புத் 66 இல. 01

விஜய வருடம் மார்கழி மாதம் 21ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1435 ர.அவ்வல் பிறை 03

SUNDAY JANUARY 05 2014

 

 
பாலைவனத்தில் கானம் இசைத்து இலங்கையர்களின் கவனத்தை ஈர்த்தேன்

பாலைவனத்தில் கானம் இசைத்து இலங்கையர்களின் கவனத்தை ஈர்த்தேன்

பன்மொழி பாடகர் எம். என். எம். தாவூஸ்

கடலலைகளோடு இருபது ஆண்டுகள், பாலை வனச் சோலையில் ஐந்தாண்டுகள் என திரவியம் தேடி திரிந்த காலத்தில் மேடை பல கண்டு கானம் இசைத்து சாதனை புரிந்தவர்தான் நம் மண்ணின் மைந்தன் எம். என். எம். தாவூஸ், இலங்கை வானொலி, தொலைக்காட்சி, மேடை நிகழ்ச்சிகளில் தோன்றி தமிழ், சிங்களம், ஹிந்தி மொழிகளில் சரளமாக பாடி நேயர்களின் மனம் கவர்ந்த பாடகரின் நினைவலைகளை இங்கு மீட்டிப் பார்க்கின்றேன்.

பிறந்தகத்தைப் பற்றி கேட்ட போது....

கொழும்பின் நுழைவாயிலில் அமைந்துள்ள வெல்லம்பிட்டியை பிறப்பிடமாகக் கொண்டது என் குடும்பம். என் தந்தையார் நையீம், ஒரு சாரதி. தாயார் சனூபா. எனது உடன் பிறப்புகள் பன்னிரண்டு பேர். ஐந்து ஆண் சகோதரர்களும், ஏழு பெண் சகோதரிகளையும் கொண்ட எனது குடும்பத்தில் நான் நான்காவது பிள்ளை.

மருதானை ஸாகிராக் கல்லூரியில் என் ஆரம்பக் கல்வி தொடங்கியது. கல்லூரி கல்வியை முடித்துக் கொண்டு வெளியேறிய போது மாலுமியாக வேண்டுமென்ற என் இளமைக்கால கனவை நனவாக்க துடித்துக் கொண்டிருந்தேன். எனது மாமா முறையில் உறவினரான சமீம் அப்போது கப்பலில் கடமையாற்றிக் கொண்டிருந்தார். அவருடன் தொடர்பு கொண்டு என் ஆசையைக் கூறினேன். அதற்கான ஒழுங்குகளை மேற்கொண்ட அவர், எதிர்பாராதவிதமாக உடனடியாகப் புறப்பட்டு என்னை பம்பாய் வரும்படிதகவல் அனுப்பினார்.

எனக்கு அப்போது 21 வயது. கப்பலில் மாலுமியாக இணைவதற்கு பம்பாய் நோக்கி புறப்பட்டேன். வீட்டார் அனைவருக்கும் பெரும் கவலை. சின்ன வயது. கடல் அனுபவம் இல்லை. இந்த நிலையில் பயமறியாத என் இளம் துடிப்பால் கப்பலேறிவிட்டேன். முதல்நாள் அனுபவமே பெரிய பயங்கரம். கடலலைக்கு ஏற்ப மேலெழுந்து கீழிறங்கும் போது குமற்றி குமற்றி வரும் வாந்தி என்னை வாட்டிவதைத்தது. இந்த வேதனையில் இரண்டொருநாள் கடல் வாழ்க்கைக்கு கடற்கூற்று பழகிவிட்டது.

இரவு பகலென்று மாதக் கணக்கில் கப்பல் கடலோடு மிதந்துக்கொண்டிருக்கும். நூற்றுக் கணக்கான மாலுமிகள் மாறி மாறி சுற்றுமுறையில் பணியில் ஈடுபடுவோம். களைப்பு தீர என்னுடைய பிரதான பொழுது போக்கு அம்சமான பாட்டு பாடுவதைக் கைக்கொள்வேன். சிங்களம், ஹிந்தி, தமிழ் பாடல்களை சரளமாகப் பாடுவதால் கப்பலுக்குள்ளேயே பெரும் ரசிகர் கூட்டம் என்னைச் சுற்றி இருக்கும்.

கப்பலை பொருத்த மட்டில் மூன்று பிரிவுகள் உள்ளன. டெக், இன்ஜின்ரூம், மெஸ்ரூம், இவற்றுக்கு கப்டன், இன்ஜினியர், சீப் ஸ்டூவர்ட் என்பவர்கள் பொறுப்பாக இருப்பார்கள்.

நான் முதன் முதலாக 1974ம் ஆண்டு எயார் சிலோன் விமானம் மூம் பம்பாய் நகரை சென்றடைந்தேன். பம்பாய் துறைமுகத்தில் நான் அன்று ஏற இருந்த ‘ஸ்டேலோ’ கப்பல் முதலிரவே புறப்பட்டு விட்ட படியால் என்னை பம்பாயிலிருந்து மஹாராஷ்டிரா காந்திதம் துறைமுகத்திற்கு உடனே உள்ளூர் விமான மொன்றில் அனுப்பி வைத்தார்கள். காந்தி தம் துறைமுகத்தில் வைத்தே எனது முதல் காலடியை கப்பலில் வைத்தேன்.

