புத் 64 இல. 10

கர வருடம் மாசி மாதம் 21ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1429 ர.ஆகிர் பிறை 11

SUNDAY MARCH 04,  2012

கண்டிப்பு உள்ள இடத்தில் காரியம் இருக்கும்

கண்டிப்பு உள்ள இடத்தில் காரியம் இருக்கும்

அது பெரியவளவுதான், அங்கு அளவான இரண்டு கல்வீடுகள் உள்ளன. தன் இருவீட்டையும் வளவையும் தன் இருமகள்மாருக்கும் சீதனமாகக் கொடுத்து குடியிருத்தி இருவீட்டுக்கும் பொதுவாக இருந்து வருகிறார்.

இரண்டு வீட்டைச் சுற்றியும் பயன்தரும் மரங்கள் சோலையாக வளர்ந்து நிற்கின்றன. எல்லாம் ஆசிரியரின் கைவண்ணம்தான்.

வீடுகளுக்கு முன்னால் பூமரங்கள் பூத்துச் சிரிக்கின்றண! அவை வந்தமருமக்களின் கைவண்ணம்! இருவீட்டுக்கும் பொதுவாக கிணறும் மலகூடமும் உண்டு. அக்காள் குடும்பத்துக்கும் தங்காள் குடும்பத்துக்கும் இடையில் எந்தப் பிரச்சினையும் இல்லை இருதசாப்தமாக! இனிமேலும் ஏற்படுவதற்கான எந்த அறிகுறியும் இல்லை!

இரண்டு வீட்டுப் பிள்ளைகளும் ஒரு வீட்டுப் பிள்ளைகள் போலவே கலந்து உறவாடுவார்கள்; கூடி ஆடிப்பாடித்திரிவார்கள்! ஏகாம்பரம் தம்பதிகளுக்கு இதையிட்டு மனஆறுதல் ஒன்று இருக்கிறது. பேரப்பிள்ளைகளின் நடவடிக்கைகளை பார்த்துக் கொண்டிருப்பதே பேரானந்தம்தான்!

முதலில் அக்காள்வீட்டில் என்ன நடக்கிறது என்று பார்க்கலாம்.... தேனீரை கணவனிடம் அவனது அறைக்குள் வந்து மேசையில் வைத்துவிட்டுப் போனாள் மனோகரி, கணவன் கதிர்காமநாதன் மேசையடியில் இருந்து எழுதிக் கொண்டிருந்தான். அவரும் ஒரு ஆசிரியர்தான். மாணவர்களின் ஆக்கங்களைத்தான் படித்து திருத்த வேலைகளைச் செய்கிறார். பிள்ளைகள் மூவரும் அடுத்த அறையில் இருந்து படிக்கின்றனர்.

மேசையில் வைத்ததேனீரை உறிஞ்சியதும் கதிர்காமநாதன் அந்த அதிகாலைவேளையிலும் வீடே அதிரும்படி சத்தமிட்டார்! “தேத்தண்ணீக்கு சீனி கூடப் போடவேணாம் எண்டு எத்தினதரம் சொல்லியிருப்பேன்! கேட்டாத்தான! கலியாணம் முடிச்சி எத்தின வருசமாகுது. இன்னும் எனக்கேற்ற முறையில் தேத்தண்ணியக் கூட சரியாகத் தர தெரியவில்லை உமக்கு!”

“நேற்று சரியாத்தானே தந்தநான், கணக்காயிருக்கு எண்டுதானே சொன்னநீங்கள்! இண்டைக்கு எப்பன் கூடிப்போச்சு அதுக்கேன் பெரிய தொனிவைச்சு அற்பனுக்கெல்லாம் சண்டை போடுறியள்! “சின்னச் சின்ன விசயங்கள் எல்லாம் சேர்ந்ததுதானே முழுவாழ்க்கை. சின்னதுகளிலையும் திருப்திப்படாட்டி அது வாழ்க்கையாகுமா! தேத்தண்ணீக்கு அளவாச்சீனி போடுறதுக்கே காலங்காத்தால ஒவ்வொருநாளும் சண்டைபோட வேண்டியிருக்கு! சண்ட பிடிச்ச அண்டைக்கு அடுத்தநாள் அளவாக்கிடைக்கும். பிறகு, வேதாளம் முருங்கமரத்தில ஏறும்! தேன் மாதிரி இனிப்பாயிருக்கும்! உன்ர அம்மா மாதிரி என்னையும் பிள்ளைகளையும் சீனிவருத்தக்காரர் ஆக்கப்பார்க்கிறியோ! சலரோகம்வந்த பிறகா இனிப்பக்குறைக்கிறது! அதுவும் இதுபரம்பரையாகவும் வரும்! ஆகையால நாங்கள் வேளைக்கே முன்னெச்சரிக்கையாக பாதுகாப்பாக இருந்தால் குடும்பத்துக்கே நல்லதுதானே.”

“எனக்கு இனிப்பில்லாமல் ஒண்டும் இறங்காது! அது சீனிவருத்தம் வாறதெண்டா வரட்டும்! பிறகுபார்ப்பம்!.... நீங்க எங்கட அம்மாவப் பகிடி பண்ணுaங்க, உங்கட அப்பருக்கு வாதம் வந்து மடக்கி கால இழுத்து நடந்தது தெரியாதோ!”

