புத் 64 இல.

நந்தன வருடம் சித்திரை மாதம் 03ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1433 ஜ.அவ்வல் பிறை 23

SUNDAY APRIL  15  2012

 
யாழ்ப்பாணத்தில் கொம்ய+னிகேசன் யுகத்தின் எழுச்சியும் வீழ்ச்சியும் -4

யாழ்ப்பாணத்தில் கொம்ய+னிகேசன் யுகத்தின் எழுச்சியும் வீழ்ச்சியும் -4

யாழ்ப்பாணத்தில் 1983 ஜூலை மாதத்தின் பின்னர் உள்நாட்டு யுத்தம் தீவிரமடைய முன்பாக தொலைபேசிச் சேவைகள் சகல பிரதேசங்களிலும் இருந்தது.

இலங்கைத் தொலைத் தொடர்புத் திணைக்களம் என அக்காலத்தில் இருந்த அரச நிறுவனம் தனது இயலளவிற்கு ஏற்பச் சேவைகளை வழங்கியது. இப்போது போல அக்காலத்தில் தொலைபேசிச் சேவைகளை பணமுள்ள யாரும் பெற முடியாது.

உயர் அரச அதிகாரிகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசியல் உயர் பிரமுகர்கள், பெரும் வணிகர்கள், அரச திணைக்களங்கள், பெரிய தபாலகங்கள், பொலிஸ் நிலையங்கள், புகையிரத நிலையங்கள் ஆகியவற்றில் தான் தொலைபேசிகளைக் காண முடியும்.

அதுவும் தொலைத் தொடர்புத் திணைக்களத்தில் இரண்டு நிமிடம், மூன்று நிமிடம் எனப் பதிவு செய்த பின்பு தான் அழைப்புக்களைப் பெற முடியும். அதனால் அழைப்புக்களுக்காக மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டியும் இருந்தது.

தொலைபேசியில் கதைப்பது என்பது அக்காலத்தில் பணக்காரத்தனமான ஒன்றாகவே இருந்தது. யாழ்ப்பாணத்தில் மட்டுமல்ல இலங்கை முழுவதும் இவ்வாறான நிலை தான் இருந்தது.

இப்போதைய தைப் போலக் கைத்தொலைபேசி யுகம் அப்போது இல்லை.

தொலைபேசி இணைப்புக்களும் செம்புக் கம்பிகளால் தொலைபேசித் தூண்கள் மூலமாகவே வழங்கப்படும்.

முதன்மை வாய்ந்த நகரப் பிரதேசங்களில் மட்டுமே தொலைபேசி பெறும் வசதி இருந்தது.

கிராமப்புறங்களில் இருந்தோர் நகரப் பிரதேசம் நோக்கி கிராமப்புறச் சூழலுக்கு வரவேண்டி இருந்தது.

இலக்கங்களைக் கைகளால் சுழற்சிப் பாவிக்கும் கிரகம் பெல் காலத்திற்குச் சற்றுப் பிந்திய தலைமுறைத் தொலைபேசி தான் நாடெங்கும் இருந்தது.

1994 ஆம் ஆண்டில் அரசாங்கத்தைப் பொறுப்பேற்ற அன்றைய பொதுஜன ஐக்கிய முன்னணி அரசாங்கம் தொலைத் தொடர்புத்துறையில் செய்ய ஆரம்பித்த புரட்சிகளின் தொடர்ச்சி தான் இன்றைய நவீன யுகம்.

ஏழை வீட்டிலும் கைத் தொலைபேசி இருக்க கூடியதாக அது அத்தியாவசியப் பொருளாகியது. எமது யாழ்ப்பாணக் கொம்யூனிகேசன் யுகம் நோக்கிப் பயணிப்போம். 1983 இன் பின்பாக உள்நாட்டு யுத்த நிலை தொலைத் தொடர்புச் சேவைகளில் அவ்வப்போது தேக்க நிலை ஏற்பட்டது. ஆனாலும் தொலைத் தொடர்பு நிலையங்களில் பொதுமக்கள் சேவையைப் பெறும் நிலையும் படிப்படியாக வளர ஆரம்பித்தது.

1977 இன் பின் மத்திய கிழக்கு நாடுகளை நோக்கி எம்மவர் தொழில் தேடிச் செல்லத் தொடங்கினார்கள்.

1980 முதல் சிறிதளவாகவும், 1983, 1985, 1987 ஆண்டுகளின் பின்பு பெரிய தொகையிலும் எம்மவர்கள் மேற்கு ஐரோப்பிய, வட அமெரிக்கா, ஓசானிக் நாடுகளை நோக்கிப் புலம் பெயர ஆரம்பித்தார்கள்.

