புத் 64 இல.

நந்தன வருடம் சித்திரை மாதம் 03ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1433 ஜ.அவ்வல் பிறை 23

SUNDAY APRIL  15  2012

 
ஜனாதிபதி ஓர் அதி திறமைசாலி! பசில் ராஜபக்' கடும் உழைப்பாளி!

ஜனாதிபதி ஓர் அதி திறமைசாலி! பசில் ராஜபக்' கடும் உழைப்பாளி!
 

அகாஷி பெருமிதமடைந்ததாகக் கூறுகிறார் பாபு சர்மா

சுதந்திரமும் சுகமும் தரும் நந்தன தமிழ் புத்தாண்டு எல்லோருக்கும் மன மகிழ்வையும் புத்துணர்வையும் தரும் நல்லாண்டாக மலர்ந்துள்ளது. இலங்கை வாழ் மக்கள் அனைவருக்கும் அவரவர் வாழ்வில் நல்ல மேம்பாடும் நல்ல பொருளாதார வளமும் அதற்கான வாய்ப்பும் உண்டென ஜனாதிபதியின் இந்துமத அலுவல்கள் விவகார இணைப்பாளர் இராமச்சந்திர குருக்கள் பாபுசர்மா தெரிவித்தார்.

அண்மையில் இலங்கை சமாதானத்திற்கான சமய பேரவைக்குழுவில் இந்து மதத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதிநிதியாக ஜப்பான் நாட்டிற்குச் சென்று திரும்பிய பாபுசர்மாவைச் சந்தித்த போது நாட்டில் மலர்ந்துள்ள சமாதானச் சூழலுக்கான சர்வமதத்தின் பங்கை பகிர்ந்து கொண்டார்.

இலங்கை வாழ் மக்கள் அனுசரிக்கும் மத, கலாசார பண்பாட்டிற்கு அந்தஸ்தையும் கெளரவத்தையும் மதிப்பையும் அளிப்பவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ. அவர் ஏற்றி வைத்த சமாதான ஒளி இன்று பூட்டப்பட்ட சிவாலயங்களின் கதவுகள் திறக்கப்பட்டு மணி ஓசை முழங்குகிறது. கும்பாபிஷேகம், பூஜைகள், திருவிழாக்கள் என சமய விழுமியங்கள் விழிப்படைந்துள்ளன. புலம் பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்றத்திற்கும் அபிவிருத்திக்குமாக அதுவும் பிரத்தியேகமாக வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு பல ஆயிரம் கோடி ரூபாக்களை ஒதுக்கியுள்ளார். ஆகவே பிறந்துள்ள நந்தன தமிழ்ப் புத்தாண்டில் நாம் அனைவரும் ஜனாதிபதியுடன் கரம் கோர்த்து வளம் மிக்க ஒரு நாட்டை காண வேண்டும்.

இந்து சமய வழிபாட்டிற்கு தனி மதிப்பளிக்கும் ஜனாதிபதி கீரிமலை நகுலேஸ்வர கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்டமை, திருப்பதி ஆலய தரிசனம் அதன் பக்தி பேணுவதில் அக்கறைக் கொண்டவர். ஆகவே யுத்தத்தைக் கண்டு நொந்து போயுள்ள நாம், நமது கலை, கலாசார சமய விழுமியங்களைப் பேணி, மத அந்தஸ்தும் ஆர்வமும் தரும் ஜனாதிபதியின் கரங்களை நந்தன வருடத்தில் மேலும் பலப்படுத்த வேண்டும் என்று கூறிய பாபுசர்மா, அவரின் ஜப்பான் விஜயத்தைப் பற்றி தெரிவிக்கையில்:

இலங்கை சமாதானத்திற்கான சமய பேரவை Sri Lanka Council of Religous for Peace இப்பேரவையில் இந்து சமய சார்பில் அதன் உப தலைவர் நான். என்னுடன் ஏனைய பெளத்த, இஸ்லாமிய, கிறிஸ்தவ மதப் பிரதிநிதிகளுடன் 11 பேர் ஜப்பான் நாட்டிற்குச் சென்றிருந்தோம். இவ் விஜயத்திற்கான சகல ஏற்பாடுகளையும் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த (World Council of Religous for Peace) சமாதானத்திற்கான சமய பேரவையின் உதவிப் பணிப்பாளர் சுகினோ ஒழுங்கு செய்திருந்தார். இலங்கை ஜனாதிபதியின் சமாதானத்திற்கான முன்னெடுப்பு செயற்திட்டங்களுக்கு கெளரவமளிக்கும் வகையிலேயே இவ்விஜயம் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

