வரு. 77 இல. 238

ஹிஜ்ரி வருடம் 1430 ஷவ்வால் பிறை 17
விரோதி வருடம் புரட்டாதி மாதம் 21ம் திகதி புதன்கிழமை

WEDNESDAY, OCTOBER 07, 2009

பற்பல நோய்களுக்கு மருந்தாகும் காளான்

பற்பல நோய்களுக்கு மருந்தாகும் காளான்

தாவரங்களின் பரிணாம வளர்ச்சியில் ஆரம்ப காலத்தில் தோன்றி விருத்தி அடையாத தாவரம் பூஞ்சணம், இவை தமது இனப் பெருக்கத்திற்கு தேவையான வித்துக்களை பூக்கள் போன்ற வடிவில் உற்பத்தி செய்துகொள்கின்றன. இவற்றை காளான் என்கின்றனர்.

அண்மைக்காலத்தில் இருந்து காளானை உணவில் சேர்த்துக் கொள்வதில் எமது மக்களிடையே ஆர்வம் அதிகரித்துள்ளது. தமது தேவைக்கும், வருமானம் பெறவும் வீடுகளில் காளான் செய்கை பண்ணப்படுகின்றது. இது பெரிய அளவில் செய்யப்படாவிடினும் இலங்கையில் சிறுகைத்தொழிலாக உள்ளது.

பண்டைய காலங்களில் சீனா, ஜப்பான் போன்ற நாடுகளில் அரச வம்சத்தினர் தமது அழகை மெருகூட்டுவதற்காக இக்காளானைத் தினமும் தங்கள் உணவில் சேர்த்து வந்தனர். காலப்போக்கில் சாதாரண மக்களும் மருத்துவ குணங்களை அறிந்து தமது உணவில் காளானைச் சேர்த்துக்கொள்ளப் பழகிக்கொண்டனர்.

100 கிராம் காளானிலுள்ள போசணைச் சத்துக்கள்

1. நீர்- 91 கிராம் 6. இரும்பு- 1 மில்லிகிராம்

2. சக்தி- 13 கிலோகலோரி 7. தயமின்- 120 மைக்ரோகிராம்

3. புரதம்- 2.5 கிராம் 8. ரைபோபிளேவின்- 500 மைக்ரோகிராம்.

4. கொழுப்பு- 0.3 கிராம் 9. நயாசின்- 5.8 மில்லிகிராம்

5. கல்சியம்- 20 மில்லி கிராம் 10. விற்றமின் சி- 3. மில்லிகிராம்.

மற்றும் பல்வேறு விற்றமின்கள், கனியுப்புகள் அடங்கியுள்ளன.

நாளாந்தம் எமக்குத் தேவைப்படும் புரதத்தைக் காளான் மாத்திரம் பூர்த்தி செய்யாது. ஆனால் இறைச்சி, மீன், பால், பட்டர் போன்ற பல்வேறு விலங்குணவுகளில் காணப்படும் புரதத்தைப் போன்று காளான் புரதமும் தரத்தில் சிறந்து விளங்குகின்றது.

எனவே, தானிய பொருட்களுக்குப் பதிலாகப் காளானையும் உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் உடலுக்குத் தேவையான தரமான புரத அளவைப் பெற முடியும்.

காளானின் மருத்துவ குணங்கள்

* நீண்ட நாட்களாகக் குணமாகாத காயங்களுக்கு உடனடி நிவாரணமாக அமைகின்றது.

* குருதியழுத்த நோயைக் கட்டுப்படுத்துகின்றது/ பூரண குணமாக்குகின்றது.

* பெண்களின் மார்புப் புற்றுநோயைக் கட்டுப்படுத்துகின்றது.

* கருப்பையில் காணப்படுகின்ற மலட்டுத்தன்மையை நீக்குவதுடன் கருப்பை தொடர்பான நோய்களையும் குணமாக்குகின்றது.

* இன்னும் பற்பல நோய்களுக்கு அதிசய மருந்தாக அமைகின்றது.

காளான் செய்கைக்கு சிறிதளவு இடம் போதுமானதாகும். மரத்தூள், தவிடு போன்ற இலகுவாகக் கிடைக்கக்கூடிய மூலப் பொருட்களைப் பயன்படுத்த முடியும்.

இதற்குச் சிறிதளவு மூலதனம் போதுமானதாகும். இதைவிட, தேவையான வேறு உபகரணங்களை இலகுவாகப் பெற்றுக்கொள்ள முடியும்.

அத்தோடு குறைந்த காலத்தில் கூடிய வருமானம் பெறவும் முடியும். காளானில் பல வகைகள் உள்ள போதிலும் இலங்கையில் ஒயிஸ்டர் என்ற காளானையே பெரும்பாலும் செய்கை பண்ணுகின்றனர்.

இலங்கைச் சந்தையை பொறுத்தவரை நூறு விதமான கேள்வி இருந்த போதிலும் 5% க்குக் குறைவான நிரம்பலே காணப்படுகிறது.

ஒயிஸ்டர் காளான் உற்பத்தியைப் பொறுத்தவரையில் அதிகமான விளைச்சலைப் பெற்றுக்கொள்ள மலைநாட்டுப் பிரதேசமே சிறந்த காலநிலையைக் கொண்டுள்ளது. இந்த வியாபாரம் மூலம் அநேகமான இளைஞர், யுவதிகளுக்குத் தொழில் வாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்கலாம்.

இக்காளானிலிருந்து காளான் சூப், காளான் கட்லட், காளான் சம்பல், காளான் மோஜு, காளான் சான்ட்விச் மற்றும் பல சுவையான உணவு வகைகளைத் தயாரிக்கலாம். இவ்வியாபாரத்தை விரிவாக்கிக்கொண்டு செல்வதற்குப் போதுமானளவு கட்டட வசதி மற்றும் உபகரண வசதி கிடைக்குமாயின் ஏற்றுமதியளவில் கொண்டு செல்லலாம்.

 

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 

  •