புத் 64 இல. 10

கர வருடம் மாசி மாதம் 21ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1429 ர.ஆகிர் பிறை 11

SUNDAY MARCH 04,  2012

 
~~எங்கள் கலாசாலை எம்.எல்.சி செயற்றிட்டம்''

~~எங்கள் கலாசாலை எம்.எல்.சி செயற்றிட்டம்''
 

பழைய மாணவிகள் சங்கத்தின்

ஏற்பாட்டில் அங்குரார்ப்பணம்

இலங்கை வாழ் பெண் ணினத்தின் கல்வி வள ர்ச்சிக்கும் எழுச்சிக்கும் சிறப் புப் பணியாற்றி வரும் கலாநிலையம் பம்பலப்பிட்டி முஸ்லிம் மகளிர் கல்லூரி.

எந்த ஒரு சமுதாயத்தையும் நல்வழியில் இட்டுச் செல்லும் அரும்பணி பெண் இனத்தையே சார்ந்தது. ஒவ்வொரு பெண்ணும் தனது வாழ்வில் உலகியல் கல்வியிலும் மார்க்கக்கல்வியிலும் சிறப்புற வேண்டும். அத்தகையை கல்வி பெற்ற பெண் தான்பெற்ற பிள்ளை பூரணத்துவம் பெற உதவ முடியும். பிள்ளைகளின் கல்வியறிவை விரிவாக்கவே பாடசாலைகள் பணியாற்றுகின்றன. இந்த வகையில் முஸ்லிம் பெண் சமுதாயத்துக்கு கடந்த 71 வருடங்களாகப் பெரும் பணி செய்து வரும் பெருமை முஸ்லிம் மகளிர் கல்லூரியைச் (Muslim Ladies College)  சாருகின்றது.

இந்தக் கல்லூரியை மேலும் வளர்தெடுக்கும் நோக்கில் அதன் பழைய மாணவிகள் சங்கம் (Old Girls Association) 2012-20202012-2020ஆம் ஆண்டுக்கான அபிவிருத்தித்திட்டத்தை முன்னெடுக்கும் வகையில் “எங்கள் கலாசாலை எம்.எல்.சி செயற்றிட்டம்” என்ற தொனிப் பொருளில் கல்லூரி மண்டபத்தில் விழாவொன்றை ஏற்பாடு செய்திருந்தது. பாடசாலை அதிபர் கலாநிதி ஹஜர்ஜான் மன்சூரின் வழிகாட்டலில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த எழுச்சி விழாவின் வெற்றிக்கு ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்கம் உறுதுணையாகவிருந்தமை விழாவை மேலும் மெருகூட்டியது.

கடந்த 28ஆம் திகதி செவ்வாய்க்கிழமை ஏற்பாடு செய்யப்பட்ட இந்த விழாவில் முதற் பெண்மணி ஷிரந்தி ராஜபக்ஷ பிரதம விருந்தினராகப் பங்கேற்றார். கல்லூரி அதிபர் ஹஜர்ஜான் மன்சூர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் அதிதிகளாக அமைச்சர் பெளசி, பாராளுமன்ற உறுப்பினர்களான ஏ.எச்.எம்.அஸ்வர், சூரியப்பெரும, மாகாண சபை உறுப்பினர் அஜ்மல் மெளஜூட், யுனெஸ்கோ இலங்கைக்கான தலைவர் ரொஹான் பிரீதி விராஜ் பெரேரா, கொழும்பு சாஹிராக் கல்லூரி அதிபர் ஜிப்ரி, கல்விப் பணிப்பாளர் தாஜூதீன் மற்றும் முஸ்லிம் மகளிர் கல்லூரி முன்னாள் அதிபர்கள் பங்கேற்றனர்.

பழைய மாணவிகள் சங்கத் தலைவி மபாசா தாஹா விழாவை மிகவும் சிறப்பான முறையில் நெறிப்படுத்தியதோடு வரவேற்புரையை பழைய மாணவி சாமிலா ஹலீம் வழங்கினார்.

கலாநிதி ஹஜர்ஜான் மன்சூர் தனது தலைமையுரையில் மாணவர்களின் கல்விச் செயற்பாடுகள், பெற்றோர்களின் பங்கு, ஆசிரியர்களின் சிரத்தை மற்றும் சமூக விழுமியங்கள் தொடர்பான பல்வேறு அம்சங்களை தொட்டுக்காட்டினார்.

