வரு. 78 இல. 23

ஹிஜ்ரி வருடம் 1431 ஸபர் பிறை 11
விரோதி வருடம் தை மாதம் 14ம் திகதி புதன்கிழமை

WEDNESDAY, JANUARY 27, 2010

கத்தியின்றி, ரத்தமின்றி யுத்தமொன்றை அரங்கேற்றிய மகாத்மா காந்தி!

கத்தியின்றி, ரத்தமின்றி யுத்தமொன்றை அரங்கேற்றிய மகாத்மா காந்தி!

தீவிரவாதமும், வன்செயல், மோதல், யுத்தம் என்பவற்றை அடியோடு புறந்தள்ளி அஹிம்சை, கருணை, பாசம், சமாதானம் போன்றவற்றிற்கு முன்னுரிமை நல்கியவர் மகாத்மா காந்தி என்பது நிதர்சனமாகும்.

எனவே, அன்னாரது சாகியம், பெற்றோர், பிறப்பு, குழந்தை மற்றும் இளமைப்பருவங்கள், இங்கிலாந்தின் தலைநகரான லண்டன், தென்னாபிரிக்காவின் டர்பன் போன்ற மாநகரங்களுக்கான அவரது பயணம், பாரிஸ்டர் பட்டம் பெற்றமை, நேட்டால் இந்தியர் காங்கிரஸின் தோற்றம், அஹிம்சைப் போராட்டம், சத்தியாக்கிரகம், சிறை வாசம், வெள்ளையேனே வெளியேறு என்ற கோஷம், புத்தலிபாய், கஸ்தூரிபாய் போன்றவர்கள் காந்திமீது செலுத்திய பாசம் என்பவற்றை விரிவாக ஆராய்வது இங்கு உசிதமாகும்.

அண்ணல் காந்தியடிகள் கத்தியின்றி ரத்தமின்றி யுத்தம் ஒன்றை பாரத தேசத்தில் நடாத்திக் காட்டியவர் என்று கூறினாலும் மிகையாகாது. அகிம்சை மூலம் உலகில் எதையும் சாதிக்கலாம் என்பதை உலகிற்கு உணர்த்திய மகான் என்பது வெள்ளிடைமலை.

காந்தியடிகளின் வம்சத்தினர் பனியா என்ற வைசிய குலத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களது குலத்தொழில் மளிகைக்கடை வியாபாரமாகும்.

இவருடைய தந்தை காபா காந்தி போர்ப்பந்தர் சமஸ்தானத்தில் திவானாகப் பணிபுரிந்தவர் என்று வரலாறு கூறுகின்றது. காபா காந்தியின் நான்காவது மனைவிக்கு காந்தி கடைசி மகனாகப் போர்ப்பந்தர் நகரில் அவதரித்தார்.

இளவயதினிலே அடிமை இருளில் சிக்கித் தவித்த பாரத மக்களை சுதந்திர ஒளியை நோக்கி அழைத்துச் சென்ற வரலாறு உண்மையானது. அவரது பெருமையையும் உழைப்பின் சிறப்பையும், நேர்மையின் உயர்வையும் உலகிற்கு உணர்த்தியவர் மகாத்மா காந்திதான் எனலாம்.

பாரத தேசத்தில் அன்றைய காலகட்டத்தில் நிலவிய ஒற்றுமையின்மையே வெள்ளையர்கள் தமக்கு சாதகமாக்கிக் கொண்டனர். இருப்பினும் இந்திய மண்ணின் மானத்தைக் காப்பதற்கென்று பலர் இருந்தனர். அவர்களில் வீரபாண்டிய கட்டபொம்மன், ஜான்ஸி ராணி, லட்சுமிபாய், ராணி சென்னம்மா முதலியவர்கள் மிகவும் முக்கியமானவர்கள்.

காந்தி அடிகளின் அன்னை புத்தலிபாய் மிகுந்த பக்தி உடையவராக விளங்கினார். காந்தியின் இளமைப் பருவம் போர்ப் பந்தரில் கழிந்தது. அவருக்கு ஏழு வயதாக இருக்கும் போது தந்தை காபா காந்தி பணிக்காக ராஜஸ்தான் செல்ல நேர்ந்தது. இதன் காரணமாக அங்குள்ள தொடக்கப் பள்ளி ஒன்றில் காந்தியடிகள் தமது கற்கை நெறிகளை மேற்கொண்டார்.