“தெரியும், அதாலதான் நான் குளிர்ந்தசாப்பாடுகள வாய்வுச் சாப்பாடுகள குறைக்கிறன். நீ கேட்டாத்தானே! நீவிரும்புனத தாறதிண்டு நானும் உன்ர அம்மாவப் போல என்ர அப்பரப்போல வருத்தக்காரன் ஆகவேண்டியதுதான்!... மற்றவங்கள்ற அனுபவத்தில இருந்து நாங்கள் பாடம்படிச்சு திருந்தி நடக்கவேணும்! தெரியாட்டி தெரிஞ்சவங்கள் சொல்லுறதக்கேட்டு நடக்க வேண்ணும்.... அடக்கடவுளே! தேத்தண்ணி குடிக்கிறதுக்கே இவ்வளவு பேச்சா! வாக்குவாதமா! இதுவுமொரு வாழ்க்கையா!”

என்று பேசிய கதிர்காமநாதன் தேனீர் கோப்பையை தட்டிவிட்டார்! அது கொட்டிச் சிந்தியது! அத்தோடு அவர் ஆத்திரம் அடங்கவில்லை. அன்றிலிருந்து மனைவியோடு கதைபேச்சை நிறுத்திக் கொண்டார்! முக்கியமான கோரிக்கைகளை பிள்ளைகள் மூலமாக நிறைவேற்றிக் கொள்வார்! அவர் மனைவிக்கு கொடுக்கும் தண்டனை இப்படித்தான்!

மனோகரிக்கு இந்தத் தண்டனைமிகவும் கொடூரமானதாகவே தோன்றியது! அடியை திட்டை ஆக்கினையை பொறுக்கலாம் ஆனால் ஒரு வீட்டுக்குள் இருந்து கொண்டு இரண்டு பேரும் கதை பேச்சே இல்லாமல் இருப்பதை அவளால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை! இது அதிகரித்த தண்டனையாகவே தோன்றும்!

அவளாகவே வந்து சமாதானமாகிவிடுவாள்!

அன்று சாப்பாட்டைக் கொண்டு வந்து வைத்தாள் மனோகரி. கதிர்காமநாதனுக்கு தட்டைப் பார்த்ததும் எரிச்சலாகவந்தது! “என்ன இது! வெள்ளச் சோறாக இருக்குது. எத்தின நாளப்பா சொல்லுறன் தவிடில்லாத அரிசியாலதான் கனவருத்தம்வரும், முக்கியமாக சலரோகம் வரும் என்று! தவிட்டிலதான் நார்ச்சத்து கனியச்சத்து எல்லாம் இருக்கு. இது உடலுக்கு எவ்வளவோ பாதுகாப்பு சொன்னால் கேட்டால்த்தானே!”

“இந்த வீட்டில் நீங்கள் மட்டும்தானே சாப்பிடுறியள்? பிள்ளைகள் குத்தரிசி எண்டால் சாப்பிடாதுகள்! வெள்ளைப்பச்சை அரிசிச்சோறு தட்டிலபோட்டால் மல்லிகைப்பூமாதிரி எவ்வளவு வடிவா இருக்கும், பார்க்கவே ஆசையாயிருக்கும்! பிள்ளைகள் என் அம்மாவும் விரும்பிச்சாப்பிடுவா! தவிட்டரிசி எண்டா நீங்க மட்டும்தான் சாப்பிடுவியள்! உங்களுக்குக் கெண்டு தனிய உலைவைக்க ஏலுமோ? அதுகும் தவிட்டரிசி எண்டால் கனநேரம் செல்லும்; விறகும் கனக்கையாக முடியும்”

“ஓ, நீங்க விரும்புற மாதிரிச்சாப்பிட்டால் வருத்தங்களும் கனக்கையா வரும்! கண்ணுக்கு அழகு, வாய்க்கு ருசிபார்த்துச் சாப்பிடுaங்களே அல்லாமல், உடம்புக்கு எது நல்லது எண்டு பார்த்துச் சாப்பிடுறியள் இல்லை! நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் அப்படிப்பார்த்தால் இந்த ஊரில நான்தான் பணக்காரன்! ஒருவருத்தமுமில்லாமல் எவ்வளவு சுகதேகியாக இருக்கிறன்! அதக் குழப்பப்பார்க்கிaங்களோ? நான் மட்டும் ஆரோக்கியமாக இருந்தாக் காணாது வீட்டில எல்லாரும் நோயில்லாமல் இருக்க வேணுமெண்டு தான் நான் பாடுபடுகிறன், அதப்புரிஞ்சுக்கோ!”

