புத் 66 இல. 01

விஜய வருடம் மார்கழி மாதம் 21ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1435 ர.அவ்வல் பிறை 03

SUNDAY JANUARY 05 2014

 

அருள் அரசன்

அருள் அரசன்

சிவலிங்கம் விஞ்ஞானப் பட்டதாரி ஆசிரியர். அவர் தலைநகரில் சிறந்த கல்லூரி ஒன்றில் ஆசிரியராகக் கடமையாற்றி வந்தார்.

சிவலிங்கம் ஒழுக்கத்திலும், பண்பிலும் சிறந்து விளங்கினான். இதனால் அவனுக்குப் பெண் கொடுப்பதற்குப் பலபேர் முண்டி யடித்துக்கொண்டு முன் வந்தனர்.

ஆனால் சிவலிங்கத்தின் தாய் சீதேவி அவனை மணம் முடித்துக் கொடுப்பதில் ஒரு குறிக்கோளுடனும், விடாப்பிடியுடனும் இருந்தாள். சிவலிங்கத்திற்கு இரண்டு மூத்த சகோதரிகள் வயது கடந்த நிலையிலும் திருமணமாகாமல் வீட்டில்

தொழிலின்றி முடங்கிக் கிடந்தனர்.

சிவலிங்கத்திற்கு நான்கு வயதாக இருக்கும் போதே அவனின் தந்தை பரமன் விபத்தொன்றில் இறந்து விட்டார். கூலி வேலை செய்து நாளாந்தம் பொழுதைக் கழித்துவந்த அக்குடும்பமும் வாழ வழியின்றி நிர்க்கதிக்குள்ளானது. இந்நிலையிற்றான் சீதேவியும் பக்கத்து வீட்டுக்குச் சென்று கூலி வேலை செய்து, அதனால் கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு காலத்தை ஓட்டிக் கொண்டிருந்தாள்.

சீதேவியால் எல்லாப் பிள்ளைகளையும் படிப்பிக்க முடியா விட்டாலும் சிவலிங்கத்தை மட்டும் ஒரு பட்டதாரி ஆசிரியராகப் பல கஷ்டங்களின் மத்தியில் உருவாக்க முடிந்தது.

இப்பொழுது சீதேவியால் உழைக்க முடியவில்லை. ஓடி ஓடி உழைத்தாலும் வயது முதிர்ச்சியாலும் அவளை நோய் மெல்ல மெல்ல ஆட்கொள்ளத் தொடங்கிவிட்டது.

இந்நிலையிற்றான் சிவலிங்கத்தை நம்பியே அக் குடும்பம் இருந்தது.

அதனால் கொழுத்த சீதனம் வரும் வரையில் இலவு காத்த கிளியைப் போல சீதேவியும் காத்துக் கிடந்தாள்.

பத்துக்கு மேற்பட்டவர்கள் வரன்தேடி சிவலிங்கத்தின் வீட்டில் படியேறி இறங்கினாலும் சீதேவியைத் திருப்திப்படுத்தும் அளவுக்கு அவர்களின் சீதனம் ஈடு கொடுக்கவில்லை.

முத்துலிங்கம் மாஸ்டரும் சிவலிங்கத்தை வரன் தேடி சீதேவியின் வீட்டை நாடிவந்தார்.

முத்துலிங்கம் மாஸ்டருக்கு சிவலிங்கத்தின் வீட்டுக்குச் செல்வதற்கு சற்றுக் கஷ்டமாகத்தான இருந்தது.

இக் கிராமத்தில் அடிமட்டத்தில் வாழ்ந்த அக் குடும்பத்தில் சம்பந்தம் வைப்பதை அவரும் சுற்றத்தவர்களும் விரும்பவில்லை.

எனினும், சிவலிங்கத்தின் நடத்தையும், பண்பும் அக்கிராம மக்களினால் நன்கு போற்றப்பட்டன. அத்துடன் அந்தச் சமூகத்தினால் ஓர் அந்தஸ்துள்ள மனிதனாகவும் மதிக்கப்பட்டாள்.

