புத் 64 இல.

நந்தன வருடம் சித்திரை மாதம் 03ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1433 ஜ.அவ்வல் பிறை 23

SUNDAY APRIL  15  2012

 
யானறிந்த பேராசான் கார்த்திகேசு சிவத்தம்பி

யானறிந்த பேராசான் கார்த்திகேசு சிவத்தம்பி

(கடந்தவாரத் தொடர்)

சீவர்களுள் இருவர் சிவத்தம்பியிடம் ஸாஹிராவில் தமிழ் பயின்ற மேற்கண்ட இருவர். மற்றவர், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மக்பூல் என்பவர். 1962 இல் நடைபெற்ற ஜீ. ஏ. கியூ. பரீட்சையில் ஒரேயொருவர் மட்டும் அதிவிசேட தரத்தில் (ஏ) சித்தி பெற்றார். அவரும் சிவத்தம்பி, உவைஸிடம் ஸாஹிராவில் தமிழ் கற்ற எம். ஏ. எம். சுக்ரி அவர்களே என்பதும் குறிப்பிடத்தக்கது.

அக்காலை பல்கலைக்கழக விடுதிகளுக்கிடையே நடைபெற்ற தமிழ் விவாதங்களுக்கு சிவத்தம்மியின் ஸாஹிரா மாணவர்களே தலைமை தாங்கினார். அருணாசலம் மண்டப விவாதக் குழுவுக்கு ஜெமீலும், இராமநாதன் மண்டப விவாதக் குழுவுக்கு அமீர் அலியும், விஜயவர்தன மண்டப விவாதக் குழுவுக்கு சுக்ரியும் தலைமை தாங்கி விவாதம் செய்தமை அக்காலை வெகுவாகப் புகழ்ந்தோதப்பட்டது. தமிழ் கற்பித்த சிவத்தம்பி, உவைஸ் ஆகியோரிடம் புகழ்ச்சிக்குரியவர்களாயினர். தாரமும் குருவும் தலைவிதிப்படி என்பார்கள். சிவத்தம்பிக்கும் அவரின் மாணவர்களுக்கும் கிடைக்கப்பெற்ற குருமாரைப் பார்க்கின் ஸாஹிராவில் அவர்களின் தலைவிதி நன்றாகத் தான் இருந்தது என்று எண்ணத் தோன்றுகின்றது.

சிவத்தம்பி அவர்கள் ஸாஹிறாவில் கற்பித்துக் கொண்டிருந்தபோது ஆங்கில மொழி மூலப் பட்டத்தாரியான அக்கல்லூரியின் அதிபர் எ. எம். ஏ. அkஸின் தமிழ்க் கட்டுரைகளுக்கும் அவரின் ஆங்கிலப் படைப்புகளின் தமிழ் மொழி பெயர்ப்புகளுக்கும் பல வகையில் உதவினார். சாகித்திய மண்டலப் பரிசு பெறுமளவுக்கு அkஸ் தமிழறிஞனாக உயர்ந்ததில் பலருடன் சிவத்தம்பிக்கும் பங்குண்டு.

“நாங்கள் அkஸ் சொல்லச் சொல்ல எழுதுவோம். அவரது ஆங்கிலப் படிகளையும் தமிழாக்கம் செய்வோம்” என்று சிவத்தம்பி என்னிடம் அடிக்கடி கூறுவார். அkஸின் சிவத்தம்பியின் மேற்கூற்றை பின்வரும் குறிப்பு ஊர்ஜிதம் செய்கிறது.

“இந்நூலின் பெரும்பகுதியை முதலில் ஆங்கிலத்தில் எழுதினேன். பின்னர் கா. சிவத்தம்பி, ஜனாப் எம். ஏ. எம். சுக்ரி, ஜனாப் யூ. எல். தாவூத் ஆகியோரின் உதவியுடன் தமிழில் மொழி பெயர்த்தேன். அச்சுக்கு அனுப்ப முன்னர் மீண்டுமொரு முறை பரிசீலனை செய்தபோது காவலூர் இராசதுரை எனக்கு ஒத்தாசை புரிந்தார்” என்று ‘மிஸ்றின் வசியம்’ என்ற தனது நூலின் முன்னுரையில் எ. எம். எ. அkஸ் சிவத்தம்பியின் உதவியை குறித்துச் சொல்லியிருக்கிறார். காவலூர் இராசதுரை அkஸிடம் கூட்டிச் சென்று அவருக்கு அறிமுகம் செய்து வைத்தது சிவத்தம்பிதான் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

