புத் 64 இல. 10

கர வருடம் மாசி மாதம் 21ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1429 ர.ஆகிர் பிறை 11

SUNDAY MARCH 04,  2012

 
தொழில் இரகசியங்களை காப்பாற்ற முடியாதவர்கள் என்றும் என்னைப் போலேயே இருப்பர்

தொழில் இரகசியங்களை காப்பாற்ற முடியாதவர்கள் என்றும் என்னைப் போலேயே இருப்பர்
 

லியாகத் அலி

ஓவியத்திலும், எழுத்திலும், அச்சுத் தந்திரத்திலும் சாதனைகளைப் படைத்த லியாகத் அலி ஏணியாக இருந்து உயர்த்திவிட்டார் பலரை. வளர்த்து விட்டவர்கள் கைவிட்ட கலைஞனின் ஆதங்கத்தைத் திரும்பிப்பார்க்கின்றேன். அவரின் வரிகளிலேயே எண்ணக் குமுறளையும் தமிழக கவிஞனின் சாயலையும் கண்டேன்... பல கலை திறனாய்வுள்ளவரிடம் என் வினாவைத் தொடர்ந்தேன் பதில் அவர் நடையியிலேயே தருகின்றேன்.

படரக் கொம்பின்றி தரையில் கிடந்து

புழுதி படிந்து வாடிப்போன கொடியாக

என் வாழ்க்கை முடியப்போகும் நேரத்தில்

கடந்துபோன காலங்களைத்

திரும்பிப் பார்க்க சந்தர்ப்பம் அமைந்திருக்கிறது.

எதிலும் இரண்டு வகையுண்டு

என் வாழ்க்கையிலும் இரு நிலை உண்டு!

இதை -

திருமணத்திற்கு முன்

திருமணத்திற்குப் பின் என

பிரித்துப் பார்க்கலாம்!

பள்ளிக்கூட காலங்களில்

முன்வரிசைக்கு முந்திக் கொள்ளும் துடிப்பு

எதிலுமே துணிச்சல் மிக்க நடப்பு

கொஞ்சம் தலைக்கனம் கலந்த தன்னம்பிக்கை-

அறிமுகமற்ற இடத்திலும்

தலை நிமிர்த்திப் பேசும் தைரியம்!

இவையெல்லாம் மணம் முடிக்குமுன்-

என்னுடன் இணைந்திருந்த இயல்புகள்

பிஞ்சு மனதில் ஏற்படும் பதிவுகள்

பிற்காலததில் எத்தகைய பிரதிபலிப்புக்களை

ஏற்படுத்தும் என்பதற்கு என் வாழ்க்கையிலும்

எத்தனையோ உதாரணங்கள்!

சாய்ந்தமருது என்பது நான் பிறந்து, வளர்ந்து,

பயின்று பதினாறு வயது வரை வாழ்ந்த

ஊருக்குப் பெயர்,

நற்பண்புகள் என்மனதில் பதியக் காரணம்

என்னைப் பெற்றவர்களிடம் மிகுந்திருந்த

பெருந்தன்மைமிக்க குணங்கள்!

அவர்களுக்குள் வாதப் பிரதிவாதங்கள்

என்றுமே எழுந்ததில்லை.

விட்டுக் கொடுத்து வாழும்

தம்பதிகளாய் ஊருக்கே எடுத்துக்காட்டாக

விளங்கினார்கள்.

இன்றைய என்நிலை இரத்தம் கொட்டக்

கொட்ட என்தலையில் நானே அடித்துக்

கொள்ள வேண்டியிருக்கிறது- புரிந்துணர்வு

அற்ற வெளி உலக வாழ்வு...