“நீங்கள் தின்னுறது குடிக்கிறதில தான் நூதனம் பார்த்துக் கொண்டு இருங்கோ, எங்கையும் நன்மை தீமைக்கு சபை சந்திக்கு உங்களோட வர எனக்கு வெக்கமாயிருக்கு! அங்க வேற ஆம்பிளைகள் பெண்டில்மார எவ்வளவு வடிவா சோடிச்சு கொண்டு வந்து இருத்துறாங்கள்! அருகுப்பட்டுகளாலயும் நகைநட்டுகளாலயும் எவ்வளவு வடிவா மினுங்குறாளுகள்! அவளுகளுக்கும் பெருமைக்குணம்! திமிரில இருப்பாளவை. எங்கட கழுத்தையும் காதையும் பார்த்துப் போட்டு கதைகேட்டாலும் கதைக்காமல் வெட்டிக் கொண்டு இருப்பாளவை! இதெல்லாம் ஆராலவந்தது! எனக்கு ஆனமானபுருசன் கிடைக்காததாலதானே வந்தது! சும்மா புத்தகத்தையும் பேனையையும் தூக்கி வைச்சுக் கொண்டு தான் பெரிய அறிவாளி எண்ட நினைப்பு! சும்மா சத்தம் போடவும் எரிஞ்சுவிழவும்தான் தெரியும். வேறொன்றும் தெரியாது”

மனோகரி என்ன, வாய்ச்சண்டை என்றுவந்துவிட்டால் எந்த சுந்தரியும் விட்டுக் கொடுப்பார்களா என்ன! மூன்றங்குல நாவால் ஆறடிமனிதனை வீழ்த்தியே விடுவார்கள்! என்றாலும் வாத்தியார் அவ்வளவு சுலபத்தில் வீழ்ந்துவிடுபவர் அல்ல!

“நீ அவங்கள்ற காதிலகழுத்தில மினுங்குறதுகளப் பார்த்துப் போட்டு எரிச்சல் பொறாமைப்பட்டு, இஞ்ச என்னில வந்து ஏறிவிழுகிறாய்! அவங்கள்ற உடம்பில எத்தனவருத்தம் இருக்கு, உள்ள எத்தின அழுகல் கிடக்கு. நோய்க்கிருமி கிடக்கு எண்டு உனக்குத் தெரியுமா? சும்மா பகட்டப்பாத்துப் போட்டு நிம்மதியில்லாமல் தவிக்கிறாய்!

நாளைக்கு வைத்தியரிட்ட எல்லாத்தையும் அவிட்டுப் போட்டுக் காட்டுவினம்! சோதிப்பினம்! இது உனக்குத் தெரியுமா? அவங்கள்ற குடும்பத்துக்குள்ள, அயல்ல எத்தனையோ பிரச்சினைகள் நடக்கும்! இதெல்லாம் உனக்குத் தெரியுமா?”

இந்த வாய்ச்சண்டையால் அண்டைய சாப்பாடு சாப்பிடவில்லை வாத்தியார். அது அப்படியே கிடந்தது! வாத்தியாருக்குக் கடும் கோபம் வந்துவிட்டால் பகிஸ்கரிப்பில் ஒத்துழையாமைப் போராட்டத்தில் இறங்கிவிடுவார்! கதைபேச்சை நிறுத்தியதோடு வீட்டிலேயே சாப்பிடவும்மாட்டார்! பக்கத்திலே சாப்பாட்டுக் கடையில் வயிற்றுப்பாட்டை பார்த்துக் கொள்ளுவார்! கடைச்சாப்பாடு என்றும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கும்! மலிவு பார்த்துச்சமைப்பார்கள் அவர்கள் மேசையில் வைத்ததைச் சாப்பிட வேண்டியதுதான்! ஒரேவகையான கறிவகைகள் ஒவ்¦¡வருநாளும் இருக்கும்! அப்பளம் தவறாமல் இருக்கும். தவிட்டரிசையை காண முடியாது. ஒரே எண்ணைச் சாப்பாடுதான்!

வாத்தியாருக்கு மனக்கிலேசம்தான்! என்றாலும் மனையாளுக்கு தகுந்த பாடம் படிப்பிக்க வேண்டும் என்ற ஆதங்கத்தில் இந்த ஒவ்வாமைக்கொடுமைகளை எல்லாம் சகித்துக் கொள்வார்! இவர் உள்மனது கெஞ்சும்! மனையாள் வலியவந்து கதைத்து சமாதானம் ஆகவேண்டும் என்று ஏங்கும்!

ஆனால் அவளோ கொஞ்சமேனும் கிறங்குவதாயில்லை! திரும்பியும் பார்ப்பதாயில்லை! சில நாட்கள் இப்படியேகழிம், என்றாலும் பெண்மனம் மென்மையானது; இளகிய மனம் கொண்டது! மனோகரிதானாகவே வலிந்து கதைக்கத் தொடங்குவாள்;

“சாப்பாடு போட்டிருக்கு சாப்பிடுங்கோ” என்பாள். என்றாலும் இவர் செவிடன் போல நடந்து கொள்வார். சட்டையைப் போட்டுக் கொண்டு கிளம்பி விடுவார் கடைக்கு! இவள் சாப்பிடச் சொன்னால் போதுமா? வந்துமன்னிப்புக் கேக்க வேணும்; இனி இப்படியெல்லாம் பேசமாட்டேன்; உங்கள் சொற்படி கேட்டு நடப்பேன் என்று ஒருவார்த்தை சொன்னால் போதும். அவர் பழைய நிலைக்குத் திரும்பிவிடுவார்! ஆனால் அதுதான் நடப்பதாயில்லை. அவளும் பிடிவாதக்காரிதான்! ஊமை நாடகம் தொடரும்....! ஆசிரியரின் பகிஸ்கரிப்பு தவிடு பொடியாக்கிக் கொண்டே இருக்கும்!

