புத் 66 இல. 01

விஜய வருடம் மார்கழி மாதம் 21ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1435 ர.அவ்வல் பிறை 03

SUNDAY JANUARY 05 2014

 

இதற்குத்தானே ஆசைப்பாட்டாய் மகாதமிழ் பிரபாகரா!

இதற்குத்தானே ஆசைப்பாட்டாய் மகாதமிழ் பிரபாகரா!

உலக அரங்கில் இலங்கைக்கு அபகீர்த்தியை ஏற்படுத்த வேண்டுமென்பதில் முழு மூச்சாகக் கங்கணம் கட்டிச் செயற்பட்டு வருவோர் வரிசையில் இறுதியாக இணைந்து கொண்டவர்தான் தமிழ் நாட்டுப் பத்திரிகையாளரான மகாதமிழ் பிரபாகரன். அதீத கற்பனையில் கதை வடிக்கும் சஞ்சிகை ஒன்றிற்காக திருட்டுத் தனமாக நாட்டிற்குள் நுழைந்து தனது கைவரிசையைக் காட்ட முனைந்தபோது கைது செய்யப்பட்டு தற்போது அவர் நாடு கடத்தப்பட்டிருக்கிறார்.

தனது நாடு சென்றதும் இங்கு தனக்குக் கொடுமை நடந்ததாக கற்பனையில் கதை கூற ஆரம்பித்துள்ளார். பிடிபடாமல் இருந்திருந்தால் இங்கு தமிழ் மக்க ளுக்கு அநியாயம் நடப்பது போலவும், தமிழ் மக்களை அரசாங்கம் கொடுமைப் படுத்துவது போலவும் கதை எழுத இருந்தவர் இப்போது அது தவிடுபொடி யானதால் தனக்குக் கொடுமை இடம்பெற்றதாக கதையை மாற்றி எழுதுகிறார். உண்மையில் இவர் போன்றவர்களால் ஒட்டுமொத்தமான ஊடகவியலாளர்கள், பத்திரிகையாளர்களுக்குமே அவமானம் என்றுதான் கூற வேண்டும்.

மகாதமிழ் பிரபாகரன் இலங்கைக்குச் சுற்றுலா விஸாவிலேயே வருகை தந்துள் ளார். அவர் வந்ததன் நோக்கம் நிச்சயமாகச் சுற்றுலா அல்ல. அவர் சிலருக்காக வேவு பார்க்கும் ஓர் ஒற்றனாகவே வந்திருக்க வேண்டும் அல்லது கற்பனையில் கதை வடிக்க ஆதாரமாகச் சில புகைப்படங்களை தானே இலங்கை வந்து எடுத் ததாக அக்கதையில் கதையளக்க வேண்டும். இதன் மூலம் உலக அரங்கில் எமது நாட்டிற்கு அபகீர்த்தியை ஏற்படுத்த வேண்டுமென்ற சிலரது எதிர்பார்ப்பிற்கு உரம் சேர்க்க வேண்டும். இதுவே இந்தப் பிரபாகரனதும் நோக்கமாக இருந்துள்ளது.

உண்மையிலேயே இந்தப் பத்திரிகையாளர் இலங்கைக்கு விஜயம் செய்து வடக்கு கிழக்கிற்குச் சென்று செய்திகளைச் சேகரிக்க வேண்டும் என்றால் அதற்கு இலங்கை அரசாங்கமே உதவி செய்து ஏற்பாடுகளைச் செய்து கொடுத்திருக்கும். அவ்வாறு விஜயம் செய்த சுமார் முப்பது இந்திய ஊடகவியலாளர் குழுவை அரசாங்கம் நாட்டின் சகல பகுதிகளுக்கும் சுதந்திரமாகச் சென்று செய்திகளைச் சேகரிக்க அனுமதியும் வழங்கியிருந்தது. இவருக்கு அல்லது இவரது சஞ்சிகையின் ஆசிரியருக்கு அக்கறையிருந்திருந்தால் அக்குழுவில் இணைந்து கொண்டி ருக்கலாம். அல்லது அவ்வாறு தனியாக அனுமதி பெற்று வந்திருக்கலாம்.