பின்னர் உயர் நிலைப் பள்ளியில் படிக்கும் வேளையில் ஒரு சுவாரஸ்யமான சம்பவமொன்று நடைபெற்றது. ஒருநாள் அக்கல்லூரியைக் கண்காணிப்பதற்கென்று கல்வித் துறை உயர் அதிகாரி ஒருவர் விஜயம் செய்தார். அவர் காந்தியின் வகுப்பிற்கு வந்து மாணவர்களிடம் ஐந்து ஆங்கில வார்த்தைகளைக் கூறி அவற்றை எழுத்துப் பிழையின்றி எழுதிக்காட்டும்படி வேண்டினார்.

அவ்வதிகாரி கூறிய வார்த்தைகளில் ஒன்று தேனீர் சுடவைக்கும் கேற்றல் ஆகும். அச்சொல்லை காந்தியடிகள் தவறுதலாக எழுதி விட்டார். இதனை அருகில் நின்ற வகுப்பு ஆசிரியர் கண்ணுற்றதும் மற்ற மாணவனைப் பார்த்து சரியாக பிரதி பண்ணுமாறு இரகசியமாகச் சைகை மூலம் காண்பித்தார்.

ஆனால் காந்தி இதற்கு மறுப்பு தெரிவித்து விட்டார். காந்தி சிரவணபத்ரு, அரிச்சந்திரன் போன்ற நாடகங்களை ரசித்துப் பார்வையிட்டார். ‘ஏன் எல்லோரும் அரிச்சந்திரனைப் போன்று உண்மையாகவும் நேர்மையாகவும் இருக்கக் கூடாது?’ என்று அவர் தனது அபிப்பிராயத்தைக் கூறினார்.

அக்கால கட்டத்தில் பணியா வகுப்பினரிடம் பால்ய திருமணம் பழக்கத்திலிருந்தது. இதனால் காந்தியடிகளுக்கு பதின்மூன்று வயதாகிய வேளை கஸ்தூரி பாய் என்ற சிறுமிக்கு பெற்றோர் கல்யாணம் பண்ணி வைத்தனர். பிற்காலத்தில் அன்னை கஸ்தூரிப் பாய் இந்திய நாட்டு மக்கள் அனைவருக்கும் அன்னையாக விளங்கினார் என்றும் கூறலாம்.

காந்தி வைஷ்ணுவ மதத்தைச் சேர்ந்தவர். இதனால் அடிக்கடி விஷ்ணு கோயிலுக்குச் சென்று வருவார். அவர் போர்ப் பந்தரில் இருந்த சமயம் பர ராமாயண சொற்பொழிவுகளைக் கேட்டறிந்து கொண்டார். பின்னர் ராஜஸ்தானுக்கு வந்ததும் பிற மதத்தவர்களோடு பழகும் வாய்ப்பு ஏற்பட்டது. இதன் மூலம் அனைத்து சமயங்கள் பற்றிய யதார்த்தங்களையும் நன்கு புரிந்து கொண்டார்.

சத்தியமே காந்தியடிகளின் குறிக்கோளாக அமைந்திருந்தது. அத்துடன் அவரது சகல செயற்பாடுகளிலும் அகிம்சையைக் கடைப்பிடித்தார். இதனால் உணவு தவிர்ப்பு போராட்டங்கள், சத்தியாக் கிரகங்கள் போன்றவற்றை அவ்வப்போது மேற்கொள்ளலானார். இவைகள் அனைத்தும் சிறுபிராயத்திலேயே காந்திக்கு தன்னிச்சையாக ஏற்பட்டதினால் சத்திய சோதனைகள் பலவற்றிற்கு முகம் கொடுத்தபடியே தனது பாடசாலைக் கல்வியைத் தொடர்ந்தார்.

ஆயிரத்து எண்ணுற்று எண்பத்தேழாம் ஆண்டு பள்ளி இறுதி வகுப்பில் தேர்ச்சி பெற்றார். அதன் பின்னர் பாரிஸ்டர் பட்டம் பெறும் நோக்கில் கப்பல் மூலம் லண்டன் பயணிக்க வேண்டிய ஒழுங்குகளை மேற்கொண்டார். மது, மாமிசம், மாதர் இன்பம் இம்மூன்றையும் நாடுவதில்லை என்று புத்தரி பாயிடம் சத்தியம் செய்து கொடுத்து விட்டு இங்கிலாந்துக்குப் புறப்பட்டார். கப்பலில் பயணிக்கும் வேளையிலேயே அவருக்கு மாமிச உணவு பரிமாறப்பட்டது. அன்னைக்கு கொடுத்த சத்திய வாக்கிற்கு அமைவாக அவைகளை உண்ணாமல் தவிர்த்துக் கொண்டார்.