(மிகுதி அடுத்தவாரம்)

(கடந்தவார தொடர்)

திடீரென்று ஒருநாள் இரவு வாத்தியார்மகள் கூக்குரலிட்டாள்! எல்லோருடையவும் தூக்கம் கலைந்தது! வாத்தியாரும் அறையண்டைவந்து எட்டிப்பார்த்தார். மகள் வயிற்றுவலியால் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறாள்! தாய் மனோகரி ஆசுவாசப்படுத்திக் கொண்டிருக்கிறாள்! அவள் கூப்பாடு கூடிக் கொண்டே இருக்கிறது!

எட்டிநிற்கும் கணவனைக் கண்டு கொண்டாள் மனைவி “என்னப்பா, பார்த்துக் கொண்டு நிற்குaங்க! கெதியா ஆட்டோவப்புடியுங்க ஆசுப்பத்திரிக்குக் கொண்டு போகவேணும்!” சத்தமிட்டாள். அவர் பதைபதைப்போடு ஓடிப்போய் நான்காவது வளவில் வெளிப்படைலயில் நிறுத்தியிருக்கும் முச்சக்கரத்தை அழுத்த அவன் தூக்கம் கலைந்து வந்து அவர்கள் வீட்டுக்கு முன்னால் நிறுத்த, இருவருமாக மகளைத் தூக்கிக் கொண்டு வைத்தயமனை ஏக, வைத்திய உதவியைநாட, ஒருவருக்கொருவர் ஆறுதல் சொல்ல, இருவரும் சேர்ந்து ஒத்துழைப்புவழங்க, பிடிவாதம் தளர்ந்து சமாதான விளக்கு எரிந்தது!

முன்பும் ஒருமுறை இப்படித்தான், இருவரும் கதைபேச்சு இல்லாமல் இருந்து கதிர்காமநாதன் பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுக் கொண்டு இருவரும் வன்மம் வைராக்கியத்தில் ஈடுபட்டு வரும்நாளில், பெற்றார் ஏகாம்பரம் தம்பதிகள் சமாதானம் சக வாழ்வு ஏற்படாதா என்று ஏங்கி வரும் போதில், கதிர்காமநாதனின் தங்கை குடும்பத்தோடு வந்து சேர்ந்தாள் வெளிநாட்டில் இருந்து!

கல்யாணம் முடித்து வெளிநாடு போயின பின் இப்போதுதான் வந்திருக்கிறாள் தங்கை! அவளுக்கு பிள்ளைகள் கணவனுக்கும் திருகோணமலையின் முக்கியதலங்களை காட்சிகளை எல்லாம் காட்டி மகிழ்விக்க வேண்டும்! நன்கு அன்புடன் உபசரித்து விருந்தோம்பல் செய்து தென்புபடுத்த வேண்டும்! இவைகளுக்கெல்லாம் மனைவியின் ஒத்துழைப்பு இல்லாமல் எப்பிடி!?

அவர்தான் வலியச் சென்று மனைவியிடம் சரணாகதியடைந்தார்!... இப்படியே சண்டையும் சச்சரவும் நிர்ப்பந்தத்தால் சமாதானமும் ஏற்பட்டு வாழ்க்கை வண்டி போய்க் கொண்டிருந்தாலும், கதிர்காமர் நெஞ்சில் ஒரு ஈறல் அரித்துக் கொண்டே இருக்கும்!

“இவள் என் வழிக்குக்கட்டுப்பட்டு நடக்கிறாள் இல்லை. நான் சொல்வது எதையும் கேட்டு நடக்கிறாள் இல்லை. தன் தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்கிறாள் இல்லை! என்னை மதிக்கிறாள் இல்லை!

................. ஆகையால் அவர் தினசரி மனைவியோடு எரிந்துவிழுந்து கொண்டே தான் இருந்து வந்தார்!

இந்தக் காட்சிகளை நாளும் பொழுதும் பார்த்து சகிக்க இயலாமல் வேதனைப் படலாயினர் மனோகரியின் பெற்றோர்- ஏகாம்பரம் தம்பதிகள்! ‘நெடுகிலும் இவர்களுக்குள் பிரச்சினைதானா! ஒற்றுமையாக சந்தோச சல்லாபமாக.... அதுவும் வேண்டாம் சண்டை சச்சரவு இல்லாமல் அமைதியாக ஒருநேரம்கூட வாழவில்லையே இவர்கள்! என்று பரிதவிப்புக்குள்ளாயினர்! தாயார்தான்மிகவும் கொதிப்படைந்து கொண்டே இருந்தார்! அவர் உணர்ச்சிவசப்பட்டு முட்டிமோதிக் கொண்டே இருந்தார்! இடையிலே புகுந்து மருமகனை நார்நாராகக் கிழிக்க வேண்டும் போலிருக்கும்! நிலைமை தெரிந்து ஆசிரியர் ஏகாம்பரம் சைக்கினையால் அவரை ஆறுதல்படுத்துவார்!

என்றாலும் அவர் ஆத்திரம் தீர, புறுபுறுப்பைக் கொட்டுவார்!