சாய்ந்தமருது அல் - ஹிலால் வித்தியாலயம்

அன்று ‘அரசினர் ஆண்கள் பாடசாலை’ என்று பெயர் கொண்டிருந்தது. ‘அரிவரி’ படிக்க ஆரம்பப் பாடசாலையில் சேர்க்கப்பட்டேன். அகர வரிசை சொல்லித்தரவந்த முதல் நாளே அபுசாலி மாஸ்டர் அவர்கள் என் உருவத்தை பென்ஸிலால் வரைந்து காண்பித்தது இன்றும் என் நினைவில் நிற்கிறது! பிற்காலத்தில் சித்திரம் வரைவதில் பயிற்சி செய்து தேர்ச்சி பெற இதுவே காரணம். ஐந்தாம் வகுப்பு வரை தமிழை எழுத வாசிக்க கற்றுத் தந்த அனைத்து ஆசிரியர்களும் இனிய குணம் கொண்டவர்களாகவே இருந்தார்கள்.

ஆறாம் வகுப்பு முதல் சீனியர் ஸ்கூலுக்கு அனுப்பப்பட்டேன். இன்று அது சாஹிரா கல்லூரி என பெரியதாய் வளர்ந்து நிற்கிறது.

எழுத்தார்வம் வளர மிகவும் தூண்டுகோலாக இருந்தவர் சாஹிரா கல்லூரியில் கடமையாற்றியவர் காலஞ்சென்ற ஏ. யூ. எம். ஏ. கரீம் மாஸ்டர் அவர்கள் தான். அவர் ஒரு கவிஞரும், எழுத்தாளருமாவார்.

எனது முதலாவது சிறுகதை கல்லூரி ஆண்டு விழா மலருக்குத் தெரிவானது. ஆனால் இதழ் விரிக்க முடியாமல் போனதால் அதனை ‘சிரித்திரன்’ பத்திரிகைக்கு அனுப்பியபோது போட்டியில் சிறப்புக் கதையென தெரிவானது.

எனது பதினைந்தாவது வயதில் தினகரன் பிரதம ஆசிரியர் சிவகுருநாதன் அவர்களைச் சந்திக்கச் சென்றேன். சிறிய வயது என்று என்னை அவர் அலட்சியப்படுத்தவில்லை. அவரது நட்பு தினகரனிலிருந்து ஓய்வு பெற்ற பிறகும் தொடர்ந்தது. கொழும்பிலிருந்து வெளிவந்த ‘தினத்தந்தி’ பத்திரிகையில் அவர் ஓய்வுபெற்ற பின் ஆசிரியராக இருந்தபோது,

ஒப் செட் பிளேட்’தயாரிக்கும் வேலை தொடர்ந்து எனக்கே தரப்பட்டது. நான் அச்சகம் நடத்தி வந்தபோது நியாயமற்ற குற்றச்சாட்டை ஒரு தொழிலாளி சுமத்தியதால் எனக்காக நீதிமன்றம் வந்து வாதாடினார். இலவசமாக! எனது வேண்டுகோளை மதித்து தினகரனில் ஒருவருக்கு புரூப்ரிடர், வேலையும் போட்டுத் தந்திருக்கிறார். ஒருமுறை நான் அச்சில் வழங்கிய கல்லூரி ஆண்டுமலர் பற்றி விமர்சனங்கள் வாரா வாரம் தினகரனில் வந்துகொண்டிருந்தது.

இது பற்றி திரு. சிவகுருநாதன் ஐயா அவர்களிடம் சிலர் முறையிட்டபோது தனிப்பட்ட விரோதம் காரணமாக அப்படிச் செய்தவர்களைக் கண்டித்ததுடன் காரசாரமாக எழுதப்பட்ட என் கடிதத்தையும் ஒருவரி கூடக் குறைக்காமல் தினகரனில் பிரசுரிக்கச் செய்தார். இதுபோல் எத்தனையோ நிகழ்வுகள் எழுத இடம்போதாது!

‘தினபதி’ காரியாலயத்தில் கடமையாற்றிய மாஸ்டர் சிவலிங்கம் அவர்கள் தான் சிறுவர் மலரில் சித்திரம் வரையச் சொல்லி என்னை ஒரு ஓவியனாக்க உதவி செய்தார்.

முதல் சித்திரத் தொடர்கதை 1978ல் வீரகேசரி ஆசிரியர் திரு. சிவப்பிரகாசம் அவர்களது உதவியால் ‘மித்திரன்’ தினசரியில் வெளியானது.