‘இலங்கையில் இஸ்லாம்’ என்ற அkஸின் நூலில் இடம்பெறும், ‘இக்பாலாற்றுப் படை’ என்ற கட்டுரையை எஸ். எம். கமால்தீன் தமிழாக்கிக் கொண்டிருந்தபோது அவர் கொழும்பு பொது நூலக உதவி நூலகராக நியமனம் பெற்றுச் செல்ல நேர்ந்ததால் அந்த மொழிபெயர்ப்பை அவரினால் நிறைவு செய்ய முடியவில்லை. அதை முடித்து வைக்கும் பேறும் சிவத்தம்பிக்கே கிடைத்தது. ‘இலங்கையில் இஸ்லாம்’ நூலாக்க முயற்சியிலும் சிவத்தம்பி அkஸ¤க்கு பெரிதும் உதவினார்.

‘பல கட்டுரைகளைக் கொண்ட ஒரு தொகுப்பை வெளியிடும்போது கட்டுரைகள் யாவற்றையும் நன்கு பரிசீலித்து இயலக் கூடிய அளவில் ஓர் ஒருமைப் பாட்டினை ஏற்படுத்துதல் அவசியம். அப்பணியில் எனக்கு உதவியவர் எனது மாணவன் கா. சிவத்தம்பி. என் அன்புறு நன்றி அவருக்கு என்றும் உரித்தாகும்’ என்று சிவத்தம்பி ‘இலங்கையில் இஸ்லாம்’ நூலாக்க முயற்சியில் தனக்குச் செய்த உதவியை அந்நூலின் அறிமுகத்தில் நன்றியுணர்வுடன் நினைவு கூருகிறார் அkஸ். இந்த ‘இலங்கையில் இஸ்லாம்’ என்ற நூல் அkஸ¤க்கு சாகித்திய மண்டலப் பரிசைப் பெற்றுக் கொடுத்தது என்பதை அறியும்போது அkஸின் படைப்புகளில் சிவத்தம்பியின் உதவியின் கனத்தைப் புரிந்துகொள்ள முடிகிறது. பல்கலைக்கழகத்தில் கழித்த 3 வருடங்களைத் தவிர ஏறக்குறைய அkஸ் காலம் முழுவதும் மாணவனாகவும், ஆசிரியனாகவும், ஸாஹிறாவில், அkஸின் வழி நடத்துகையிலும் தலைமையிலும் வழி நடந்தவர் சிவத்தம்பி என்பது குறிப்பிடத்தக்கது.

ஸாஹிறாவின் தமிழ்ப் பாரம்பரியம்

“என்னிடம் திறமை இருக்கிறது என்பதை நான் உணர்ந்து கொண்டது ஸாஹிறாவில் தான்” என்று சிவத்தம்பி அடித்துக் கூற நான் கேட்டிருக்கிறேன்.

“நல்லதம்பி முதல் நஹியா வரை ஸாஹிறாவில் ஒரு தமிழ்ப் பாரம்பரியமுண்டு. அது போற்றப்படுவதும் பேணப்படுவதும் முக்கியம்” என்று ‘ஸாஹிறாவின் தமிழ்ப் பாரம்பரியம்’ என்ற தனது கட்டுரையில் அழுத்திச் சொன்னவர் அவர். என்னுடைய ‘அkஸ¤ம் தமிழும்’ நூல் வெளிவந்தபோது, அதற்கு சிவத்தம்பி அவர்கள் எழுதிய ‘அkஸை அறிந்துகொள்ளல்’ என்ற தலைப்பிலான விமர்சனக் கட்டுரை 20. 07. 1991 இல் தினகரனில் பிரசுரமாகியிருந்தது. அதில்,

“ஜனாப் நஹியா ஸாஹிறாவின் உப அதிபராக விருந்தார். ஸாஹிறாவின் வரலாற்றில் மிக்க நெருக்கடிகள் நிறைந்த ஒரு காலகட்டத்தில், குறிப்பாக அதன் கல்வி மொழிப் பாரம்பரியம் ஆபத்து நிலைப்பட நின்ற காலத்தில் ஸாஹிறாவில் இலங்கை முஸ்லிம்களின் தமிழ் மொழிக் கல்விப் பாரம்பரியத்தை நிலைநாட்டப் போராடியவர். அந்தப் பாரம்பரியம் இன்று பேணப்படுவதற்கான அடித்தளத்தைக் கோலியவர்”.