“இந்தாள் என்ன, பெண்டிலோட நெடுக ஏறிவிழுந்து கொண்டேயிருக்கு! வீட்டிலயும் வாத்திவேல பார்க்குது! பொலிஸ் இன்ஸ்பெக்டர் மாதிரி எல்லே நெடுக்கிலும் அதிகாரம் பண்ணிக் கொண்டு இருக்கிறார்! இந்தாள்ற முகத்தில ஒருக்கா எண்டாலும் சிரிப்பக் காண ஏலாம இருக்கு. என்ரபிள்ளைய கிளியப் பிடிச்சு பூனையிற்றக் குடுத்தமாதிரிப் போயிற்று! அவள் என்னமா உத்தரிக்கிறாள் இவனோட..... போதாக்குறைக்கு எங்களையும் எல்லே தாக்கிக்கதைக்கிறார்! ‘என்ன நினைச்சுப் பெத்து வளர்த்தாங்களோ தெரியாது! என்ன பிறப்பும், வளர்ப்பும்!.... பரம்பரைக்குணத்தையோகாட்டுaர்? எப்படித்தான் சொன்னாலும் பரம்பரைக்குணம் போகுது இல்ல!

உன்ர அப்பன் ரி!rதி ஒரு விசர முடிச்சார் அந்த விசர் ஒருவிசரப் பெத்தது! என்ர வாழ்க்கையும் விசர்வாழ்க்கையாப் போச்சுது’ என்டெல்லே பேசுறார் எங்களை எல்லாம் தாக்கி! எனக்குவாற ஆத்திரத்துக்கு கொல்லத்தான் எண்ணமாயிருக்கு சாப்பாட்டுக்க என்னத்தையும் வைச்சு!” ஏகாம்பரத்தார் வாயிலே விரலை வைத்து ‘சத்தம் போடாதே!’ என்று எச்சரித்தார். அவர் காதிலே விழுந்தால் பெரிய பிரச்சினையாகும்! “நீங்கள் பயந்து பயந்து இருங்கோ, அவங்கள்ற குடும்பப் பிரச்சினையில நாங்கள் தலையிட்டால் பெரிய பிரச்சினையாகி விடும் எண்டு சொல்லிக் கொண்டு இருங்கோ! ஒருநாளைக்கு அவளும் ஆத்திரம் தாங்காமல் ஏதும் இசக்குப்பிசக்காச் செய்து போட்டாள் என்றால்தான் ஓடிமுழிப்பீர்கள்!”

“அந்தளவு தூரம்வராது அவரும் சின்னதுக்கெல்லாம் பிரச்சினைப்படுகிறார்தான் இவ்வளவு பேச்சுப் பேசினாலும் ஒருநாள் எண்டாலும் கை நீட்டி அடிக்கல்லத்தானே!.... உன்ர மகள்றவாயும் கூடாதுதானே! இவள்றவாய்க்கு வேறவன் எண்டால் அடிச்சு நொருங்கியிருப்பான்! இவள் வாயமூடிக் கொண்டிருந்தால் சண்டை ஏன்பருக்குது? அவள் சொல்லுற மாதிரிக் கேட்டு நடந்தால் சண்டை ஏன் வருகுது!” என்று சொன்னவர், ‘நானும் உன்னோட இதேமாதிரி உத்தரிச்ச நான் தானே’ என்று உச்சரிக்கவந்ததை முழுங்கிக் கொண்டார்! “இவரோட ஒப்பிடக்குள்ள இளையவள்புருசன் எவ்வளவோதிறம்! அந்தாள் வாறது போறது இருக்கிறது ஒண்டுமே! தெரியாது தானும் தன்னுடையபாடும்! புருசன் எண்டால் இப்படி எல்லே இருக்க வேணும், எனக்கு இங்க ஒரு நிமிசம் கூட இருக்கபிடிக்குதில்ல அதுதான் அங்க ஓடி ஓடிப்போறநான்!” இந்தப் பேச்சைக் கேட்டு ஏகாம்பரத்தார் நமட்டுச் சிரிப்பு சிரித்தார், ஏனோ?

அக்காள் மனோகரி வீட்டில் இப்படி இருக்க தங்காள் மனோரஞ்சிதம் வீட்டில் என்ன நடக்கிறது என்று பார்ப்போமா? இரஞ்சிதம் வீட்டில் தொலைக்காட்சியை குடும்பத்தோடு எல்லோரும் பார்த்துக் கொண்டிருந்தார்கள். இரஞ்சிதம் மடியில் வெண்டிக்காயை வைத்து நறுக்கிக் கொண்டிருந்தாள். பிள்ளைகள் கொப்பி புத்தகங்களோடு காட்சிப் பெட்டியின் முன்னால் இருந்தனர், காட்சியையும் புத்தகங்களையும் மாறிமாறிபார்த்தபடி! இரஞ்சிகணவன், அவன் தான் மாமியார் மெச்சியமருமகன், காட்சியை வெகுவாய் இரசித்துக் கொண்டிருந்தான் வாயிலே சிகரட் புகைந்து கொண்டிருந்தது!