‘வீரகேசரி’ முன்னாள் ஆசிரியர் திரு. சிவப்பிரகாசம் அவர்கள் முதன் முதலாக நான் வரைந்த சித்திரத் தொடர்கதையை பிரசுரித்து அதற்கான காசோலையும் தந்து உற்சாகப் படுத்தினார். எழுத்தாளர் எஸ். ஐ. நாகூர் கனி அவர்களது அறிமுகத்தால் காங்கிரஸ் பத்திரிகையை ஒப்செட் வண்ணத்தில் அச்சிட்டுக் கொடுத்தபோது திரு. சிவநாயகம் (தினபதி) அவர்கள் பதினான்கு நாட்களில் தொண்டமானின் வெற்றியின் ரகசியம் என்ற நூலை கொம்பியூட்டர் டைப் செட்டிங் செய்து ஓப் செட் பிரிண்டிங் செய்து தரும்படி பணித்தார். தயங்கி நின்ற என்னை தைரியப்படுத்தி வெற்றிகரமாக வேலையை செய்து முடிக்கவைத்தார். கொம்பியூட்டர் டைப் செட்டிங் தமிழில் அறிமுகம் பரவாத அக் காலத்தில் 80 பக்கம் கொண்ட புத்தகத்தை இரண்டே நாளில் டைப் செய்து எடுத்தது ஒரு சாதனைக்குரியதாக இருந்தது.

முதன் முதலாக ஓப்செட் பிரிண்டிங் அனுபவம் 1977 ல்தான் கிடைத்தது. புதிய பாராளுமன்ற கட்டிடத் திறப்பு விழா மலர் அச்சிடப்பட்டபோது தமிழ் பகுதிப் பிரிவில் வேலை பார்க்கும் சந்தர்ப்பம் அமைந்தது, மிகவும் பிரயோசனமாக இருந்தது. ஓப் செட் பிளேட் தயாரிக்கும் முறையைக் கவனித்தபோது அதன் தாற்பரியத்தை அறிந்து கொண்டேன்.

ஓப்செட் பிளேட் தயாரிப்பதற்கு அப்போதெல்லாம் நெகடிவ், அல்லது பொஸிடிவ் ‘பிலிம் முறைதான் பயன்படுத்தப்பட்டது. அதனை ட்ரேஸிங் பேப்பர் மூலம் செய்து கொள்ளலாம் என்பதை 1980 களில் நிரூபித்துக் காட்டினேன். இது எனது சுயமான கண்டுபிடிப்பு. எனது தம்பி இஸ்மாயில் ஒரு கட்டிடக் கலைஞராக இருந்து படங்களை வரையப் பயன்படுத்திய உபகரணங்களின் உதவி தான் எனது கண்டுபிடிப்புக்குக் காரணம்.

இதன் மூலம் வழமையான கட்டணத்திலிருந்து 50 சதவிகிதம் வாடிக்கையாளர்களுக்கு குறைத்து பிளேட் தயாரித்துக்கொடுக்கக்கூடியதாக இருந்தது. பல நூறு பக்கங்கள் கொண்ட புத்தகங்களை மறுபதிப்பு செய்வதற்கு சிங்கள மொழி பேசும் வெளியீட்டார்கள் எனக்கு நிரந்தர வாடிக்கையாளர்களாக அமைந்தார்கள்.

இதே தொழிலைச் செய்து வந்த ஒரு சிலர் எனது கண்டுபிடிப்பை பின்பற்ற ஆரம்பித்தனர். இப்பொழுது லேசர் பிரிண்டர் மூலம் அனைவரும் மிகச் சுலபமாக பிளேட் தயாரிக்க ட்ரேஸிங் பேப்பரைப் பயன்படுத்துகிறார்கள்.