என்று தமிழ் மொழிக் கல்விப் பாரம்பரியத்தை மீண்டும் நிலை நிறுத்த நான் ஸாஹிறாவில் செய்த பெரும் பிரயத்தனங்களை மற்றவர்களின் அறிகைக்குப் பதிவு செய்து வைத்திருக்கிறார் சிவத்தம்பி. ஸாஹிறாவில் கல்வி மொழிப் பாரம்பரிய பிரச்சினைக்குட்பட்டிருந்த 1984- 86 களில் இப்பிரச்சினையின் உண்மை வடிவை முஸ்லிம்களே புரிந்துகொள்ளாத காலத்தில் அதைத் தெளிவாகப் புரிந்து வைத்திருந்தவர் சிவத்தம்பி. அவரின் அப்புரிகை அப்போது எனக்கு ஆறுதல் தந்தது. அக்காலை நான் அக்கல்லூரியின் உதவி அதிபராக இருந்தேன்.

“கொழும்பு ஸாஹிறாக் கல்லூரி இலங்கைத் தமிழ் இலக்கிய வரலாற்றில் மிக முக்கிய இடம்பெறவேண்டிய ஒரு கல்வி நிறுவனமாகும். ஸாஹிறா, முழு இலங்கையினதும் கல்வி வரலாற்றிலே பெற வேண்டிய இடத்தினை மதிப்பிடும் பொழுது, இலங்கைத் தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு அது எவ்வாறு முக்கிய ஊற்றுக் கால்களில் ஒன்றாக விளங்கியது என்பதனை மட்டிட வேண்டிய ஓர் அவசியம் உள்ளது. கல்லூரி ஆவணங்களையும் இலங்கைத் தமிழிலக்கிய வரலாற்றின் முக்கிய ஆக்கங்கள், அவற்றுக்கான ஆதார காரணங்கள் ஆகியனவற்றையும் ஒரு சேர வைத்து வரலாற்று அடிப்படையில் மிக விரிவாக ஆராய்ச்சி செய்யப்பட வேண்டுவது அவசியமாகும்.... இவ்வாய்தல் பணியினை ஸாஹிறாவின் அதிபர் (எஸ். எல். எம். ஷாபிமரைக்கார்) தமிழ்ப் பொறுப்பாசிரியரின் (ஏ. எம். நஹியா) உதவியுடன் செய்தல் வேண்டும் அல்லது செய்வதற்கு வேண்டிய அமைப்பினைத் தோற்றுவிக்க வேண்டும்”. என்ற தனது ஆதங்கத்தை ‘ஸாஹிறாவின் தமிழ்ப் பாரம்பரியம்’ என்ற கட்டுரையில் சிவத்தம்பி வெளிப்படுத்தியிருந்தார்.

சிவத்தம்பிக்கு வி.க விருது வழங்கப்பட்டபோது அவரின் தமிழாசான் கமால்தீன் மிக்க மனமகிழ்ச்சியடைந்து பின்வருமாறு எழுதியிருந்தார். “பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி தமிழியல் ஆய்வுத்துறையில் ஆற்றிவரும் உன்னத பங்களிப்பிற்காக தமிழக அரசு தமிழ்த் தென்றல் வி. க. விருதினை வழங்கி அவரைக் கெளரவித்தமை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாகும். இவ்வரிய நிகழ்வையொட்டி அண்மையில் நூற்றாண்டு விழாக் கண்ட கொழும்பு ஸாஹிறாக் கல்லூரி பெருமிதமடைகிறது. பேராசிரியர் எய்தியுள்ள இந்நிலை மூலம் அவர் ஸாஹிறாவுக்கும் பெருமை தேடித் தந்துள்ளார். “ என்று கூறி கமால்தீன் மகிழ்ச்சி தெரிவித்தார்.

