புத் 66 இல. 01

விஜய வருடம் மார்கழி மாதம் 21ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1435 ர.அவ்வல் பிறை 03

SUNDAY JANUARY 05 2014

 

 

மலையக மக்களைச் சார்ந்த தரவுத்தளமொன்று அமைச்சு மட்டத்தில் நிறுவப்பட வேண்டும்

மலையக மக்களைச் சார்ந்த தரவுத்தளமொன்று அமைச்சு மட்டத்தில் நிறுவப்பட வேண்டும்

இந்த மக்களின் அடிப்படை பிரச்சினை கள் இன்னும் முழுமையாக மேற் கொள்ளப்படவில்லை. சமத்துவம் எனும் போது உள்ளக சமத்துவமும் முக்கியமான வொன்று. இந்த இரண்டிற்கும் இடைப்பட்ட நிலையில் சப்ரகமுவ மாகாணம் விளங் குகின்றது.

பத்தாயிரமாண்டு அபிவிருத்தி குறிக் கோள்கள். 2015ம் ஆண்டில் முடிவடைந்த நிலையில், தோட்ட சமூக அபிவிருத்தி திட்டம் 2009-2015 நிறைவேற்றப்படாமல் மூடிவைக்கப்பட்ட நிலையில், இந்த மக்க ளின் சமத்துவ அபிவிருத்தி 2015ற்கு பின்னர் எத்தகையதாக இருக்கும் என்று கேள்விக்கு விடை காண வேண்டியுள்ளது.

தோட்டப்புற பாடசாலைகள், தோட்ட சுகாதார, தோட்ட வீடமைப்பு, தோட்டப்புற பாதைகள், தோட்ட நீர் விநியோகம், இப்படி தொடர்புடைய அமைச்சுக்களில் நிதி ஒதுக்குகள் குறித்து ஒரு வெளிப்படைத் தன்மை காணப்பட வேண்டும்.

அரசாங்கம் பல்வேறு அபிவிருத்தி முனைப்புகளை முன்னெடுத்து வருகின்றது. இவற்றில் திவிநெகும, மற்றும் கமநெகும போன்றவை அடிக்கடி குறிப்பிடப்படு கின்றன. மாகாண மட்டத்தில் செயற்படுகின்ற அபிவிருத்தி முன்னெடுப்புகளும் எந்தள விற்கு தோட்டப்புறங்களுக்கு சென்றடை கின்றன என்பவை அறியப்பட வேண்டி யவையாகும். இந்த முனைப்புகள் குறித்து மக்கள் பிரநிதிகள், குறித்த இடங்களில் அழுத்தம் கொடுக்க வேண்டும். இந்த செயற்பாடுகளில் சிவில் சமூகம், சமூகம் சார்ந்த அமைப்புகள், அக்கறை செலுத்த வேண்டும். அது மக்கள் பிரதிநிதிகளுக்கு வலுவூட்டுவதாக அமையும்.

அரசசார்பற்ற நிறுவனங்கள் அரசாங்கம் செய்யும் விடயங்களையே செய்ய முனையாமல், மேலதிக செயற்பாடுகளை மேற்கொள்ளலாம். இதில் சமூகத்தினர் தனியார் துறை, சமூகம் சார்ந்த அமைப் புக்கள் தொழிற்சங்கங்கள் என்பவை அபிவிருத்தி சம்பந்தமாக கூடிய அக்கறை செலுத்த வேண்டும். தனியார் துறை எனும் போது பெருந்தோட்ட கம்பனிகள் இன்று நிறுவன சமூக பொறுப்பு கொண்டவையாக இருக்க வேண்டுமென எதிர்பார்க்கப்படு கின்றன. இதில் நிச்சயம், அபிவிருத்தி அம்சம் கலந்துள்ளது. பொருளாதார ரீதியாக தேசிய மட்டத்தில் தேயிலையின் பங்களிப்பு குறைந்து செல்கின்ற அதேவேளை தேசிய உற்பத்தி, அந்நிய செலாவணி சம்பாதிப்பு என்ற வகையில் தேயிலையின் முக்கியத்துவம் குறைந்து செல்கின்றது. தேயிலையின் ஏற்றுமதி விலைகளை தொடர்புபடுத்தியதாக, தோட்டத்தொழிலாளர்களின் சம்பளம் அமைந்திருப்பதால் குறைவான விலை குறைவான கூலி என்ற வகையில் தோட்டத்தொழிலை மாத்திரம் தமது வாழ்வாதாரத்திற்கு தங்கியிருக்க முடியாத நிலை தோன்றியுள்ளது. உயர்கல்வி தோட்டத்தொழிலுக்கு மரபுரீதியாக இருந்த வந்த கூலி என்ற இழிவான சமூக அடை யாளம் என்பவை காரணமாக கணிசமானோர் க.பொ.த சாதாரண தரத்துடன் வேறு திற னற்ற தொழில்களைத் தேடி தோட்டப்புறத் திலிருந்து அகன்று செல்கின்றனர். தோட்டத் திற்குள்ளே, தோட்டத்தொழிலில் ஈடுபடாது வாழ்வோர் எண்ணிக்கை 30 சதவீதமாக அமைந்துள்ளதாக சில கணிப்பீடுகள் சுட்டிக்காட்டுகின்றன.