காந்தியடிகளுக்கு பாரிஸ்டர் பட்டம் மிக இலகுவாக கிடைத்தது. இங்கிலாந்திலுள்ள சட்டக் கல்லூரியின் நிபந்தனைப்படி ஒரு மாணவன் பாரிஸ்டர் ஆக வேண்டுமானால் அவன் இரண்டு வகையான நிலைமைக்கு ஆளாக வேண்டும். ஒன்று பரீட்சையில் தேறுவது, மற்றொன்று மாணவர்களும் சட்ட விரிவுரையாளர்களும் ஒன்றிணைந்து உணவருந்தும் விருந்திற்குச் செல்ல வேண்டும். விருந்திற்கு சமுகமளிப்பது கல்லூரி நிர்வாகத்தினரினால் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.

மூன்று ஆண்டுகள் சட்டம் பயிலும் வேளையில சுமார் முண்ணூறு விருந்துகள் நடைபெறும். அந்நேரம் விருந்துக் கட்டணமாக மாணவர்களிடம் இரண்டு அல்லது மூன்று ரூபாய்களே அறவிடப்படும். அதிர்ஷ்டவசமாக விருந்தில் சைவ உணவு வகைகளும் பரிமாறப்பட்டதினால் காந்தி தப்பித்துக் கொண்டார்.

பகிடிவதை என்ற போர்வையில் சில மாணவர்களினால் காந்திக்கு அசைவ உணவு புசிக்கும்படி வற்புறுத்தியும் அவர் தன்னுடைய சமயோசித புத்தியைப் பயன்படுத்தி புலால் உண்ணாமல் வெளியேறினார். விருந்தில் பரிமாறப்பட்ட மதுப் போத்தல்கள் அனைத்தையும் காந்தி தனது தோழர்களுக்கு கொடுத்தார் என்றும் அறிய முடிகின்றது.

காந்தியடிகளின் நன்முயற்சியினால் ஆயிரத்து எண்ணூற்று தொண்ணூற்று ஓராம் ஆண்டு ஜுன் மாதம் பத்தாம் திகதி பாரிஸ்டர் ஆனார். பதினோராம் திகதி உயர் நீதிமன்ற நீதியரசர் முன் வழக்கறிஞராக சத்தியப் பிரமாணம் செய்து அடுத்தநாள் மீண்டும் கப்பல் மூலம் தாய் நாட்டிற்குப் புறப்பட்டார்.பாரிஸ்டர் பட்டம் பெற்ற காந்தியடிகள் மும்பாய் துறை முகத்திற்கு வந்த சேர்ந்தபோது அவரது சகோதரரும் டாக்டர் மேத்தாவு வரவேற்க காத்திருந்தனர்.

காந்தி இங்கிலாந்தில் சட்டம் பயிலும் வேளையில் தாய் புத்தலிபாய் இறந்த செய்தியை அறிந்து மிகவும் துயடைந்தார். தாயிடம் கூறிய மூன்று விரதங்களையும் சிறிதும் தவறாமல் கடைப்பிடித்து வந்திருந்தும் அதை அன்னைக்கு தெரிவிக்க இயலாமல் போய்விட்டதே என்று பெரிதும் வேதனைப் பட்டார்.

காந்தியடிகள் தம் வழக்கறிஞர் தொழிலை மும்பாயில் ஆரம்பித்தார். வாடகை வீடொன்றை எடுத்து அங்கு பாரிஸ்டர் என்ற விளம்பரப் பலகையையும் தொங்க விட்டார். வழக்குகள் அவருக்கு அதிகம் வந்துசேரவில்லை. ஏலவே ஓய்வுநேரத்தில் இந்தியச் சட்டங்களைப் படித்து வந்தார்.