மகா தமிழ் பிரபாகரன் இவ்வாறெல்லாம் நடந்து கொள்ளாது தன்னிச்சையாகவும், ஒரு ஜனநாயக நாட்டின் குடிவரவு குடியகல்வுச் சட்டங்களையும் ஏமாற்றும் விதத்தில் மீறி நடந்து கொண்டுள்ளமையானது பாரிய குற்றமாகும். இதுபோன்றதொரு செயலை, அதாவது சுற்றுலா விஸாவில் இந்தியா சென்று காஷ்மீரில் நடக்கும் இந்திய இராணுவத்தின் அட்டூழியங்களை எமது நாட்டுப் பத்திரிகையாளர் ஒருவர் சேகரித்திருந்தால் இந்தியா வெறுமனே பார்த்துக் கொண்டிருக்குமா? எமது நாட்டு ஊடகவியலாளர்கள் தமது குடும்பத்துடன் சுற்றுலா விஸாவில் ஆலய வழிபாட்டிற்கும் இடங்களைச் சுற்றிப் பார்க்கவும் இந்தியா சென்றால்கூட துருவித்துருவி விசாரணை செய்யும் இந்திய குடிவரவு குடியகல்வு அதிகாரிகள் பிரபாகரனின் இச்செயலைச் சரியென நியாயப்ப டுத்துவார்களா?

உண்மையில் மகாதமிழ் பிரபாகரன் நாடு கடத்தப்பட்டதும் அங்கு அவர் கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டிருக்க வேண்டும். இருநாட்டு குடியகல்வு அதிகாரிகளையும் ஏமாற்றிவிட்டுச் சென்று, சென்ற நாட்டு அரசாங்கத்திற்குத் துரோகம் செய்தமைக்காகத் தண்டிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் இந்தியா அவ்வாறு எதனையுமே செய்யவில்லை. மகாதமிழ் பிரபாகரன் இலங்கையில் ஏதோ சாதனை செய்துவிட்டுத் திரும்புவதாக எண்ணி அங்கு அவருக்கு வரவேற்பளிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. ஊடகவியலாளர்கள் முன்பாக அவர் பொய்யுரைக்க அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது. மகாதமிழ் பிரபாரன் இலங்கை வரக் காரணமாக இருந்த அல்லது அவர் இலங்கை வந்தது அவரை வடக்கிற்கு அழைத்துச் சென்று இராணுவப் பிரதேசங்களைப் புகைப்படம் பிடிக்க உதவிகள் புரிந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டிருக்கும் உள்ளூர் அரசியல்வாதி ஒருவரைப் பொலிஸார் விசாரணை செய்து வருகின்றனர். இதன் மூலமாக இவ்விடயத்தில் ஏதாவது சர்வதேச சூழ்ச்சிகள் உள்ளனவா என்பதைப் பொலிஸாரால் கண்டறிய முடியும் இந்த அரசியல்வாதி ஏன் இவ்வாறு நடந்துகொண்டார் என்பது கண்டறி யப்பட்டால் பல விடயங்களுக்கு தீர்வு காணப்பட்டுவிடும்.

மகா தமிழ் பிரபாகரன் இலங்கை வந்தமையின் உள்நோக்கம் உண்மையில் இந்த அரசியல்வாதியிடம் மட்டும்தான் உள்ளது. பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் இவர் முதலில் பிரபாகரனை நண்பர் என்றார், பின்னர் உறவினர் என்றார், அவரைப் பத்திரிகையாளர் எனத்தான் அறிந்திருக்கவில்லை என்றார். ஆனால் தனது இடத்தில் தங்கவைத்துத் தனது வாகனத்தில் அவரை ஏற்றி ஊர் முழுவதும் சுற்றிக் காட்டியுள்ளார்.

