புத் 64 இல.

நந்தன வருடம் சித்திரை மாதம் 03ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1433 ஜ.அவ்வல் பிறை 23

SUNDAY APRIL  15  2012

 
ஜெனீவா மனித உரிமை மாநாட்டில் அமெரிக்காவின் இரட்டை வேடம்

ஜெனீவா மனித உரிமை மாநாட்டில் அமெரிக்காவின் இரட்டை வேடம்

இலங்கை விவகாரத்தில் ந்தியாவின் தடுமாற்றம்

மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்தால் மனக்கவலையில் இருக்கும் இலங்கைக்கு இஸ்ரேல் எடுத்துள்ள நிலைப்பாடு ஒரு வகை மன நிம்மதியை கொடுக்கத்தக்கது என்று கூற முடியும். இலங்கைக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட்ட கையோடு இஸ்ரேல் வெளியிட்ட அறிவிப்பு உண்மையிலேயே கடுமையான தாக்கத்தை எதிர்காலத்தில் ஜெனீவாத் தீர்மானம் ஏற்படுத்தலாம் என்ற பொதுவான சஞ்சலத்துக்குள்ளாகியுள்ள இலங்கைக்கு ஆறுதல் அளிக்கக் கூடியது.

ஜெனீவா மனித உரிமைகள் பேரவையின் தீர்மானங்களுக்கு ஏற்ப செயல்படவோ, தங்களால் கைப்பற்றப்பட்ட பிரதேசங்களின் குடியேற்றங்கள் தொடர்பான பிரச்சினைகளை விசாரிப்பதற்கென ஐ.நா. விசாரணையாளர்கள் தங்களது நாட்டுக்குள் வர அனுமதியளிக்கவோ இஸ்ரேல் தயாராக இல்லை என்று அந்த நாடு அறிவித்துவிட்டது. பேரவையின் கடந்த அமர்வுகளில் ஐந்து வெவ்வேறான தீர்மானங்கள் இஸ்ரேலுக்கு எதிராக நிறைவேற்றப்பட்டன.

சிரியாவுக்கு சொந்தமான கைப்பற்றப்பட்ட கோலான் மேட்டு நிலப்பகுதி மனித உரிமைகள், சுய நிர்ணயத்துக்கான பலஸ்தீன மக்களின் உரிமை, கிழக்கு ஜெரூசலம் உட்பட கைப்பற்றப்பட்ட பலஸ்தீன ஆள்புல பிரதேசத்தின் மனித உரிமை நிலைமைகள், காஸாவுக்கான நிலைமைகளைக் கண்டறியும் அறிக்கை தொடர்பான பின்தொடர் நடவடிக்கைகள், அத்துடன் கிழக்கு ஜெரூஸலம் உட்பட ஆக்கிரமிக்கப்பட்ட பலஸ்தீன ஆள்புல பிரதேசங்களில் இஸ்ரேலிய குடியேற்றங்கள் போன்ற தலைப்புகளிலேயே, இஸ்ரேலுக்கு எதிரான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டிருந்தன.

இலங்கைக்கு எதிரான பிரேரணையை நகர்த்தல் செய்த அமெரிக்கா, இஸ்ரேலுடன் இணைந்து வாக்களித்தது. இஸ்ரேலுக்கு எதிராக மனித உரிமைகள் பேரவை பக்கச்சார்பாக நடந்து கொண்டுவிட்டதான பதிவையும் அமெரிக்கா செய்து கொண்டது. மேலும் இஸ்ரேல் சார்பாக, பேரவை அமர்வுகளில் கருத்துக்கூறிய அந்த நாடு இவ்வாறான தீர்மானங்களை நிறைவேற்றுவது இஸ்ரேலில் அமைதியையும், சமாதானத்தையும் நிலைநாட்டுவதற்கு சாதகமானதாகவோ, ஏதுவானதாகவோ அமையமாட்டாது என கூறிற்று.

