புத் 64 இல. 08

கர வருடம் மாசி மாதம் 07ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1433 ர.அவ்வல் பிறை 26

SUNDAY FEBRUARY 19,  2012

என்னிதயராணி!

என்னிதயராணி!

- கவிமணி அ. கெளரிதாசன் -

கோலவெழில் குடிகொண்ட குமரி - செய்யும்
குறும்புகளில் ஆமிவளோர் ‘குழவி’
காரிகைதான் எந்தனது துணைவி - இன்பம்
காட்டவென்றே கைப்பிடித்த ‘மனைவி’
-*-
முன்னழகு பங்கயத்தின் மொட்டு - என்
மோகனமோ இனிக்கின்ற ‘லட்டு’
கண்ணழகு கயல்மீனின் சாயல் - இதழ்
கற்கண்டு, முக்கனிகள் தோயல்!
-*-
ஆடியவள் நடைபயிலும் கோலம் - கண்டு
அடியவன்நான் மறந்திடுவேன் ஞாலம்
சூடிவரும் மல்லிகையோ வாசம் - எழில்
சுந்தரிக்கு என்மீதே நேசம்!
-*-
அதரங்கள் மாங்கனியை வெல்லும் - இவள்
அழகென்னை நித்தமுமே கொல்லும்
புதையலிவள், இன்பத்தின் கேணி - சிந்தும்
புன்னகையால் நிலைமறப்பான் ஞானி!
-*-
கருமுகில்தான் கன்னியவள் கூந்தல் - அவள்
கைவிரல்கள் கவின்கொண்ட காந்தள்
பருவத்தேன் சுமக்கின்ற மேனி - எழிற்
பாவையிவள் ‘என்னிதய ராணி!’

தூரத்து வாசனை...

- செயின் தம்பி ஸியாம் -

உழுத வயல்வெளியும்
ஒய்யாரத்திருப்பறனும்
ஆத்துவாளைச் செப்பலியும்
அலங்கரித்த காலமில்லை

மாலையில அத்தாங்கும்
மணி ஒலிக்க மார்க்கட்டும்
சந்தி சிரிச்ச கூக்குரலும்
சங்கமித்த பொழுதுமில்லை

சாமமெல்லாம் தத்திகூட்டி
சாகசமாய் தொழில் பார்த்து
பாட்டும் பலகதையும்
படியெடுக்க ஆட்களில்லை

குளமருக பட்டிவச்சி
கொடங்கொடமாய் பாலெடுத்து
மோருகண்டு நெய்யெடுத்து
முகஞ்செழிக்க மனமுமில்லை

பனையெனவும் கமுகெனவும்
குணமுடைய வேம்பெனவும்
தரணியெங்கும் புதுமணமாய்
புகழுரைக்க யாருமில்லை

சேனையென்றும் காலையென்றும்
சீவியத்துத் தோட்டமென்றும்
கூட்டமுடன் வாழ்ந்துவர
குவலயத்தில் இடமேயில்லை.

காசும் வேண்டும்

- கலாபூஷணம் ஏ.எம்.எம். அலி -

நேற்று தேடி நான்வந்தேன்
நீங்கள் வீட்டில் இருக்கவில்லை
வாழ்த்துக் கவிதை ஒன்றெழுதி
வாங்கிக் கொள்ளத் தான்வந்தேன்
அவர்கள்

வரும்போ தெழுதி வழங்குகின்றேன்
வருவாய் இன்றிக் கலங்குகின்றேன்
பெறும்போ தெனது ஊழியத்தைப்
பெரிதாய் மதிக்கத் தெரியலையே!

கண்கள் விழித்துக் கவியெழுதிக்
கரத்தில் வைத்து விடுகின்றேன்
எண்கள் ஒன்று இரு சைபர்
என்றி ணைந்த ஒரு நோட்டுத்

தாளை யேனும் என்கையில்
தராது பெற்றுச் செல்கின்aர்
நாளைப் பொழுதும் நான் தேவை
நன்றி கூடச் சொலமாட்டீர்!

தாளுங் கோலும் நள்ளிரவு
தாண்டும் வரையும் எழுதுகின்றேன்
கூலி மட்டுங் கொடுக்காது
கொண்டு செல்ல வருகின்aர்!

தேவைப் பட்டால் நீரென்னைத்
தேடி வந்தே கேட்கின்aர்!
‘பா’வை எழுதித் தருகின்றேன்
பணியை மறந்தே போகின்aர்!