அதனால், பல முறைகள் யோசனை செய்த பின்பே சிவலிங்கத்தை வரன் கேட்டுச் செல்ல அவர் முடிவு செய்து விட்டார்.

இதுபற்றி தனது மகளிடமும், மனைவியிடமும் கூறியபோது அவர்கள் அதற்கு மறுப்புத் தெரிவித்து விட்டார்கள்.

பல நியாயங்களை முத்துலிங்கம் மாஸ்டர் அவர்களுக்கு எடுத்து விளக்கிய பின்பே வேண்டா வெறுப்போடு அவர்களின் சம்மதத்தையும் பெற்றிருந்தார்.

முத்துலிங்கம் மாஸ்டர் வரன் கேட்டு வந்தது சீதேவிக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியாகவே இருந்தது. அதனால் தனது திருமண வயதைக் கடந்த இரு பெண்களையும் கரைசேர்த்து விடலாம் என்ற நப்பாசையும் குடிகொண்டது.

முத்துலிங்கம் மாஸ்டரும் சீதேவி எதிர்பார்த்த சீதனத்தைவிடக் கூடுதலாகவே கொடுக்க முன்வந்தார். இதற்கு இரண்டு காரணங்கள் இருந்தன. ஒன்று, அக்கிராமத்திலே மிகக் கூடுதலான சீதனத்தைக் கொடுத்து வரன் தேடியவர் என்ற பெருமையைப் பெறவேண்டும்.

மற்றொன்று, முத்துலிங்கம் மாஸ்டருக்கு கோகிலா என்ற ஒரே ஒரு மகள் மட்டுமே இருந்தாள். இதனால் அவரின் சொத்து சுகத்தை அனுபவிக்கவோ, பங்குபோடவோஅவளைத் தவிர வேறு எந்த வாரிசும் இல்லை.

சிவலிங்கத்துக்கு எண்பது இலட்சம் பணமும், மூன்று வீடுகளும் ஐம்பது ஏக்கர் வயல் நிலமும் சீதனமாகக் கிடைத்தன. இவை தவிர, குடியிருப்புக் காணிகள், தோட்டம், துரவுகள் என ஏகப்பட்ட சொத்துக்களும் கூடவே கிடைத்தன. இவ்வாறு கைநிறையப் பணமும், காணி பூமிகளுடன் அவன் வாழ்க்கையும் சந்தோசத்துடன் ஆரம்பமானது.

சிவலிங்கம் மணம் முடித்து ஆறு மாதங்கள் கூட முடியவில்லை. அவன் வாழ்க்கையில் புயல்வீசத் தொடங்கியது.

சிவலிங்கம் தனது சீதனப் பணத்தில் இருபத்தைந்து இலட்சம் ரூபாவை செலவு செய்து தனது மூத்த அக்காவின் திருமணத்தைச் செய்து வைத்தான். இது மனைவிக்கு மட்டுமல்ல. மாமன், மாமி இருவருக்குங்கூடப் பிடிக்கவில்லை. இதனால் இவர்கள் இதைப்பற்றியே அடிக்கடி நச்சரித்துக் கொண்டே இருந்தார்கள்.

சிவலிங்கத்திற்கு தனது அக்காவின் திருமணத்தை முடித்து வைக்க இப்பணத்தைத்தவிர வேறு எந்தவித வழியும் தெரியவில்லை. அதனால் நடப்பது நடக்கட்டும் என்ற நிலையில் பொறுமையோடும் சகிப்புத் தன்மையோடும் தனது வாழ்க்கையை ஓட்டிக்கொண்டிருந்தான்.

சிவலிங்கம் கடமைபுரிந்த கல்லூரியில் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டிக்கான நடவடிக்கைகள் ஆரம்பமாகின ஆசிரியர்கள் ஒவ்வொருவரும் தான் தான் சார்ந்த இல்ல மாணவர்களை மும்முரமாகப் பயிற்று வித்துக் கொண்டிருந்தார்கள். அந்த வகையில் சிவலிங்கமும் சேரன் இல்லத்துக்கான மாணவர்களைப் பயிற்றுவிக்கத் தொடங்கினான். இதனால் பாடசாலை முடிந்தும் மாணவர்களைப் பயிற்றுவித்து ஆறு மணிக்குப் பின்பே வீட்டுக்குச் செல்லத் தொடங்கினான்.