ட்ரேஸிங் பேப்பரில் நான்கு வர்ண படங்களையும் தயாரிக்கலாம். இந்த வழியில் பத்திரிகைகள் அச்சிட்டு அதிக லாபம் அடையலாம் என்பதை உணர்ந்த தமிழ் மொழி அறியாத ஒரு நண்பருக்கு ஐந்து வருடங்களாக பத்திரிகைகள் பிரிண்ட் செய்து கொடுத்து வந்தேன். அதன் பிறகு எனது வழிகாட்டலில் தனியாக நின்று செயற்படுத்தி பல பத்திரிகைகளை வெளியிட்டு இன்றும் வெற்றிக் கொடி நாட்டிவருகிறார். இதே வழியினை பின்பற்றிய பலர் வசதிபடைத்தவர்களாக வாழ்கின்றார்கள். என்னால் மட்டும் முடியாதிருப்பதற்குக் காரணம் ஏணியாக நான் இருப்பதனால் தான்! தொழில் ரகசியங்களைப் காப்பாற்ற முடியாதவர்கள் என்றும் என்னைப் போலவே இருப்பார்கள். முன்னேற்றம் இல்லாமல்!

இதுவரை நான் செய்த தொழிலில் அடைந்த லாபத்தை விட இழந்த தொகைகள் தான் அதிகம்! என் வியர்வையை உறிஞ்சி, ரத்தத்தைக் குடித்தவர்கள் மனித நேயத்தை விற்றுப் பிழைப்பு நடத்தியவர் என்று எத்தனை எத்தனையோ பேர் இன்னும் இருக்கவே செய்கிறார்கள்.

கடந்து சென்ற காலங்களைத் திரும்பிப் பார்க்கும்போது சித்திரத்திலும், எழுத்திலும், அச்சுத் தந்திரத்திலும் எத்தனையோ சாதனைகளைச் செய்திருப்பதாக என்னைப்பற்றிச் சிலர் சொல்வது உண்டு!

எனது முதல் சித்திரம் ‘தினபதி’யில் சிறுவர் மலர் பகுதியை நடத்தி வந்த மாஸ்டர் சிவலிங்கம் அவர்களது தயவால் இடம்பெற்றது.

கலைத் துறையில் எப்படி ஈடுபாடு?

வானொலி, பத்திரிகைகளின் ஈர்ப்பு, அதனுடன் கலந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் அடிமனதில் பதிந்து வளர்ந்து படரத் தவித்த போது கொழுகொம்பாக கொழும்பை நாட நேரிட்டது. ஒருமுறை இலங்கை வானொலியில் வாலிபர் வட்டம் நிகழ்ச்சிக்கு சென்றேன். அன்றைய நாட்களில் அதைத் தயாரித்து வழங்கிய சரா. இமானுவேல் அவர்கள் எதைப் பற்றியாவது பேசும்படி பணித்தார். எனது அனுபவங்களில் ஒருபக்கம் கட்டுரை பற்றிச் சொன்னதும் மிகவும் பாராட்டி அதை வாசிக்கச் செய்தார்.

“நான் பிறந்து வளர்ந்த கிராமத்தில் குப்பி லாம்பு வெளிச்சத்தில் காரியங்களைச் செய்து வந்த வேளையில் என் கையில் ஒரு டோர்ச் லைட் இருந்தது. அதன் வெளிச்சத்தை குப்பிலாம்புக்குமுன் ஒளியைக்காட்டி பெருமைப்பட்டுக்கொள்வேன். ஒரு முறை நகரப் பகுதிக்கு தந்தையுடன் செல்ல நேரிட்டபோது அதே டோர்ச் லைட்டையும் எடுத்துச்சென்றேன். நகரத்தின் தெருவிளக்கின் முன் எனது டோர்ச் லைட்டைக்காட்டிய போது என் தலைக்கனமும் தற்பெருமையும் போன இடம் தெரியவில்லை.” “என்பதே அதன் சுருக்கம் இது போன்ற கட்டுரைகளை வாராவாரம் ஒலிபரப்ப சரா. இமானுவேல் இடம் தந்ததுடன் நாடகங்கள் எழுதுவதற்கும் சந்தர்ப்பங்களை ஏற்படுத்தினார்.

