புத் 66 இல. 01

விஜய வருடம் மார்கழி மாதம் 21ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1435 ர.அவ்வல் பிறை 03

SUNDAY JANUARY 05 2014

 

‘KAVITHAIMANJAREY’

தனிமை

பூமாதேவியின்

அணைப்பிற்குள்

நீ மட்டும் அடங்கிக்

கிடக்கிறாய்

இரவே!

உனக்கே சொந்தமான

உன் உறவுகள்

உன்னைத் தேடித்

தேடி வரும்

வேளையில்

நான் மட்டும்...

ஒட்டி உறவாட

உறவின்றி

ஒற்றையாய்

தனிமைக்குள்

சிறைபட்டுக்கிடக்கிறேன்!


மழைக் காலம்

வெண்மேகக் கூட்டங்கள்

வேகமாக ஓடிவரும்

வாவியிலே நீரதனை

வயிறார உண்டுவரும்

வேழங்கள் அசைவனபோல்

வெவ்வேறு திசைபோகும்

சட்டென்று மின்வெட்டும்

சடுபுடென இடிமுழங்கும்

சற்றுநேரம் சென்றதன்பின்

சலாரென்று மழைகொட்டும்

போகும்போகும் இடந்தோறும்

பொழிந்துவரும் பெருமழையும்

சில்லென்று காற்றடிக்கும்

சடசடென்று மரம் முறியும்

இலைகுழைகள் அசைந்தாடும்

இன்னிசையும் பாடிவரும்

பயிரினங்கள் நீராடும்

படுகுழியும் நிரம்பிவிடும்

விலங்குகளும் விளையாடும்

வெயில்மட்டும் ஒழிந்துவிடும்

காரோடும் வீதியெங்கும்

நீரோடை போலாகும்

ஆறுகுளம் பெருக்கெடுக்கும்

அதில்மீன்கள் குதித்தாடும்.


அடிக்கின்றாயா மகனே அப்பாவை!

அடிக்கின்றாயா மகனே

உன் அப்பாவை

அள்ளி யெடுத்துன்னை

ஆரத் தழுவிய அப்பாவை

அடிக்கின்றாயா மகனே

துடித்திருந்து பார்த்து

தூக்கமின்றி காத்து - உன்

கைகளை எடுத்து - தன்

கன்னங்களில் ஒற்றிக்கொண்ட

அப்பாவை அடிக்கின்றாயா மகனே

அழகுதமிழ் படிக்க வைத்து

ஐந்தடிகள் வளரவைத்து

உலகிலுயர ஏணிவைத்த - உன்

அப்பாவை

அடிக்கின்றாயா மகனே

அழகுடைகள் உனக்களித்து

அழுக்குடைகள் தானணிந்து - உன்

அழகுபார்த்த அப்பாவை

அடிக்கின்றாயா மகனே

செந்நீரை சிந்தியுழைத்து - உனை

சீர் செய்த அப்பாவை

தேநீரை உனக்களித்து

கண்ணீரை தானருந்திய அப்பாவை

அடிக்கின்றாயா மகனே

பிள்ளைகளாம் உங்களுக்காய்

பிச்சைக்கு சமனான

எள்ளுகின்ற வேலையெலாம் - செய்த

அப்பாவை அடிக்கின்றாயா மகனே


பனிமலரே வாழ்க!

அத்தையவள் பெற்றெடுத்த

அன்புமகள் நாற்பதுக்கு

எத்தனையோ பரிசுகளில்

என்கவியும் ஒன்றாகட்டும்!

நிலாவொளியாய் கண்ணே!

நானிலத்தில் வந்தாயே

இறைவனின் சந்நிதியில்

அப்படித்தான் இருந்தாயோ?

பட்டுப்போலுன் வதனம்

பார்ப்பதற்கே பரவசந்தான்

கட்டழகு காரிகையாய்

காண உனக் காத்திருப்பேன்!

கல்வியிலும் கலை மகளாய்

காவியமாய் நீவாழ

இறையவனின் அருள் வேண்டி

அத்தை மகளே பாடுகின்றேன்!


திருநகர் தர்ஹா!