சும்மா செய்த காலத்தின்
சுவடே அழிந்து போச்சுதடா!
இம்மா நிலத்தில் இன்றைக்கு
எல்லாங் காசுக் காசுக்கே

இனியுஞ் சும்மா எழுதலாமா?
என்பே னாவும் என்தாளும்
கனியுங் கவிதை எழுதவெனின்
காசும் வேண்டும் மறவாதீர்!

நான் என்ன செய்வேன்....

- மருதமைந்தன் -

“பொய் சொல்லாதே”
போட்டடித்தேன் என் மகனை
உறுக்கி, அதட்டி
உதைத்தும் தள்ளினேன்,
தான் செய்த பிழையைத்
தங்கைமேல் சுமத்தியதால்

பொய் சொல்ல மாட்டேன்
சாகும்வரை, சத்தியம் செய்தான்
அரிச்சந்திரனாக,
நீண்டநாள் நிம்மதி.
கல்விப் படியில் கால்வைத்தவன்
தட்டுத் தடுமாறினான்,
வாணிபமும் காலை வாரிவிட்டது
வாழ்க்கை கசந்ததால்
அரசியலில் குதித்தான்
அவ்வளவுதான்...

இப்பொழுதெல்லாம்
மேடைக்கு மேடை
பொய்யையே கொட்டுகிறான்
அதுவும் பச்சைப் பொய்யை
பாகற்காய் போல

முட்டாள் சனங்களும்
விளக்கமின்மையால்
ஊக்குவிக்கின்றனர்
அசத்தலாகக் கைதட்டி,
ஆரவாரஞ் செய்து
அதனால் இப்போது
பொய்யை மட்டுமல்ல
புளுகவும் தொடங்கிவிட்டான்
நெஞ்சம் உடைந்து
நெருப்பாய்க் கனக்கிறது
பெற்ற பாவத்தை நினைத்து
நான் என்ன செய்வேன்...?

ஏற்புரை இல்லத்தரசி

- முத்தாலிப் -

புவனத்தின் சத்திரத்தின்
பொறிகளின் ஆட்சியினை
சுவனத்து சோலைக்குள்
சிரம் நிமிர செல்லும்
பாதையினை இல்லறத்து
வாழ்க்கை நெறிகளை
சோதனையாக்கி சுபமாய்
ஜெயம் கொள்ள
கரம்பிடித்து தோள் பற்றிய
துணையவன் தோழியாய்
சிரம் பணிந்து சிறப்பின்
இம்மையின் இனியதொரு
இல்லத்தரசி நீயே!
வளம் பெற்ற புதுக்குடும்ப
ஆதனத்தின் பங்காளி நீ!
உளம் உணர்ந்து உறுதுணைக்கு
ஓம்புதலால் இம்மையின்
இல்லதரசி நீயே!
வாழ்வின் நீள் பயணத்தில்
வந்தமைந்தவன்
அரவணைப்பில்
தாழ்விலா வழித்துணைத்
தாரமானால் ஈரமான
இல்லதரசி நீயே!
தழல் அன்ன எரியும்
தரித்திர வெம்மை
வரட்சியில்
நிழலாய் வந்து நிற்பின்
இதந்தரும்
இல்லதரசி நீயே!

வல்லோன் வகுத்த இல்லற
செல் நெறியில்
இடர்கள் தடையாயின்
நல்லற ஆலோசனை
நாயகனுக்கு வழங்கும்
மதி மந்திரியும்
இல்லறத்து அரசியும் நீயே!
தாம்பத்திய வாழ்வில்
தலை முறை தாண்டும் வரை
தரணிப் பகட்டில்
ஏமாந்து போகாது ‘பதி’
இன்பம் பெறின்
இங்கிதமறிந்த
இல்லத்தரசி நீயே!

கைசேதம்!

- ஒலுவில் ஜலால்டீன் -

இளமையின் வெறியினாலே
ஈன்றவள் சொல்லுக்கேளா
துலகமே காத லென்று
தூர ஊர்ப் பெண்ணை நாடி
புலம் பெயர் அகதி போல
புகுந்தவன் வாழ்க்கை மாறி
கலகமே தினமுமாகி
கைசேதமானான் கேZர்!