ஜப்பான் நாட்டில் பெளத்த மத அனுஷ்டானங்களுக்கு எவ்வளவு முக்கியத்துவம் அளிக்கின்றார்கள் என்பதை எங்கள் விஜயத்தின் போது அறிந்து கொள்ளக்கூடியதாக விருந்தது. வணக்கஸ்தலங்கள் நிறைந்த புனித நகராகக் கருதப்படும் ரிஸோ - கோஷி - கையில் யாத்திரையை மேற்கொண்டிருந்த போது ஜப்பான் நாட்டில் ஏற்பட்ட சுனாமியால் பாதிக்கப்பட்டோருக்காகப் பிரார்த்தனை செய்தோம். விசேடமாக என் வேண்டுகோளுக்கிணங்க சமய பிரார்த்தனை ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. இப்பிரார்த்தனையில் கலந்து கொண்ட ஜப்பானிய நாட்டினர் மத்தியில் பெரிதும் வரவேற்பைப் பெற்றது.

இதன் போது ஜப்பான் மகளிர் சமய பேரவை அதன் 30 வது ஆண்டு விழாவை House of Councils அரச அரங்கில் நடத்தியது. அந்த ஆண்டு விழாவில் எங்களை கெளரவ அதிதிகளாக அழைத்திருந்தார்கள். இவ்விழாவில் உலகில் நெருக்கடி நிறைந்த நாடுகளில் சேவை செய்த கம்போடியா, ஆப்கான் போன்ற நாடுகளில் பணியாற்றிய ஜப்பானிய மகளிர்கள் கெளரவிக்கப்பட்டு விருதுகள் வழங்கினர். தலைமை வகித்த ஜப்பானிய முன்னாள் பிரதமர் அதிதியாகக் கலந்து கொண்ட எங்கள் பிரதிநிதிகளுடன் மதியபோஷனத்தில் கலந்து அளவளாவினார்.

ஜப்பானிய சர்வதேச மாநாட்டு அரங்கில் நடைபெற்ற வைபவமொன்றில் இலங்கை விவகாரத்திற்கான விசேட தூதுவர் யசூஸி அகாஷி கலந்து கொண்டார். இலங்கைப் பிரதிநிதிகளாக அவ்வைபவத்தில் கலந்து கொண்ட எங்களுடன் கைலாகு கொடுத்து அந்நியோன்யமாகப் பழகினார்.

நான் அகாஸி அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி கைலாகு கொடுத்து கெளரவித்த போது “ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அதி திறமைசாலி, பசில் ராஜபக்ஷ கடுமையான உழைப்பாளி. அவர்கள் உங்கள் நாட்டிற்கு கிடைத்தது ஓர் வரப்பிரசாதம்” என்று கூறினார். இலங்கையின் துரித அபிவிருத்திக்கு எந்த வேளையிலும் உதவ தயாராக இருப்பதாகவும் கூறினார்.

அடுத்து டோக்கியோ மியூஸியம் சென்றோம். சாம்பல் மேட்டிற்கு மேல் கட்டியெழுப்பிய சாம்ராஜ்யத்தையே கண்டோம். அழிவுக்குப் பின் ஆக்கபூர்வமாக கட்டியெழுப்பிய தொழிற்பாடுகளை தத்ரூபமாக காணக்கூடியதாகவிருந்தது.

இலங்கையில் முப்பது ஆண்டு கால போர்ச் சூழலில் அழிவுற்ற பிரதேசங்களை மீள கட்டியெழுப்ப ஜப்பானிய நாடு முன் உதாரணம். குறுகிய காலத்தில் துரித முன்னேற்றம். அவ்வழியை நோக்கிச் செல்லும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு நல்வழியில் நல்லூக்கம் கொடுக்கும் உந்து சக்தியாக இருப்போம்.

ஜப்பான் நாட்டின் விஜயத்தை நிறைவு செய்து கொண்டு நாடு திரும்பியதும் தமிழ் சிங்கள புத்தாண்டையொட்டி கொழும்பு திம்பிரிகஸ்யாய பொலிஸ் மைதானத்தில் நடைபெற்ற களியாட்ட விழாவில் கலந்து கொண்ட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம், அகாஸி கூறிய தகவலைத் தெரிவித்தேன். மனம் மகிழ்ந்தார். தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்து பொன்னாடை போர்த்தி நல்லாசிகளையும் தெரிவித்தேன்.

சமாதானத்திற்கான சமயப் பேரவை மனிதரை மனிதன் நேசிக்கும் பண்பாளர்களாக பணிவாளர்களாக வாழ்வோம் என்ற தாரக மந்திரத்தை நாமும் கைக்கொள்வோம். சாந்தி நிலவட்டும்

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.