இது, மனைவி கோகிலாவுக்கு மேலும் எரிச்சலை ஊட்டியது. இதனால் அடிக்கடி சண்டையிடத் தொடங்கினாள்.

ஒருநாள் சிவலிங்கம் வீட்டிற்கு வருவதற்கு ஏழுமணியாகிவிட்டது. இதனால் மனைவி கடும் கோபத்துடன் இருப்பதை சிவலிங்கம் உணர்ந்து கொண்டான்.

“நேரத்திற்கு வீட்டுக்கு வரவேண்டும். கோழி, குருவி மாதிரி இரவு வேளைகளில் வீட்டுக்கு வரக்கூடாது, எனக்கும் சில ஆசாபாசங்கள் உண்டு. நான் புதிதாக மணம் முடித்தவள். வெளியில் சென்று நானும் சந்தோஷமாகச் சுற்றிவரவேண்டும்” என நறுக்கென்று கூறிவிட்டாள்.

இதனைப் பொறுமையுடன் ஏற்றுக் கொள்வதைத் தவிர அவனுக்கு வேறொன்றும் அப்பொழுது தெரியவில்லை. ‘நீ எப்போது வெளியில் செல்ல வேண்டும் என்பதை முன் கூட்டியே சொன்னால் அதற்கேற்றவாறு நான் வந்து சேர்ந்து விடுவேன்” எனப் பொறுமையாகக் கூறினான்.

ஒருநாள் “வருகிற திங்கட்கிழமை தனது சினேகிதியின் பிறந்தநாள் விழா, அதற்கு மத்தியானம் கட்டாயம் சாப்பாட்டுக்குச் செல்ல வேண்டும். மறக்கக்கூடாது” என முன் கூட்டியே கட்டளை இட்டிருந்தாள்.

சிவலிங்கமும் குறித்த நாளன்று கல்லூரிக்குச் சென்று கடமையாற்றியதுடன், குறுங்கால லீவொன்றையும் அதிபரிடம் சமர்ப்பித்து வீட்டுக்குப் புறப்படுவதற்காகத் தயாரானான்.

அப்பொழுது, அவன் வகுப்பு மாணவி ஒருத்தி திடீரென மயங்கி விழுந்து விட்டாள். உடல் விறைத்து பேச்சு, மூச்சு அற்ற நிலையில் மரக்கட்டையானாள்.

சிவலிங்கம் சக ஆசிரியர்களின் துணையுடன் அவளை வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்று சிகிச்சைகளின் பின் வீடு திரும்புவதற்கு பிற்பகல் இரண்டு மணியைத் தாண்டிவிட்டது.

தனது கணவன் உரிய நேரத்திற்குச் சமூகமளிக்காததால் கோகிலாவின் கோபம் அதிகரிக்கத் தொடங்கியது. கணவனின் வருகைக்காகப் பல மணிநேரமாகக் காத்துக் கிடந்தாள். இறுதியில் தீராத கோபத்துடன் கேற்றைப் பூட்டிவிட்டு, தனது காரில் தன்னந் தனியவளாகவே புறப்பட்டுச் சென்று விட்டாள்.

சிவலிங்கம் வீட்டுக்கு வந்த போது கேற் பூட்டப்பட்டிருந்தது. செய்வதென்னவென்றறியாத நிலையில் திகைத்து நின்றான்.

பிற்பகல் நான்கு மணிவரை அவன் கால் வலிக்க வலிக்க வெளியில் நின்ற வண்ணமிருந்தான். பாதையாற் செல்பவர்கள் கூட இவளைப் பார்த்து பரிதவிப்பது இவனுக்கு ஒருவித எரிச்சலை ஊட்டியது. கோகிலா பிற்பகல் நான்கு மணியைத் தாண்டிய பின்பே வீட்டுக்கு வந்து கேற்றைத் திறந்தாள். ஆத்திரத்துடன் அவனை முறைத்த வண்ணம் கொடூரமாகப் பார்த்தாள். சிவலிங்கமோ அப்பார்வைக்கு முகங்கொடுக்க முடியாதவனாக தனது பார்வையை நிலத்தை நோக்கிச் செலுத்தினான். அப்பொழுது அவன் கண்கள் குளமாகி நீரைப் பனித்தன.

