புத் 64 இல.

நந்தன வருடம் சித்திரை மாதம் 03ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1433 ஜ.அவ்வல் பிறை 23

SUNDAY APRIL  15  2012

 
ஐ.தே.கவுடன் இணைந்து மே தினமா? TNA யின் முடிவுக்கு பாரிய எதிர்ப்பலை

1983 கறுப்பு ஜுலையில் தமிழர் உயிர்கள், பொருளாதாரம் அழிப்பு:
1981ல் யாழ். நூலகம் எரிப்பு:

ஐ.தே.கவுடன் இணைந்து மே தினமா? TNA யின் முடிவுக்கு பாரிய எதிர்ப்பலை

வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் போர்க்கொடியால் சிக்கலில் தவிக்கும் கூட்டமைப்பு

தமிழரின் கல்விப் பொக்கிஷமான யாழ்ப்பாண நூலகத்தை 1981ல் எரித்தது மட்டுமல்லாது 1983ல் இனக்கலவரத்தை ஏற்படுத்தி தமிழரைக் கொன்று குவித்து அவர்களது பொருளாதாரத்தைச் சூறையாடியதுடன், இனப் பிரச்சினைத் தீர்வு விடயத்தில் இரட்டை வேடமிட்டுச் செயற்பட்டு வரும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரால் தமிழர் பிரதேசமான யாழ்ப்பாணத்தில் மே தினத்தை கொண்டாட எடுக்கப்பட்ட தன்னிச்சையான முடிவிற்கு வடக்கு, கிழக்கிலிருந்து தமிழ் மக்கள் தமது பாரிய எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர்.

ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து யாழ்ப்பாணத்தில் மே தின கூட்டத்தை நடத்தத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடுத்த தன்னிச்சையான தீர்மானத்திற்கு வடக்கிலிருந்து பாரிய எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதன் காரணமாக கூட்டமைப்பிற்குள்ளும் உட்கட்சிப் பூசலும், பாரிய பிளவும் ஏற்பட்டுள்ளதாகத் தெரிய வருகிறது.

வாக்களித்த மக்களுடனோ அல்லது இதர கூட்டணிக் கட்சிகளுடனோ கலந்தாலோசிக்காது கூட்டமைப்பின் தலைமைப் பீடத்திலுள்ள ஒரு சிலரால் மேற்கொள்ளப்பட்ட இத்தீர்மானத்திற்கு மக்கள் பலத்த எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர். யாழ்ப்பாணத்தில் இளம் கலைஞர் மண்டபத்தில் மாவை சேனாதிராஜா எம்.பி. தலைமையில் நடைபெற்ற மக்களுக்கு விளக்கமளிக்கும் கூட்டத்தில் கூடிய பலரும் தமது எதிர்ப்பை நேரடியாகவே தெரிவித்தனர். இதனால் அக்கூட்டத்தில் பலனில்லாது போனதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் பிரதான கட்சியான தமிழரசுக் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து மே தினத்தைக் கொண்டாட முடிவுகளை மேற்கொண்டுள்ள போதும் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ரெலோ, புளொட் ஆகிய கட்சிகள் இந்தத் தீர்மானத்துக்கு வெளிப்படையாக தமது எதிர்ப்புக்களைத் தெரிவித்துள்ளன.

மற்றுமொரு பங்காளிக் கட்சியான ஈ.பி.ஆர்.எல்.எப். முன்னர் இத்தீர்மானத்துக்கு ஆதரவாகக் குரல் கொடுத்திருந்த போதும் கள நிலவரங்களைக் கருத்திற் கொண்டு தற்போது மெளன நிலையைப் பேணி வருகின்றது. அமைப்பில் அங்கம் வகிக்கும் ஏனைய கட்சிகளுடன் கலந்தாராயாமல் தன்னிச்சையாக மேற்கொண்ட தீர்மானத்தால் கட்சிக்குள் மீண்டும் விரிசல் ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளதாக அவதானிகள் கூறுகின்றனர். ரெலோவின் முக்கியஸ்தரும் முன்னாள் எம்.பியுமான சிவாஜிலிங்கம் இந்த முடிவுக்கு தமது எதிர்ப்புகளை வெளியிட்டுள்ளதுடன் இன்னும் இரண்டு கட்சிகள் எதிர்ப்பதாக தெரிவித்துள்ளார்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.