அதிபர் தனது உரையில், நமது முஸ்லிம் மகளிர் கல்லூரி 1941 இல் உருவானது. 71 ஆண்டுகள் கல்விப்பணி செய்த கலாசாலை இது. உண்மையிலே கலாசாலை என்பது நமது கலாசாரத்தையும் பாரம்பரியங்களையும் இளம் சந்ததியினருக்கு வழங்கும் இடம் மாத்திரமன்று. முழு சமுதாயத்தையும் நேரிய வழியில் இட்டுச் செல்லும் சக்தி வாய்ந்த அமைப்பாக அது திகழ வேண்டும். நாட்டின் கல்விக் கொள்கைகளுக்கமைவாக இக்கலாசாலையின் நிர்வாகத்தை முன்னெடுத்துச் செல்கின்றேன் என்பதையிட்டு தனிப்பட்ட முறையில் மகிழ்ச்சியடைகின்றேன். முஸ்லிம் மகளிர் கல்லூரியில் கற்போரின் கற்கை நெறியை சரியான வழியில் நிறைவேற்றவே விரும்புகின்றேன்.

கல்வி அமைச்சின் பணிப்பாளராகவும் சார்க் மனித உரிமை அபிவிருத்திக்கான பணிப்பாளராகவும் பணியாற்றியதால் கிடைத்த அனுபவங்கள் இக்கலாசாலை நேரிய குறிக்கோளை நோக்கி எடுத்துச் செல்ல எனக்குத் துணை நிற்கின்றன.

மதிப்புக்குரிய முதற் பெண்மணி சிரந்தி ராஜபக்ஷ அவர்களின் அன்பான வருகை எமக்கு மட்டற்ற மன நிறைவையும் எமது செயற்திட்டத்துக்கான வலுவையும் அளிக்கிறது. எங்கள் கலாசாலை எம்.எல்.சீ என்ற இலட்சியம் கொண்ட செயலாக்கத்துக்கான அங்கீகாரத்தையும் அவரது வருகை சுட்டி நிற்கிறது.

இக்கலாசாலையின் அதிபராக 5 மாதங்கள் பணிபுரிந்துள்ளேன். கலாசாலையை இலட்சிய வழியில் இட்டுச் செல்ல இரவு பகலாகப் பாடுபட்டுள்ளேன். இக்கடினமான பணிக்கு இங்குள்ள சிலரின் உதவியும் கிடைத்தது.

பெருமைக்குரிய இக்கலாசாலையின் உன்னத நிலையைக் கட்டியெழுப்பப் பயன் மிகுந்த நிகழ்ச்சித் திட்டம் அவசியமாகிறது. கற்போரின் தனிப்பட்ட ஆளுமை விருத்தி மூலம் பயனுள்ள பிரசைகளை உருவாக்க வேண்டி இருக்கிறது. தற்போதைய சாதக - பாதகமான நிலைமையைப் பகுப்பாய்வு செய்த போது புதிய செயற்திட்டத்தின் அவசியம் உணரப்பட்டது. அதன் பேறாகவே எங்கள் கலாசாலை எம்.எல்.சி. எனும் பெயரிலான நவீன திட்டம் உருவாக்கம் பெற்றது. இவ்வரிய திட்டத்தின் பேறாக தலை சிறந்த மாணவ சமூகத்தையும் நாளைய நற்பிரசைகளையும் உருவாக்க முடியும் எனக் கருதுகிறேன்.

இதன் பயனான முன் னேற்றம் அனைத்தும் ஆசியாவின் அதிசயம் எனும் நாட்டின் இலட்சியத்துக்கு எம்மை இட்டுச் செல்லும் என்று நம்பலாம். மேற்குலகிலும் கிழக்கிலும் உள்ள கல்வியியலாளர்களின் கருத் துப்படி பாடசாலை என்பது புதிய சவால்களுக்கு முகம் கொடு க்கத் தகையுள்ள சிறப்பான பிரஜைகளை உருவாக்கும் இடமாகும். ஆரோக்கியமான சமூகப் பிணைப்பை உருவாக்கவும் பாடசாலை உதவுகிறது. எதிர்கால சமூகத்தின் தலைவிதியை நிர்ணயிப்பது பாடசாலைகளே. இலங்கையை ஆசியாவின் அதிசய நாடாக உருவாக்க கல்வி அமைச்சு அறிமுகப்படுத்தியுள்ள நவீன கல் விக் கொள்கைகளை அனைத்துக் கல்வி நிறுவனங்களும் பின் பற்றிப் பயனடைய வேண்டும். அபிவிருத்தி கண்ட நாடுகளின் வியூ கங்களைப் பின்பற்றிப் புதிய ஆய்வுகளில் ஈடுபட வேண்டும்.

இந்தக் கல்லூரியைப் பற்றி எனக்குள் சில கேள்விகள் எழுந்தன.