வேற்றுமை - ஒற்றுமை -இரட்டைவேடம்

இலங்கை தொடர்பில் வேற்றுமை காண்பித்த அமெரிக்காவின் போக்கில் இரட்டை மனோபாவத்தை புடம்போட்டு காண்பிக்கிறார்கள் சர்வதேச நோக்கர்கள். இஸ்ரேல் சார்பாக அமெரிக்கா முன்வைத்த வாதங்கள் இலங்கையின் சார்பில் இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்பட்ட அமெரிக்கத் தீர்மானத்தை எதிர்த்த நட்பு நாடுகள் உட்பட இலங்கையிலிருந்து சென்ற தூதுக்குழுவினரால் முன்வைக்கப்பட்ட வாதங்கள், முற்றிலும் பொருத்தமானவையாகவும், ஒற்றுமை மிக்கதாகவும் காணப்படுவதாக கூறப்படுகிறது.

இலங்கைக்கு எதிராக தீர்மானத்தை நிறைவேற்றிய போது சார்புப் போக்கு அற்றதாகவும் தகுதி வாய்ந்ததாகவும் மனித உரிமைகள் பேரவையைக் கருதிய அமெரிக்காவுக்கு, இஸ்ரேலுக்கு எதிரான தீர்மானத்தை நிறைவேற்றும் போது பேரவையானது தகுதியற்றதாகவும் சார்ப்புப் போக்கு மிக்கதாயும் மாறிப்போனதை கண்டு கொள்ளாதிருந்தமை அந்த நாட்டின் இரட்டை வேடத்தை வெளிப்படுத்திக்காட்டியதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

இஸ்ரேலுக்கு எதிரான தீர்மானங்கள் சிலரால் நியாயப்படுத்தப்பட்டன. என்றாலும் சிறந்த முறையில் பயங்கரவாதத்தை எதிர்கொள்ளும் ஒவ்வொரு உரிமையும் அந்த நாட்டுக்கு உண்டு என்றும் அந்த நாட்டின் பிரஜைகளது பாதுகாப்பை நிச்சயப்படுத்துவதற்கு அந்த நாடு எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை எடுக்க முடியும் என்றும் சுட்டிக்காட்டப்படுகின்ற தருணத்தே, அதே பேரவையின் அமர்வுகளில் இலங்கை தொடர்பாக எடுக்கப்பட்ட அமெரிக்காவின் முரண்பாடான நிலைமைகளையே இலங்கை வெளிக்கொணர்வதாக தேசாபிமானிகள் கூறுகின்றனர்.

இலங்கை மற்றும் இஸ்ரேல் தொடர்பாக அமெரிக்காவால் எடுக்கப்பட்ட முன்னுக்குப்பின் முரணான நிலைமைகள் மனித உரிமைகள் பேரவையை, அமெரிக்கா ஒரு வெளிநாட்டுக்கொள்கை சாதனமாக உபயோகித்து வருவதை சந்தேகத்துக்கு இடமின்றி வெளிக்காட்டுவதாக அவதானிகள் தெரிவிக்கின்றனர். உண்மையில் இது பேரவையின் பல நாடுகளையும் சந்தேகத்துக்குள்ளாக்கியிருக்கலாம். மேற்குலகைச் சாராத பல நாடுகள் மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்தில் பணியாற்றும் மேற்குலக பணியாளர்களின் எண்ணிக்கையில் குறைப்புச் செய்ய வேண்டும் என்ற குறிப்பான கோரிக்கையையும் முன்வைத்திருந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இவ்வளவு விரைவாக ஏககாலத்தில் ஒரே அரங்கில் தனது சொந்த சுயரூபத்தை அமெரிக்கா வெளிப்பத்திவிடும் என்று எவருமே எதிர்பார்த்திருக்கார். அந்த வகையில் ஜெனீவா மனித உரிமை பேரவையின் தீர்மானங்களுடன் ஒத்திணங்கிப் போக முடியாது என்ற இஸ்ரேலின் தீர்மானத்தை அடியொற்றி தங்களாலும் ஒத்துழைத்துச் செல்ல முடியாது என்று இலங்கையும் உத்தியோகபூர்வமாக பிரகடனப்படுத்தும் வாய்ப்பேற்பட்டிருப்பதாக சர்வதேச வல்லுனர்கள் கூறுகின்றனர்.

