புத் 66 இல. 01

விஜய வருடம் மார்கழி மாதம் 21ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1435 ர.அவ்வல் பிறை 03

SUNDAY JANUARY 05 2014

 

 
விறுவிறுப்பும் திகில்களும் நிறைந்த தொடர்களுக்குமாக

விறுவிறுப்பும் திகில்களும் நிறைந்த தொடர்களுக்குமாக

விலைபேசப்படும் இலங்கை தமிழர்களின் இரத்தம்

சுற்றுலா விசாவில் வந்து சந்தேகத்துக்கிடமான வகையில் செய்தி சேகரிப்பில் ஈடுபட்டார் எனும் குற்றச்சாட்டை முன்வைத்தே இலங்கையில் தமிழ்நாட்டு ஊடகவியலாளராகிய மகா தமிழ் பிரபாகரனின் கைது இடம்பெற்றுள்ளது. இக்கைதினை தொடர்ந்து இலங்கைக்கு எதிரான “ஜனநாயகமின்மை” குற்றச்சாட்டுக்கள் நாலாபுறமும் எழுந்துமுள்ளன. கடந்த மாதம் இடம்பெற்ற நோர்வே கவிஞர் வ.ஜ.ச. ஜெயபாலன் கைதும் இதேபோன்ற சலசலப்புகளை ஏற்படுத்திவிட்டு இறுதியில் “அது ஒரு சுய விளம்பர உத்தி”யாக அம்பலமானதுடன் அடங்கிப்போனது. ஆனால் மகாதமிழ் பிரபாகரன் ஜெயபாலனை போலன்றி மிகவும் திட்டமிடப்பட்ட வகையில் பொய்யான தகவல்களை கொடுத்தே இலங்கைக்குள் நுழைந்திருக்கிறார். நுழைந்து கவனமாக காரியமாற்ற முனைந்திருக்கிறார். ஆனால் அவரது பயணம் முற்றுப்பெறாமலேயே கைதாக நேர்ந்தமை அவரது தூரதிஷ்டம். இந்த இடத்தில் இலக்கிய சந்திப்பிற்கு வருவதாக நண்பர்களுக்கு கதைகூறி சுற்றுலா விசா எடுத்து அரசாங்கத்தை ஏமாற்றி சனல் 4க்கு உளவுபார்த்து ஆவணப்படம் எடுத்துக்கொண்டு நாட்டை விட்டு வெற்றிகரமாக வெளியேறிய “மணிமேக்” கலையின் நரித்தனம் பாவம் பிரபாகரன் என பெயர் வைத்திருந்த இந்த இளைஞனிடம் இல்லாது போய்விட்டது.

ஆனாலும் இந்த மகாதமிழ் பிரபாகரன் முன்பொரு தடவை இலங்கைக்குள் நுழைந்து திரட்டிய தகவல்கள் மூலம் “புலித்தடம் தேடி” என்றொரு நூலை எழுதி வெளியிட்டிருக்கின்றார். அந்த நூலை வெளியிட விகடன் மற்றும் சீமான் தரப்புகளிடையே ஏற்பட்ட போட்டியில் சீமானே வெற்றி பெற்ற கதைகளும் உண்டு. அந்தளவிற்கு இலங்கை தமிழர்களின் அவலங்களை காசாக்கும் கலையில் இவரும் ஒன்றும் மணிமேக்கலைக்கு சளைத்தவரில்லை என்பதை ஏற்கனவே நிரூபித்திருக் கின்றார். அந்த உருசிதான் மீண்டும் இலகுவாக இலங்கையரசுக்கு தண்ணீர் காட்டிவிடலாம் என்னும் நப்பாசையை அவருக்குள் விதைத்திருக்கவும் கூடும்.

கைது செய்யப்பட்ட மகாதமிழ் பிரபாகரன் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் என்றும் 24 வயதான அவர் தன்னை ஒரு ஊடகவியலாளர் என்று தெரிவிக்கவில்லை என்றும் கூறும் இலங்க¨யின் காவல்துறை பேச்சாளர் சுற்றுலா விசாவில் வருப வர்கள் இவ்வகையான நடவடிக்கையில் ஈடுபட முடியாது என்றும் சுட்டிக்காட்டினார்.

அந்தவகையில் இலங்கையின் குடிவரவு அதிகாரிகளுக்கு தான் ஒரு ஊடகவியலாளர் என்னும் உண்மையை மறைத்த தனூடாக பொய்யான தகவல்களை வழங்கினார் என்னும் பெயரில் தண்டனைக்குள்ளாகும் சந்தர்ப்பங்களும் மகா தமிழ் பிரபாகரனுக்கு இருந்தன. எனினும் விசா விதிமுறை மீறிய குற்றச்சாட்டில் கிளிநொச்சியில் கைது செய்யப்பட்ட தமிழக ஊடகவியலாளர் மகாதமிழ் பிரபாகரன் நாடு கடத்தப்பட்டிருக்கின்றார்.