இவர்களை முன்னர் போல, தோட்டங் களிலிருந்து அகற்றிவிட முடியாது. தோட்டக் கம்பனிகளில் தொழிலாளர் பற்றாக்குறை ஒரு அபாயமாக கருதப்படுகின்றது. உழைப் பினை பதிலீடு செய்கின்ற தொழிநுட்பங்கள் குறித்து இப்போது அதிகம் அக்கறை செலுத்தப்படுகின்றது. குறைந்த உழைப்பில் உயரிய உற்பத்தியை அடைவதையே கம்பனிகள் இலக்காக கொண்டுள்ளன. இவை தோட்டங்களை சிறுபகுதிகளாக்கி வெளியாருக்கு கையளித்தல் முறைக்கு இட்டுச்செல்லும் நிலை தள்ளப்படுவதை காணக்கூடியதாக உள்ளது.

சமூக ரீதியாக முழுக்கமுழுக்க தொழி லாளர் குடும்பங்களாக இருந்த நிலைமாறி, தொழிலாளர் அல்லாதோரை கொண்ட சமூகமாக, மலையக சமூகம் இன்று மாறிவருகின்றது. இந்த சமூகநிலை மாற்றம் அதிகரித்து செல்லும் போக்கு அவதானிக்க கூடியதாக உள்ளது. இதுவரை தோட்ட நிர்வாகத்தில் தங்கியிருந்த நிலைமாறி, பிரதேசசபை, போன்ற அரசாங்க நிறுவனங் களில் தங்களின் தேவைகளை நிறை வேற்றிக்கொள்ளும் போக்கே எதிர்காலத்தில் காணப்படலாம்.

அந்தவகையில் அரசியல் ஜனநாயக முறைமையில் அதிக ஈடுபாடு காட்டக்கூடிய சூழ்நிலை உருவாகலாம். அதனுடைய பிரதிபலிப்புகள், மாகாண தேசிய மாவட் டங்களில் புதிய அரசியல் தலைமைகள் - கீழிலிருந்து உருவாகக்கூடிய சாத்தியங்கள் நிலவுகின்றன. இந்த போக்கு மக்களின் அபிவிருத்தி தேவைகளை அர்த்தமுள்ள வகையில் வெளிப்படுத்துவதாக அமையும்.

மலையக மக்களை சார்ந்த அபிவிருத்தி நடவடிக்கைகள் குறித்து ஒரு தரவு தளம் இல்லாதிருப்பதாகும். அமைச்சு மட்டத்தில் இப்படியொன்று அமைக்கப்பட வேண்டு மென 10 ஆண்டு திட்டம் நடைமுறைப் படுத்திய போது முன்மொழிவு செய்யப்பட்டது.

நாம், முன்னர் குறிப்பிட்டது போல, பல்வேறு அரச நிறுவனங்கள், அரசசார்பற்ற நிறுவனங்கள் பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுத்து வருகின்றன. இவை பற்றிய தரவுகள், மற்றும் தகவல்கள் ஓரிடத்தில் கிடைப்பதாயில்லை. இது ஒரு அமைச்சு மட்டத்திலே நிறுவப்படுவது பொறுத்தமான ஒன்று. நுவரெலியா மாவட்டத்தைப் பொறுத்தவரை கல்வித்துறை சம்பந்தமான சீடா நிறுவனத்தின் ஊடாக தரவுத்தளம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத் தக்கது. மலையகம் முழுவதையும் உள்ளடக்கி, அனைத்து துறைகளுக்குமான கல்வி- சுகாதாரம், வீடமைப்பு, பாதைகள் மற்றும் பல்கலைக்கழகம் செல்வோர், வேலை வாய்ப்பற்றோர் போன்ற விடயங்களுக்கென தரவுத்தளம் ஒன்று அவசியமாகும்.

