன பொதுவாக நான்கு வகைக்குள் அடக்கப்படுகிறது. பாதுகாப்பு, அபிவிருத்தியும் வளர்ச்சியும், பங்குபற்றுதல், உயிர் வாழ்தல் ஆகிய நான்கு வகையான நலன்களையும் பிரதானமாகக்கொண்டே செயற்படுத்தப்படுகின்றன. இச்சிறுவர் சாசனத்தின்படி சிறுவர்கள் என்போர் பொதுவாக 18 வயதிற்குக் குறைந்த அனைவரையுமே சிறுவர்கள் என்று ஐக்கிய நாடுகள் சிறுவர் உரிமை சாசனம் எடுத்தியம்புகிறது.

பாடசாலைகளில் இடம்பெறுகின்ற பிரச்சினைகள் பல இன்று நீதிமன்றத்திற்கு வந்துள்ளன. பொதுவாக பாடசாலைகளில் மாணவர்களை நாட்டின் நற்பிரஜைகளை உருவாக்குவதற்காக மாணவர்களின் விழுமிய மேம்பாட்டிற்கும் தலைமைத்துவப் பண்புகளையும் வளர்க்கும் நோக்குடனே பாடங்களையும் இணைப்பாட விதானத்தின் ஊடாக பல்வேறு அறிவுரைகளும் வழங்கப்படுகின்றன.

அதனை சில மாணவர்கள் அலட்சியப்படுத்துகின்ற போதுதான் இவ்வாறான பிரச்சினைகள் எழுகின்றன. மாணவர்களுக்கும் சில கடமைகள் உள்ளன. அதன்படி மாணவர்கள் தங்களுக்காக தியாகம் செய்கின்ற ஆசிரியர்களையும் நன்கு மதித்து பாடங்களை நல்ல முறையில் கற்று ஒழுகுதல் வேண்டும்.

சட்டங்கள் மனிதர்களை சிறப்பான முறையில் வழிநடாத்துவதற்கும் குற்றவாளிகளை தண்டிப்பதற்கும் சமுதாயத்தின் அமைதியையும் ஒழுங்கையும் பேணவும் உதவுகிறது. அவ்வாறான சட்டங்களைப்பற்றிய அறிவு பாடசாலை மாணவர்களும் தெரிந்திருக்க வேண்டிய கட்டாயச் சூழ்நிலை இன்று தோன்றியுள்ளது.

குறிப்பாக சிறுவர்களது உரிமைகளை சிலர் பிழையாக விளங்கியதன் விளைவு பாடசாலையின் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு எவ்விதத்திலும் தண்டனை வழங்குவதிலிருந்து விலகிக் கொள்கிறார்கள். இதனால் ஆசிரியர்க்கும் மாணவருக்கும் இடையிலான இடைவெளி மிக பெரிதாகவும் காணப்படுகிறது. இந்ந நிலையிலிருந்து மாணவர்கள் தங்களுக்கான கடமைகளையும் அறிந்து ஆசிரியர்களை மதிக்கின்ற தன்மை தங்களுக்குள் வளர்க்கப்படல் வேண்டும்.

குறிப்பாக ஒவ்வொரு பாடசாலைகளிலும் மாணவர்களது நலன்கருதி ஒவ்வொரு வகையான ஒழுங்குகள் மேற்கொள்ளப்படுகிறது. அதனூடாக மாணவர்கள் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்பதுடன் பாடசாலையின் சட்ட ஒழுங்குகளை பேணுகின்ற வகையிலும், ஒழுங்குமுறைகள் பண்பாடு, பழக்கவழக்கங்கள் போன்றவைகள் மிகச் சிறப்பாக மேற்கொள்வதற்கும் பாடசாலையில் இவ்வாறான சில நடைமுறை ஏற்பாடுகள் மேற்கொள்ள ப்படுவதன் ஊடாக மாணவர்கள் சீர்பெறுவதற்கு உதவுகின்றன.

கல்வியை வழங்குகின்ற பாடசாலைகள் வெறுமனே கற்பித்தல் மாத்திரம் வழங்குவதில்லை. அத்தோடு சாரணியம், விளையாட்டு தலைமைத்துவம் ஆக்கற் செயற்பாடுகள், சுற்றுலா, போட்டி நிகழ்வுகள் போன்ற பல்வேறு இணைப்பாடவிதானச் செயற்பாடுகளையும் ஒன்று சேர்த்து வழங்குகின்றபோது அம்மாணவன் பாடசாலையைவிட்டு &ரிளியுலகிற்கு செல்கின்றபோது அனைத்து விடயங்களிலும் சீரானமுறையில் செயற்படக்கூடியனவாக தன்னை மாற்றிக்கொள்ளவே பாடசாலையின் செயற்பாடுகள் வழிவகுக்கின்றன என்பதை ஏனோ சில பெற்றோர்கள் ஏற்றுக்கொள்வதில்லை.

பாரியளவிலான ரீதியில் மாணவர்களுக்கு துஷ்பிரயோகங்கள் ஏற்படுகின்றபோது சட்ட நடவடிக் கைகளை மேற்கொள்ள முயற்சிக்கலாம். அதனை விட்டுவிட்டு எடுத்ததெற் கெல்லாம் பொலிஸ், நீதிமன்றம் என்று செல்லுகின்றபோது ஆசிரியர்களும் தங்களால் சரியாக மாணவர்களை ஒழுங்குபடுத்துவது பிரச்சினையாகவே உள்ளது என்பதை ஒவ்வொரு மாணவரும் உணர்ந்து பாடசாலையில் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து கற்றலை கற்று ஒழுகுதல் வேண்டும்.

 

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 

  •