இதனால் யாழ்ப்பாணத்தில் தொலைத்தொடர்பு நிலையங்கள் சில இயங்கினாலும் அவற்றில் காத்திருப்போர் எண்ணிக்கை பெருகியது. ஏஜென்ஸி போஸ்ற் ஒவ்வீஸ் என பொதுமக்கள் அழைத்த முகவர் தபாலகங்களிலும் தொலைபேசி வசதியைப் பெற்றார்கள்.

யுத்தத்தின் தீவிரம் சில சில பிரதேசங்களில் தீவிரம் அடைந்த போதெல்லாம் அங்கு தொலைபேசி சேவைகள் சீர்குலைந்தன.

அக்காலத்தில் ரெலெக்ஸ் (Telex) எனும் ஒரு வகையான தகவல் தொழில் நுட்பமும் நாடெங்கும் இருந்தது. 1985 ஆம் ஆண்டளவில் தொலை நகரி என நாம் அழைக்கும் Fax வசதிகள் வந்த போது ரெலெக்ஸ் மெல்ல மெல்ல காணாமல் போய் முற்றாகவே அற்றுப் போனது.

1990 ஜுன் 19 ஆம் நாளன்று மூன்றாம் ஈழப்போர் ஆரம்பமாகிய சில நாட்களில் யாழ்ப்பாணத்தின் தொலைத் தொடர்புச் சேவைகள் முற்றாகவே காணாமல் போயின.

பொதுமக்கள் 1990 ஜுன் முதல் 1991 ஒக்டோபர் வரையில் கேரதீவு - சங்குப்பிட்டி ஊடாகவும், 1991 நவம்பர் முதல் 1993 மே வரையில் இயக்கச்சியின் கொம்படி - ஊரியான் ஊடாகவும், 1993 மே முதல் 1996 மே வரையில் தென் மராட்சியின் கிளாலி ஊடாக பூநகரியின் ஆலங்கேணி, நல்லூர் சென்று தமது வெளியிடப்பயணங்களை மேற்கொண்டனர். அப்போது தமது உறவுகளுடன் தொலைபேசி மூலம் கதைப்பதற்காக வவுனியா, கொழும்பு இடங்களுக்குச் சென்றார்கள்.

தனியார் தொலைத்தொடர்பு நிலையங்களில் மணிக்கணக்கில் காத்திருந்தார்கள். தொலைபேசியில் கதைத்தார்கள். வெளிச் செல்லும் அழைப்புக்கு உச்சக் கட்டணம்.

உள்வரும் அழைப்புக்கும் நிமிடத்திற்கு 5 ரூபா எனக்கட்டணம் நாள் முழுக்க இரவு பகல் சாமம் பாராது காத்திருந்தார்கள். இன்பங்களை, துன்பங்களை எல்லாம் ஒலி வடிவில் பரிமாறினார்கள். தமது உறவுகளை நேரில் கண்டது போல தொலைபேசியில் கதைத்த போது ஆனந்தப்பட்டார்கள்.

காலச்சக்கரம் மெல்ல மெல்ல உருண்டோடியது. 1996 மே மாதத்தில் யாழ்ப்பாணக் குடாநாட்டின் நிலப்பரப்பு மீதான ஆளுகை அரசாங்கத்தின் வசம் முற்றாக வந்தது.

ஆறு வருடங்கள் செயலற்றுப் போன தொலைத் தொடர்புத் திணைக்களம் அரச கொள்கையால் ஸ்ரீலங்கா ரெலிக்கொம் எனப் புத்துயிர் பெற்றது. தொலைத் தொடர்புக் கோபுரமொன்று யாழ். பண்ணையில் மேலெழும்பியது.

கறுத்த பிளாஸ்டிக் கேபிள் வழியாக தொலைபேசி இணைப்புக்ள் வழங்கும் பணி மெல்ல மெல்ல ஆரம்பித்தது.

வடமராச்சியினும் தொலைத்தொடர்புக்கோபுரம் ஒன்று எழுந்தது. அங்கும் சேவைகள் மெல்ல மெல்ல ஆரம்பித்தது.

1900 - 96 காலப் பகுதியில் பல்லாயிரக்கணக்கானோர் புலம் பெயர்ந்து வெளிநாடுகளுக்குச் சென்றமையால் தொலைபேசி உரையாடலுக்கான தேவை மிக உற்சாகமாக எழுந்தது.

பண வசதி படைத்தோர், சில வணிகர்கள் தொலைபேசி இணைப்புக்களைப் பெற்றனர்.

தொலைத்தொடர்பு நிலையங்கள் பல இயங்க ஆரம்பித்தன. வீடுகளில் தொலைபேசி இணைப்புக்களை வழங்கும் தொலைத்தொடர்பு நிலையங்கள் இயங்க ஆரம்பித்தன.