காலையில் அவனெழுந்து
கண்ணகி எழும்புமென்றால்
பாலையில் வெந்த பாம்பாய்
பாய்ந்தவள் சீறியவனில்
வேலைக்குச் செல்லு முன்னே
விடியவொரு கலகம் செய்து
நாலையும் மறந்த பெண்ணாய்
நாய்க்குணம் கொண்டு நிற்பாள்!

குழந்தைகள் மீது பாய்ந்து
குற்றமும் குறையும் சொல்லி
அழுகையில் நாளும் மூழ்க
அவள் வெறி உச்சிக்கேறி
குளவியின் குத்துப்பட்ட
குரங்கினைப் போல நின்று
குழப்பமே உண்டுபண்ணி
குடிசையை நாசம் செய்வாள்!

இரவிலே அவளை நாடி
இரந்தவன் வேண்டி நின்றால்
முரசினை அடிப்பது போல்
முழங்கிய சத்தம் செய்து
இரகசிய விடயமெல்லாம்
எல்லோருமறியும் வண்ணம்
பரகசியமாக்கியவனை
பங்கமே செய்து நிற்பாள்!

இப்படிப் பெண்ணொருத்தி
இவனுக்கு வாய்த்ததாலே
தப்பினைச் செய்தவன் போல்
தலையிலே கையை வைத்து
அப்பன் தாய் சொல்லுக்கேளா
அற்பனாய் போனதாலே
இப்படி இழிநிலைக்குள்
இகழ்வுற்றதாக நொந்தான்!

பருவமழை பிழைத்தது

- தம்பிலுவில் ஜெகா -

வெயில் கொடுமையால் விவசாயி மனம்
வெந்து கருகி வெடிப்பதைப் பாரும்
பையில் இருந்த பணமெலாம் செலவிட்டும்
பயிரா லேதும் பலன் பெறவில்லை
மாரிமழை பெய்யவில்லை மனங்களில் மகிழ்வில்லை
மக்கள் முகங்களில் வாட்டங்குறையவில்லை
வாரி கண்டிடவும் வளமுடன் வாழ்ந்திடவும்
வைத்திருந்த கனவெல்லாம் வதங்கிப் போயின

இச்சையுடன் விதைத்து இரவெலாம் கண்விழித்து
இங்கிதமாய் பயிர் வளர்த்து இன்புற்றிருக்கையில்
பச்சையமின்றி வேளாண்மை சருகாய்க் கருகியது.
பசிதீர்க்கும் நெல் மணிகள் வீடுவந்து சேரவில்லை
வான்பார்த்த பூமியெலாம் விளைச்சல் குன்றியதால்
வளமிழந்த உழவர் தினம் கண்ணீர் வடிக்கின்றார்
ஏன் இந்தத் துன்பமெலாம் ஏர்பிடித்த உழவர்க்கு
ஏழ்மை நீங்கியவர் ஏற்றம்பெறும் நாளெது வோ?

மறவாதே: உயிரே!!!

- மு.ற. நுஸ்கிரியா -

உறவே
நான் உன்னை
நேசிக்க வில்லை....
என் உயிர் நீ யென
சுவாசிக்கிறேன்....

நிலவே!
மேக வேலிகளால்
உன்னை மறைத்து
ஏமாந்து போகாதே....
நான் வானம்,
நீ.....
எத்திசை நோக்கிலும்.....
என்னிலிருக்கும் உன்னை
ஆயிரம் நட்சத்திரம்
காவலர்கள்
ஒன்று சேர்ந்தாலும்
பிரித்தெடுக்கவே முடியாது!!!

சிறகு...