ஏகாம்பரம் தம்பதிகளும் அதைக் கவனமாய் பார்த்துக் கொண்டுதான் இருந்தனர். காட்சிப்படத்தைப் பார்த்து உணர்ச்சியில் தம்மை மறந்து வார்த்தைகளை உதிர்த்தனர்:

‘என்னமாதிரிசாறி உடுத்தியிருக்கிறாள்! கரை, சட்டைக்கு நல்லா மெச்பண்ணுது! - மனோரஞ்சிதம், “என்மாதிரி டூயட் ஆடுறாள்! நானும் இதுமாதிரி ஆடிக்காட்ட வேணும்” - மகள். “தனியநிண்டு எத்தினபேர அடிச்சுவிழுந்துறான்! அவன எத்தின பேர் காதலிக்கினம்! நானும் கெதியா கராட்டிய பழகப் போக வேணும்” - மகன். “இதில வாற பொம்புளைகள்ற இடையையும் தொடையையும் பார்த்தால் இன்னொரு கலியாணம் முடிக்க வேணும் போல இருக்குது!” - ஆசைமருமகன் மனதுள்! “ஆ! இப்பிடி ஆக்கின செய்யுறானே பொஞ்சாதிக்கு! என்னடி பார்த்துக் கொண்டிருக்கிறாய் நெருப்புக் கொள்ளியால வையன்ரி அவன்ரமூஞ்சியில!” - தாயார்.

“ஆம்பிளைகள் எல்லாம் முழுவதையும் மூடிமறைச்சுக் கொண்டு நிண்டு ஆடுறாங்கள். இவள் ஒருத்தி மட்டும் முக்கால் நிர்வாணமாக நிண்டு கொண்டு ஆடுறாளே!.... பரமேசா! காலம் கெட்டுப் போச்சு! இதுகளகுடும்பத்தோட இருந்து பார்க்க ஏலுமோ?! இளசுகள் உருப்படியா வளருங்களோ?.... இது மூத்த மருமகன் தான்சரி! கண்ட நேரமும் ரீ.வி. திறக்கவிடமாட்டார். அதிலையும் பிள்ளைகள் படிக்கிற நேரம் கிட்டவும் போக ஏலாது! இது இந்த மருமகன் பிள்ளைகளோட சேர்ந்து தானும் பேய்ப்பிராக்குபாக்குது!” - ஆசிரியர் ஏகாம்பரம்

இப்படியாக பலரும் பலவிதமான அபிப்பிராயங்களோடு காட்சிகளைப் பார்த்து இரசித்துக் கொண்டிருக்கும் போது, உறவுப் பெண் ஒருத்தி வந்தாள் சற்று வயதானவளாயிருந்தாள். அவள்வந்ததைக் கூட ஒருவரும் கவனிக்கவில்லை! எல்லோரும் படக்காட்சியை அவதானித்துக் கொண்டிருந்தனர். அப்போது ஏகாம்பரத்தார் அங்கு இருக்கவில்லை எதையோ நினைத்துக் கொண்டு போய்விட்டார். வந்த பெண் கொஞ்ச நேரம் நின்று இருப்பவர்களைப் பார்த்துக் கொண்டிருந்தாள் வா... இரு... என்று சொல்லவில்லை!

அவள்தானாகவே காலியாக இருந்த ஒரு முக்காலியை இழுத்துப் போட்டுக் கொண்டு தானும் தொலைக்காட்சி பார்த்தாள். விளம்பர நேரம் வந்துவிம்கூட யாரும் அவளைச் சட்டை செய்யவில்லை. அவளும் படம்பார்த்துவிட்டு வந்த சுவடே தெரியாமல் போய்விட்டாள்! அவள் வந்ததும் போனதும் யாருக்கும் தெரிந்திருக்காது. அவள் ஏதும் சேதி சொல்லவந்தாளா, தூது சொல்லவந்தாளா, புதினம் சொல்வந்தாளா, உதவிகேட்க வந்தாளா, இல்லை சும்மா பொழுது போக்க வந்தாளா?

யாரும் பார்வையாலாவது அக்கறைகாட்டியிருந்தால் வெளிப்படுத்தியிருப்பாள்! பாவம் அவள் போய்விட்டாள்.

மூத்தவனுக்கு இக்காட்சியில் சலிப்புத்தட்டிவிட்டது போலும், அவன் தனியாக அறைக்குள் போயிருந்து கைபேசியில் வேறுபடங்களைப் போட்டுப்பார்த்துக் கொண்டிருந்தான். அனேகமாக அவை முழு நிர்வாண நீலோற்பவ காட்சிகளாகத்தான் இருக்கும்! மேசையில் புத்தக கட்டுகள் அடுக்கியிருந்தன. விரிந்து கிடந்த புத்தகம் இவனைப் பார்த்துச் சிரித்தது!

மூத்தவளும் அடுத்த அறைக்கு பிரவேசித்து விட்டாள். அவளும் கைபேசியில்தான் கதைக்கிறாள். காதில் வைத்தல்ல, கண்ணில் வைத்து முகத்தில் முகம் பார்த்துப் பேசுகிறாள்! பெண்கள் ஆண்கள் எல்லாம் வருகிறார்கள். வருகிறவர்கள் முரசு தெரியச் சிரிக்கிறார்கள்; சரசமாட நினைக்கிறார்கள்! இவளும் எல்லாவற்றுக்கும் பதிலிறுக்கிறாள் ஒலியால் மட்டுமல்ல, முகபாவனையாலும் தான்!

அப்பப்பா! எத்தனை சிரிப்பு, களிப்பு இரசிப்பு. சரசம்; விரசம்!