நீண்ட நாட்களின் பின் காந்தியடிகளிடம் மமிபாய் என்ற பெண்ணுயை வழக்கு வந்து சேர்ந்தது. அந்த வழக்கை காந்தியிடம் கொண்டு வந்த தரகன் தரகுக் கூலி காந்தியிடம் வசூலிக்க பெருமுயற்சி எடுத்தும்காந்தி தரகுப் பணம் கொடுக்க முடியாது என்று விடாபிடியாக கூறி விட்டார்.

மமிபாயின் வழக்கு மிகவும் சுலபமானது என்பதினால் ஒரே நாளில் முடித்துக் கொடுக்க காந்தி முப்பது ரூபா மட்டுமே செலுத்தும்படி கேட்டுக் கொண்டார். காந்தியடிகள் முதல் வழக்கில் தோல்வியைச் சந்தித்தார். ஆகவே இனிமேல் நன்றாக வாதிடுகிற தைரியம் வருகிற வரை நீதிமன்றுக்குள் நுழைவதில்ல என்று தீர்மானித்தார். பின்னர் பத்திரிகையில் வேலைவாய்ப்பு விளம்பரங்களைப் பார்க்கத் தொடங்கினார். ஓர் ஆங்கில ஆசிரியர் தேவை என்ற விளம்பரத்திற்கு விண்ணப்பித்து விட்டு அக்கல்லூரி நிறுவனத்திற்கு நேர்முகப் பரீட்சைக்குச் சென்றார்.

காந்தியடிகள் பி.ஏ. பட்டம் பெறாததினால் அந்த வேலையை அவருக்குக் கொடுக்க முடியாது என்று தலைமை நிர்வாகி காந்தியிடம் நேரடியாகவே கூறிவிட்டார். காந்தியடிகள் பாரிஸ்டர் பட்டம் பெற்றிருந்தும் கூட அந்த வேலையை பி.ஏ. பட்டம் பெறாததால் கிடைக்காமல் போய்விட்டது. இதனை எண்ணி காந்தி மிகவும் மனம் நொந்து கொண்டார். இது அவரது இரண்டாவது தோல்வி ஆகும்.

தோல்வியே வெற்றியின் முதல் படி என்ற கூற்று காந்தியடிகள் விடயத்தில் மெய்த்து விட்டது எனலாம். இத்தோல்விகளைச் சந்திக்காமல் விட்டிருந்தால் பாரத தாய் பெற்ற தவமகனாக மகாத்மாவாக மாபெரும் தலைவராக உருவாகும் வாய்ப்பு இல்லாமல் போயிருக்கும் தானே. சுருங்கச் சொல்வதனால் அவர் முதல் வழக்கில்பெற்ற தோல்வி இந்தியப் பெருமக்களின் மாபெரும் வெற்றியாக அமைந்தது என்பது கண்கூடு.

காந்தியடிகளின் மும்பாய் வாழ்க்கையில், பல துன்ப துயரங்களைச் சந்திக்க நேர்ந்தது. இதனால் திரும்பவும் ராஜ் கோட்டையைச் சென்றடைந்தார். அவ்வேளையில் சமஸ்தானங்களிலுள்ள வெள்ளையர்கள் மிகவும் அகம்பாவமாக நடந்து கொள்ளும் விபரத்தையும் அவர் அறிந்து கொண்டார்.

இந்நிலையில் தென் ஆபிரிக்காவில் தொழில் நடாத்திவரும் தாத அப்துல்லா அன் கம்பனியார் அந்நாட்டில் சுமார் நாற்பது ஆயிரம் பவுண் நஷ்டஈடுகோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் வாதாட காந்திக்கு அழைப்பு விடுத்தனர்.

இதனால் காந்தியடிகள் தென் ஆபிரிக்காவை நோக்கி கப்பலில் புறப்பட்டார்.

அங்கு தென் ஆபிரிக்கா நகரமான நேட்டாலை அடைந்தார். காந்தியடிகளை அப்துல்லா சேத் டர்பன் நீதிமன்றத்திற்கு அழைத்துச் சென்றார். காந்தி இந்திய முறைப்படி தலைப் பாகை அணிந்திருந்தார். அதனை உற்று நோக்கிய நீதிபதி தலைப்பாகையை எடுத்துவிடும்படி உத்தரவு பிறப்பித்தார். இதனை மறுதலித்த காந்தி நீதிமன்றை விட்டு உடன் வெளியேறினார்.