எழுத்திலும் இலக்கியத் துறையிலும் ஆர்வம்
சிறப்புற பெற்றவர் முயற்சியின் பயனாய்
வாசகர் வட்ட நிகழ்வுகள் நடப்பது
பாரிய பயன்தரும் பணியெனச் சொல்வேன்

வாசகர் தம்மையும் வாசிக்கும் இதழ்களைப்
போஷிக்கும் எம்மையும் இணைத்திடும் வட்டம்
வாசகர் காட்டும் ஆர்வம் வெளிப்பட
வாய்ப்பினை அளிக்கும் எனநான் உரைப்பேன்

வாசகர் பத்திரி கைப்பணியாளர்
நேசமும் நட்பும் கொண்டிட வாய்ப்பு
வாசகர் வட்டம் கிரமமாய் நிகழ்வதால்
வாசிப் போர் தொகையும் பெருகிடும் என்பேன்

தண்புகழ் ஓங்கும் தர்ஹா நகரிலே
தனித்துவம் மிக்கவோர் வாசகர் சங்கமம்
ஏற்பாடு செய்த இனியநெஞ் சங்களை
இதய நிறைவுடன் வாழ்த்தி மகிழ்கின்றேன்

தர்ஹா நகர் எனும் சங்கைசேர் பதியோ
சரித்திரப் பெருமை பெற்றது கண்டீர்
பண்டைய அரேபிய முஸ்லிம் வணிகரின்
பரம்பரை மக்களே இங்குவாழ் சமூகம்

பண்பிலும் அறிவிலும் சிறந்து விளங்கிப்
பல்லோர் மதிக்க வாழ்ந்திடும் இவர்கள்
வணிகமே வாழ்வின் தொழில் எனக்கொண்டு
வளமாய் வாழ்வதைக் காண்கிறோம் இன்று !

ஆற்றல் மிகுந்த கலைஞர் கவிஞரைத்
தோற்று வித்துள்ளது தர்ஹா நகரம்
எழுத்தில் வல்லவர் இலக்கிய ஆர்வலர்
பெருகிய திருப்பதி தர்ஹா நகரம்

கல்வியை வளர்க்கும் கலையகம் பலவாம்
அல்ஹம்ரா பெண்கள் தேசியப் பள்ளி
நல்லாசிரியர் பயிலகம் இஷா அத்துல்
இஸ்லாம் என்னும் அநாதையர் இல்லம்
நகரிலே சாஹிரா மதுரசா பலவும்
நலந்தரு கல்வி கலை வளர்ப் பனவாம்

அறிஞர் சித்தி லெப்பையின் பாட்டனார்
அருமையாய் வாழ்ந்த பழம்பெரும் பதிஇது
அறிஞர் பலரையும் ஆசான் குழுவையும்
ஆக்கப் பணிகளில் ஆர்வலர் பலரையும்
தேக்கி வைத் துள்ளது திரு நகர் தர்ஹா.


நானாகிப்போன உனக்கு...!

உன்னுடன் நான்...
திருமணப்பந்தலில்...
இணைந்திருக்காவிட்டால்...
என் வாழ்வு நோட்டு...
இன்னும் வெறுமையாகவே
இருந்திருக்கும்...!

நீயும் நானும் மணப்பந்தலில்...
இணையவில்லையென்றால்...
என் இதயத்தில் நிச்சயம்...
இன்னொருத்திக்கு இடமிருந்திருக்காது...!

உன்னை நான்
ஸ்பரிசித்திருக்காவிட்டால்...
அப்பாவியாகிய உன்னை...
ஏதோ ஏதோவெல்லாம்...
தப்பாய் பேசியிருப்பேன்...!

உன்னோடு இணைந்த
திருமண நாளோடு...
என் வாழ்வின் புதிய அத்தியாயம்...
புனிதமாய் அமைந்தது...!
என் இனியவளே...
உனக்கு என் நன்றிகள்...
என் வாழ்வு உன்னோடு...
இல்லாமலிருந்தால்...
என் இதயம் துடிக்காமலே...
இறந்திருக்கும்...!

இனி...
உன் இதயவறையில்...
இருந்து கொண்டே...
என் கடைசிக்காற்றை...
சுவாசித்து விடவேண்டும்...!


கட்டிக் காத்து என்ன பயன்?

செல்வம் நிறைந்த உழைப்பாளி
சொகுசாய் வாழும் நிறைவாளி
இறையை மறந்து சுழல்கின்ற
இதயம் அற்ற தொழிலாளி!

ஓய்வே இன்றி நித்தமும்
ஓடி ஓடி உழைக்கின்றார்
ஏழை எவரையும் பாராமல்
எளிதாய் பணத்தில் மூழ்கின்றார்!

பாசம் நேசம் இன்றியே
பரவசத்தோடு வேகமாய்
பணம் தான் வாழ்வில் வேண்டுமென
பாரில் உயரப் பறக்கின்றார்!

கையில் நிறைய பணமிருந்தும்
கடுகளவேனும் உறவுகளை
பேணி இனிதாய் நடக்காமல்
பேயைப் போல அலைகின்றார்!

இது போல் பாரில் எத்தனை பேர்
இருந்து கோடி உழைத்தாலும்
கிடைக்கும் நன்மைகள் இல்லையே
கட்டிக் காத்து என்ன பயன்?

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2014 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.