இன்றைய தொலைக்காட்சிகளில் இடம் பெரும் ‘மெகா தொடர்கள்’ போல் கூட்டுக்கதைகலப்பு நாடகங்கள்! இளம் நெஞ்சங்களை கவரும் விதத்தில் வாராவாரம் கற்பனைகளை வளர்த்தது. வாலிபர் வட்டம் நிகழ்ச்சியில் பங்குபற்ற ஆர்வம் கொண்ட அனைத்துப் பேருக்கும் சந்தர்ப்பம் கொடுத்த சரா. இமானுவேல் அவர்களது நிகழ்ச்சிக் காலம் முடியும் வரை தொடராய் வந்து முடிவுபெற்றது. அது சம்பந்தப்பட்ட அத்தனை பேரும் மறக்க முடியாத பதிவு! இன்றும் பாராட்டுபவர்கள் இருக்கின்றனர்.! இதனை அவதானித்து வந்த அறிவிப்பாளர் விமல் சொக்கநாதன் அவர்கள் என்னை விசேடமாக அழைத்து பேட்டி எடுத்து ஒலிபரப்புச் செய்ததும் என்னை மகிழ்வித்த விடயங்களில் ஒன்று.

1970 களில் தென்னிந்திய பத்திரிகை இறக்குமதிக் கட்டுப்பாடு விதிக்கப்பட்ட காலங்களில் குட்டிப் பத்திரிகைகளின் வரவுகள் அதிகரித்தன. அவற்றுக்கு நான் எழுதிய ஆக்கங்கள் பல. தேசிய பத்திரிகைகளில் மட்டுமே ‘செக்’ தருவார்கள். அதிலும் “தினகரன்” பத்திரிகை ஒருவர் தலைப்புக்குக் கூட மறக்ககாமல் “செக்” அனுப்பி வைப்பார்கள்.

அன்றைய காலங்களில் தமிழ் நாடக விளம்பரங்களில் போஸ்டர்களை கையால் வரைந்து கவர்ச்சி வசனங்களை வரைந்து கொடுப்பதற்கு எனக்குக் கிடைப்பது பாராட்டு வார்த்தைகள் மட்டுமே! ஒரு சினிமா வாரப்பத்திரிகைக்கு படங்கள் வரைவதற்கும், கட்டுரைதொடர்கதைகள் எழுதுவதற்கும் சில பக்கங்களை ஒதுக்கித்தந்தார்கள். அதற்குத் தரப்பட்ட டேட் செக்குகள் திரும்பி வர ஆரம்பித்தன. இதற்காக பிரபல வானொலி அறிவிப்பாளரும் நண்பருமான விமல் சொக்கநாதன் வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார். அதற்குப் பதிலாக தன்னிடமிருந்த சினிமா டயரிகளைக் கொண்டு வந்து தந்தது தனது வசதியீனத்தைக் காட்டி மன்னிப்புக் கேட்டார். பத்திரிகை நடத்தி வந்தவர்.

இதனால் வாழ்க்கைச் செலவை ஈடுசெய்ய கொமர்சியஸ் ஆர்ட் அச்சுத்துறை போன்றவற்றில் ஈடுபாடு அதிகரித்தது. அன்றைய காலங்களில் “லேக் ஹவுஸ்” ஸ்தாபனத்தாரால் வெளியிடப்பட்டுவந்த சத்துட்ட எனும் சிங்கள முதலாவது சித்திர வாரமலர் மக்கள் ஆதரவைப் பெற்றுவரும் போது மற்றும் சிலருக்கு ஆசை ஏற்பட்டு வெவ்வேறு அச்சகத்தார் சித்திரக்கதை வார இதழ்களை வெளியிட ஆரம்பித்தனர். அவற்றில் சிலவற்றின் விற்பனை வேகத்தை அவதானித்த எனக்கு தமிழில் ஒரு சித்திரவாரப் பத்திரிகை ஆரம்பிக்கும் ஆசை ஏற்பட்டது.