தென் ஆபிரிக்காவில் வசிக்கின்ற இந்தியர்கள் மிகவும் கேவலமாக நடாத்தப்படுவதாகவும் அவர்களை கூலிகளென்றே! அழைப்பதாகவும் சேக் அப்துல்லாவிடமிருந்து அறிந்து கொண்டார். தாதா அப்துல்லா கம்பனியாரின் வழக்கு பிரிட்டோரியாவில் நடைபெற்றது. அந்த நகருக்கு செல்லும் வேளையில் காந்தியடிகள் நிறவெறியர்களின் தாக்குதலுக்குள்ளானார். பல கொடுமைகளை அனுபவித்த

பின் பிரிட்டோரியா சென்றடைந்தார். அந்நகரத்தில் காந்தியடிகள் ஓர் ஆண்டு வரை தங்கினார். அப்பொழுது நிற வெறியின் தாக்கத்தினை நன்கு அறிந்து கொண்டார். தாதா அப்துல்லா கம்பனி வழக்கில் பிரதிவாதியாக விளங்கியவர் தாயேப் சேத் என்பவராவார்.

அவர் அப்துல்லாவிற்கு நெருங்கிய உறவினர். அவர்கள் இருவருக்கிடையே சமாதானப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட காந்தியடிகள் வழக்கை வாபஸ் பெற வைத்ததுடன் சமரசத்திற்கு இருவரையும் வரவைத்தார். இதனை அறிந்த பிரிட்டோரிய நகர வாசிகள் வியப்படைந்தார்கள்.

அப்துல்லா சேத் காந்தியடிகளுக்கு பிரிவு உபசாரம் வைத்து வழி அனுப்பி வைத்தார். தாயகம் திரும்புவதற்கு முன்னரே தென்னாபிரிக்காவில் நேட்டால் காங்கிரஸை காந்தி ஸ்தாபித்தார். இதனால் வெள்ளையர்கள் கிலிகொள்ளலானார்கள்.

தாயகம் திரும்பிய காந்தியடிகள் அமதாபாத் நகரில் சத்தியாக்கிரக ஆசிரமம் ஒன்றை நிறுவினார். இங்கு அகிம்சை, சத்தியம், பிரம்மச்சாரியம், நாவடக்கம் அஞ்சாமை, சுதேசியம், தீண்டாமை ஒழிப்பு, உடலுழைப்பு, சர்வ சமய சமரசம் ஆகிய விரதங்கள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.

அமிர்தசரசில் உள்ள ஜாலியன் வாலாபாக்கில் மக்கள் படுகொலை செய்யப்பட்டார்கள், சவுக்கால் அடிக்கப்பட்டார்கள், மக்களை வீதிகளில் தவழ்ந்து செல்லுமாறு உத்தரவிட்டனர். இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு காந்தியடிகள் இந்திய சுதந்திரப் போராட்டத்தில் சுதந்திர தியாகிகளுடன் ஒன்றிணைந்து முழுமூச்சுடன் கலந்து கொண்டார்.

வெள்ளையனே வெளியேறு என்று கோஷமிட்டபடி பல்வேறு சுதந்திரப் போராட்டத்தில் கலந்து கொண்டதற்காக கைது செய்யப்பட்டார். வன்முறைகள் அற்ற சாத்வீக போராட்டம் என்பதினால் காந்தியடிகளின் செயற்பாடு வெள்ளையருக்கு தலைவலியைக் கொடுத்தது.

வெள்ளையர் ஆட்சியை எதிர்த்து அவர் நடத்திய தண்டி யாத்திரையும் வகுப்பு கலவரங்களை எதிர்த்து நடாத்திய நவகாளி போன்ற யாத்திரைகளும் உகலப் புகழ் பெற்றவையாகும் சத்தியத்தை நிலைநாட்டுவதற்காக அகிம்மை வழி நின்று காந்தியடிகள் போராடி பாரதத்திற்கு சுதந்திரத்தையும் பெற்றுக் கொடுத்தார்.

வகுப்புவாத வெறியை ஒழிக்க போராடிய அண்ணல் காந்தியடிகள் கோட்ஸே என்றவனின் துப்பாக்கிக்கு இரையாகினார்.

பாரத மாதா கண்ணீர் சிந்த மகாத்மா காந்தியின் வெற்றுடல் அக்கினியில் சங்கமமாகிறது.

 

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 

  •