பின்பு சிவலிங்கம் வீட்டுக்குச் சென்றதும் தனது அறைக்குள் புகுந்து குப்புறப்படுத்து விம்மி, விம்மி அழத்தொடங்கினான். அடுத்தநாள் காலை வரை அவன் கட்டிலிலே நித்திரையின்றி புரண்டு புரண்டு தவித்துக் கொண்டிருந்தான்.

கோகிலா ஒரு முறைதானும் அவனுக்கு ஆறுதல் வார்த்தை கூறவில்லை. அதுதான் இல்லாவிட்டாலும் இரவு உணவுக்குக் கூட அவனை அழைக்கவில்லை. அடுத்தநாட் காலை வழமைபோல அவன் கல்லூரிக்குக் கிளம்பி விட்டான்.

கல்லூரிக்குச் சென்றாலும் நிம்மதியற்றவனாகவே காணப்பட்டான். இருந்தாலும் தன்னை ஒருவாறு சமாளித்துக் கொண்டு பாடங்களை மாணவர்களுக்குப் புகட்டிய பின் வீட்டுக்குச் சென்றான். வீட்டின் முன்கேற் பூட்டப்பட்டிருந்தது. வீட்டின் உள்ளே உரையாடும் சத்தம் மட்டும் கேட்டது. சிவலிங்கம் பலமுறை உரத்துக் கூப்பிட்டும் கேற்றின் பூட்டைத் திறக்க யாரும் வரவில்லை.

என்ன செய்யலாம் எனப் பலமுறை சிவலிங்கம் யோசித்தான். எதற்கும் பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டும் எனத் தீர்மானித்தான். ஒரு மணித்தியால இடைவேளைக்குப் பின்னர் வேலைக்காரி சோகத்தோடு வந்து கேற்றைத் திறந்தாள். அவளின் மனதில் பதிந்திருந்த துக்கம் அவள் முகத்தில் தெரிந்தது.

சிவலிங்கம் ஹோலில் நுழைந்ததும் கோகிலா தனது வழமையான பல்லவியைப் பாடத்தொடங்கினாள். அத்துடன், எரி, பொரி எனத் திட்டவும் தொடங்கிவிட்டாள்.

சிவலிங்கம் பொறுமையைக் கடைப்பிடித்தவனாகத் தனது அறைக்குள் சென்றான். கோகிலா சிவலிங்கத்தைத் தொடர்ந்து அவனின் அறைக்குள் புகுந்தாள்.

“நீ! பணத்துக்காக வந்தவன். நான் உன்னைப் பணத்தைக் கொடுத்து வாங்கியிருக்கிறேன். நான் இட்ட கட்டளைக்கு நீ பணிந்து நடக்க வேண்டும். பிச்சைக்காரனைக் கலியாணம் செய்து வைக்காதீர்கள் என்று எத்தனை தடவைகள் நான் சொல்லியிருக்கின்றேன். எங்களுடைய மரமண்டைகளுக்கு இது எங்கே புரியப்போகின்றது. இப்பொழுதுதான் அவர்களும் இதை உணரத் தொடங்கியிருக்கிறார்கள்” என நாக்கூசாமல் கூறிவிட்டு அவ்விடத்தை விட்டு விறுவிறு என நடந்து சென்று விட்டாள்.

ஆயிரம் வேல் கொண்டு வெந்த புண்ணில் பாய்ச்சுவது போன்ற வேதனை அவனை வாட்டிவதைத்தது. இதனைப் பொறுமையாகவே தாங்க வேண்டியதைத் தவிர அவனுக்கு வேறெதுவும் தெரியவில்லை.