- கிண்ணியா அமீர் அலி -

சிறகு முளைக்காத
சின்னஞ் சிறுகுஞ்சு
பறக்க முடியாமல்
பலாமரக் கிளையிருந்து
விழுந்து துடித்தது
வீதியில்....! தாய்க் ‘காகம்’
அழுது பறந்தது....!
பஸ்ஸின்
சில்லுக்குள் அகப்பட்டுச்
சிறு குஞ்சு சாகாமல்...
‘சாரதி’ நிதானித்தார்!
தப்பியது குஞ்சு!
சடுதியாய் வந்த ‘கார்’
சப்பியது! குஞ்சு....
சதை சின்னா பின்னமாய்...!
கண்களை மூடினேன்!
கண்ணீர்த் துளியிரண்டு....
என்னை யறியாமல்... மீறியது!
ஏனிது? ‘பாரதி’யின்
காக்கை, குருவி நம்
ஜாதி இது தானோ?
யாக்கை, உயிர் இம்
மனிதப் பிறவிக்குத்
தான் பெரிதா? காக்கைக்
குஞ்சு’க்காய் நானழுதேன்!
நாயைச் சுடுவதுபோல்
கண்முன்னால் மனிதரைக்
கொல்லும் மனிதர்கள்
வாழும் நமதிந்த
மண்ணில்.... இதற்கெல்லாம்
வீழும் கண் ணீர்த்துளி
வீண்தானோ....?
ஆனாலும் -
சிதறிச் செத்த
சின்னக் குஞ்சு
இன்னும்....
அழுது பறக்கிறதென்
கவிதை மனசுக்குள்....!
சிறகு இருந்திருந்தால் - அச்
சிறு குஞ்சு பறந்திருக்கும்!
நண்பர்களே!
நாமும் இப்படித்தான்!
சிறகு முளைத்தவர்கள்....
பறக்கிறார்கள்....!
சிறகை இழந்தவர்கள்
தவிக்கிறார்கள்....!

'தில்'

- கவிஞர் நிலதமிழின்தாசன் -

அன்னையைத் தந்தை மணந்ததில்
அன்பொடு வாழ்வினைத் துய்த்ததில்
என்னைக் கருவினிற் சுமந்ததில்
இருவரும் பெற்றே மகிழ்ந்ததில்

பரிவொடு முத்தம் ஈந்ததில்
பாலமு தூட்டி வளர்த்ததில்
குருவாய் அறிவைப் பொழிந்ததில்
குணவான் எனயான் வளர்ந்ததில்

கல்வி கற்க வைத்த தில்
கவிஞன் எனப்பேர் பெற்றதில்
பொல்லார் கொடுமை எதிர்த்ததில்
புரட்சிப் பூவாய் மலர்ந்ததில்
இளமையின் இறக்கை முளைத்ததில்
இன்ப வானில் பறந்த தில்
உளத்தினிற் காதல் நிறைந்ததில்
ஒருத்தியின் அன்பைக் கவர்ந்ததில்

அவளொடு வாழ்வில் இணைந்ததில்
ஆலிங்கனங்கள் புரிந்ததில்
தவமாய் மழலைகள் ஈன்றதில்
தரணியில் அவருயர்வடைந்ததில்

எல்லாம் மகிழ்வாய் வாழ்ந்ததில்
இடர்தான் முதுமை அடைந்ததில்
நல்லோன் என்றே புகழ்ந்ததில்
நலமே நிறைவை அடைந்ததில்

பாசமிகு அண்ணனே

- ரிஸ்மினா -

பாசமிகு அண்ணனே
பக்குவமாக உனக்கு - உன்
தங்கை எழுதும் காவியம் இது

நீ
இருக்கும் இடம் எதுவாயினும்
நிஜத்தில் நீ எந்தன்
அண்ணனாகவும் தோழனாகவும்
திகழ்கின்றாய் அண்ணனே.....!
என்றுமே திகழ வேண்டும்
நான் கண் மூடும் வரை

பிரச்சினை என்றால்
பின் வாங்காது
சகோதர பாசத்தோடு
சாத்தியமாய் திகழ்கின்றாய்
தங்கையல்லவா?
என்றவாறு

உந்தன் அன்பை
எடை போட
இவ்வுலகில் தராசு
கிடையாதடா.....?

பாசிக்குடா

- எம்.எல். சியாத் -

மதங்களைத் தள்ளி வைத்து
மனங்களால் இணைந்து விட்டோம்
மாற்று நாட்டார் இட்ட சதி
உண்ணாட்டவர் இட்ட விதை
அரசினால் தகர்க்கப்பட்ட சிறுகதை

மூடிய - திறந்த ஆடை அணிகளின்
மகத்துவமிக்க நம்பதி
பல கடவுட் கொள்கைச் சுதந்திரம்
பறங்கியர் தமிழ் முஸ்லிம் சிங்கள வேடுவர்
பன்னூறாண்டுச் சொந்தக் காரர்

காதல் பார்வை இனம் பார்க்காது
கண்சாடை
நீருள் ஆடை சாய்ந்து நீந்தும் கன்னிகள்

நீரோர மணல் வெளிகள்
வெயில் ஓடித் திரியும்
வாடிய உடலுக்கு மெருகூட்டும்
வடை செத்தல் வறுவல்
ஐஸ்கிaம் யோகர்ட் கச்சான்!

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.