அந்த அடிப்படையில் பேரவையின் 22வது அமர்வில் ஜெனீவா தீர்மானம் தொடர்பில் இலங்கை முன்னெடுத்த நடவடிக்கைகளை மீளாய்வு செய்ய முனைகையில் இஸ்ரேல் பின்பற்ற மறுத்த கொள்கைப்பிடியை வெளிக்கொணர்ந்து எடுத்துரைக்கும் தத்தவம் இலங்கைக்கு இல்லாமலில்லை. பேரவையின் இத்தகைய இரட்டைப் போக்குகள், ஒரு நிறுவனம் என்ற ரீதியில் அதன் நம்பகத்தன்மையை திட்டவட்டாமாகக் குறைத்துவிடும் என்றும் சுட்டிக்காட்டப்படுகின்றது. ஆதலால் குறித்த குழப்பத்திலிருந்து வெளியேற இஸ்ரேலின் முதுகில் இலங்கை சவாரி செய்ய முயற்சி செய்யும் சந்தர்ப்பம் தென்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறாயினும், ஒரு கட்டத்தில் காலஞ்சென்ற ஜனாதிபதி ஜே. ஆரின் கொன்சவேட்டிவ் மேற்குலக ஆதரவு அரசாங்கத்தின் மீது, மேற்குலகமே அதன் முதுகை காட்டியபோது, உள்நாட்டு முஸ்லிம்களின் பலமான எதிர்ப்புகளுக்கு மத்தியிலும், இலங்கைக்கு உதவி பண்ணிய நாடு இஸ்ரேலே. பயங்கரவாதத்தால் மோசமான பாதிப்புக்குள்ளாகியிருந்த நாடு என்ற ரீதியிலும் மேற்குலகம் நிராகரித்த நிலையிலும் இலங்கைக்கு ஆயுதங்களை விற்ற நாடும் இஸ்ரேலே. எப்போதும் இலங்கை மீது இரக்கங்கொண்டுள்ளதான அந்த நாட்டின் தோள்களில் பாதுகாப்புக்காக இலங்கை சவாரி செய்வதைப் பற்றி யோசிக்கலாம் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

ராஜதந்திர பயங்கரவாதம் - அச்சுறுத்தல்

பலஸ்தீன ஆள்புலத்தின் இஸ்ரேலிய குடியேற்றங்கள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு மெய்களை கண்டறியும் ஐ.நா. குழுவினரை அனுப்புவது என்ற பேரவைத் தீர்மானத்தின் மீது இஸ்ரேலிய வெளியுறவு அமைச்சர் கிளர்ந்தெழும் பாணியில் நடந்து கொண்டதாக கூறப்படுகிறது. இலங்கை மீதான தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பிறகு இஸ்ரேலை எதிர்த்து நிறைவேற்றப்பட்ட நான்கு தீர்மானங்களில் முன்காணுவதும் ஒன்றாகும். அக்குறித்த தீர்மானம் 36 நாடுகளால் ஆதரவளிக்கப்பட்டது. 10 நாடுகள் வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை.

ஆனால் எதிர்த்து வாக்களித்த ஒரே நாடு அமெரிக்காவே, அங்கு கண்மூடித்தனமான முறையில் உரையாற்றிய இஸ்ரேல் வெளியுறவு அமைச்சர் - ராஜதந்திர பயங்கரவாதத்தையுடையவர்கள் பலஸ்தீனியர்கள் என குற்றஞ்சாட்டினார். அமெரிக்கா உட்பட ஏனைய நாடுகளையும் பேரவையிலிருந்து வெளியேறுமாறு கோரப்போவதாகவும் அச்சுறுத்தினார்.