எனக்கு ‘டெக்போய்’ அதாவது உணவகத்தில் வேலை. கப்பலில் வேலை செய்யும் மாலுமிகளின் உணவு பரிமாறும் இடம். மேசை விரிப்பிலிருந்து பாத்திரங்கள் ஒழுங்கு செய்வது வரை என் கடமையாக இருந்தது.

இந்தியாவிலிருந்து பாசிபயறு போன்ற தானிய வகைகளை ஏற்றிக்கொண்டு ஜோர்தான் ஆக்கபாதுறைமுகத்தை அடைந்து இவற்றை இறக்கிவிட்டு அங்கிருந்து செருமிக் மட்பாண்டங்கள் செய்யக்கூடிய மண்வகைகளை ஏற்றிக் கொண்டு மீண்டும் இந்திய பம்பாய் துறைமுகத்தை நோக்கி வருவோம்.

இப்படியாக டெக் போயாக ஸ்டேலோ கப்பலில் ஆரம்பித்த என் வாழ்க்கை படிப்படியாக உயர்ந்து கப்பலை செலுத்தும் என்ஜின் டிரைவர் வரை பதவி மாற்றம் கிடைத்தது. தொடர்ந்து எலி-2, கதரீனா, சபோய்தின், எரிட்டா என பல கப்பல்களில் இரண்டு தசாப்த காலம் கடலோடி கழிந்தது. இதில் மறக்க முடியாதொரு சம்பவம் தான் 1975ல் பங்களாதேஷிலிருந்து கல்கட்டா துறைமுகத்தை நோக்கி சணல் கயிறை ஏற்றிக் கொண்டு புறப்பட்ட கப்பலில் திடீரென்று தீபிடித்து கொண்டது. அச் சமயத்தில் இந்தியா- பாகிஸ்தான் யுத்தம் உக்கிர நிலையில் நடந்து கொண்டிருந்தது. யுத்த கப்பல்கள் கடலில் நடமாட்டமும் உஷார் நிலையில் நடமாடிக் கொண்டிருந்தது. கப்பல் தலைவனாக இருந்த இலங்கையைச் சேர்ந்த பிறைசூடி என்பவர், உடனடியாக இலங்கை அதிகாரிகளிடம் தொடர்பு கொண்டு இலங்கையர் ஏழுபேர் கப்பல் தீ விபத்தில் சிக்கியிருப்பதாகவும் உடனடியாக உதவி தேவை யென்றும் அறிவித்தார். அதற்கமையை இலங்கை அதிகாரிகள் இந்திய அரசுடன் தொடர்பு கொண்டு விசேட கப்பலொன்று அனுப்பி எங்களை மீட்டார்கள். பாரிய உயிராபத்தொன்றிலிருந்து மீண்டு வந்தோம்.

எரிட்டா கப்பலில் புதுமையான அனுபவத்தைப் பெற்றேன். டோக்கியோ துறைமுகத்திலிருந்து 3200கார், 20 பாரிய டிரேக் வண்டி, 20 பவுசர்களை ஏற்றிக் கொண்டு ஹிரோஷிமா, கவசாகி, கொபோ, யோகபாமா துறைமுகங்களை நோக்கி புறப்படும் இராட்சத கப்பல் சுமார் நாற்பத்திநான்கு மாலுமிகளுக்கு மேல் கடமையில் இருப்பார்கள். ஒவ்வொரு துறைமுகத்தையும் அடைந்து வாகனங்களை இறக்குவதும் அங்கு உற்பத்தியாகும் வாகனங்களை அடுத்த துறைமுகத்துக்கு ஏற்றிச் செல்வதுமாக கப்பல் பயணம் இருந்தது.

ஐப்பான் நாட்டிலிருந்து அமெரிக்காவை கடல் மார்க்கமாகக் கடக்க சுமார் நாற்பத்துநான்கு நாட்கள் எடுக்கும்.

செங்கடல், இந்து சமுத்திரம், பசுபிக் சமுத்திரம் சுவிஸ்கால்வாய், பனமா கால்வாய் என்று கடல் அலைகளை கடந்து வந்துள்ளேன்.

பல ஊர்களை சென்றடைய பல்லாயிரக்கணக்கான மைல் தூரத்தை சென்றடைய எடுக்கும் மாதக் கணக்கான நாட்களை பன்னிரண்டு மணி நேரத்தில் சென்றடையக் கூடிய குறுகிய வழிதான் சுவிஸ் கால்வாய். ஈஜிப் நாட்டின் கட்டுப்பாட்டில் இருக்கும் இந்தக் கால்வாய் அந்த நாட்டின் பணம் சுரக்கும் பெரும் சொத்து. செங்கடலிலிருந்து சுவிஸ்கால் வாய்மூலம் மெரிடியின் கடலை சென்றடய பன்னிரண்டு மணிநேரம், சுற்றி வளைப்பு செல்லும் செலவை தவிர்க்க சுவிஸ்கால்வாயை பயன்படுத்துவார்கள்.