முற்போக்குச் சிந்தனை

அக்காலை தமிழர் சமூகத்தின் காணப்பட்ட சமூகச் சமநிலையில் காணப்பட்ட தளம்பல் சிவத்தம்பியின் பிஞ்சு மனதை உறுத்தியதையும் இங்கு குறிப்பிடாமல் இருக்க முடியாது. யாழ்ப்பாணத்திலிருந்த பிரபல இந்துக் கல்லூரிகளில் கூட 1950 இற்குப் பின்னர்தான் தாழ்த்தப்பட்ட சமூகத்துப் பிள்ளைகள் அனுமதிக்கப்பட்டனர். ஆனால், 1946 இலேயே விக்னேஸ்வராவில் அவர்கள் அனுமதிக்கப்பட்டபோது சிவத்தம்பி மகிழ்ச்சியடைந்தார். பிரபல இந்துக் கல்லூரிகளுக்கில்லாத சிறப்பு இது என்று கூறிப் பெருமிதமடைந்தார்.

“தாழ்த்தப்பட்ட பகுதியைச் சார்ந்த நான்கு மாணவர்கள் ஜே. எஸ். ஸி. க்கு மேல் அனுமதிக்கப்பட்டிருந்தனர். தண்ணீர் குடிக்கும் வேளைகளில் அவர்களும் மற்றைய மாணவர்களைப் போலவே பைப்புகளைத் திறந்து கையை ஏந்திக் கைமண்டையாகத் தண்ணீரைக் குடித்ததனால் பாத்திரங்களை பற்றிய பிரச்சினை வரவில்லை. ஆனால் ஊராசிரியர் ஒருவருக்கு அந்த மாணவர்கள் கையால் பைப்பைத் திறப்பதே பிடிக்கவில்லை. அவர் தமது அதிருப்தியை வெளிப்படையாகக் காட்டிக்கொள்ளவும் முடியவில்லை. ஒரு நாள் என்னைக் கூப்பிட்டு நல்ல பேச்சு விழுந்தது. சேர் சொல்வதைப் பார்த்தபொழுது அந்த மாணவர்கள் தங்கள் கைகளால் பைப்பைத் திறப்பதுதான் இவருக்குப் பிடிக்காத விடயமாக இருந்தது. ஊரின் மற்றப் பொதுக் கிணறுகளில் அந்தச் சாதியினர் தாங்களாகவே தண்ணீர் அள்ள முடியாது.

வாளி இருந்தாலென்ன இல்லாவிட்டாலென்ன அள்ளுவதே கிடையாது. ஆனால் அந்த உதாரணம் பள்ளிக் கூட நிலைமையில் பொருத்தப்பாடுடையதாகவே தெரியவில்லை. நானும் வெகுளித்தனமாகச் சற்று அப்பட்டமாகவே, ‘ஏன் சேர் அவர்கள் பைப்பைத் தொட்டுத் திறக்கக் கூடாதா?” என்றேன். அவருக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. ஒன்றும் பேசாது போய்விட்டார்”.

என்று சிவத்தம்பி சமூக சமமின்மைக் கெதிரான தனது அதிருப்தியை விக்னேஸ்வராக் காலத்திலே வெளிப்படுத்தியிருந்தார். ‘மனிதநேயம்’ அவரை முற்போக்கின் பால் இழுத்துச் சென்றது. அந்த ஈடுபாட்டை அவரே பின்வருமாறு கூறி வைத்திருக்கிறார்.

“கரவெட்டியின் சமூகச் சமவீனங்கள் வாழ்க்கை நிலைச் சமவீனங்கள் எந்த ஒரு உணர்திறனுள்ள இளைஞரையும் பாதிக்கும்.

(தொடரும்)

கரவெட்டி விக்னேஸ்வராக் கல்லூரி பழைய மாணவர் சங்கக் கொழும்புக் கிளையின் ஏற்பாட்டில் கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் 22.10.2011 இல் அரச சேவைகள் ஆணைக்குழு அங்கத்தவர்
ஏ.எம். நஹியா அவர்கள்
ஆற்றிய பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி நினைவுப் பேருரை

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.