கேபிள் வழியாக தொலைபேசி இணைப்பை வழங்க முடியாத உள் கிராமங்களுக்கு எனப் பிரத்தியேகமாக மோட்டோறோலா இணைப்பு வழங்கப்பட்டது.

ஸ்ரீலங்கா ரெலிக்கொம் நிறுவனத்துடன் ஒத்திசைவான வகையில் மோட்டோறோலா கம்பனியும் குடாநாட்டில் இயங்கியது. மோட்டோறோலா இணைப்புள்ள தனியார் தொலைத்தொடர்பு நிலையங்களில், வீடுகளில் ரி.வி. அன்ரனா போன்றதொரு அன்ரனா உயர இருக்கும். அதிலிருந்து வரும் வயர் தொலைத் தொடர்பு பரிவர்த்தனை உபகரணம் போன்றதொரு பெட்டியுடன் இணைக்கப்பட்டு சேவை பெறப்படும்.

குறைந்த எண்ணிக்கையான இயலளவு உள்ள மோட்டோறோலா, ரெலிக்கொம் பரிவர்த்தனை நிலையம் ஊடாக சேவையைப் பெறுவதில் மணிக்கணக்காகக் காத்திருக்கும் நிலை உருவாகியது.

குறிப்பாக மோட்டோறோலா சேவையில் நெருக்கடி நிலவியது.

வெளிநாடுகளுக்கு மிகக் கூடுதலாகவும், நாட்டின் ஏனைய பிரதேசங்களுக்கு அடுத்ததாகவும் வெளிச்செல்லும் அழைப்புக்கள் எடுக்கப்பட்டன.

உள்வரும் அழைப்புக்களுக்கும் பணம் வாங்கும் முறைமை எல்லா இடமும் இருந்தது.

நிமிடத்திற்கு 3 ரூபா, 5 ரூபா எனக் கட்டணங்கள் இருந்தன.

இக்காலத்தில் தரைவழிப் போக்குவரத்து முற்றாகத் தடைப்பட்டதால் கப்பல், விமானம் மூலமே வெளியிடப்பயணங்கள் இருந்தன.

தொலைபேசி வசதிகள் இங்கேயே கிடைத்ததால் அதற்காகவெனப் பயணப்பட்ட நிலைமை ஒழிந்தது.

தொலைபேசி உள்ள வீடுகளில் இரவிரவாக விழித்திருந்து தமது வெளிநாட்டு உறவுகளுடன் கதைத்து மனச் சுமைகளை இறக்கினார்கள். தொலைத் தொடர்பு நிலையம் வைத்திருந்தோர் புதிய வகைப்பணக்காரர் வரிசையில் சேர்ந்தனர். இந்நிலையங்களை அமைப்பதில் போட்டி யுகமொன்று உருவாகியது. ஒரு இணைப்பை வைத்திருந்தோர் பல இணைப்பை பெற்று வியாபாரத்தை விரிவாக்கினார்கள்.

தொலைத்தொடர்பு நிலையங்கள் பெருக பெருக வியாபாரம் மந்தமடைந்தது.

நவீன உலகத்தைப் புரிந்து கொண்ட புத்திசாலிகள் கணனி யுகம் மெல்ல மெல்ல தலையெடுத்த போது அதனுள் தம் காலடிகளைப் பதித்தார்கள். கணனி, போட்டோ கொப்பி, பக்ஸ் எனச் சேவைகளை விரிவாக்கினார்கள். இணைய, மின்னஞ்சல் சேவைகளை வழங்கவும் தம்மைப் பழக்கப்படுத்தினார்கள்.

கேபிள் தொலைபேசி, CDMA இணைப்புக்கள் யாவருக்கும் கிடைக்க ஆரம்பித்த போதும், கைத்தொலைபேசிகள் பரவலாக யாவரினது கைகளிலும் வர ஆரம்பித்த போது யாழ். மண்ணின் கொம்யூனிகேசன் யுகம் ஒரேயடியாகப்படுத்து விட்டது.

இணைய, மின்னஞ்சல் யுகம் வெற்றி நடைபோட ஆரம்பித்தது.

வீட்டுக்கு வீடு கணனிகளும், லப்டப்புகளும், டொங்குல்களும், மொபைல் புரோட்பாண்டுகளும் வர அத்தொழிலும் சரிந்து விட்டது.

காலமாற்றத்தை உள்வாங்கி கூறியர் சேவை, டிஜிற்றல் பனர் எனத் தொழிலை மாற்றியோர் தப்பிப் பிழைக்கின்றனர். ஏனையோர் காணாமல் போய் விட்டனர்.

நவீன இலத்திரனியல் தகவல் தொழில்நுட்ப யுகத்தைப் புரிந்து கொள்பவர்கள் தான் நீடித்து நிலைப்பார்கள் என்பதே நியதியாகிவிட்டது.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.