குறித்த நபர் பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வந்த நிலையில் கைதாகி மூன்று நாட்களின் பின்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளார். பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் இவரை நீதிமன்றில் ஆஜர் செய்து அறிக்கை சமர்பித்ததற்கு இணங்க குறித்த நபரை நாடு கடத்துமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

பத்திரிகையாளர்கள் செய்தி சேகரிக்கும் பணியின் பெயரில் எங்கு என்ன நடந்தாலும் அங்கே நுழைந்து செய்தி சேகரிக்க யாரும் தடை விதிக்க முடிவ தில்லை. இங்கு இந்த ஊடகவியலா ளர்களுக்கு வழங்கப்படும் சுதந்திரமானது பொது மக்களின் பெயரிலும் ஒவ்வொரு தனிமனிதர்களின் சுதந்திரத்தின் பெயரிலும் வழங்கப்படுவதேயாகும். ஆனால் எத்தனை ஊடகவியலாளர்கள் இந்த சுதந்திரத்தை பொதுமக்களின்பெயரிலோ பொது நன்மைகளின் பெயரில் உண்மையாக பயன்படுத்துகிறார்கள். அதனை மதித்து நடக்கின்றார்கள் என்கின்ற கேள்விகள் எழுப்பப்பட்டே ஆகவேண்டும். ஏனெனில் உலகின் பிரபல பத்திரிகையாளர்களின் பலர் உளவாளிகளாக செயல்படுவது ஒன்றும் புதிய கதைகள் அல்ல. பத்திரிகையாளர்கள் எனும்பெயரில் எதையும் எப்படியும் எழுதிவிட்டு போவது பத்திரிகை சுதந்திரமல்ல. செய்தி சேகரிப்புகளில் சொந்த அரசியல் விருப்புவெறுப்புக்கள் தாக்கம் செலுத்தக்கூடாது. ஊடக தர்மம் என்பது இன, மத, மொழி, சாதி உணர்வுகளுக்கு அப்பாற்பட்டதாகும். சொந்த உணர்வுகளின் சாயமின்றியே ஊடகவியலாளர்கள் செயல்படவேண்டும். ஊடகத்துறை என்பது முதலில் தர்மம். பின்புதான் அது தொழிலாகும். அதனால்தான் ஊடகவியலாளர்களுக்கு யாதொரு இன்னல்நேரினும் உலகெங்குமிருந்து அவர்களுக்கான ஆதரவுக்குரல்கள் எழுப்பப்படுகின்றது. பணம் பண்ணும் நோக்குடன் மட்டுமே செயல்பட்டு தேர்ந்தெடுக்கப்பட்ட அல்லது தங்களின் அரசியல் விருப்பு வெறுப்புக்களுக்கு ஏற்றவாறான செய்திகளை பூதாகாரப்படுத்தி சித்தரிக்க முனைவதும் ஊடகதர்மமல்ல.

ஆனால் இந்த இந்தியா குறிப்பாக தமிழ்நாட்டு எழுத்தாளர்களோ ஊடகவியலாளர்களோ தமது இலங்கை பற்றிய செய்தி சேகரிப்புகளில் தமது இன உணர்வுகளுக்கே முதலிடம் கொடுக்கிறார்கள். பணம் பண்ணுவதையே கண்ணும் கருத்துமாக கொண்டியங்குகிறார்கள். ஒரு சிலரை தவிர்த்து தொண்ணூற்றி ஒன்பதுவீதமானவர்கள் இலங்கை தமிழர்களின் இரத்தங்களை வைத்து பிழைப்பு நடத்துவதை யாரும் மறுக்க முடியாது. இந்த மகாதமிழ் பிரபாகரனை போன்றவர்கள் ஒருபோதும் தங்களை ஊடகவியலாளர்கள் என்று சொல்லிக்கொள்ள அருகதையற்றவர்களாகும். ஜீ.வி. போன்ற சில்மிச சஞ்சிகைகளின் செய்தி வியாபார தொடர்களை எழுதி பிழைப்பு நடத்திய இந்த பிரபாகரன் எப்படி ஊடக தர்மபடி செயல்பட முடியும்? இவர்களது விறுவிறுப்பும் திகில்களும் நிறைந்த தொடர்களுக்கு இலங்கைதமிழர்களின் இரத்தங்களும் மரணபரியந்தங்களும் விலைபேசபடுகின்றன.

இப்படி எழுத்து வியாபாரம் செய்து உருசி கண்டவர்கள் மீண்டும் மீண்டும் இலங்கையில் ஒரு யுத்த சூழலை தக்க வைக்கவே விரும்புகின்றனர். அதற்காகவே இராணுவ நிலைகளையும் பிரசன்னங்களையும் மட்டுமே படமெடுப் பதில் கவனமாயிருந்தி ருக்கின்றார். இன்னும் மக்கள் இராணுவத்தால் கைதாக்க படுகிறார்கள். சிறைபிடிக்க படுகி றார்கள். சித்தரவதை செய்யபடுகிறார்கள் என்றெல்லாம் தமிழ் நாட்டு மக்களுக்கு புலுடால் விடுவது ஊடகதர்மமல்ல. ஒரு நாட்டின் இறைமைக்கும் சுய கெளரவத்துக்கும் பங்கம் விளைவிக்கும். இவர்களது இந்த இழிவான எழுத்து வியாபாரங்களை ஊடக வியலின் பெயரால் யாரும் நியாயப் படுத்தி விட முடியாது.

அதனால் தான் இந்த மகாதமிழ் பிரபாகரனை வரவழைத்து உபசரித்து உடனிருத்தி கொண்டு திரிந்த சிறிதரன் இவர் கைதானதும் அவரை எனக்கு வெறும் நண்பராகத்தான் தெரியும் அவர் ஊடகவி யலாளர் என்று எனக்கு தெரியவே தெரியாது என்று பி.பி.சி. வானொலியில் அடித்து சத்தியம் செய்தார். மடியில் கனமில்லாவிட்டால் பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் இந்த மகா தமிழ் பிரபாகரனை மறுதலித்தி ருக்கமாட்டரே! அவர் ஒரு ஊடகவியலாளர் என்றும் இலங்கையில் பத்திரிகை சுதந்திரம் குழிதோண்டி புதைக்கபடுகிறதே என்றும் வானுக்கும் மண்ணுக்குமாய் துள்ளியல்லவா குதித்திருப்பார்?

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2014 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.