கல்லூரியில் இவனுடன் ஒன்றாகப் படிப்பிப்பவள் சறோ. பாலர் வகுப்புத் தொடக்கம் பல்கலைக்கழகம் வரை இவளுடன் ஒன்றாகப் படித்தவள். போதாக் குறைக்கு தற்போது ஆசிரியத் தொழிலில் இணைந்ததோடு மட்டுமன்றி ஒரே கல்லூரியிலே கடமையாற்றும் பாக்கியமும் கிடைத்து விட்டது.

சறோ எல்லோரிடமும் கலகலப்பாகப் பேசுபவள். தன் மனதில் பட்டதை வெளிப்படையாகவே எந்தவித ஒளிவு, மறைவும் இன்றி கூறுபவள். அவளின் மனதிலும் எந்தவித கள்ளங்கபடங்களும் இல்லை. சில வேளைகளில் பேசும்போது மற்றவர்களைத் தொடடும் கதைக்கும் சுபாவங் கொண்டவள்.

சிவலிங்கம் சறோவுடன் பேசுவதும், பழகுவதும் அவன் வீட்டுக்குச் சென்றுவிட்டது. சறோ சிவலிங்கத்தைத் தொட்டுப் பேசுவதும் கலகலவெனச் சிரிப்பதும் வீட்டிலே ஒரு பிரளயத்தையே உருவாக்கி இருந்தது.

அன்று சிவலிங்கம் வீட்டுக்குச் செல்லும் போது, கேற்பூட்டப்பட்டிருந்தது. சில மணி நேர இடைவெளிக்குப் பின்பே கேற் திறக்கப்பட்டது. சிவலிங்கம் வீட்டுக்குள் நுழைவதற்கு முன்பே வழமையான பல்லவி ஆரம்பிக்கப்பட்டது. ஆனால், இன்று அது ஒரு வித்தியாசமான பல்லவியாக தென்பட்டது.

“அடே! சிவலிங்கம் நீ உன்ர பேருக்கு ஏற்ற ஆள் இல்லடா, நீ உன்ர கல்லூரியில் படிப்பிக்கும் சறோவை வைத்திருக்கிறாய் என்று ஊரெல்லாம் ஒரே பேச்சாக இருக்கு. நீ எந்த முகத்தோட என்னுடைய வீட்டுக்கு வருகிறாய். உனக்கு வெட்கம் ரோசம், மானம் இருந்தால் இன்றுடன் என்னுடைய வீட்டை மறந்து விடு. நான் தந்த சீதனத்தை தந்துவிட்டு நீ அந்தச் சறோவை வைத்துக்கொள்” என ஆத்திரத்துடன் கத்தினாள்.

இவ்வார்த்தைகள் சிவலிங்கத்திற்கு ஆயிரம் சம்மட்டிகொண்டு அடிப்பது போன்ற வேதனையை ஏற்படுத்தியது. இதயம் வலுவிழந்து மெல்ல மெல்லத் துடிக்கத் தொடங்கியது. தலை தாங்க முடியாத வேதனையில் சுழலத் தொடங்கியது. தட்டுத்தடுமாறிப் பக்கத்திலிருந்த கதிரையில் அமர்ந்து கொண்டான்.

மாமன், மாமியின் முகங்களும் வழமைக்கு மாறாகக் கடுகடுப்பாகவே இருந்தன.

“நீ படித்தவன் என்றுதான் எடுத்தேன். நீ போக்கிரி. உன்னுடைய பிச்சைக்காரப் புத்தியை காட்டிவிட்டாய். பணத்துக்காக வந்து என்னுடைய மகளின் வாழ்க்கையையே பாழாக்கி விட்டாயே? உனக்கும் ஓர் உத்தியோகமா? சீ கழுதை, நாயைக் குளிப்பாட்டி மெத்தையில் வைத்தாலும் வாலைக் கிளப்பிக்கொண்டு ஓடும். என்ற கதைபோல் ஆகிவிட்டது என் நிலைமை” எனக் கூறிக்கொண்டே அழுது புலம்பத் தொடங்கிவிட்டார்.