உண்மையில் எமது நாட்டிற்குள் இருந்துகொண்டே எமது நாட்டைச் சர்வதேசத்திடம் காட்டிக் கொடுக்க நினைப்போரை முதலில் தண்டிக்க வேண்டும். எமது தாய் நாடு என்ற பற்றில்லாது இன்னமும் புலிகளின் காலத்தில் இருப்பது போன்ற பிரம்மையில் அல்லது புலிகள் மீண்டும் வருவார்கள் என்ற கனவில் இருந்து கொண்டு நிம்மதியாக வாழ்ந்துவரும் மக்களது இயல்பு வாழ்வைக் குழப்புவோரை அரசாங்கம் இனம்கண்டு புனர்வாழ்வளிக்க வேண்டும். இதுவே வடக்கு கிழக்கில் இன்றைய அவசரத் தேவையாக உள்ளது.

மகாதமிழ் பிரபாகரன் இந்தியா சென்று இலங்கை தொடர்பாகக் கூறிவரும் அனைத்தும் பொய்யானது என்பதே உண்மை. அவர் இங்கே இராணுவப் புலனாய்வாளர்களால் கைது செய்யப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டு பின்னர் குடிவரவு அதிகாரிகளிடம் கையளிக்கப்படும்வரை கெளரவமாகவே நடத் தப்பட்டுள்ளார். இதனை பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெளிவாகக் கூறியுள்ளார். இந்நிலையில் அவர் தனக்குக் கொடுமை இழைக்கப்பட்டதாக கூறுவது அவர் வந்த நோக்கம் பிழைத்துப் போனதால் அதனை திசைமாற்றி இலங்கை அரசாங் கத்திற்கு அபகீர்த்தியை ஏற்படுத்துவதற்கே அன்றி வேறெதற்குமாக இருக்க முடியாது.

இருநாட்டு இராஜதந்திர நல்லுறவிற்கும் பாரிய துரோகத்தை ஏற்படுத்தியது மட்டுமல்லாது சர்வதேச பத்திரிகையாளர்களுக்கும் அபகீர்த்தியை ஏற்படுத்தும் விதத்தில் நடந்துகொண்ட மகாதமிழ் பிரபாரகனை செங்கம்பளம் விரித்து வர வேற்க வேண்டும் எனச் சிலர் எதிர்பார்த்தால் அவர்களும் பிரபாகரன் என்ற பெயருக்குப் பொருத்தமானவர்களாகவே கருதப்பட வேண்டியவர்கள். தவறு செய்திருந்தபோதும் கெளரவமாக நடத்தி அவரைச் சொந்த நாட்டிற்கு அனுப்பி வைத்தமைக்காக இலங்கை அரசாங்கத்தையே நாம் பாராட்ட வேண்டும். இதுவே ஒரு பத்திரிகையாளனுக்கு இந்தியாவில் அல்லது வேறொரு நாட்டில் நடைபெற்றிருந்தால் நிலைமை என்னவாகியிருந்திருக்கும் என்பதைக் கூக்குரலிடும் சகலரும் எண்ணிப் பார்க்க வேண்டும்.

இவ்விடயத்தில் கூப்பாடு போட்ட தமிழக அரசியல்வாதிகள் குறித்தும், பிரசாரம் செய்யும் உள்ளூர் மற்றும் சர்வதேச ஊடக அமைப்புக்கள் குறித்தும் நாம் அலட்டிக் கொண்டால் அது இத்தலையங்கத்திற்கு அபகீர்த்தியை ஏற்படுத்திவிடும். ஆனால் இவ்விடயத்தில் தவறைத் தவறென்று சுட்டிக்காட்டாவிடினும் அமை தியாகவேனும் இருந்த ஊடக அமைப்புக்களைப் பாராட்டவே வேண்டும்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2014 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.