இலங்கை - அமெரிக்காவுக்கு சவால்

இஸ்ரேலுக்கு எதிரான பிரேரணையை தாங்கள் எதிர்த்த போதிலும் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக தீவிரமான நடவடிக்கைகள் எடுப்பதில் பேரவையின் பதிவுகளோடு ஒத்திணங்கியதாக அமெரிக்கா இலேசான பதிலளித்தது. அதேநேரம் சிரியா, இலங்கை, ஈரான், லிபியா, யெமன் போன்ற நாடுகள் மீதான பேரவையின் தீர்மானங்களை அமெரிக்க அறிக்கை பாராட்டியமை தெரிந்ததே! இலங்கைக்கு எதிரான தீர்மானம் மீது ஆதரித்தும், இஸ்ரேலுக்கு எதிரான தீர்மானத்தை எதிர்த்தும் வாக்களித்த அமெரிக்காவை கேள்விக்குட்படுத்திப்பார்ப்பதில் அர்த்தமில்லை என்பதை சுட்டிக்காட்டும் ஆர்வலர்கள், அதே கேள்வியை இரு பிரேரணைகள் மீது மாறி மாறி மறுதலையான முறையில் வாக்களித்திருந்த வேறு பல நாடுகளை நோக்கியும் தொடுக்கலாம் எனத் தர்க்கிக்கின்றனர்.

மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்காவின் பங்கு பற்றிய பிரதான விடயம் யாதெனில் பேரவையில் அங்கத்துவ நாடாக இணைந்து கொள்ள ஒபாமா நிர்வாகம் தீர்மானித்தமையாகும்.

ஏனெனில் 60 வருடங்கள் பழமைவாய்ந்த மனித உரிமைகள் ஆணைக்குழுவை மாற்றியமைத்து 2006 மார்ச்சில் தாபிக்கப்பட்ட மனித உரிமைகள் பேரவையில் இணைந்து கொள்ள முன்னைய புஷ்நிர்வாகம் மறுத்தமையாகும். இலங்கையைப் பொறுத்தவரையில் ஜெனீவாவில் பிரேரணை தொடர்பில் அமெரிக்கா தவிர்ந்த ஏனைய நாடுகள் எவ்வாறு வாக்களித்தன.

ஏன் அவ்வாறு செய்தன என்ற கேள்விகளை எழுப்புவதை விட உண்மையான கேள்வி யாதெனில் ஏன், இலங்கை சிரியா, ஈரான், லிபியா, யெமன் போன்ற நாடுகளுடன் இணைத்து நோக்கப்படவேண்டும் என்பதை இலங்கையே கண்டறிய வேண்டும்.

இந்த நிலையில் நெல்சன் மண்டேலாவினால் தாபிக்கப்பட்ட உலகத் தலைவர்களை உள்ளடக்கிய மூத்தோர் குழு கருத்துரைத்ததாவது அடுத்த வருடம் மீண்டும் ஒருதடவை பேரவையின் றொக்கட்டுகளின் கீழ் வருவதை தடுக்க இலங்கை விரைவாக பணியாற்ற வேண்டும் என தெரிவித்துள்ளது.

இதனை இலங்கை அரசினால் செய்ய முடியுமானால் இஸ்ரேல் தொடர்பான அமெரிக்காவின் நிலைமையையும், பலம் பொருந்திய வகையில் சவாலுக்குட்படுத்தலாம் என்று சர்வதேச ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

எவ்வாறாயினும் ஜெனீவா தீர்மானத்தின் முன்விளைவும், பின்விளைவும் இலங்கை அரசாங்கத்தின் கரங்களிலேயே முழுமையாகவுள்ளது.

வெளிப்படையாகவும், வேறுவகையாகவும் வேறுபட்ட தகவல்கள் காணப்படுவதையும் அறிய முடிகிறது.

