புத் 66 இல. 01

விஜய வருடம் மார்கழி மாதம் 21ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1435 ர.அவ்வல் பிறை 03

SUNDAY JANUARY 05 2014

 

 
கருணை உள்ளம் படைத்த மஹிந்த சொந்த பணத்தில் தோடம்பழம் வாங்கி நோயாளிக்கு கொடுத்தார்

தனது ஊர் நோயாளிகளைப் பார்க்க சிறுவன் மஹிந்த பல தடவை பாடசாலை நேரத்தில் அனுமதியின்றி ஆஸ்பத்திரிக்கு சென்றார்

கருணை உள்ளம் படைத்த மஹிந்த சொந்த பணத்தில் தோடம்பழம் வாங்கி நோயாளிக்கு கொடுத்தார்

ஏழைப் பிள்ளையின் நண்பன் - 13

நோயாளியின் கட்டிலுக்கு அருகில் மஹிந்த சென்று பார்த்த போது நோயாளியின் நெற்றியிலும், கையிலும் பெண்டேஜ் போட்டிருப்பதை அவதானித்தார். அந்நோயாளி கண்களைத் திறந்து அங்கும் இங்கும் பார்த்த பின்னர் மஹிந்தவின் பக்கம் திரும்பி புன்முறுவல் பூத்தார். மஹிந்தவுக்கு இவர் யார் என்று அடையாளம் காண முடியாதிருந்தது.

“பொடி மாத்தயா, எனக்கு உங்களை நன்றாகத் தெரியும். நான் உங்கள் வீட்டுக்கு வந்திருக்கிறேன்” என்று தெரிவித்த அந்த நோயாளி “உங்கள் தந்தை எனக்கு இரண்டு கறவைப் பசுக்களை அன்பளிப்பு செய்தார்” என்று கூறினார். இப்போது என்னிடம் 12 பசுமாடுகள் இருக்கின்றன. இவற்றின் மூலம் பெறும் பாலை தயிராக்கி விற்பனை செய்கிறேன் என்று அந்த நோயாளி கூறினார்.

“மாடுகளை பராமரிக்கும் வேலைப்பளுவினால் எங்களுக்கு உங்கள் தந்தையை வந்து பார்ப்பதற்கு கூட நேரமில்லை. கடந்தாண்டு நாங்கள் உங்கள் வீட்டுக்கு வந்த போது நான் சின்ன மாத்தியாவைப் பார்த்தேன்” என்று அந்த நோயாளி கூறினார்.

“நீங்கள் எவ்விதம் காயமடைந்தீர்கள்?” என்று மஹிந்த கேட்டபோது, எங்களுக்கு கிரிவத்துடுவவில் ஒரு மகள் இருக்கிறாள். அங்கு போகும் வழியில் நான் ஹோமாகமவில் மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கினேன். விபத்தை அடுத்து கீழே விழுந்த நான் சுயநினைவை இழந்தேன். முதலில் என்னை ஹோமாகம ஆஸ்பத்திரியில் அனுமதித்தார்கள். பின்னர் அங்கிருந்த நான் கொழும்பு பெரிய ஆஸ்பத்திரிக்கு அனுப்பப்பட்டேன். நான் சுகமாவதற்கு சிறிது காலம் எடுக்கும்” என்று அந்த நோயாளி வேதனையுடன் சிறுவன் மஹிந்தவுக்கு கூறினார்.

இவ்விதம் பேசிக் கொண்டிருந்த போது அந்த நோயாளி வேதனையினால் மென்மையாக முனங்கினான். “உங்கள் வீட்டில் இருந்து யாராவது பார்க்க வருகிறார்களா?” என்று மஹிந்த கேட்டதற்கு எனது மகளும், மருமகளும் என்னைப் பார்க்க வருவார்கள். அவர்கள் நேற்று வந்ததனால் இன்று வரமாட்டார்கள் என்று நோயாளி கூறிய போது, மஹிந்த தன் கையில் வைத்திருந்த தோடம்பழத்தை நோயாளியின் கட்டிலின் மீது வைத்தார்.

“சின்ன மாத்தயா எதற்காக நீங்கள் இதை எடுத்து வந்தீர்கள்? நீங்களும் உங்கள் அப்பா அம்மாவைப் போன்று மற்றவர்களுக்கு உதவி செய்யும் சிறுவன். உங்களுக்கு கதிர்காமத்து முருகன் அருள் கிடைக்கும் என்று அந்த நோயாளி மஹிந்தவை வாழ்த்தினார். மஹிந்த அங்கிருந்து சரியாக 12.30 மணிக்கு முன்னர் பாடசாலைக்கு வந்து சேர்ந்தார். மஹிந்த ஆஸ்பத்திரிக்கு சென்று திரும்பிய விடயம் பாடசாலையில் உள்ள ஒருவருக்கும் தெரியாது. இரண்டு நாட்களுக்குப் பின்னர் சிறுவன் மஹிந்த சீனி பணிஸ் ஒன்றை வாங்கிக் கொண்டு நோயாளியைப் பார்க்க ஆஸ்பத்திரிக்கு சென்றான். “சின்ன மாத்தயா, ஏன் இதையெல்லாம் கொண்டு வருகிaர்கள். அவை எனக்கு அவசியமில்லை. நீங்கள் என்னை வந்து பார்க்கும் போது நான் மகிழ்ச்சியடைகிறேன். தொடர்ந்து வந்து செல்லவும்” என்று சிரித்துக் கொண்டே கூறினார்.

