புத் 64 இல. 08

கர வருடம் மாசி மாதம் 07ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1433 ர.அவ்வல் பிறை 26

SUNDAY FEBRUARY 19,  2012

 

அவுஸ்திரேலிய கல்வியின்

அவுஸ்திரேலிய கல்வியின்

உன்னத கண்காட்சி 2012

அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராயலத்தினதும், பங்காளியான அவுஸ்திரேலிய சர்வதேசக் கல்வியினதும் ஆதரவுடன், அவுஸ்திரேலிய வர்த்தக ஆணைக்குழு (அவுஸ்திரேட்) கொழும்பில் ‘அவுஸ்திரேலிய கல்வியின் உன்னத கண்காட்சி –2012’ ஐ தாஜ் சமுத்ரா ஹொட்டெலின் கிறிஸ்டல் போல்ரூம் கீழ் தளத்தில் 2012 பெப்ரவரி 25ம் திகதி சனிக்கிழமை மு.ப. 10.30 லிருந்து மாலை 6.00 மணி வரை நடத்துகிறது.

அவுஸ்திரேலியாவின் பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்கள் TAFE உட்பட 20 அவுஸ்திரேலிய நிறுவனங்கள் எதிர்காலக் கல்வி பற்றி அறிந்து கொள்ள விரும்பும் இலங்கை மாணவர்களுடன் நேரடியாக இங்கு தொடர்பு கொள்கின்றன.

பதில் உயர்ஸ்தானிகர் சொன்யா கொப்பே, இந்தக் கண்காட்சி சம்பந்தமாக கருத்து வெளியிடுகையில், ‘அவுஸ்திரேலியாவும் இலங்கையும் இரு நாடுகளுக்கும் இடையிலான பரவலான உறவுகளை பல தசாப்த காலமாக பகிர்ந்து வந்துள்ளன’ என்று கூறினார். இரு நாடுகளும் கட்டியெழுப்பிய நவீன உறவுகள் பலதரப்பட்டவை. இவற்றில் குடியகல்வு, கல்வி, வர்த்தகம், முதலீடு, மக்களுக்கு இடையிலான தொடர்புகள் மற்றும் அபிவிருத்தி ஒத்துழைப்பு என்பவற்றின் பங்காளித்துவ வரலாறும் அடங்கும். 1948 ம் ஆண்டில் இலங்கை சுதந்திரம் அடைந்த காலத்தில் இருந்து அபிவிருத்திக்கான பங்காளியாக அவுஸ்திரேலியா இருந்து வந்துள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான கல்விசார் தொடர்புகளைப் பலப்படுத்துவது உட்பட இலங்கையின் பொருளாதார, சமூக அபிவிருத்திக்கு அர்ப்பணிப்புடன் அது பங்களிப்பை வழங்கி வந்துள்ளது.

பன்முக கலாசார சூழலில் உலக தரத்திலான கல்வியை வழங்கும் அதேசமயத்தில் வளர்ச்சியடைந்த மற்றும் புத்துணர்ச்சியுடன் கூடிய சமுதாயத்தினர் மத்தியில் மாணவர்கள் வாழ்ந்து, அவர்கள் பற்றி அறிந்து கொள்வதற்கான சந்தர்ப்பத்தையும் அவுஸ்திரேலியா வழங்குகிறது. விஞ்ஞானத்திலிருந்து விளையாட்டுத்துறை வரையிலான பலதரப்பட்ட துறைகளிலும் ஆராய்ச்சி, அபிவிருத்தி, புதிய கண்டுபிடிப்புகள் என்பனவற்றில் அவுஸ்திரேலியா தொடர்ந்தும் முன்னிலை வகிக்கிறது.

சமீபத்தில் வெளியிடப்பட்ட டைம்ஸ் உயர்கல்வி சர்வதேச பல்கலைக்கழகங்கள் தர மதிப்பீடு 2011-12 அறிக்கையில், உயர் மட்டத்திலுள்ள 100 பல்கலைக்கழகங்களில் 10 சதவீதத்திற்குள் அவுஸ்திரேலிய பல்கலைக்கழகங்கள் இடம்பெறுவது தெரிவிக்கப்பட்டுள்ளது. எந்தவொரு நாட்டிற்கும் கிடைக்காத மகத்தான் பெறுபேறு இதுவாகும்.

உலக நாடுகளில் சிறந்தது என அங்கீகரிக்கப்பட்ட தரம்வாய்ந்த கல்வியை இலங்கை மாணவர்களுக்கு வழங்கும் மிகவும் ஜனரஞ்சகமான தேசமாக அவுஸ்திரேலியா நீண்டகாலமாக இருந்து வந்துள்ளது. அதிக எண்ணிக்கையான இலங்கை பட்டதாரிகள் அவுஸ்திரேலியாவில் தாம் பெற்ற நிபுணத்துவம் வாய்ந்த கல்வி அறிவையும், திறனையும் உள்ளூரில் அரசாங்கம், சமூகம் மற்றும் தனியார் துறைகளில் பிரயோகித்து வருகின்றனர்.

கண்காட்சியில் பங்குபற்றும் நிறுவனங்கள், தங்களை அறிமுகம் செய்யவும், அவுஸ்திரேலியாவிலுள்ள, பட்டத்திற்கு முந்திய நிலை மற்றும் தொழில்திறன் திட்டத்திலிருந்து பட்டப் பின்படிப்பு, முதுமாணி, ஆராய்ச்சி மற்றும் கலாநிதி கல்வித்துறைகளுக்கான சந்தர்ப்பங்கள் உட்பட கல்வித்துறை சந்தர்ப்பங்கள் பற்றி மாணவர்களுக்கு விளக்கிக் கூறவும் சந்தர்ப்பத்தை வழங்குகிறது.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.