இளைவயன் இளமட்டங்களோடு இருந்து கணினியை கவனித்தபடி இருக்கிறான். கணினியால் உலகத்தையே கணிக்கலாம்; கவனிக்கலாம்; கண்காணிக்கலாம்! ஆனால் இவர்கள் எதைமூளையிலே திணித்துக் கொண்டிருக்கிறார்களோ, யாரோ அறிவார்!

வீட்டுக்கு மனோரஞ்சியின் கணவனைத் தேடிக் கொண்டு மூன்று பேர் வந்தனர். வந்தவர்கள் தாங்களாகவே அவர் பக்கத்தில் அமர்ந்தனர். அவர் பரந்தசிரிப்பால் அவர்களை வரவேற்றார். இன்று விடுமுறைநாள். அதனால்தான் தம் நண்பரைத் தேடிவந்திருக்கின்றனர். இப்படி அடிக்கடி வருவர். பகிடிக்கதைகள் விடுவர்.

எல்லோரும் விழுந்து விழுந்து சிரிப்பர். எல்லைமீறினால், இவர் கையசைத்து சைகையால் அடக்கி வாசிக்கச் செய்வார்! சிறிதுநேரத்தில் நால்வரும் உள்ளறைக்குள் போய்விடுவர். மேசையைச் சுற்றிவட்டமடித்து வீற்றிருப்பர். மின்விசிறி சுழலும், போத்தல் சத்தம் கேட்கும்! பேசும் சப்தம் கத்தலாகவும் மாறும்! அதன் பிறகு மகிழ்ச்சி ஆரவாரம்தான்! என்ன நடந்தாலும் வெளியே ஒன்றும் கேட்காது; தெரியாது. எல்லாம் இறுக்கி மூடியிருக்கும்! என்றாலும் இரஞ்சி இடைக்கிடை வாய்க்கு இதம்பதமானதுகளை (ரேஸ்ற்) வைத்துவிட்டுப் போவாள் இளநகையோடு, இடைக்கிடை மூத்தவளிடமும் கொடுத்து விடுவாள். அவளும் அவ்வாறே செய்வாள்!

சிலவேளைகளில் வந்தவர்கள் வீட்டிலும் இதே கைங்கரியம் பதிலுக்கு நடக்கும்! அறையுள்ளே என்ன நடக்கிறது என்று வீட்டிலே எல்லோருக்கும் தெரியும்! வாத்தியார் முகம்சுழித்து பேசாமல் இருப்பார்! ‘ஏதோ இந்தளவோட இருந்தால்சரி’ என்ற மனப்பாங்கு அவருக்கு. தாயார்: ‘இந்த மருமகன்தான்சரி! வீடு எப்போதும் கலகலவென்று இருக்கும்; சந்தோஷமாக இருக்கும்; நாலுபேரும் வாறது வீட்டுக்குப் பெருமையாகவும் இருக்கும்: இளையமருமகன் பொஞ்சாதி புள்ளைகளோட எல்லாத்துக்கும் ஒத்துப் போவார். ஒண்டுக்குக் கூட எதிர்த்து சண்டை பிடிக்கிற இல்ல! சந்தோஷமாக வைச்சிருக்கிறார் வீட்ட” என்பாள்.

மனோரஞ்சிதத்துக்கும் வீட்டிலே அடைபட்டுக்கிடப்பது பெரிய சித்திரவதை! இடைக்கிடை என்றாலும் வீட்டைவிட்டு வெளிக்கிட்டு சினேகிதிகளைத் தேடி போய் அரட்டையடித்தால்தான் அவள்மனம் ஆறுதல் காணும்!

மேலும் சனசமூக நிலையத்தில் மாதர் முன்னேற்றசங்கம் துவங்கியிருக்கிறார்கள். மனோரஞ்சிதமும் அங்கத்தவராகச் சேர்ந்துள்ளாள் சங்க அலுவல்காரணமாக மாதர் அடிக்கடி வந்து போவார்! கணவனின் பிள்ளைகளின் தோழர்களும் அடிக்கடி வந்து புழங்குவர். ‘இதனால் அவள் பெருமைப்பட்டு புளகாங்கிதமடைந்தாள்! அடுத்தவருடம் மாதர் சங்கத் தெரிவுக்கு மனோரஞ்சிதத்தைத்தான் தலைவியாகத் தெரிவு செய்யப் போகிறார்களாம்! பேச்சடிபடுகிறது. இவள் ஒரு மாநாட்டில் பெண்ணுரிமை பற்றிப் பேசிய பேச்சுத்தான் பலருக்கும் இந்த அபிப்பிராயத்தை ஏற்படுத்தியது!

மனோகரிக்கு கணவனை எதிர்த்து சண்டை மாருதமாகப் பேசமட்டும்தான் தெரியும்! இவள் குரல் இல்லத்திலே ஒலிக்காது; மேடையிலேதான் முழங்கும்! இது அவர்கள் வீட்டின் சிகரப் பெருமை! அன்று, அக்காள் மனோகரி வீட்டில் ஒரே குதூகலம்! மகிழ்ச்சி ஆரவாரம்! மனோகரி அன்று போல் என்றும் பூரிப்படையவில்லை! மிகவும் மனம் மகிழ்ந்தவர் ஆசிரியர் ஏகாம்பரம்தான். மூத்தமருமகனின் செயல்திறமையை அவர் மனதார வாழ்த்தினார்! சதா அவரை வைது தீர்க்கும் மாமியார் கூட வாழ்த்த வேண்டிய நிலைப்பாடாயிற்று!