ஒரு வாரத்திற்கு பின்னர் மஹிந்த ஆஸ்பத்திரிக்கு மீண்டும் சென்ற போது நோயாளி அங்கிருக்கவில்லை. தான் கொண்டு வந்த தோடம்பழத்தை அங்கு பாயில் அமர்ந்திருந்த ஒரு நோயாளிக்கு கொடுத்துவிட்டு அந்த வாட் முழுவதும் நோயாளியை தேடிவிட்டு பின்னர் பாடசாலைக்கு திரும்பினார். எங்கள் கிராமத்து நோயாளி ஒருவர் வந்தால் எனக்கு உடனடியாக அறிவியுங்கள் என்று தனது நண்பர்களிடம் கூறினார். அந்த நாள் முதல் வீரகெட்டிய அல்லது பெலியத்தையில் இருந்து நோயாளிகள் எவராவது ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டிருந்தால் மஹிந்த அவர்களைப் பார்க்க செல்வார். தான் யார் என்பதை அவர்களுக்கு எப்போதும் சொல்வதில்லை.

இவ்விதம் ஒரு நாள் ஆஸ்பத்திரிக்கு சென்று திரும்பிய போது மஹிந்தவை பாடசாலை காவலாளி கையும் மெய்யுமாக பிடித்துக் கொண்டார். “நீங்கள் எங்கு போய் வருகிaர்கள்” என்று மஹிந்தவிடம் கேட்டபோது அதற்கு பதிலளிக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த காவலாளி மஹிந்தவை அவரது வகுப்பாசிரியரிடம் அழைத்துச் சென்றார். “நீ எங்கு போயிருந்தாய்?” என்று கேட்கப்பட்டதற்கு ஆஸ்பத்திரிக்கு என்று பதிலளித்தார். தொடர்ந்தும் ஏன் என்று கேட்டதற்கு, ஒரு நோயாளியை பார்க்கச் சென்றேன் என்று கூறினார். “அந்த நோயாளி யார்?” என்று கேட்டதற்கு எனது கிராமத்தைச் சேர்ந்தவர் என்று கூறினார். ஆனால் அவர் யார் என்று தெரியாது என்று பதிலளித்தார். தெரியாத ஒருவரை பார்ப்பதற்கு நீ ஏன் சென்றாய் என்று ஆசிரியர் கேட்டதற்கு, எனக்கு அவரை தெரியாதிருந்தாலும் அவர் எனது கிராமத்தைச் சேர்ந்தவர் என்று மஹிந்த பதிலளித்தார். “நீ, ஒரு சிறுவன். உனக்கு வீதியை கவனமாக கடக்கக்கூட தெரியாது. பாடசாலை நேரத்தில் வெளியில் செல்வது ஒரு பெரிய குற்றம். அதனால் உன்னை பாடசாலையில் இருந்தும் விலக்கிவிடுவார்கள்” என்று தெரிவித்த பாடசாலை வகுப்பாசிரியர் இது முதல் குற்றம் என்பதால் உன்னை மன்னிக்கிறேன். உன்னுடைய தந்தைக்கு இது பற்றி நான் முறைப்பாடு செய்வேன் என்று கூறினார்.

ஒரு நாள் மாலைப் பொழுதில் மஹிந்தவின் தந்தையும், தாயாரும் நாளாந்த கல்லூரியின் மாணவர் விடுதிக்கு வந்து மஹிந்தவைப் பார்த்தார்கள். “மஹிந்த உன்னைப் பற்றி ஒரு தப்பான முறைப்பாடு எனக்கு கிடைத்தது. பாடசாலை நேரத்தில் நீ ஏன் ஆஸ்பத்திரிக்கு சென்றாய்?” என்று மஹிந்தவின் தாயார் கேட்டார். எங்கள் கிராமத்தில் இருந்துவந்த நோயாளிகளை பார்க்கச் சென்றேன் என்று மஹிந்த பதிலளித்தார்.

இதனால் சற்று அதிர்ச்சியடைந்த மஹிந்தவின் தாயார் தனது கணவரின் முகத்தைப் பார்த்தார். “மஹிந்த நீ செய்தது நல்ல காரியம். ஆனால், பாடசாலை விதிமுறைகளை நீ மீறியது தவறு. பாடசாலையின் ஒழுங்கு விதிமுறைகளுக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டுமென்று” தெரிவித்த தந்தை, “நீ ஒரு நாள் மாத்திரம் தானே இந்த நோயாளியை பார்க்கச் சென்றாய்” என்று கேட்டார். அதற்கு மஹிந்த “ஒரு நாள் அல்ல, பல நாட்கள் நோயாளிகளை பார்க்கச் சென்றேன்” என்று பதிலளித்தார். “அப்பா, நீங்கள் இரண்டு பசுமாடுகளை கொடுத்த ஒரு நோயாளியையும் நான் பார்த்தேன். அவர் இப்போது தயிர் வியாபாரம் செய்கிறார்” என்று மஹிந்த கூறினார். “பாடசாலை அதிபர் நீ ஒருநாள் தான் போனாய் என்று நினைக்கிறார். நீ அவ்விதம் போகக்கூடாதென்று” தந்தை எச்சரித்தார்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2014 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.