அதற்கு ஒருவர் முன்வந்தார். ‘சித்திரலியா’ என்ற எனது புனை பெயரில் விளம்பரப்படுத்தப்பட்டது. பத்திரிகைக்கான சகல நுணுக்கங்களையும் கற்றுக் கொடுத்தேன். பத்திரிகை வெளிவரும் முன்பே கருத்துவேற்றுமை காரணமாக நான் ஒதுங்கிக்கொண்டேன். எனது பெயரில் ஒரு பகுதியை ஒதுக்கி விட்டு பத்திரிகை வெளியாக ஆரம்பித்தது.

கொஞ்ச நாட்களில் சித்திரம் வரைபவர்கள் கூடுதல் வேதனம் கேட்டு,வேலைநிறுத்தம் செய்ய முற்பட்ட நேரத்தில் அதன், நடத்துனருக்கு எனது உதவி தேவைப்பட்டது. எதுவித ஒப்பந்தமும் இன்றி, தனித்து நின்று இரவுபகலாக வேலை செய்து பத்திரிகை வெளிவரசெய்தேன். எனது சில புதுமை ஐடியாக்களால் விற்பனையும் வாரம் 12 ஆயிரத்தைத் தாண்டிவரும் வேளையில், அதன் ஆசிரியராக எனது பெயரைப் போடவேண்டும். என்று கேட்ட போது பதவியா, பணமா என்ற வாதத்தை எழுப்பினார். பணம் கிடைக்காமல் பதிவியால் என்ன பிரயோசனம் என்ற எண்ணத்தால் நான் விலகிக் கொண்டேன். பிரபலமாக வேண்டும் என்ற ஆசை எனக்கு உண்டு எனக்கேற்பட்ட ஏமாற்றங்கள் எட்டி உதைத்த ஏணியானேன்.

குடும்பத்தைப் பற்றி....

தந்தை 1985 ஜனவரி 30ல் மறைந்துவிட்டார். தாயார் இருக்கிறார் தங்கையுடன் கூடப் பிறந்தவர்கள் இரண்டு தம்பிகள் இறுதியாக ஒரு தங்கை. தந்தை இறந்தபிறகு எனக்குரிய கடமைகளை தம்பி இஸ்மாயில்தான் அன்று முதல் இன்றுவரை பொறுப்பாய் இருந்து கவனித்து வருகிறார். இரண்டாவது தம்பி கரீம் அரசாங்கப் பாடசாலை ஒன்றின் அதிபர் கடைசித் தங்கை அறிவும் ஆற்றலும் மிக்க ஐந்து அழகிய குழந்தைகளைப் பெற்று கணவருடன் ஆனந்தமாக வாழ்கின்றார். சொந்த பந்தம் என்று நான் எண்ணுவது என்னையும் ஒரு மனிதன் என எண்ணி வந்து பழகிச் செல்லும் நல்ல சில நெஞ்சங்கள்! என் வாடிக்கையாளர்கள்.

உறவு சொல்ல எனக்குகென்று இருப்பது மூன்று பெண்ணும் ஒரு ஆணும் மூத்தமகள் மிஸ்லாஎனது தொழிலுக்கு மிகவும் சிறப்பான பங்காற்றல்களைச் செய்து வரும் போது திருமணம் முடிந்து இரண்டு குழந்தைகளைப் பெற்று கணவருடன் வசதியாக வாழ்கின்றார். அதேபோலவே கடைசிமகள் kனத் மணம் முடித்து வைத்தோம். இன்று வெளிநாடொன்றில் கணவருடன் மிகவும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார். கடைசிமகன் அரபாத்கான் ஆறுவயதிலேயே கம்பியூட்டரைக் கற்க ஆரம்பித்து தி/ழி வகுப்பில் பயிலும் இந்த வேளையும் எனது தொழிலுக்கு உதவிவருகிறார். இன்றைய எனது நிலைமை அளவான வருமானம், அமைதியான வாழ்க்கை!

பத்தாண்டுகளுக்கு முன் தினசரி பல ஆயிரங்கள் வந்தும் கிடைக்காத நிம்மதியை வரவு குறைந்த நிலையிலும் அமைதியாக வாழ உதவி வரும் எல்லாம் வல்ல இறைவனுக்குத்தான் என்றென்றும் எனது நன்றிகள்!

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.