இந்தப் பெருமைகளுக்கெல்லாம் கர்த்தாவான கதிர்காமநாதன் அமைதியாக தன் அறையில் இருந்து இறைவனுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டிருந்தார்!

‘எல்லாப் பெருமையும் இறைவனுக்கே! அடுத்தவனுக்கு கெடுதி எண்ணாதவனுக்கு, நோக்கில் குறியாய் இருப்பவனுக்கு, முயற்சியில் அயற்சி இல்லாதிருப்பவனுக்கு, இறையில் நம்பிக்கை தளராதவனுக்கு எண்ணியது ஈடேறவே செய்யும்’! அவர்மனம் இப்படிச் சொல்லிக் கொண்டே இருந்தது. வீட்டுக்கு நண்பர்கள், உறவினர்கள் வாழ்த்துக் கூறி தங்கள் சந்தோசத்தை தெரிவித்தனர்! மூத்தவனும் மூத்தவளும் தங்கள் அப்பாவுக்குத்தான் நன்றியைத் தெரிவித்தனர் மனமுருகி.

இருவரும் மாவட்டத்தில் திறமைச் சித்தியடைந்து பல்கலைக்கழகத்துக்குத் தெரிவாகியுள்ளனர்! அவர்கள் குடும்ப வரலாற்றில் இதைவிடப் பெருமைக்கு ஆனந்தத்துக்கு உரியது வேறு என்ன இருக்க முடியும்!

இதைப்பார்த்து பொறாமைப்பட்டவர்ளும் இருக்கவே செய்கிறார்கள்! ஒருவளவுக்குள் இருக்கும் தங்காள் மனோரஞ்சிதம் வீட்டார் எட்டியும் பார்க்கவில்லை!

எப்போதும் கலகலப்பாய் மகிழ்ச்சி ஆரவாரமாய் இருக்கும் அவ்வீடு இன்று சோபை இழந்து போனது ஏனோ?! நேற்றில் இருந்து மூத்தவளைக் காணவில்லை! வழமை போல ‘ரியூசன்’ போகிறேன் என்று போனவள், இரவாகியும் வரவில்லை; விடிந்த பின்பும் காணவில்லை! தேடிப் போயும் கிடைக்கவில்லை! அதிர்ச்சிச் செய்திதான்! மனதை உடைத்தது!.... மூத்தவள் சேர்ந்துபடிப்பவனோடு கூடிக் கொண்டு ஓடிவிட்டாளாம்! அவனையும் வீட்டைவிட்டு விரட்டிவிட்டார்களாம்! இவர்கள் எங்குபோய் எப்படி வாழப் போகிறார்கள் என்றுதான் இங்கு கவலை!

தாயார் இளையவன் வீட்டில் அழுது தீர்த்துவிட்டு மூத்தவள் வீட்டுக்கு வந்தாள். கண்களைத் துடைத்துக் கொண்டு!

அங்கேவாத்தியார் ஏகாம்பரம் எந்தச் சலனமும் இல்லாமல் அமைதியாகவே வீற்றிருந்தார்! அவர் தன்மனைவியாரையே எதிர்பார்த்துக் காத்திருந்தார். எப்படித்தான் எடுத்துச் சொன்னாலும் கேட்காத, அனுபவத்திலாவது பாடம் படிக்க மறுக்கும் கழுதைகளுக்கு கருத்துரை வழங்கவே பார்த்திருந்தார்!

அவள் கண்ணீர்மல்க வாத்தியார் அருகில் அமர்ந்திருந்தாள். ‘என்ன சந்தோசமாக இருந்த வீடு, இப்ப இழவு விழுந்தமாதிரிப் போயிற்றே! நல்லாப்படிக்கிறாள் எண்டு நாங்கள் இருக்க, இப்பிடி குடிகெடுத்துப் போட்டாளே! என்று அவள்மனம் புலம்பியது.

வாத்தியார் ஏகாம்பரம் மிக நிதானமாக இவ்வளவு காலமாக நடந்தவைகளில் இருந்து பெற்றபாடத்தை இரத்தினச்சுருக்கமாக அறிவுரையாக பகரலானார்.

“அடிக்கிற கைதான் அணைக்கும்; அணைக்கிறகைதான் அடிக்கும், கண்டிப்பு உள்ள இடத்திலதான் அன்பும் அக்கறையும் இருக்கும்! மூத்தமருமகன் குடும்பத்தில் அக்கறையுள்ள ஒரு இலட்சியவாதி! அதனால்தான் பெண்டாட்டியோட முரண்பட்டுக் கொண்டே இருந்தாள்; போராடினார்! தன் இலட்சியத்தில் வெற்றிபெற்றுவிட்டார்! அவர் ஆனந்த கண்ணீர் வடிக்கிறார்! உன் ஆசை மருமகன்ல நீ, இரத்தக் கண்ணீர் வடிக்கிறாய்!

‘யாவும் கற்பனை’

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.