சுவிஸ்கால்வாயைப் பயன்படுத்தும் கப்பல் ஒரு டன் எடைக்கு ஒரு டொலர் என்ற ரீதியில் ஈஜிப் நாட்டிற்கு வரி செலுத்த வேண்டும். இவ்வாறு நாளொன்றுக்கே பல இலட்சம் டொலர்களை வசூலித்துக் கொடுக்கும் கால்வாய்தான் சுவிஸ்கால்வாய் ஈஜிப் நாட்டின் செல்வ சிகரம் 1974 லிருந்து 1994 வரை இவ்வாறு கடலோடிய வாழ்க்கையிலிருந்து தாயகம் திரும்பினேன்.

திருமணமாகி 5 மகன் 1 மகளுக்கும் தகப்பனாகியுள்ளேன்.கடலோடி தேடிய திரவியங்கள் அனைத்தும் பிள்ளைகளின் கல்வி செல்வத்திற்கே செலவிட்டேன். இன்று நல்ல கல்விமான் களாகவுள்ளனர்.

என்னுடைய பிரதான பொழுது போக்கு அம்சம் பாடுவது தான் அதில் தமிழ் சிங்களம் ஹிந்தி மொழிகளில் உள்ள பாடல்கள் சரளமாக பாடுவேன். தமிழ் நாட்டு பாடகர்களான ஏ. எம். ராஜா பி.பி சிரினிவாஸ், கே. ஜே. ஜேசுதாஸ், இவர்களுடைய பாடல்களை விரும்பி கேட்பது மட்டுமல்ல நன்றாக பாடும் திறமையும் எனக்கு உள்ளது. 10 வயதில் இருந்தே கலை சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ளேன். இலங்கையின் சுயாதீன தொலைக்காட்சியில் எம். எ. உசைன் பாரூக் அவர்களின் முத்தான முத்து சரம் நிகழ்ச்சியிலும் கலந்து நடித்துள்ளேன். அது மட்டுமல்ல சவூதியில் “யம்போ” என்னும் நகரத்தில் உள்ள ரோயல் கொமிசனில் 5 வருடமாக வேலையாக பணிபுரிந்த நேரத்தில் தமிழ் பாட்டு பாடி அங்குள்ள இலங்கையர்களின் கவனத்தையும் நற் சான்றிதழ்களையும் பெற்றேன். அங்குள்ள சவூதி செய்தி நாழிதலான சவூதி கெசட் பத்திரிகையில் என்னை புகழ்ந்து பாராட்டியிருந்தார்கள். அந்த சான்றிதழ் என் கைவசம் புகைபடங்களுடன் உள்ளது. இந்த சந்தர்ப்பத்தில் ஒரு முக்கியமான விசயத்தை சொல்ல விரும்புகின்றேன். நான் பிறந்த மண்ணிலும் திறமையான இசையமைப்பாளர்கள் வாழ்ந்து சாதனைபுரிந்து விட்டு மறைந்து விட்டார்கள் பேர் வடிவில் சொல்வதென்றால் மாஸ்டர் கவுஸ், ஆர். முத்துசாமி லதீப் மாஸ்டர், சோமபால மாஸ்டர், ஆர். ரோக்சாமி சந்திரசேன மாஸ்டர் முகமட் சாலி இவர்களில் ஆர். முத்துசாமி அவர்கள் இசையமைத்த பாடல்களை நான் விரும்பி கேட்பேன் அத்தோடு தமிழ் நாட்டில் உள்ள இசையமைப்பாளர்களில் ஜி. ராமநாதன் கே. வி. மகாதேவன் சுதர்சன மாஸ்டர் எம். எஸ். விஸ்வநாதன் ராமமூர்த்தி டி. ஆர். பாப்பா தக்சினாமூர்த்தி ஜீ. குமார் ஆதி நாராயன ராவ் ராஜேஸ்வரராவ் பாண்டு ரங்கன் டி.ஜி. லிங்கப்பா இவர்கள் தெலுங்கு தேசத்தின் இசைமேதைகளானாலும் தமிழ் நாட்டில் தமிழ் மொழிக்கான பாடல்களை இசை வடிவம் கொண்டு இசையமைத்ததற்காக அப்பாடல்களை என்றுமே மறக்க முடியாது.

கண்டசால டி.கே. மோதி இவர்களுடைய பாடல்கள் என்றுமே மறக்க முடியாதவை. இக்குறிப்பிட்டுள்ள அனைத்து பாடல்களும் பாடகர்களுடைய பின்னணியில் பாடும் திறமை எனக்கு ஓரளவு உள்ளது.

இசை என்பது காதுக்கு இனியது மட்டுமல்ல இதயத்துக்கு சுகமான இராகங்களை தரக்கூடியதுமாகும்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2014 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.