1. ஏனைய கல்வி நிறுவனங்களின் தரத்துக்கு குறைவற்ற நிலையில் முஸ்லிம் மகளிர் கல்லூரி இருக்கிறதா?

2. உலக மயமாக்கல் எனும் தற்கால நிலையில் முஸ்லிம் மகளிர் கல்லூரி மாணவர்கள் அதற்கான தகைமை பெறும் இடத்தில் உள்ளனரா?

இத்தகைய எண்ணங்கள் தான் “எமது கலாசாலை MLC எனும் திட்டத்தை உருவாக்க என்னைத் தூண்டியது. இலங்கையிலே முஸ்லிம் மகளிர் கல்லூரி என்பது தலை சிறந்த முஸ்லிம் பெண் பாடசாலை எனக் கருதப்பட்டது. 2009 இல் உருவாக்கப்பட்ட முஸ்லிம் கல்வி தொடர்பான ஆய்வறிக்கை முஸ்லிம் பாடசாலைகளானவை முஸ்லிம் சமூகம் எதிர்காலத்தில் எதிர்நோக்கும் சவால்களுக்கேற்ப மாணவர்களை உருவாக்க வில்லை எனக் கண்டறியப்பட்டது.

1. முஸ்லிம் சமூகத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்யக் கூடிய மாணவ சமூகத்தை முஸ்லிம் பாடசாலைகள் உருவாக்குகின்றனவா?

2. முஸ்லிம் பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் தொடர்பாக முஸ்லிம் பெற்றோர் திருப்தியுடன் வாழ்கின்றனரா?

பதில்: இல்லை என்றுதான் அமையும். சிறந்த கல்வி மூலம்தான் முஸ்லிம் சமூகம் மேம்பாடடைய முடியும் என்பது வெளிப்படையானது. முஸ்லிம் கலாசாலைகள் தமது தற்போதைய நிலைப்பாட்டை விட்டுப் புதிய வழிகளையும் வியூகங்களையும் வகுத்துச் செயல்பட வேண்டும்.

எமது செயற்திட்டத்தின் நோக்கங்கள் இவைதான்.

1. MLC நிகழ்ச்சித் திட்டத்தில் அடங்கியுள்ள தத்தவார்த்த நடைமுறைகளை அறிதல் கலாசாலை உருவாக்கத்துக்குழைந்த கர்த்தாக்களின் பங்களிப்பு தியாக மிக்க செயற்பாடுகளை அறிதல்.

2. இலங்கை முஸ்லிம் சமூகத்தின் கல்வி மேம்பாட்டு மையமாக எம்.எல்.சி.ஐக் கட்டியெழுப்புதல்.

3. எம்.எல். சிக்குரிய சொத்துக்கள், ஆஸ்தி பற்றி அறிந்து கொள்ளுதல்

4. அபிவிருத்திச் செயற்பாட்டைத் துரிதப்படுத்தல்

5. அபிவிருத்திப் பணிகள் முடிவுறும் போது உன்னத நிலையை எட்டுதல்

இக்கலாசாலையின் உருவாக்கத்துக்குத் தியாக சிந்தையுடனும் அர்ப்பணிப்புடனும் பங்களிப்புச் செய்த ஆரம்பகர்த்தாக்கள் நினைவு கூரப்பட வேண்டியவர்கள். முக்கியமாக இலங்கைச் சோனக மகளிர் சங்கம், சேர் ராkக் பரீத் ஆகியோரை நான் மரியாதையுடன் நினைவு கூருகின்றேன். இவ்வாறு அதிபர் ஹஜர்ஜான் மன்சூர் தெரிவித்தார்.

முன்னாள் அதிபரும் தென்கிழக்குப் பல்கலைக்கழக முன்னாள் வேந்தருமான ஜெசீமா இஸ்மாயில் விசேட உரையொன்றை நிகழ்த்தி சபையோரின் பாராட்டைப் பெற்றார்.

பிரதம விருந்தினரான ஷிரந்தி ராஜபக்ஷ பாடசாலையின் இணையத்தளத்தை அங்குரார்ப்பணம் செய்து வைத்தார். பழைய மாணவர்கள் சார்பாக அவருக்கு நினைவுச்சின்னமும் வழங்கப்பட் டது. இந்த விழாவில் மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் சபையோரின் கவனத்தை ஈர்த்தது.

தாம் பயின்ற பாடசாலையின் எதிர்கால முன்னேற்றம் தொடர்பில் அரும்பணியாற்றி வரும் பாடசாலை பழைய மாணவிகள் சங்கத்தின் நற்பணிகள் பொற்பணியாகி மென்மேலும் சிறந்து விளங்கி அதன் சேவை தொடர வாழ்த்துவோம்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.