தெற்காசிய அமைப்பு - வழிகாட்டல் பொறிமுறை

தெற்காசிய பிராந்தியங்களின் கூட்டு என்பது நாடுகள் சேர்ந்து அமைத்துக் கொண்ட ஒரு சங்கம் போன்றாகிவிட்டது. ஆண்டுக்கொருமுறை அல்லது ஈராண்டுக்கொருமுறை தெற்காசிய பிராந்திய நாடுகள் ஒவ்வொன்றிலும் மாநாடுகளை நடத்தி பரஸ்பரம் மாறி மாறி தலைமைப் பொறுப்பை பாரங்கொடுப்பதும் பாரமெடுப்பதும் என்பது போன்றாகிவிட்ட பிராந்திய கூட்டு அமைப்பில் நாடுகளிடையேயான உள்ளகப் பிரச்சினைகள் தொடர்பில் சட்டை செய்யாதிருந்தாலும், பொதுவானதும் சர்வதேசத்தினதும் பிராந்தியத்தினதும் இருப்பில் சஞ்சலத்தை உண்டு பண்ணக்கூடிய விவகாரங்களிலாவது கரிசனை கொண்டு ஒத்துழைத்துச் செயலாற்றுவது சகலரும் ஏற்றுக்கொள்ளக்கூடியதாகும் என்று புத்திஜீவிகள் தெரிவிக்கின்றனர்.

அந்தவகையில், தெற்காசிய கூட்டின் தலைமைப் பொறுப்பு மாறி மாறிச் சென்றாலும் தெற்காசியாவின் பெருந்தலை வரும் நிரந்தர பெரிய நாடும் இந்தியாவே. சிறந்த ஜனநாயக பாரம்பரியங்களை கடைப்பிடிப்பதாக கருதப்படுகின்ற அந்த நாடு உதவியளித்தல், வழிகாட்டல் பொறிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டுமே ஒழிய முதுகில் குத்துகின்ற வேலைகளை முன்னுரிமைப்படுத்தக்கூடாது என்று முக்கியஸ்தர்கள் கூறுகின்றனர்.

மனித உரிமை மீறல்கள் தொடர்பாக குற்றஞ்சாட்டிய அமெரிக்க அனுசரணையுடனான பிரேரணைக்கு சார்பாக வாக்களித்து இரண்டு நாட்கள் கடந்த பிறகு இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் இலங்கை ஜனாதிபதிக்கு பிரேரணையிலிருந்த வாசகங்களில் மொழிச் சமநிலை உபாயத்தை அறிமுகப்படுத்துமாறு தனது அரசாங்கம் எவ்வாறு உத்தரவிட்டது என்பதை கடிதம் எழுதி சமாளிப்புச் செய்தார்.

இங்கு சுவாரஷ்யம் என்னவென்றால் வாக்களிப்புக்கு சில தினங்களுக்கு முன்பே இந்திய நிதியமைச்சர் பிரனாப் முகர்ஜி, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஷிவ்சங்கர் மேனன் போன்றோர் தனியான ஒரு நாடு குறித்த தீர்மானத்துக்கு இந்தியா வாக்களிக்காது என்றும்அந்த வகையில் இந்தத் தடவையும் அதன் நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளாது என்றும் காங்கிரஸ் கட்சிக்காரர்களிடம் கூறியிருந்தனர் என்பதாகும்.

இதேவேளையில் இந்தியா விரும்பியிருந்தால் வாக்களிக்காமல் இருந்திருக்கலாம் ஆனால் ஒரு பாடம் புகட்டுவதற்காகவே அவ்வாறு செய்ததாக பெயர் குறிப்பிட விரும்பாத இந்திய அதிகாரி தெரிவித்ததாக ஆங்கில நாளிதள் குறிப்பிட்டிருந்ததையும் இங்கு குறிப்பிட முடியும்.

இலங்கைக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் எனக்கோரிய சோனியாவே ராஜீவ் கொலை வழக்கின் கொலையாளிகளில் ஒருவரான நளினி மீதான மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக தண்டனைக்குறைப்பு செய்யுமாறு உத்தரவிட்டார். இவரது தீர்மானங்கள் துணிச்சலானதும், உணர்ச்சி மிக்கதாயுமுள்ளதாம்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.