சிவலிங்கத்திற்குத் தாங்க முடியாத வேதனை. தன் வாழ்க்கையில் ஏற்பட்ட இத்தகைய வேதனையையும், சோதனையையும் யாரிடம் சொல்லி அழுவது. அவ்வாறு சொல்லி அழுதாலும் அதற்கென்ன தீர்வு கிடைக்கப்போகிறது. மன வேதனையைத் தாங்க முடியாத நிலையில் தனக்குள்ளே புலம்பத் தொடங்கினான்.

சிறிது நேரத்தில் கோகிலா பத்திரகாளியைப் போன்று கனல் பறக்கும் கோபத்துடன் சிவலிங்கத்தின் அறைக்குள் நுழைந்தாள். சிவலிங்கத்தின் உடுப்புகளையும், ஏனைய பொருட்களையும் அள்ளி வீசினாள்.

“உனக்கு இங்கே இடமில்லை. நீ உடனே இங்கிருந்து கிளம்ப வேண்டும். உன்னுடைய கள்ளக்காதலி சறோ காத்திருப்பாள். புறப்படு. நீ புறப்பட்டாவிட்டால் உன்னை நானே வெட்டிக்கொன்றுவிடுவேன்” என ஆத்திரத்தில் அறையே அதிரும்படியாகக் கத்தினாள்.

சிவலிங்கத்திற்கு இப்பொழுது ரோசம் உச்சிக்கு வந்துவிட்டது. ஏதோ ஒரு முடிவுக்கு வந்தவனாக விறுவிறு என எழுந்து நடக்கத் தொடங்கினான்.

வீதி எங்கும் மாணவர்கள் அன்புடன் ‘குட் ஈவினிங் ஸார்’ என்று சொல்லிக் கொண்டேயிருந்தார்கள். சிவலிங்கத்திற்கு இது எங்கே புரியப் போகின்றது. மரத்துப்போன உடம்போடு அவன் நடந்து கொண்டிருந்தான்.

அவன் கால்கள் கிழக்குத் திசையை நோக்கி வேகமாக நடந்து செல்கின்றன.

நேரம் மாலை ஆறு மணியை நெருங்கிக் கொண்டிருந்தது. கடற்கரை வீதிகளில் சனக்கூட்டம் நிரம்பி வழிகின்றது.

அங்கு திரண்டிருந்த சனக்கூட்டத்தின் ஊடாகவும் கிழக்குத் திசையை நோக்கியே வெகு வேகமாக நடந்து கொண்டிருக்கின்றான் சிவலிங்கம்.

சிவலிங்கம் விறு விறு என நடந்து செல்வதைக் கண்ட மாணவி ஒருத்தி ஓடோடிச் சென்று அவன் முன் “குட்ஈவினிங் ஸார்” எனக் கூறுகிறாள். மரத்துப்போன சிவலிங்கத்திற்கு இது எங்கே கேட்கப்போகின்றது. அவன் எதுவும் பேசாது விறு விறு என்றே நடந்து செல்கின்றான்.

மாணவியோ அவனை விட்டபாடில்லை. மீண்டும் ஓடிச்சென்று அவன் முன் “குட் ஈவினிங் ஸார்” என உரத்த குரலில் கத்துகிறாள்.

என்ன அதிசயம்! “குட்நைற்” என இறுதி வார்த்தையைக் கூறியபடி கடலை நோக்கி வெகு வேகமாக ஓடத்தொடங்கினான்.

எல்லோரும் ஆச்சரியத்துடன் சிவலிங்கத்தை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டே யிருந்தார்கள்.

ஓடியவன் கடலினுள் கால் எட்டும் வரைக்கும் ஓடினான். அப்பொழுது பெரிய இராட்சத அலை ஒன்று அவனைக் கெளவிச் சுருட்டித் தன் கொடிய வாயால் விழுங்கி ஆர்ப்பரித்தது.

“ஆ....ஐயோ.....அம்மா”

சிவலிங்கம் சுதாகரிப்பதற்குள்,

“என்ன சார் கடற்கரையில் உட்கார்ந்து என்ன கனவு காண்கிaர்களோ....” சறோ தன் காதலனுடன் தனக்கருகில் நிற்பதை அப்போதுதான் கண்டான் சிவலிங்கம்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2014 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.