மலையக மக்கள் சமத்துவ அபிவிருத்தியை நோக்கி, எத்தகைய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்? அபிவிருத்தி குறித்து நோபல் பரிசு பெற்ற இந்திய பொருளியல் அறிஞர் அமாத்தய சென் அவர்களின் கூற்றொன்றை இச் சந்தர்ப்பத்தில் குறிப்பிடு வது பொருத்தமானது என நினைக்கிறேன். “ஒரு தனிமனிதன் எத்தகைய அளவு உரித்துகளையும், இயலுமைகளையும் கொண்டிருக்கிறானோ அந்த அளவிற்கே அவன் அபிவிருத்தியை அடைந்து கொள்ள முடியும்” என்ற கருத்தை இச்சமூகத்திற்கும் பொருந்திப்பார்க்க முடியும். இங்கு சுட்டிக் காட்டப்பட்ட வரலாற்று அனுபவத்திலும் இந்த சமூகம் உரித்துக்களின் தொகுதிகளை ஏனைய சமூகங்களோடு ஒப்பிடுகையில் காலங்கடந்தே பெற்று கொண்டது. இன்னும், இந்த உரித்துக்களின் தொகுதி பெருப்பிக் கப்பட வேண்டும். இதை முழுமையாக அனுபவிக்கவேண்டுமெனில் அதற்கான இயலுமையை இந்த சமூகம் பெற்றிருக்க வேண்டும். இயலுமை குறைவே இந்த சமூகத்திற்குரிய மிகப்பெரும் பலவீனமாகும். இதுவும் வரலாற்று நிகழ்வுகளின் விளை வுதான். இந்த இயலுமைகளின் அபிவிருத்தி மனிதவள மேம்பாட்டில் தங்கியுள்ளது கல்வி திறன் பயிற்சி என்பவை தான் இவற்றை கொண்டு வர முடியும். இத்தகைய சமூக சூழ்நிலையில் நேரடியாக நடவடிக்கைகள் அல்லது நேர்கணிய பாரபட்ச ஏற்பாடுகள் இந்திய, மலேசியா போன்ற நாடு களின் யாப்புகளில் காணப்படுகின்றன. இலங்கை யில் இத்தகைய இடைவெளிகள் காணப் பட்டபோது அவற்றை நீக்க நேர்கணிய பாரபட்ச நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டுள்ளன. பல்கலைக்கழக அனுமதியில் இன மற்றும் பிராந்திய தரப்படுத்தல், இனத்துவ ரீதியான ஆட்சேர்ப்பு என்பன சில உதாரணங்களை குறிப்பிடலாம்.

ஒரே மக்கள், ஒரே நாடு என்ற கோட்பாடு அர்த்தமுள்ளதாக இருக்கவேண்டுமெனில் ஒரே மக்கள் என்ற தொகுதிக்குள் அடங்குகின்ற இனக்குழுக்கள் சமத்துவ நிலையை அனுபவிக்க வேண்டும். இங்கு இரண்டு மேற்கோள்களை பொருத்தம் கருதி குறிப்பிடலாம். ஒன்று இந்திய பிரதம நீதிபதி ஏ. என். ரே அவர்களின் கூற்று, சமத்துவம் அற்றவர்களுக்கு, சமத்துவமான சந்தர்ப்பங்களை வழங்குதல் சமத்துவ மின்மையை தீவிரப்படுத்தும் என்பதாகும் மற்றது இந்திய யாப்பை உருவாக்கிய அம்பேத்காரின் கூற்று, நாம் அரசியலில சமத்துவம் கொண்டுள்ளோம். ஆனால் சமூக, பொருளாதார வாழ்வில் சமத்துவமின் மையை காண்கின்றோம். கூடிய விரைவில் இம்முரண்பாட்டினை நீக்க வேண்டும். இல்லையெனில் சமத்துவமின்னையால் பாதிக்கப்பட்டவர்கள் கடுமையாக உழைத்து கட்டியெழுப்பிய இந்த அரசியல் ஜனநாயக அமைப்பினை உடைத்தெறிவார்கள்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2014 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.